Thursday, October 31, 2024
Tuesday, October 29, 2024
Monday, October 28, 2024
Saturday, October 26, 2024
Friday, October 25, 2024
பொதுக்காலம் 30-ம் - ஞாயிறு மறையுரை -27.10.2024.
👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 30-ம் ஞாயிறு
27.10.2024
எரேமியா 31: 10 - 11,
எபிரேயர் 5 : 1 - 6,
மாற்கு 10: 46- 52.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
புதுப்பார்வை பெறுவோம்
🟡யூத மரபிலே உடல் குறைபாடு என்பது பாவத்தின் சம்பளமாக, இறைவன் தரும் தண்டனையாகக் கருதப்பட்டது.
🟣இந்த எண்ணம் தான் பார்வையற்ற பர்த்திமேயுவைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கலாம்.
🔴பர்த்திமேயு யாசிக்கும் போது, பார்வையற்றதால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மனித மாண்பை இழந்து, உள்ளம் உடைந்து போய் யாசித்திருக்கலாம்.
🟢பர்த்திமேயு ஆண்டவர் இயேசுவின் பேரிரக்கத்தை இரஞ்சினான். மீண்டும் இந்த சமூகத்தோடு இணைந்து, ஒன்றாகி, நலமுடன், மாண்புடன் வாழ விரும்பினான். எனவே நம்பிக்கையோடு ஆண்டவரை அழைத்தான்.
🔵மாற்கு நற்செய்தி 8 - ஆம் அதிகாரத்தில் 22 - 26 வரை வரும் பகுதியில் ஆண்டவர் இயேசு பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவருக்கு பார்வை வழங்குகிறார்.
🟡மாற்கு 10 - ஆம் அதிகாரத்தில் பர்த்திமேயுப் பார்வை பெறுகின்றார்.
🟣இந்த இரு நிகழ்வுகளும் ஒரு செய்தியை உரக்கச் சொல்வதாய் அமைகிறது. நம்பிக்கையற்ற, பதவி ஆசை கொண்ட, இயேசுவின் மெசியா தன்மையை ஏற்காத சீடர்களுக்கு, இந்த இரு பார்வையற்றவர்கள் பார்வை பெறும் நிகழ்வுகள் வழி நம்பிக்கையில் வேரூன்ற அழைப்புக் கொடுப்பதாய் அமைகிறது.
🔴இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான், நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி, ஆண்டவரில் நிலைபெறுவும், புதிய பார்வைப் பெற்று, ஆண்டவருக்கு உகந்தவர்களாய் வாழவும் அழைக்கிறது.
இன்றைய நற்செய்தியில் மூன்று விதமான மனநிலை கொண்ட மாந்தர்களைப் பார்க்கின்றோம்.
1. பார்வைக்காக ஏங்கும் பர்த்திமேயு
2. சமூகப் பார்வையற்ற மக்கள்
3. வாழ்வு வழங்கும் கிறிஸ்து
1. பார்வைக்காக ஏங்கும் பர்த்திமேயு
பார்வையற்ற பார்த்திமேயு, வாழ்வு வழங்கும் இயேசு தான் போகிறார் என்பதை அறிந்து உணர்ந்து
மாற்கு 10:47 "இயேசுவே! தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார். இந்தத் தொடக்கம், வாழ்வு பெறும் வரை ஓங்கி ஒலிக்கும், ஓயாது.
🟣ஏனெனில் பார்வையற்றவனின் சப்தம் மீண்டும் பார்வைப் பெற துடித்த சப்தம். சுகம் பெற துடித்த சப்தம், நம்பிக்கையின் குரல், எப்படியாவது பார்வைப் பெற வேண்டும், என்ற வைராக்கியம் கொண்ட சப்தம். தன் வேதனையின் கூக்குரல் ஆண்டவரின் காதுகளில் எப்படியாவது விழ வேண்டும் என்ற முனைப்போடு தான் கத்தினான்.
பர்த்திமேயுவின் இந்த அழைப்பு 3 பண்புகளை உணர்த்துகிறது.
1. நம்பிக்கை
2. விடாமுயற்சி
3. தடைகளைத் தாண்டும் துணிவு.
