Friday, August 2, 2024

பொதுக்காலம் 18-ம் - ஞாயிறு மறையுரை -04.08.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

04.08.2024

விப 16 : 2 - 4 , 12 - 15,  

எபேசியர் 4 : 17 - 20 - 24,

யோவான் 6: 24- 35.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நிலை வாழ்வுக்காக உழைப்போம்

🔴மக்கள் இயேசுவை ஆர்வமாய் தேடியது இயேசுவின் வாழ்வு தரும் வார்த்தையை கேட்பதற்கு அல்ல. மாறாக மீண்டும் மீண்டுமாய் வயிறார அப்பம் உண்ணும் ஆர்வத்தாலே .

🔵மனித மனம் அழிந்து போகும் உணவிற்காக, வாழ்விற்காக வருந்தி உழைக்கிறதே ஒழிய நிலைவாழ்வுக்கான தேடலை முன்னெடுப்பதில்லை.

🟢பல நேரங்களில் மக்கள் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்னும் இலாபம் மற்றும் சுயநல நோக்கோடுதான் கடவுளைத் தேடி வருகிறார்கள்.

🟣மனித சுயநலமே - மனிதர்களின் சமய செயல்பாடுகளின் மையமாகிறது.

🟡ஆனால் உண்மையான சமயச் செயல்பாடு என்பது வலுவற்றவர்களில் கடவுளின் வல்லமை செயல்படுவதைக் கண்டு, கடவுளைப் போற்றி புகழ்வதும், வலுவற்றோர்க்கு வலுவூட்டுவதே உண்மையான சமய செயல்பாடு. உண்மையான ஆன்மீகம்.

🔴இது சமயங்களைக் கடந்த அறப்பணியாக அமையும்.

🔵இதற்கு தெளிவான இலக்கு, முயற்சி, பொறுமை, உழைப்பு இன்றியமையாகிறது.

நிகழ்வு : 1

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் நவீன்குமார், இவர் மற்ற இளைஞர்களைப் போல் பத்தோடு பதினொன்றாய் கடந்து போகவில்லை. திருச்சி நகரில் பிச்சை எடுக்கும் பலரை உற்றுப் பார்த்தாா். உழைக்கக் கூடிய வலுவிருந்தும் உழைக்காமல் யாசித்து வாழ்வு நடத்துவதைக் கண்ட நவீன்குமார் "பிச்சைக்காரர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே" என் நோக்கம் என்று தன் இலக்கை வரையறுத்தார்.

எனவே திருச்சி நகருக்குள் உழைக்காமல் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களைச் சந்தித்து, அவர்களோடு கலந்துரையாடி, 190 பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியிருக்கிறார். சிறந்த சமூக சேவைகளுக்கான விருதை நவீன்குமார் எந்த இளைஞர் பெற்றார்.

இலட்சியங்கள் இல்லாமல் இயங்கும் இளைஞர் மத்தியில் நவீன் ஒரு வரலாறு.

நிகழ்ச்சி: 2

குமரி மாவட்டத்தில் ஒரு சிறுகிராமம். ஏழைவிவசாய குடும்பத்தில் பிறந்தவர். காலில் காலணியும், pant -யும் அணிவதே ஆடம்பரம் என்று நினைக்கும் அளவிற்கு வறுமையான, விவசாய குடும்பம். அந்த ஏழை, விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவன் நன்றாகப் படித்தான் இளைஞனானபோது உயர்கல்வி படிக்க விரும்பினான். அப்பா அனுமதிக்கவில்லை. படிப்பின் மேல் உள்ள காதலால் பட்டினி கிடந்து அப்பாவின் மனதை மாற்றி B.Sc அதன் பிறகு BE(MlT), ME (IISC) படித்தார். ISRO Satellite Centre - க்கு நேர்காணலுக்குச் சென்ற இவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய பொறுப்பாளர்கள், நேர்காணல் நடத்தியவர்கள் இவரை பார்த்து "you are a useless fellow. you are not getting job. you get Lost" என்று அவமானப்படுத்தி நிராகரித்தனர். ஆயினும் விடாமுயற்சியால் ISRO Rocket Center - இல் வேலைக்குச் சென்று இறுதியில் ISRO வின் தலைவராகத் தன்னை உயர்த்தினார். இவர் 4 முறை தோல்வியுற்ற GSLV ராக்கெட்டை வெற்றி பெறச் செய்தவர் அவர்தான் திருமிகு. கைலாசவடிவு சிவன்.

வறுமை, அவமானம் இவற்றை படிக்கல்லாக்கி வரலாறாய் மாறிய விஞ்ஞானி சிவன். வரலாற்றில் நிலையான இடம்பிடித்தார்.

இன்றைய வழிபாடு இறைவன் தன் மக்களுக்கு மன்னாவும், காடையும் வழங்கி உண்பித்தார் என்பதை விட இறைவன் தன் மக்களை கண்ணும் கருத்துமாய் கண்காணிப்பவர், பாதுகாத்து வழி நடத்துபவர் என்பதை உணர்த்துகிறது.

இஸ்ரயேலின் மனநிலை

அடிமை வீடாகிய எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் மிகவே துன்புற்றனர். ஓர் இனமாய் வாழ முடியவில்லை. எருசலேம் ஆலய வழிபாடு, விழாக்கள் இல்லை, அடிமையின் கொடுக்கு அதிகமாய் வாட்டியது, ஆண்டவரை நோக்கி கண்ணீர் வடித்தனர்.

திபா 137:1 "பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்"

🔴இஸ்ரேலரின் அடிமை வாழ்வின் வலிகளை உணர்ந்த கடவுள் மோசே, ஆரோன் - வழி மீட்டு வழி நடத்திய போது உணவுக்காக, மோசே ஆரோனுக்கு எதிராக முணுமுணுத்தனார்.

எண் 21:5 "இந்தப் பாலை நிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்று வசைபாடினர். ஆயினும் இறைவன் பொறுமையோடும், கனிவோடும், கரிசனையோடும் அவர்களை பராமரித்தார்.

திபா 103:13 "தந்தை தன் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்" என்பதற்கிணங்க ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் மீது இரங்கினார்.

எசாயா 49:15 "பால் குடிக்கும் தன் மகவை தாய் மறப்பாளோ, கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிப்பாளோ இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன்" என்று தாயினும் சால பரிந்து உணவூட்டும். பாதுகாக்கும், பராமரிக்கும் தந்தையாய் இறைவன் வெளிப்பட்டார். இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவர் இஸ்ரயேலர் தனக்கும் தன் ஊழியர் மோசே, ஆரோனுக்கும் எதிராய் பேசி, செயல்பட்ட போதும் "மன்னா" - வால் உண்பித்ததை உணர்த்துகிறது.

அழியாத உயிர்தரும் உணவு இயேசு

இன்றைய நற்செய்தியில் கப்பர்நாகூமில் இயேசு போதிக்கின்றார். மக்கள் அடையாளம் கேட்கின்றனர் அப்போது ஆண்டவர் இயேசு அவர்களுக்கு

🔴வானிலிருந்து இறங்கி வந்த உயிர் அளிக்கும் உணவு தான் என்றும்.

🟢தன்னை நம்புவோர் - நிறைவாழ்வு பெறுவர் என்றும் உறுதிபட எடுத்துக்கூறினார்.

🔵இஸ்ரயேலர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனர். மன்னா தற்காலிக உடல் பசியை அடக்கியது. அதனால் உள்ள பசியை, ஆன்ம பசியை நிறைவு செய்யாத போது, எகிப்தில் உண்ட உணவையும், அர்ப்ப சுகங்களையும் நினைவுகூர்ந்து முறுமுறுத்தனர்.

🟣ஆனால் இறைவனே வாழ்வு தருகிறார், இறைவனே நிலைவாழ்வு அருள்கிறவர், இறைவனே உண்மை, இறைவனே வழி, இறைவனே நிரந்தரம் என்பதை உணர முடியாதபடி அவர்களின் அகக் கண்கள் அடைக்கப்பட்டது.

🟡யோவான் நற்செய்தி வழியாக இரு இறை உண்மைகளை தெளிவுபடுத்துகிறார்.

1 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது (யோ 6:35)

2. வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியை இராது (யோ 6:41)

மொத்தத்தில் கிறிஸ்து மட்டுமே வாழ்வு தர முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதைத்தான் இறைவாக்கினர் எசாயா

எசாயா 55:2 "உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகிறீர்கள். நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள். எனக்கு கவனமாய் செவிகொடுங்கள் நல்லுணவை உண்ணுங்கள்" என்று அறைகூவல் விடுக்கிறார். எனவே நாம் நிலைவாழ்வை உரிமையாக்க இறை குரலுக்குச் செவிமடுப்போம்.

நிலை வாழ்வுக்காக உழைக்க இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பாக

(1) தீமையைத் தவிர்த்து இயேசுவை அணிந்து கொள்வோம்

உரோ 13:14 "தீய இச்சைகளை தூண்டும் ஊனியில்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்" என்று பவுலடியாரின் அழைப்பை வாழ்வாக்கும்போது நிலைவாழ்வு வசப்படும்.

(2) கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் புதியதொரு மனுகுலமாய் உருவாக வேண்டும் கிறிஸ்துவாக மாற வேண்டும்.

கலா 2:20 "இனி வாழ்பவன் நானல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். என்ற தூய பவுலைப் போல் முழு மனித மாற்றம் பெற்றவர்களாய் மாற வேண்டும்.

(3) நம்முடைய நீதியான, உண்மையான, தூய்மையான வாழ்வால் புதிய மனிதராகப் புறப்படுவோம்.

எபே 4:34 "கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும், தூய்மையிலும் வெளிப்படும்" என்ற இறையனுபவ வரிகள் வழி, நாம் நீதியுடன், உண்மையுடன், தூய உள்ளத்துடன் உழைத்து நிலைவாழ்வை உரிமையாக்குவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment