Friday, September 20, 2024

பொதுக்காலம் 25-ம் - ஞாயிறு மறையுரை -22.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

22.09.2024

சாலமோனின் ஞானம்  2: 17 - 20, 

யாக்கோபு 3 : 16, 4:3,

மாற்கு 9: 30- 37.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


பணியில், பணிவில் மாண்புறும் தலைமை

🔴ஆண்டவர் இயேசு தன் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றை குறித்து மாற்கு நற்செய்தியில் 8, 9 மற்றும் 10 - ஆம் அதிகாரங்களில் குறிப்பிடுகின்றார்.

🔵சீடர்களுக்கு இடறலாய் இருந்தது, ஏனெனில் சீடர்கள் இயேசு எதிரியை வீழ்த்தி, ஒரு நிலையான அரசை நிறுவுவார் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.

🟢எனவேதான், மாற்கு 8 - ஆம் அதிகாரத்தில் சாவை முதல் முறை அறிவித்த போது பேதுரு இது உமக்கு வேண்டாம் என்றார்.

🟡9 - ஆம் அதிகாரத்தில் இரண்டாம் முறை அறிவித்தபோது தங்களுக்குள் யார் பெரியவர் ? என்ற பதவிச் சண்டையில் சிக்குண்டுக் கிடப்பதைப் பார்க்கின்றோம்.

🟣 10 - ஆம் அதிகாரத்தில் 3 - ஆம் முறை அறிவித்தபோது செபதேயுவின் மனைவி, தன் பிள்ளைகள் யாக்கோபு மற்றும் யோவானுக்கு, இயேசுவின் ஆட்சியில் இடப்பக்கமும், வலப்பக்கமும் இடம் கோருவதைப் பார்க்கின்றோம்.

🔴இத்தகைய மனநிலை கொண்ட சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு

1.துன்பம் ஏற்கும் எளிய மனமும்

2.பணி வாழ்வில் தாழ்ச்சியும்

3.பதவியை விட பணிவுதான் சிறந்தது என்பதை எடுத்துக் கூறுகின்றார்.

🟣பணிவான வாழ்வே கடவுள் பார்வையில் உயர்ந்தது என்று அறிவுறுத்துகின்றார்.

நிகழ்வு

திருமிகு. காமராஜ் மாபெரும் தலைவராய் சிறந்து விளங்கிய காலகட்டம். தனுஷ்கோடி தீவு புயல், கடல் கொந்தளிப்பால் அழிந்து போனது. புயல் ஓய்ந்தபின் பெருந்தலைவர் காமராஜர் மீட்பு பணிகளை பார்வையிட தனுஷ்கோடிக்கு உடனடியாகச் சென்றார். எங்கும் இடிப்பாடுகள், பிணங்கள் சிதறிக்கிடந்தது. இக்காட்சி காண்போர் உள்ளத்தை உலுக்கியது. பெருந்தலைவர் காமராசருடன் பல ஆயிரம் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் திருமிகு. காமராஜர் ஒன்றும் பேசாது தன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு, ஆங்காங்கே கிடந்த மனித உடல்களை (பிணங்களைத்) தூக்கத் தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத தொண்டர்கள், பொதுமக்கள், தலைவரோடு தங்களை மீட்புப்பணியில் இணைத்துக் கொண்டனர். இதனால் தலைவர் காமராசர் பெருந்தலைவர் என்று புகழப்பட்டார். 

🔵கட்டளை பிறப்பிப்பதில் அல்ல காலத்தின் தேவை சூழலைக் கருத்தாய் கொண்டு அப்பணியைச் செய்து முடிப்பதில்தான் தலைமைப் பண்பு சிறப்புப் பெறுகிறது. இதனைத் தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில்

மாற்கு 9:35 "ஒருவர் முதல்வராக விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினார்.

🟡தன் பதவி, பணம், புகழ், அந்தஸ்து, அதிகாரம், பாரம்பரியம் இவற்றால் தான் உயர்ந்தவன், பெரியவன் என்று எவரும் பிறரை இழிவாகக் கருத வேண்டாம் என்று ஆண்டவர் இயேசு அறநெறி புகட்டுகிறார்.

🟡இந்த உலகின் தலைவர்கள் தங்களை (1) பணம் (2) பதவி (3) புகழ் இவற்றால் உயர்ந்தவர்கள் என நினைக்கின்றனர். ஆனால் இவையெல்லாம் அழிந்து போகும். பூச்சியும், துருகும் அழித்துப்  நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று அறிவுறுத்துகிறார்.

ஆனால் ஆண்டவர் இயேசு அறிவுறுத்தும் தலைமைத்துவம் சற்று மாறுபட்டது.

(1) எளிய, தூய உள்ளம் கொண்டது

(2) பணிவும் தாழ்ச்சியும்

(3) தெய்வபயம் - நிறைந்ததாய் அமைந்தது.

1. எளிய, தூய உள்ளம் கொண்ட தலைமை பண்பு

ஒரு தலைவன், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை ஒரு ஆயன் தன் மந்தையைப் பேணிகாப்பது போல் காக்க வேண்டும்.