கிறிஸ்துவே, கிறிஸ்துவால் மட்டுமே வாழ்வு பெற முடியும் என்ற ஆழமான, உறுதியான, நம்பிக்கை அவர் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது. எனவேதான் எளிய உள்ளத்தோடும், ஆழமான நம்பிக்கையோடும் ஆண்டவரைக் கூவியழைத்தான்.
🔵சமூகப்பார்வையற்ற, எளியவர் நலனில் அக்கறையற்ற சமூகம். நல்லவை நடப்பதற்கும், பிறர் வாழ்வுக்கு தடையாய் அமையும் என்பதற்கும் இந்த நற்செய்திச் சான்று.
மாற்கு 10:48 "பேசாதிருக்குமாறு பலர் அவரே அதட்டினர்" அவர் ஆண்டவரிடமிருந்து நலன்களைப் பெறுவதால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. ஆயினும், நலிந்தவர்களைக் கண்டு கரிசனையோடு பார்க்க வேண்டிய சமூகம், கடின இதயத்தோடு, பிறர் நலனில் அக்கறையின்றி வாழ்வுக்கானத் தேடலில் தடையாய் எழும்பி நிற்கிறது. இன்றைய சமூக அவலம் கூட, பிறருக்கு நல்லது செய்ய வேண்டிய வாய்ப்பிருக்கும் போது நல்லது செய்ய வேண்டிய மனிதன் நல்லது செய்யாமல் பிறர், சமூக நலன்களுக்கு தடையாய் பரிசேயத்தனத்தோடு வாழ்வதைப் பார்க்கின்றோம்.
🟡உலகு, உறவுகள் தடுத்தாலும், உயிர் வாழ்வுக்கான தேடலில் தடைகளை உடைக்கும் மனப்பக்குவம் தேவை என்பதை பார்த்திமேயு உரக்கச் சொல்கிறான். தன்னைத் தடுத்தவர்கள் மத்தியில் தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று இன்னும் உரக்க கத்தினான்.
திபா 118:5 "நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன். ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்" என்ற இறைவார்த்தை உளச்சோர்வின்றி தடைகளைக் கடந்தால், வாழ்வும் உண்டு, வரலாறும் உண்டு என்பதை உணர்த்துகிறது.
2. சமூகப் பார்வையற்ற மக்கள்
யாக் 4:17 "நன்மை செய்ய ஒருவருக்கு தெரிந்திருந்தும் அவர் அதை செய்யாவிட்டால் அது பாவம்"
மனிதர் இயற்கையாகவே பிறருக்கு நல்லது செய்ய வேண்டும். ஏனெனில் நாம் கடவுளின் சாயல். பிறரின் தேவைகள், வலிகள், போராட்டங்கள், வாழ்வுக்கானத் தேடல்கள், ஏக்கங்கள், உணர்வுகள் இவற்றை நாம் புரிவதில்லை, இப்படித்தான் இயேசுவோடு இருந்தவர்கள் இருந்தனர்.
🟢சாதாரணமாக அவர்களே நலிந்தவர்களை, நோயாளர்களை ஆண்டவரிடம் அழைத்து வந்திருக்க வேண்டும் செய்யவில்லை.
🟣வாழ்வுக்கு ஏங்கும் மக்களின் செயல்களில் உடனிருக்க வேண்டும் அதுவும் செய்யவில்லை.
🔴பிறர் தங்கள் வாழ்வின் நலனுக்கு எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். மாறாக இங்கு பேசாதிருக்குமாறு தடுப்பதைப் பார்க்கின்றோம்.
🟡பிறரின் உணர்வுகளை, உள்ள ஏக்கங்களை முளையிலே கிள்ளி எறியும், தன்னல உணர்வுடையவர்களாக சீடர்களும், மக்களும் இருந்ததை, இருப்பதை இந்த சமூகம் நமக்கு உணர்த்துகிறது. நீதி, நேர்மை உணர்வுகளை நாம் இதயத்தின் ஈரத்தால், அகக்கண்ணால் பார்க்கக் கூடிய பார்வையைப் பெற வழிபாடு அழைக்கிறது.
