Saturday, June 24, 2023

பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு மறையுரை - 25.06.2023.

 பொதுக்காலம் 12- ஆம் ஞாயிறு மறையுரை - 25.06.2023. 

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

   

முதல் வாசகம் - எரேமியா 20:10-13,

இரண்டாம் வாசகம் - உரோமையர் 5:12-15, 

நற்செய்தி வாசகம் - மத்தேயு  10:26-33.

------------------------------------------------------------          

அஞ்சாதீர்

------------------------------------------------------------   

♦️அறிஞர் ஒருவர் கூறுவார் மனிதரிடம் உள்ள பெரிய பாவம் பயமும், கவலையும் தான் என்று. யாரிடம் அதிகமாக பயம் குடி கொண்டிருக்கிறதோ அவர்கள் அதிகமாக கலக்கம், கவலை அடைவார்கள்.                                          

♦️இன்றைய வழிபாட்டில் இறைவன் அஞ்சாதே என்று எத்தகைய நிலையில் அழைப்பு விடுக்கிறார் என்று ஆராயும் போது,                                

♦️வாழ்வில் நெருக்கடிகள், இனி வாழவே முடியாது என்று நினைக்கக்கூடிய சூழ்நிலை, தொடர் தோல்விகள், சுமக்க முடியாத கடன் தொல்லை, அடுத்தவரின் அவமானப்பேச்சு, நோய்கள், அச்சுறுத்தல்கள் நெருங்கும் போது மனித மனங்கள் விசுவாச தளர்வுற்று, உள்ளம் சோர்வடைந்து போகும் போது இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு அஞ்சாதே உன்னோடு நான் உண்டு. மத்தேயு 28:20 இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதுதான். இந்த உடனிருப்பை நாம் உணர்கிறோமா?

நிகழ்வு

2001 மே மாதம் 17-ஆம் தியதி வியாழக்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு மணிப்பூரில் இறுதி ஊர்வலம் ஒன்று புறப்பட்டது. அவ்வூர்வலம் திம்மாப்பூர் பேராலயம் நோக்கி சென்றது.     மே மாதம் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மணிப்பூரில் குருமாணவர்கள் இல்லத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் 27 குருமாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்து பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லையெனில் 27 குருமாணவர்களையும் கொன்று போடுவதாகக் கூறினர். இந்த 27 குருமாணவர்களையும் காப்பாற்றத் துடியாய் துடித்து அருட்தந்தை ரபேல் பள்ளிக்கரா, அருட்தந்தை அந்திரியாஸ் சிண்டே, அருட் சகோதரர் ஷினு ஜோசப் என்ற மூன்று பேரையும் தீவிரவாதிகள் கொன்றார்கள். இந்த மூன்று பேரின் இறுதி ஊர்வலம் தான் பேராலயம் நோக்கி சென்றது. இந்த மூவரும் மணிப்பூரின் மங்கா மணிகளாய், விடியலின் விருட்சமாய், விசுவாசத்திற்கு சான்றாய் மாறினார்கள்.

மூன்று ஆயர்கள், 200-க்கு மேற்பட்ட குருக்கள், 500-க்கு மேற்பட்ட அருட்சகோதரிகள், 1500-க்கு மேற்பட்ட மக்கள் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதில் உரையாற்றிய ஆயர் "உறுதியில்லா எதிர்காலத்திற்காக உறுதியுள்ள நிகழ்காலத்தைச் சிதறடித்தார்கள்" ஆனால் அவர்கள் மூவரும் கோதுமை மணியாய் மடிந்தார்கள். அவர்களின் வாழ்வு மத்தேயு 10:28  "ஆன்மாவை கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அளிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற வார்த்தையில் நிலைத்தது. எனவே பயனளிக்கும் கோதுமை மணியானார்கள் துணிவுடன்.

இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எரேமியாவின் துணிச்சல் மிகு இறைவாக்கு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

பாபிலோனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் இனம் எகிப்தியரோடு கூட்டு சேர்ந்து பாபிலோனியரை எதிர்க்க திட்டம் தீட்டினர். இதனை விரும்பாத எரேமியா அதனைத் துணிவுடன் கண்டித்தார். அதோடு இஸ்ரயேல் அரசைத் தண்டிக்கும் சாட்டைப் போன்று பாபிலோனிய பேரரசு அமையும் என்றும் இறைவாக்குரைத்தார் துணிவோடு. எனவே இஸ்ரயேல் மக்கள் எரேமியாவுக்கு எதிரிகளாக மாறினார். யூதக்குருக்களும், யூத தலைவர்களும் எரேமியாவை சிறையில் அடைத்தனர். பாழ்கிணற்றில் தூக்கிப் போட்டனர். இறுதியில் அவர்களே எரேமியாவைக் கொன்றுப் போட்டனர் என்றும் கூறுவர். இவ்வேளை எரேமியா உள்ளத்தால் மிகுதியாக துயருற்றார். எரேமியா 18:18 "அவர்கள் வாருங்கள் எரேமியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்வோம்" என்று அவருக்கு எதிராக குற்றம் சாட்டினர். மிகுந்த மனக்கலக்கமுற்ற எரேமியா ஆண்டவரை நோக்கி எரே  20: 7 "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" என்று புலம்பிய போது ஆண்டவர் நம்பிக்கையூட்டித் திடப்படுத்துகிறார்.

எரேமியா 15 : 20 "நான் உன்னை அவர்கள் முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன். அவர்கள் உனக்கெதிராய் போராடுவார்கள், ஆனால் உன் மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள். ஏனெனில் உன்னை விடுவிக்கவும், காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன்" என்று நம்பிக்கையூட்டி, உறுதிப்படுத்தினார். எரேமியா அனுபவித்த துன்பங்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், சூழ்ச்சிகள் எல்லாம் இயேசுவின் பாடுகளின் முன்னடையாளமாய் அமைந்தது.

இத்துன்பங்களின் மத்தியில் இறைவன் வலிமை மிகுந்த போர் வீரரைப் போல் தம்முடன் இருப்பதையும், வலியவர் எளியவரை துன்புறுத்துவதையும் விரும்ப மாட்டார் என்றும் உறுதியாய் நம்பினார். எனவே தான் எரே 20 :13 "அவர் வறியோரின் உயிரை தீயோரின் பிடியினின்று விடுவித்தார்" என்றுரைத்தார். இது எரேமியாவின் ஆழமான இறை நம்பிக்கையை வெளிப்படுத்துவதாய் அமைகிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் உண்மைக்குச் சான்று பகரவே வந்தார். அதற்காக தன் உயிரையும் கொடுத்தார். தம் சீடர்களும் அந்த உண்மை நெறியில் நிலைபெற கற்பித்தார் ஆண்டவரின் சீடர்கள் எல்லாச் சூழலிலும் அஞ்சாது உண்மையை உரைத்திட வேண்டும் என்று விரும்பி அவர்களை அதற்காகவே பயிற்றுவித்தார்.

உண்மையை அஞ்சாமல் உரக்கச் சொன்னால் ஊறு விழைவிப்பவர்கட்கு உறுத்தும், அது சங்கடமாய் அவர்கட்கு மாறிப்போகும். ஆண்டவர் இயேசு தன்னையே முன்மாதிரியாகக் காட்டி, தன்னைப் பின்பற்றி வாழ அழைப்பு விடுத்தார்