மக்களை பேணி வழி நடத்துபவர்களிடம் எளிய உள்ளமும், தூய உள்ளமும் குடிகொள்ள வேண்டும்.

எளிய உள்ளம் கொண்ட ஒரு தலைவன், தன் மந்தையைத் தேடி செல்வான், அலைந்ததைத் திரும்ப கொணர்வான். காயப்பட்டதைக் கட்டுவான். நலிந்தவற்றைத் திடப்படுத்துவான். தானே உடனிருந்து பராமரிப்பான்.

🔴ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு இறையாட்சியை குறித்து அறிவித்தபோது

மத் 5:3 "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது" என்றும் மத் 5:8 "தூய உள்ளத்வோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்" என்றும் அறிவுறுத்தி, ஒரு தலைவன் எளிய, தூய உள்ளம் உடையவராக விளங்க ஒரு குழந்தையை அவர்கள் முன் நிறுத்தி, அக்குழந்தை வழியாக விளக்குகிறார். குழந்தைகளைப் போல் எளிய, தூய உள்ளம் தலைவர்களுக்கு தேவை.

2. பணிவும், தாழ்ச்சியும் கொண்ட தலைமை பண்பு

மக்களை வழி நடத்துவோர் ஆணவம், அகங்காரம் தவிர்த்து, தன்பலம், பலவீனம் அறிந்து, பணிவோடும் தாழ்ச்சியோடும், மாண்போடும் வழிநடத்த அழைக்கப்படுகின்றோம்.

சீராக் 3:18 "நீ பெரியவராய் இருக்குமளவிற்குப் பணிந்து நட" என்றும் சீராக் 10:28 "குழந்தாய் நீ பணிவிலே பெருமை கொள்" என்றும் சீராக்கின் ஞான நூல் அறிவுறுத்துகிறது.

ஆண்டவர் இயேசு லூக் 14:11 "தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" என்றார். இந்த வாழ்வியல் மதிப்பீடுகளை, தன் வாழ்வாக்கி பாடம் கற்பித்தார். யோவான் 15:14 "ஆண்டவரும் போதகரமான நான் உங்கள் காலடிகளை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளை கழுவ வேண்டும்" என்றார்.


🟣ஆண்டவர், தலைவர், போதகர், மெசியா, மீட்பர் ஆகிய நான் பணிவாழ்வை அடிமைப்போன்று பணிவிடை செய்து முன்மாதிரியைக் காட்டியது போல் பணியை, பணிவோடு செய்ய அழைக்கிறார்.

3. தெய்வ பயம் நிறைந்தது தலைமைப்பண்பு

சீராக்கி ஞான நூல், தெய்வபயம் ஞானத்தின் தொடக்கம், நிறைவு, மணிமுடி என்று எடுத்துரைக்கின்றது. ஆளும் தலைவர் ஆழமான இறையனுபவம் உடையவராக விளங்க வேண்டும்.

சீராக் 11:17 "இறைப்பற்றுள்ளோரிடம் ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும். அவரது பாிவு என்றும் வெற்றியைக் கொடுக்கும்" என்று அறிவுறுத்துகிறது.

🟢ஆண்டவர் இயேசு யோவான் நற்செய்தியில் இலாசரைக் கல்லறையில் இருந்து எழுப்பும் முன் தந்தை கடவுளோடு ஒன்றித்திருப்பதை உணர்த்துகிறது. யோவான் 11:41 "தந்தையே நீர், என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்" என்று இறை உறவில் ஆழப்படுவதை பார்க்கின்றோம்.

🔵இறையச்சமும், நம்பிக்கையும் நம்மை பணி வாழ்வில் ஆழப்படுத்தும்.

நம் வாழ்வு

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலி 2:5 )

நம் குடும்பங்களில் குடும்பத்தலைவன், தலைவி கிறிஸ்துவை போல், தொண்டாற்ற, பணிவோடு நடந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

பிள்ளைகள் - பணிவோடும், கீழ்படிதலோடும் வாழ அழைக்கப்படுகிறீர்கள் யார் பெரியவர் என்றாலே அழிவுதான்.

யாக் 3:17 "விண்ணில் இருந்து வரும் ஞானத்தின் தலையாயப்பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும், பொறுமை கொள்ளும், இணங்கிப் போகும் தன்மையுடையது, இரக்கமும், நற்செயல்களும் நிறைந்தது, நடுநிலை தவறாதது, வெளிவேடமற்றது" 

யாக்கோபு ஒரு தலைவனின் பண்புகளை விளக்கும் போது

தலைவன் - தூய்மையுள்ளவனாக, அமைதி நாடுபவராக, பொறுமையோடு நடந்து கொள்பவராக, இணங்கிப் போகும் தன்மையும், இரக்கமும், நற் செயல்களையும் செய்கிறவராகவும், நடுநிலையோடு, வெள்ளி வேடம் நீக்கி, ஞானத்தோடும், தூய உள்ளத்தோடும் வாழ அழைக்கின்றார். இதுவே பணி வாழ்வை மாண்புறச் செய்யும் பண்புகள் ஆகும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment