Friday, December 15, 2023

ஆண்டின் திருவருகைக்காலம் 3 - ம் ஞாயிறு மறையுரை -17.12.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(திருவருகை காலம் 3- ஆம் ஞாயிறு) 17.12.2023.

எசாயா 61 : 1 - 2,  10- 11,

1 தெசலோனிக்கர் 5: 16 - 24,

யோவான் 1: 6 - 8, 19-28.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அன்பு அறச்செயல்களால் சான்று பகர்வோம்

🔵திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறு.

🟣1 தெச 5:16 "எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்" என்று தூய பவுல் அழைப்பு விடுக்கிறார்.

🔴அருள்தரும் ஆண்டு (யூபிலி ஆண்டு) அடிமைப்பட்ட, எளிய, சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியின் ஆண்டாய் அமைந்தது போல மெசியாவின் வருகை மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாய் அமைய அழைக்கிறது வழிபாடு.

🟢எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வாழ குற்றமற்ற, தூய, அர்ப்பண வாழ்வே அடிப்படை காரணமாகிறது.

🟡1 தெச 5:23 "இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி காப்பாராக" என தூய பவுல் அறிவுறுத்துகிறார். நம்முடைய வளமான செயல்கள், பிறருக்கு மகிழ்வாய், வாழ்வாய் மாற அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு (ஊடக செய்தி)

வட இந்தியாவில் டெல்லி குர்ஹாம் பகுதியில் உள்ளவர் மருத்துவர் கோமல்யாதவ். 27.03.2018- அன்று அவர் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலைபேசி அழைத்தது. அதில் மருத்துவமனையில் ஒரு பெண், இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். அவள் இக்குழந்தைகளைக் கொண்டுச் செல்ல விரும்பவில்லை. ஏற்கனவே இரு குழந்தைகள் உண்டு. அண்மையில் கணவனையும் இழந்துள்ளார், என்ற செய்தி அறிந்த பெண் மருத்துவர் கோமல்யாதவ் அந்த இடத்திற்கு விரைந்து, அந்த இரு பெண் குழந்தைகளை தத்தெடுக்க முனைகிறார். தன் தந்தைக்கு தொலைபேசி வழியே செய்தி சொல்கிறார். தந்தை மிகக் கோபமாக திட்டுகிறார். உனக்கு நாங்கள் வேண்டுமா, அந்த அனாதைகள் வேணுமா? டாக்டர் கோமல்யாதவ் இரு குழந்தைகளையும் துணிந்து தத்தெடுத்த போது அவருக்கு வயது 29. அந்த இரு குழந்தைகளுக்கும் ரீட், ரிடாம் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார். திருமணம் செய்யாமல் அக்குழந்தைகளை வளர்க்கிறார். உடன் மருத்துவர் கூட இழிவாகச் சொன்னார்கள், நான் பொருட்படுத்தவே இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த இரு குழந்தைகளும் தான் என்னை தத்தெடுத்திருக்கிறார்கள் என்று மகிழ்வோடு பதில் கூறுகிறார்.

நிகழ்வு - 2

04.12.2023 மிக்காம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சின்னத்திரை நடிகை, அறந்தாங்கி நிஷா, கனத்த இதயத்தோடு மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் கொசுவர்த்தி, உடை, பெண்களுக்கு தேவையான பொருட்களோடு தன் கணவரையும் அழைத்து வந்து உதவிச் செய்தார். இவ்வேளை அவருடைய மூன்று வயது பெண் குழந்தை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்  இருந்தது மகளா? சென்னை மக்களா? என்ற வினா வந்தபோது தன் சொந்த மகளை உறவினர்களிடம் கவனிக்கச் சொல்லிவிட்டு சென்னை மக்களுக்கு உதவ ஓடோடிச் சென்றார். அவருடைய செயல் பலரை மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

இரு நிகழ்வுகள், கைவிடப்பட்ட, நிற்கதியாய், வாழ்வுக்காய் போராடும் நிலையில் வாழும் மக்களுக்கு நாம் உடல், உள்ள, ஆன்மாவால் உணர்ந்து செய்யும் நமது அறச்செயல்கள் பிறரை வாழ வைக்கிறது, மகிழ்விக்கிறது, உலகிற்கு பாடமாகிறது.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் அருள் தரும் ஆண்டைக் குறித்துப் பேசுகிறது. இஸ்ரேல் மக்கள் அருள் தரும் ஆண்டை, யூபிலி ஆண்டாகப் பார்த்தனர். ஏனெனில்,

1. எல்லா மக்களும் மன்னிப்பு தரும் ஆண்டு யூபிலி ஆண்டு.

2. அடகு வைத்த சொத்து மீட்கப்படும்.

3. அடிமைகள் விடுவிக்கப்படுவர்.

4. கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். எனவே வறுமை அகற்றப்படும், அநீதிகள் ஒழிக்கப்படும் அடிமைத்தனத்தின் கொடுக்கு ஒழிக்கப்படும் அனைவரின் விடுதலைப் பெற்று மகிழ்ச்சி அடைவர்.