ஆண்டவரை உறுதியாய் நம்புகிறவர்கள் எத்தகைய சூழலிலும் அஞ்சமாட்டார்கள். துணிவோடு கடவுளுக்குச் சான்று பகர்வார்கள். பழைய ஏற்பாட்டில்  2மக்கபேயர் நூலில் நாம் காண்கின்ற தாய் மற்றும் ஏழு பிள்ளைகள் அந்நிய தெய்வங்களுக்கு பணிவிடை செய்யவும், யூதநெறிகளை மீறவும் செய்யச் சொல்லியபோது அதைச் செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்ற போதும் அந்த ஏழு சகோதரர்களுள் ஒருவர் 2மக்கபேயர் 7:2 "எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்று பதில் கூறினார். எனவே மன்னர் சீற்றம் கொண்டு, அவர் நாக்கைத் துண்டிக்கவும், குடுமித்தோலை கீறி எறியவும், கை கால்களை வெட்டவும் ஆணையிட்டான். இத்தகைய துன்பங்களின் மத்தியிலும் அவர்களின் எண்ணமெல்லாம், துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் உண்மைக் கடவுளை நேசிப்பதே. 2மக்கபேயர் 7:9 "நீ எங்களை இம்மை வாழ்வில் இருந்து அகற்றி விடுகிறாய், ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்" என்று துணிந்து விசுவாச சான்று பகந்தார்கள்.

இஸ்ரயேலர்களோடு பகைமை பாராட்டிய பெலிஸ்தியர்கள், அவர்களின் படையைக் தலைமையேற்று வழி நடத்திய கோலியாத். மிகப்பெரிய உருவத்தைக் கொண்ட அவன் இஸ்ரயேலர்களையும், யாவே கடவுளையும் பழித்து இகழ்ந்தான். இதைக் கண்ணுற்ற தாவீது ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து, கோலியாத்தைக் கண்டு அஞ்சாமல் அவனை எதிர்க்க விரைந்தான். 1சாமு 17:37 "என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்த பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்று துணிந்து சென்றான். தாவீதை கண்ட பெலிஸ்தியன் ஏளனமாக பேசியபோது தாவீது 1 சாமு 17:45 "நீ வாளோடும் ஈட்டியோடும், எறிவேலோடும் என்னிடம் வருகிறாய். நானும் நீ இகழ்ந்த இஸ்ரேலின் படைத்திரள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன்" என்று சொல்லி பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

இந்த நிகழ்வுகள் இரண்டு உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது

1. பிரச்சனைகள், துன்பங்கள், எதிர்ப்புகள் வரும்போது பதற்றமடையாமல் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்.

2. படைத்த பரம்பொருளை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும். எனவேதான் சொன்னார் ஆன்மாவை கொல்ல இயலாதவர்கட்கு அஞ்ச வேண்டாம் என்று.

✝️நாம் வாழும் இந்த சமகாலத்தில் வாழ்ந்து பழங்குடி மக்கள் வாழ்வு பெற வளம்பெற 45 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, பாசிச அரசால் பொய் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து அவரின் நோய், வயது இவற்றை கூட பொருட்படுத்தாமல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய போதும் விசுவாச சாட்சியாய் மரித்த ஸ்டேன் சுவாமி இன்று நமக்கு ஒரு முன்மாதிரி.

✝️மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர, அடிமை நிலை மாற மக்களுள் ஒருவராகி நின்று சமூகநீதிக்காய் உழைத்ததால் நிலக்கிழார்களின் பகைமைக்குள்ளாகிய போதிலும் துணிந்து இறையாட்சி மதிப்பீடுகளை சுமந்ததால் சமுந்தர்சிங் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட - ராணி மரியா நமக்கு ஒரு வரலாற்றுச் சான்று.

✝️அரசின் உயர் பதவியில் இருந்தாலும், உண்மைக்கானத் தேடலில் நானே வழியும், உண்மையும் வாழ்வும் என்ற அருள்நாதர் இயேசுவை தன் வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொண்டதால், பல்வேறு நெருக்கடிகள், துன்பங்கள், புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி, சித்திரவதைச் செய்யப்பட்டு காற்றாடி மலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், கடுகளவும் அச்சமின்றி துணிந்து விசுவாச சான்று பகர்ந்த மறைசாட்சி, புனித தேவசகாயம் நமக்கோர் எடுத்துக்காட்டு.

நாமும் நம் வாழ்வில் துன்பம், துக்கம், கவலை, கண்ணீர், பழிச்சொல், அவதூறு, ஏமாற்றம் வரும்போது துவண்டு விடாமல் ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து அஞ்சாமல் துணிந்து நம்பிக்கையில் பயணப்பட அருள் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

No comments:

Post a Comment