Saturday, November 11, 2023

ஆண்டின் பொதுக்காலம் 32 - ம் ஞாயிறு மறையுரை -12.11.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 32- ஆம் வாரம் ஞாயிறு) 12.11.2023.

சா ஞானம் 6 : 12-16,

1 தெசலோனிக்கர் 4: 13 - 18,

மத்தேயு  25: 1 - 13.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஞானம் நிறை விழிப்பு

♦️இன்றைய வழிபாடு ஞானத்தோடும், விழிப்போடும் செயலாற்ற நம்மை அழைக்கிறது. முதல் வாசகமும், நற்செய்தியும் இதனை உறுதிப்படுத்துகிறது. ஞானத்தின் இயல்பாகவும், மேன்மையாகவும் எத்தகைய பண்புகள் அமையும் என்பதை சா.ஞா 7:22 "ஞானம் ஆற்றல் கொண்டது, அவ்வாற்றல் அறிவுடையது தூய்மையானது, தனித்தன்மை வாய்ந்தது, பலவகைப்பட்டது. நுண்மையானது, உயிரோட்டம் உள்ளது, தெளிவுமிக்கது, மாசுபடாதது, வெளிப்படையானது, கேடுதராதது, நன்மையை விரும்புவது, கூர்மையானது. சா.ஞா 23 "எதிர்க்க முடியாதது, நன்மை செய்வது, மனித நேயம் கொண்டது" என்று மனிதனின் வாழ்வியல் நிலைகளோடு இயைந்து இருக்க வேண்டியப் பண்புகளை சீர்பட எடுத்துக் கூறுகிறது. ஞானத்தின் பண்புகளை, மேன்மையை நாம் நடைமுறைப்படுத்தினால் நம்மிடையே "விழிப்பான" செயல்பாடு குடிகொள்ளும்.

நாம் வாழும் இந்த நாட்களில் நாம் இந்த சமூகத்தை மனித நேயத்தோடு, தூய்மையான உள்ளத்தோடு அறிவு சார்ந்து, தெளிவோடு நல்லவற்றைச் செய்ய அர்ப்பணமாக்கும் போது அல்லது அணுகும் போது நாம் ஞானத்தோடும் விழிப்போடும் செயல்படும் மக்களாவோம்.

நிகழ்வு 03/11/2023 சமூக ஊடகச் செய்தி:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது சக்திவேல் கட்டிடத் தொழில், டைல்ஸ் வேலை செய்பவர். முத்துலட்சுமி எந்த மனைவியும் 5 (2 பெண் 3 ஆண்) பிள்ளைகளும் உண்டு. இக்குடும்பத்தின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, ஆறுதல் எல்லாம் கணவர் சக்திவேல். கந்தலான, ஓட்டைகள் நிறைந்த குடிசையாயினும், மனநிறைவோடு வாழ்ந்தனர்.     

18.03.2023 அன்று பென்னாடம் அடுத்த வெண்கருப்பூர் அருகே நடந்த விபத்தில் சக்திவேல் உயிரிழந்தார். தாய்க்கும், பிள்ளைகளுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது. 10 வயதைக் கடந்த இரு பெண் பிள்ளைகள், மற்ற மூன்று ஆண் பிள்ளைகளோடு கணவனின் விபத்துக்கு காரணமான ஓட்டுநரைக் கண்டறிந்து உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்று, விருத்தாச்சலம் காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. ஆரோக்கியராஜ் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வைத்தாள் முத்துலெட்சுமி. உடனே இதனை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். திருமிகு. ஆரோக்கியராஜின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யச் சென்ற காவலர்களின் நெஞ்சம் கலங்கி, நொறுங்கிப் போனது. பாழடைந்த அந்த குடிசையில் 5 பிள்ளைகள், தாய் வசிப்பது. கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஐந்து பிள்ளைகளின் படிப்பிற்குரிய உதவிகளை விருத்தாச்சலம் ஆய்வாளர் திரு. முருகேசன், உதவி ஆய்வாளர் திரு. ஐயனார் மற்றும் காவலர்கள் இணைந்து கடலூர், திண்டிவனம், விருத்தாசலம் பள்ளிகளில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

கூரை வீட்டை மாற்றி கான்கிரீட் வீடு கட்ட தீர்மானிக்கிறார்கள். விருத்தாசலம் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் ஒன்று கூடி 10 இலட்சத்தைத் திரட்டி வீட்டு வேலை தொடங்கப்பட்டது "உதவும் காவல் இதயங்கள்" என்ற whatsapp குழு மூலம் நல்ல இதயங்களை ஒருங்கிணைத்தார் திருமிகு. ஆரோக்கியராஜ் மிகக் குறுகிய காலத்தில் அழகிய வீடு உருவானது.