லேவி 25:54 "யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர்" என்று உணர்த்துகிறது லேவியராகமம்.

ஆண்டவர் இயேசுவின் பிறப்புஆண்டவர் இயேசுவின் பிறப்பு, அருள்தரும் ஆண்டை நிறைவு பெற செய்வதாய் அமையும். ஆவியில் அருள் பொலிவு செய்யப்பட்ட இயேசு விடுதலையின், மீட்பின், மகிழ்வின் வாழ்வின் செய்தியாய் மாறினார்.

ஆவியில் முத்திரையிடப்பட்ட நாம், சமூகப்பணியாளர்கள் மட்டுமல்ல, ஆண்டவருக்கு சான்றுப் பகர்கிறவர்கள், ஆவியாரின் அருளின்றி அன்புக்கும், நீதிக்கும், விடுதலைக்கும் உழைப்பது அரிது.

எசா 42:1 "அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன். அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்" ஆவியால் நாம் ஆட்கொள்ளப்படும் போது, பகைமை, விரோதம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு போன்ற தீமைகள் வேரறுக்கப்படும். அங்கு அன்பும், அமைதியும், சாந்தமும், மகிழ்வும் குடிகொள்ளும். அது மெசியா இறைசமூகமாக அமையும்.

இன்றைய நற்செய்தியில் யோவான் 8:12 "உலகின் ஒளி நானே" என்ற இயேசுவை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவருக்காக மக்களை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானை, அவரின் ஆளுமையை விளக்குகிறது.

இயேசுவைக் குறைத்துச் சான்று பகர்ந்தவர்கள் பலர். சமாரியப் பெண், பிறப்பிலே பார்வையற்றவர், மக்கள், படைவீரன் என எல்லாரும் சான்று பகர்ந்தாலும் திருமுழுக்கு யோவானின் சான்று முன்னிலைப் பெறுகிறது. திருமுழுக்கு யோவானின் போதனை, போதிக்கும் தன்மையை பார்த்தவர்கள் நீர் மெசியாவோ? இறைவாக்கினரோ? எலியாவோ? என்று கேட்க, இல்லை என்று திருமுழுக்கு யோவான் யார் என்பதை

யோவான் 1:7 "அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று நற்செய்தியாளர் யோவான் விளக்குகிறார்.

ஒளியாகிய கடவுளை, வாக்கு மனிதராகி நம்முடையே குடி கொண்ட, இம்மானுவேலை குறித்துச் சான்றுப் பகர்ந்தார்.

நிறைவாக்கினார் எசாயாவின் இறைவாக்கை, நிறைவு நிறைவு செய்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் போது,

யோவான் 1:26 "நீங்கள் அறியாத ஒருவர் உங்களுடையே நிற்கிறார்"

யோவான் 1:27 "அவர் எனக்குப் பின் வருபவர், அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை" என்று எளிய, தூய உள்ளத்தோடு ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

மீட்பராகி இயேசுவுக்கு முன் தான் ஒன்றுமில்லை என்பதை திருமுழுக்கு யோவான் உணர்ந்தார். எனவேதான், எஜமானின் மிதியடி அவிழ்க்கும் அடிமையை விட நான் எளியவன் என்று தன்னைத் தாழ்த்தினார். நாமும் எளியவராக வாழ அழைக்கிறார்.

தூய பவுல் தொடக்க கால திருஅவையை கிறிஸ்துவுக்குள் உறுதிப்படுத்தும் போது சில வழிமுறைகளை முன் வைக்கிறார்.

i) எல்லாச் சூழலிலும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

ii) எல்லா சூழலிலும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.

iii) எல்லா சூழலிலும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இவ்வாறு நாம் வாழ்வதால் அமைதி நல்கும் கடவுள் நம் உடல், உள, ஆன்மாவை தூய்மையில் பாதுகாப்பார். இந்தத் தூய உள்ளமே கடவுள் பிறப்பெடுக்க ஏதுவான இடமாகும்.

iv) அன்புச் செயல்களால், அறப்பணிகளால், விடுதலைப் பணியால் நம்மை தூய்மைப்படுத்துவோம்.

இன்றையச் சூழலில்

🟡வறுமையில், நோயால் துன்புறம் மக்களுக்கு நான் நற்செய்தியாய் திகழ்கிறேனா?

🟢இயற்கையின் சீற்றங்களால், பாதிக்கப்பட்டோருக்கு மீண்டெழுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறேனா?

🔴போதைக்கு அடிமையாகி, வாழ்விலங்கு நிற்பவர்களுக்கு மறுவாழ்வுக்கு வழிகாட்டுகிறேனா?

🔵வயது சென்றால் வாழ்வுக்காகாது என்று ஒதுக்கப்படும் பெற்றோர், முதியோருக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக மாற முயற்சிக்கிறேனா?

🟣நம்முடைய அன்பு, அற செயல்களால் கிறிஸ்துவின் பிறப்புக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment