Friday, December 1, 2023

திருவருகைக்காலம் 1- ம் ஞாயிறு மறையுரை -03.12.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

திருவருகைக்காலம் 1- ஆம் ஞாயிறு

03.12.2023.

எசாயா 63 : 16-17,  64:1, 3 - 8,

1 கொரிந்தியர் 1: 3 - 9,

மாற்கு 13: 33 - 37.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

விழிப்பு

♦️திருவழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு திருவருகை காலம்.

♦️நான்கு வாரங்கள் என்பது - இஸ்ரயேல் மக்கள் 4000 ஆண்டுகள் மெசியாவை எதிர்நோக்கி "மாரநாத" ஆண்டவரே வாரும் என்று அழைத்து காத்திருந்ததன் அடையாளம்.

♦️ஊதா நிறம் என்பது - தவத்தையும், ஆயத்தப்படுதலையும் குறிக்கும் (தயாரிப்பு)

♦️இன்றைய வழிபாடு விழிப்பாயிருக்க அழைக்கிறது.

♦️விழிப்பு என்பது முழிப்பு அல்ல மாறாக உள் மன அளவில் இயேசுவோடு இணைந்திருத்தலைக் குறிக்கும். எத்தகைய பணியில் நம்மை ஈடுபடுத்தினாலும் நம்முடைய இலக்கை தொலைத்து விடாமல் இருப்பது விழிப்பு.

♦️இறை வேண்டலில் நிலைத்திருங்கள் விழிப்போடு இருப்பவர் இவ்வாறு செயல்படும்போது உள அமைதியும், மகிழ்வும், ஆனந்தமும் நம்மைக் குடிகொள்ளும்.

நிகழ்வு (2014 ஆகஸ்ட் 5 பத்திரிகை செய்தி)

தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் முதுகோடு மண்டலத்தைச் சார்ந்த கோம் பல்லி சைது கீதா தம்பதியின் ஒரே மகள் ஜானவி (8 மாதக் குழந்தை) இத் தம்பதியினர் வீட்டில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் வளர்த்து வந்தனர். கீதா சமைத்துக் கொண்டிருந்தாள், குழந்தை ஜானவி, பாயில் விளையாடிக் கொண்டிருந்தது. வீட்டில் வளர்த்த கோழி குழந்தையின் தலையில் கொத்த இரத்தமும், மூளையும் வெளிவர குழந்தை வலியில் அலறியது. குழந்தை சாதாரணமாகத்தான் அழுகிறது என்று கீதா நினைத்தாள். குழந்தையின் அழுகை கூடவே கீதா வந்து பார்த்தபோது அதிர்ந்து போனாள். உடனடியாக குழந்தையைத் தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் நலகொண்டா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றும் குழந்தை ஜானவியை காப்பாற்ற முடியவில்லை.

நிகழ்வு 2

சுவாமி மித்ரானந்தா தன்னுடைய மனசுக்குள் வரலாமா என்ற நூலில் ஒரு நிகழ்வை முன் வைக்கிறார். பெரிய கம்பெனி அதிகாரி, ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கிறார். கற்றவர், பண்பட்டவர், பத்திரிகை படித்தவாறே பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் உரிமையோடு அந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டான். இந்தப் பெரியவர் அந்தச் சிறுவனை ஒரு ஈனப்பிறவியைப் போல் பார்த்தார். இறுதியில் இருந்த பிஸ்கட்டை சிறுவன் எடுத்து இரண்டாக உடைத்து பாதியை அவன் சாப்பிட்டான் மீதியை அந்த பெரியவருக்குக் கொடுத்தான். அந்த பெரிய மனிதன் இந்த சிறுவனை, நாகரீகம், பண்பாடு அற்றவன், வளர்ப்பு சரியில்லை என்று மனதிற்குள் திட்டினார். ரயில் வந்ததும், உள்ளே ஏறி பயணமானார். பயணத்தின் போது தன் பையை திறந்த போது தன்னுடைய பையில் தான் வாங்கிய பிஸ்கட் இருப்பதை உணர்ந்தார். அவர் சாப்பிட்டது, சிறுவனின் பிஸ்கட், தான் தவறு செய்துவிட்டு பிறரைப் பழிக்கும் மனநிலை.

இந்த இரு வேறு நிகழ்வுகளிலும் முழித்திருந்தவர்கள் விழிப்பாய் இல்லை, சிறிய காரியங்களில் விழிப்பற்று போகும்போது, கவனக்குறைவு வரும்போது, பெரிய இழப்பைச் சந்திக்கின்றோம். இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை நற்செய்தியாளர் மத்தேயு.

மத் 13:14 "நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தும் உணர்வதில்லை" என்கிறார். நமக்கு உள்ளவிழிப்பு, ஆன்மவிழிப்புத் தேவை என்பதை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைதளைக்குப் பின் கி.மு. 587ல் எழுதப்பட்டது.

பாபிலோனியர் எருசலேமையும், அதன் மாண்பையும் அழித்து சாம்பலாக்கினர். இஸ்ரயேலர்கள் ஆண்டவரோடு உள்ள உடன்படிக்கையை முறித்து, உள்ளங்களைக் கடினப்படுத்தி, பாவத்தைக் கட்டிக் கொண்டனர். கடவுளோடு ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு முன்பு எப்படி இருந்தார்களோ, அதைவிட மோசமான நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

இவ்வேளையில் உள்ள தெளிவு பெற்று இஸ்ரயேலருக்கு எப்பொழுதும் உற்றதுணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே என்பதை உணர்ந்து.

எசாயா 63:16 ".....ஆண்டவரே நீர் தான் எங்கள் தந்தை பண்டைய நாளிலிருந்து எம் மீட்பர் என்பதே உம் பெயராம் " என்றும் எசாயா 64:1 "நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரா" எசாயா 64:4 "தம்மை நம்பியிருப்போருக்காகக் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்" என்று தன்னிலை விழிப்பு பெற்று ஆண்டவரை நோக்கி மன்றாடினர். அடிமை வாழ்வின் தன்மை என்ன என்பதை உணர்ந்த போது

எசாயா 64:6 "நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரை போல் உள்ளோம். எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடை போல் ஆயின. நாங்கள் யாவரும் இலை போல் கருகிப் போகின்றோம்." என்று உள்ளம் நொந்து வருந்தினர்.

நீ.மொழி 4:23 "விழிப்பாயிருந்து உன் இதயத்தை காவல் செய் ஏனெனில் அதனின்றுப் பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்"

இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடந்த காலத்தில், உடன்படிக்கையை மீறியதால், பாவத்தில் உழன்று, பாபிலோனியர்களுக்கு அடிமைகளாக மாற்றப்பட்டபோது அனுபவித்த துன்பங்களின் போது உண்மை கடவுளின் உடனிருப்பையும், வழிநடத்துதலையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு விழிப்புப் பெற்றனர். எனவே தான் கடவுள் தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதை உணர்ந்து, எசாயா 64:8 "ஆண்டவரே நீரே எங்கள் தந்தை, நாங்கள் களிமண் நீர் எங்கள் குயவன், நாங்கள் அனைவரும் உம் கை வேலைபாடுகளே" என்று முறையிட்டனர். ஆண்டவரிடம் திரும்பி வந்தனர்.

இன்றைய நற்செய்தி வாசகம், எப்பொழுதும், நாம் விழிப்போடு செயலாற்ற அழைப்பு விடுக்கின்றது. வீட்டு தலைவன் திரும்பி வரும் நேரம், வேளை யாருக்கும் தெரியாது. அவன், நாம் நினையாத நேரத்தில் வரலாம், எப்பொழுதும் வரலாம், வந்ததும் கணக்குக் கேட்பான். எனவே எல்லா நேரத்திலும் விழிப்பாய் செயல்பட அழைக்கிறது வழிபாடு. இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மை நாம் ஆயத்தமாக்கும் போது இத்தகைய விழிப்பு நமக்கு கட்டாயமாகிப் போகிறது. பேதுரு அறிவுறுத்துவது போல்

1 பேதுரு 5:8 "அறிவுத்தெளிவோடு விழிப்பாய் இருங்கள் உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல தேடித் திரிகிறது." எனவே நாம் விழிப்பாய் இருந்து ஆன்மாவை காத்துக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

யார் விழிப்பாய் இருப்பவர்?

🔵தன்னை அறிகிறவனும், கடவுளில் தன்னை நிலைநிறுத்துகிறவனும் விழிப்பாய் செயல்படுவான்.

🟡நம்பிக்கை இழக்கும் சூழலில் கடவுளின் அன்பு, பராமரிப்பு ஆகியவை மட்டுமே நிரந்தரம் என்பதை அறிந்து செயலாற்றுபவர் விழிப்பாய் இருப்பார். தூய பவுல் அறிவுறுத்துவது போல் உரோ 3:11 "உறக்கத்தின்ன்று விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்ட போது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" என்ற இறைவார்த்தையில் வேரூன்றி ஆண்டவரை வரவேற்க விழிப்பாய் செயலாற்றுவோம்.  விழிப்பு என்பது, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற எல்லா வாழ்வியல் நிலைகளுக்கும் தேவைப்படுகிறது.

🟣எல்லாவற்றையும் நாம் உடமையாக்கி ஆன்மா அழிந்தால் அது பயனற்ற வாழ்வு.

🔴ஆன்மாவை இழந்து போகாமல் விழிப்பாய் இருக்க, ஆன்ம விழிப்பு, ஆன்ம ஆயத்தம் முக்கியமாகிறது.

🟢ஆண்டவரின் வருகைக்காய் நாம் விழிப்பாய் செயலாற்றும்போது

நம்முடைய நடைமுறையில்

🔵விசுவாச தளர்வு, வராதபடி வெளிப்பாய் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

1. குடும்ப செபம்

2. வாழ்வு தரும் வார்த்தை வாசிப்பு

3. வழிபாட்டில் முழுமையான பங்கேற்பு, இவற்றில் நிலைபெற வழிபாடு அழைக்கிறது.

🟢நாகரீகம் என்ற போர்வையில்

♦️அரைகுறை ஆடை

♦️பண்பாட்டுச் சீரழிவு - இவற்றில் இளையோர் சிக்கி சின்னாபின்னமாகாமல், பிள்ளைகளை வழிநடத்த பெற்றோர் விழிப்பாய் செயல்பட அழைக்கப்படுகின்றோம்.

♦️அலைபேசி

♦️தொலைக்காட்சி

♦️வலைதளம் - இவற்றிற்கு அடிமையாகி வாழ்வை இழந்து போகாமல் விழிப்பாய் செயல்பட அழைக்கின்றோம்.

🟣வாழ்வியல் மதிப்பீடுகள், ஒழுக்கவியல் நெறிகளில் நிலைத்து நிற்கக்கூடிய விழிப்பு தேவை.

வரம் வேண்டுவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.* 

No comments:

Post a Comment