3. வாழ்வு வழங்கும் கிறிஸ்து
மெசியாவின் கால அறிகுறிகளில் ஒன்று பார்வையற்றவர் பார்வைப் பெறுதல்
லூக் 4:18 "பார்வையற்றவர் பார்வை பெறுவர்" என்றும், இறைவாக்கினர் எசாயாவின் விடுதலைப்பற்றிய நற்செய்தியில் எசாயா 61:1 "உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்" என்று அறிவுறுத்தப்படுகிறது.
பார்வை இழந்து, உள்ளம் உடைந்து போன பர்த்திமேயு, பார்வை பெற இதுவே தகுந்த காலம், என்பதை உணர்ந்து, சென்ற இடமெல்லாம், நன்மை செய்யும் இயேசுவிடம் மன்றாடினான்.
திபா 34:6 "இந்த ஏழை கூவி அழைத்தான் ஆண்டவர் அவனுக்கு செவி சாய்த்தார்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஏழை பர்த்திமேயுவின் குரல் ஆண்டவர் இயேசுவின் காதுகளில் விழ
மாற்கு 10:49 "அவரைக் கூப்பிடுங்கள்" என்றார். அச்செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவரும் தன் மேலாடையை எறிந்து விட்டு குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். அதுவே புது வாழ்வின் தொடக்கம். மேலாடையை எரிதல் என்பது.
🟢தன் கடந்த கால, பாவ வாழ்வை எறிந்தான்.
🟣சமூகத்தோடு வாழ முடியாத தனிமையை எறிந்தான்.
🔴பிறர் கடவுளின் சாபம் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்தான்.
🔵தான் யாசித்து உண்கின்ற பழைய நிலையை எறிந்தான்.
🟡தான் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவன்.
என்பதை உணர்ந்தான் ஏனெனில்
எசாயா 61:10 "ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சியடைவேன் என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்" என்ற உணர்வோடு எல்லாவற்றையும் எறிந்து விட்டு புதுப்பார்வையும், புதுவாழ்வும், வாழ்வு தரும் இயேசுவும் போதும் என்ற மனநிலையில் இயேசுவிடம் சென்று பார்வை பெற்றான்.
♦️பர்த்திமேயுப் பார்வை பெற்ற எரிக்கோ பல்வேறு சிறப்புக்குரியது.
♦️செழிப்பான ஒரு பள்ளத்தாக்கு அங்கே பேரீட்சைப் பழங்கள் அதிகமாய் விளையும் .
♦️பார்வையற்ற இருவர் பார்வை பெற்றது எந்த எரிக்கோவில் (மத் 20:29-34)
♦️தன்னை நீதிமானாக காட்ட விரும்பிய திருச்சட்ட அறிஞர் புதிய பார்வைப் பெற்றது எரிக்கோவில் (லூக் 10:29)
♦️செல்வந்தனாய் இருந்து ஆண்டவர் இயேசுவால், மீட்பை சக்கேயு பெற்றதும் எரிகோவில் (லூக் 19:1 - 10)
இவ்வாறு பலருக்கு வாழ்வும், பார்வையும் வழங்கிய எரிக்கோவும், இயேசுவும், பர்த்திமேயுவும் நமக்கு விடுக்கும் அழைப்பு நாமும் புது பார்வைப் பெற்று சமூகத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பதே.
🟡பார்வையற்ற பர்த்திமேயு அகக் கண்ணால் இயேசு வருகிறார் என்பதை கண்டது போல் நாம் நம் உள்ளத்தால் இயேசுவைப் பார்க்க பார்வை பெறுகிறோமா?
🟣வாழ்வுக்கு ஏங்கிய பர்த்திமேயுவின் கதறல் இயேசுவின் காதில் விழுந்தது போல் சமூக அங்கீகாரம், வாழ்வுக்கான ஏக்கத்தால் நலிந்தவர் எழுப்பும் குரல் நம் காதில் விழுகிறதா? இவர்களை இனம் காணும் புதியப் பார்வை பெறுகிறோமா?
🟢இந்தியாவில் 1 ஆண்டு 2 இலட்சம் கண் விழி தேவைப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டின் கண் தானம் 45 ஆயிரம் மட்டுமே. அப்படியானால் மண்ணோடு மண்ணாய் அழியும் உடல் உறுப்புக்களை பிறருக்கு தானமாய் வழங்கி வாழ்வு வழங்கும் புது பார்வை பெற்றிருக்கின்றேனா? சிந்திப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*