25.10.2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு இராஜாராம் அவர்கள், திருமிகு ஆரோக்கியராஜ் மற்றும் காவலர்கள் முன்னிலையில் வீட்டை அந்த குடும்பத்திற்கு வழங்கினார். பெண் காவலர்கள் வீட்டிற்கு தேவையான, பாய், தலையணை, பாத்திரங்கள், செயர், விளக்கு, உணவுப் பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கியது எல்லா இதயங்களையும் ஈரம் ஆக்கியது.

இந்த மண்ணில் இதயத்தில் இரக்கமும், ஈரமும் இன்னும் காயவில்லை, கண்ணிலே கனிவும், பரிவும் அற்றுப்போகவில்லை என்பதை காவல்துறையினரின் ஞானம் நிறைந்த செயல்பாடு உரக்கச் சொல்கிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானம் என்றால் என்ன என்று கூறும் போது, கடவுள் மேல் நம்பிக்கை வைத்தலும், திருச்சட்டத்தை கடைபிடிப்பதுமே உண்மையான ஞானம் என்று அறிவுறுத்துகிறது.

இறைஞானத்தை அடைய நமக்கு முயற்சி தேவை, ஆர்வமுடன் தேட வேண்டும். மத் 7:7 "தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்" என்றும் எரேமியா 29 : 13 "உங்கள் முழு இதயத்தோடு என்னை தேடும் பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்" என்று நாம் ஞானத்தை நாடி தேடி கண்டடைய திருமுறை அறிவுறுத்துகிறது.

ஞானத்தைப் பெற்றுக் கொள்ள நமக்கு அடிப்படைத் தேவை இறையச்சம். இறையச்சம் அற்றுப்போனால் பாவம் தலைவிரித்தாடும். நாம் தவறுகளை நியாயப்படுத்துவோம், தப்பிதங்களுக்குப் புதிய அர்த்தங்களை கற்பிப்போம்.

சீராக் 1 - ம் அதிகாரம் இறையச்சமே ஞானத்தை நமக்குப் பெற்றுத் தரும் அருளின் வாய்க்கால் என்று உணர்த்துகிறது.

(சீரா. 1:14) "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஞானத்தின் தொடக்கமாகவும்" (சீரா 1:16) "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஞானத்தின் நிறைவாகவும்         (சீரா 1:18) ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஞானத்தின் மணிமுடியாகவும் (சீரா 1:20) ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஞானத்தின் ஆணி வேராகவும்  அறிவுறுத்துகிறது.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நமக்கு மாட்சி, பெருமை, முயற்சி, அக்களிப்பு ஆகியவற்றை நிறைவாய் வழங்குகிறது எனவே தான் நீதிமொழிகள் நூல் 8:3 "என்னை தேடி அடைவோர் வாழ்வடைவார், ஆண்டவரின் கருணை அவர்களுக்கு கிடைக்கும்  என்று அறிவுறுத்துகிறது.

நம் முயற்சியும், இறையருளும் நிறைந்திருக்கும் போது ஞானம் நம்மை வந்தடையும் இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது.

சா. ஞா 6:16 "தனக்குத் தகுதி உள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது" ஞானத்தின் மீது தாகம் கொண்டு அதன் மீது அன்பு கொள்ளும்போது எளிதில் அதனைக் காண முடியும்.

சா.ஞா 6:12 "அதன் பால் அன்பு கூர்வோர் அதை எளிதில் கண்டு கொள்வர்" எனவே ஞானத்தை விரும்பித்தேடி அதனை வாழ்வாக்குவோம்.

இன்றைய நற்செய்தி விழிப்பாயிருந்து மணமகனை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கிறது.

யூதமரபில், திருமணங்களில் முக்கிய நிகழ்வு "மணப்பெண் அழைப்பு" மணமகன் நேரில் வந்து மணப்பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஊர்வலம். அவன் வரும் வரை மணப்பெண்ணின் தோழியர், மணிவிளக்குகளுடன் காத்திருப்பர். அதற்குரிய எண்ணையும் எடுத்து வருவர். எண்ணெய் எடுத்து வராததால் மணமகனால் நிராகரிக்கப்பட்ட நிகழ்ச்சியின் பின்னணியில் இறைமகன் இயேசு மறை உண்மைகளை விளக்குகிறார். 

🟡மணமகன் - இயேசு

🔵காலம் தாழ்ந்து வரும் மணமகன்-  இயேசுவின் இரண்டாம் வருகை.

🔴பத்து கன்னியர் - கிறிஸ்தவ சமூகம் அல்லது நம்பிக்கையாளர்களின் கூட்டம்.

🟣எண்ணெய் -தயாரிப்பு, ஆயத்தநிலையைக் குறிக்கும் உளத்தூய்மையை குறிக்கும். இது ஒவ்வொரு தனிமனிதரைச் சாரும்.  பகிர்ந்து கொள்ள முடியாது, மாறாக பிரகாசிக்க, வழிகாட்ட முடியும்.

🟢எரியாத விளக்கு - இருள் என்ற பாவத்தைக் குறிக்கும்.

🟡எரியும் விளக்கு - அருள் வாழ்வை, தூய வாழ்வை, புண்ணிய வாழ்வைக் குறிக்கும். அருள் வாழ்வை பிறரிடம் இருந்து வாங்க இயலாது. பாடம் கற்றுக்கொள்ள முடியும்.

🔵நள்ளிரவு - எதிர்பாராத நேரம் (எனவே விழிப்பு தேவை) பாவநிலையில் இருப்பவர்கள் நிராகரிக்கப்படுவர், ஒதுக்கப்படுவர், தண்டிக்கப்படுவார்.



மத் 25:30 "பயனற்ற இந்தப் பணியாளனை புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அகங்கலாய்ப்பும் இருக்கும்". எனவே இந்த நிகழ்வு வழி இறைவன் நம்மை மாசற்றவராய், தூயவராய், பரிசுத்தராய் வாழ அழைக்கிறார். இத்தகைய வாழ்வு வாழ நமக்கு இறைநம்பிக்கை, இறையச்சம், ஞானம், விழிப்பு தேவை.

1கொரி 16:13 "விழிப்பாய் இருங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள் துணிவுடன் நடந்து கொள்ளுங்கள். வலிமையுடன் செயல்படுங்கள் அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்" இவற்றை நாம் கடைப்பிடிக்கும் போது விழிப்போடும், ஞானத்தோடும் செயலாற்றுகிறோம்.

தி. வெளி 3:3 "நீ கற்றதையும், கேட்டதையும் நினைவில் கொள். அவற்றைக் கடைப்பிடி, மனமாறு நீ விழிப்பாயிரு" என்று அறிவுறுத்துகிறது. எனவே நாம், நம் வாழ்வை, நிறைவாழ்வை நோக்கிய பயணத்தில், ஆயத்தமாய், தூயவராய் வாழ்வை மாற்றுவோம் மாறாக ஆண்டவரே! ஆண்டவரே என்பதால் அருள் வாழ்வை ஆசீரை இறைவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள இயலாது. எனவே ஞானத்தோடு, விழிப்பாயிருந்து நம்மை ஆயத்தப்படுத்துவோம், மணமகனை வரவேற்க...

இன்று நாம்

🔵இறைவனை மறந்து வேடிக்கையான வாழ்வு வாழ்கிறோமா?

🟡ஆண்டவரையும், ஆலயத்தையும் மறந்து, ஆண்டவர் எங்கும் இருக்கிறார் என்று வீண் வாதங்கள் பேசித் திரிகிறோமா?

🟣நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வு நிரந்தரம் என்ற உளப்பாங்கில் வாழ்கிறேனா?

🟢நாம் செய்யும் செயல்கள் சேவை, கடமை, மனநிறைவுக்காக பிறரின் வாழ்வுக்கான என்ற சிந்தனை நம்மிடை உண்டா?

🔴எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் நிகழ்கால வாழ்வை நாம் இழக்கிறோமா? 

சிந்திப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment