Friday, June 30, 2023

பொதுக்காலம் 13ம் ஞாயிறு மறையுரை - 02.07.2023

பொதுக்காலம் 13- ஆம் ஞாயிறு மறையுரை : 02.07.2023. 

2 அரசர் 4:8 -11, 14-16,
உரோமையர் 6:3-4, 8-11,
மத்தேயு  10: 37-42.

அருட்பணி. *ஜெரால்டு ஜெஸ்டின்* குழித்துறை மறைமாவட்டம்.
------------------------------------------------------------          
*நல்ல மதிப்பீடுகளால் சீடராவோம்*
-----------------------------------------------------------
♦️தெய்வ பயம், இறை நம்பிக்கை, அடுத்தவரை பற்றி அக்கரையின்றி வாழும் இக்காலத்தில்,  நாம் நமது நல்ல மதிப்பீடுகளால், நற்செயல்களால் ஆண்டவருக்குகந்த சீடராவோம் என்று சிந்திக்க அழைக்கிறது இன்றைய வழிபாடு.                                                     
♦️இறையச்சத்தோடு-இறைவனை அன்பு செய்கிறவர்கள் அயலாரையும் நிறை மனதோடு ஏற்று அன்பு செய்வர்.                              
♦️தங்கள் நம்பிக்கையை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தி தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உயிரோட்டமானது என்று சான்று பகர்பவர்கள் சீடர்கள்.
♦️நாமும் நம் நல்ல செயல்களால் இறைவனுக்குரியவர்கள், அவரின் சீடர்கள் என்பதை உணர்த்துவோம்.

*நிகழ்வு:1* - *14.06.2023 ஊடகச் செய்தி*

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி, அதில் 7 - ஆம் வகுப்பு படித்த ஒரு மாணவன் நன்றாக படிப்பவன் தாய் - தந்தை இருவரும் இல்லை. உடைந்த ஒரு சிறு குடிசை வீடு. அந்த மாணவனின் வறுமை நிலையை கண்ணுற்ற அந்தப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர் திருமிகு. தமிழ்கனி தன் சொந்த செலவில் ஒரு சிறிய கான்கிரீட் இல்லம் கட்டிக் கொடுத்துள்ளார் அந்த ஏழை மாணவர்க்கு.

*நிகழ்வு: 2* - *25.06.2023 ஊடகச் செய்தி*

நாங்கள் உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆச்சு சார் - ன்னு மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு தகவல் அனுப்ப, உடனடியாக அந்த மனிதரின் முகவரியைக் கண்டுபிடித்து அந்த வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள், அரிசி அதோடு பணம் கொடுத்து உதவி செய்தார்.  அதோடு அவர்களோடு தரையில் நீண்ட நேரம் அவரின் எளிய வீட்டில் அமர்ந்து உரையாடி, உறவாடிச் சென்றிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி. ஜெயக்குமார்.

இந்த இரு நிகழ்வுகள், ஆசிரியர் தமிழ்கனியாகட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாராகட்டும் அக்குடும்பத்தார் பார்வையில் தெய்வமாகிறார்கள். மானுடர் நமக்கு மதிப்பீடுகளை நற்செயல்களால் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

*இன்றைய முதல் வாசகத்தில்*

எலிசா இறைவாக்கினர் சூனேமுக்குப் போகிறார். அங்குள்ள செல்வ பெண்மணி உணவருந்த வற்புறுத்துகிறாள். இறைவாக்கினர் எலிசா அவ்வழி பயணம் செய்யும்போது அங்கு உணவருந்துவது வழக்கம். 2 அரசர் 4:9 *நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்* என்றவர் வீட்டின் மேல் மாடியில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்குப் போன்ற வசதிகள் செய்து கொடுக்கிறார். எலிசா இறைவாக்கினார் அவளின் நல்ல, கரிசனையான செயலுக்கு கைமாறு செய்ய நினைக்கிறார். அப்பெண்ணிற்குக் குழந்தை இல்லை என்பதை தன் பணியாளர் கேகசி வழியாக அறிகிறார். அறிந்தவர் அவளை அழைத்து 2அரசர் 4:16 *"அடுத்த ஆண்டு இதேப் பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்"* என்று ஆசிவழங்கி வாழ்த்தினார்.

மத் 10:41 *"இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்று கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைமாறு பெறுவார்"*. இறைவாக்கினருக்கு அவள் வழங்கிய மதிப்பு, ஏற்படுத்திய வசதிகள் எல்லாம் அவளின் வாழ்வுக்கான ஆசீராய் நிரம்பி வழிந்தது. தொடக்க நூல் 18-ம் அதிகாரத்தில் மம்ரே பகுதியில் தேவதாரு மரங்களுக்கிடையில் கடவுள் தூதர் மூவர் தோன்ற, ஆபிரகாம் அவர்கள் மூவரும், கடவுளின் மனிதர்கள் என்பதை அறிந்து அவர்களை சிறப்பாக உபசரித்தார். குறிப்பாக எண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்து உணவருந்தச்  சொல்கிறார். அவர்கள் உண்ணும் வரை மரத்தடியில் நின்று கொண்டார். அவர்கள் போகும்போது *தொநூ 18:14 இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன் அப்பொழுது சாராவிற்கு ஒரு மகன் பிறந்திருப்பான்* என வாழ்த்தி, வாரிசு வழங்கி ஆபிரகாமை ஆசீர்வதித்தார் இறைவன்.

நம்மை நாடி வருவோரையும், நம்மை தேடி வருவோரையும் மனமுவந்து, மதித்து, மாண்புடன் நடத்துகிறோமா? 

⭐அவர் ஆண்டவரின் மனிதரும் புனிதருமாய் இருக்கிறார் என்று இறைவாக்கினர் எலிசாவை அவருடைய செயல்களால் இனம் காண்பது போல், பிறர் நம்மை எத்தகையோராய் இனம் காண்கின்றனர், சிந்திக்க செயலாற்ற அழைக்கப்படுகின்றோம்.

இந்த நற்செய்தியில் சீடராய் இருப்பதற்கான தகுதிகள் சீடரின் குணநலன்களைக் குறித்து மத்தேயு விளக்குகிறார்.

சீடர் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் குறிப்பதல்ல மாறாக கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற எல்லாருக்கும் பொருந்தும், அருட்நிலையில் இருப்போரும், பொதுநிலையில் இருப்போரும் அவர்களின் நிலையில் கிறிஸ்துவை பிரதிபலிக்க அழைக்கப்படுகின்றோம்.

1. *கடவுளுக்கு முதலிடம் வழங்கல்*

சீடத்துவத்தின் தலையாய பண்பு கடவுளை முதன்மைப்படுத்துவது தான் நம் வாழ்வின் எல்லாமுமாய் இறைவன் அமைவது தான் சிடத்துவம்.

இணைச் சட்டம் 6.5 *"உன் முழு இதயத்தோடும் உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரில் அன்பு கூறுவது"* என்று திருவிவிலியம் அறிவுறுத்துகிறது. எனவே தான் இன்றைய நற்செய்தியில் மத் 10:37- *"என்னைவிடத் தன் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்பட தகுதியற்றவர்"* என்றார் இறைமகன் இயேசு. இதனால் பெற்றோரை, உறவுகளை, வெறுக்கவோ துறக்கவோ வேண்டும் என்பதல்ல, மாறாக கிறிஸ்து தான் நமக்கு வாழ்வும், வழியும், உண்மையும் என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் சீடராவதே மாட்சியும், மகிமையும் என்பதை உணர்த்துகிறது. கடவுளை வாழ்வின் மையமாக்கி, அவரை வணங்குவதும், பெற்றோர், உடன்பிறப்புகளை மதிப்பதும், நேசிப்பதும் தான் சிறப்பான ஆன்மீகம். இதனை லேவி 19:18 *"உன் மீது அன்பு கூறுவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக"* என்று ஆண்டவரே அறிவுறுத்துவதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

2. *சிலுவையைச் சுமத்தல்*

மத் 16:24 *"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்"* என்று சீடருக்கு அறிவுறுத்தினார் இறைமகன் இயேசு. ஒப்பற்ற செல்வமாகிய கிறிஸ்துவை தம் சொந்தமாக்கிய பின் தூய பவுல் பல்வேறு துன்பங்கள், அச்சுறுத்தல்கள், பழிச்சொற்கள், வேதனைகட்கு ஆளானர். அதனை அவரே 2கொரி 11:23 - *"பன்முறை சிறையில் அடைபட்டேன், கொடுமையாய் அடிப்பட்டேன், பன்முறை சாவின் வாயில் நின்றேன்"* 2 கொரி. 11:24 *ஐந்து முறை யூதர்கள் என்னை சாட்டையால் ஒன்று குறைய 40 அடி அடித்தார்கள்"* 2 கொரி 11:25 *மும்முறை தடியால் அடிப்பட்டேன். ஒருமுறை கல் எறிபட்டேன். மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன் ஓர் இரவும் பகலும் ஆள் கடலில் அல்லலுற்றேன்"* என்று கூறுவதைப் பார்க்கின்றோம். இது தூய பவுல் மட்டுமல்ல, அவருடைய உண்மை சீடர்கள் எல்லாருக்கும் இது பொருந்தும். எனவேதான் ஆண்டவர் இயேசு என்னைப் பின்பற்றுகிறவர்கள் *சிலுவையைச் சுமக்க வேண்டும்* என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.

உண்மைச் சீடர்களை துன்பங்கள் நெருக்கடிகள் ஒருபோதும் சிதறடித்துவிட முடியாது. அவர்கள் எத்தகையத் துன்பங்களிலும் நெருக்கடிகளிலும் கிறிஸ்துவை உறுதியாய் பற்றிக் கொள்வர். உரோமையர் 8:35 - *"கிறிஸ்துவின் அன்பின்னின்று நம்மைப் பிரிக்க கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்."* என்பதிலிருந்து உண்மைச் சீடனை எதுவும் எச்சூழலிலும் அசைக்க முடியாது. சிலுவைகள் நெருங்கும்போது சிதைந்து போகாமல் உறுதியாய் நிலைத்து நிற்பான்.

3. *ஆன்மாவைக் காத்துக் கொள்வோம்*

மத் 10:34 *"தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக் கொள்வார்"* ஆண்டவருக்காக தம் உயிரை இழப்போர் ஆன்மாவைக் காத்துக் கொள்வார்.

🔴ஆண்டவரின் சீடர்கள் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சமாட்டார்கள். மாறாக ஆன்மாவை அளிக்க வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவார்கள்.

🔴நாம் ஆன்மாவை இழந்தால் அதற்கு ஈடாக எதையும் வழங்க இயலாது என்பதை உணர்ந்தவர்களாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

எபே. 6:12 - *"நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர்,  இருள் நிறைந்த இந்த உலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியில் உள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோரோடும் போராடுகின்றோம்"* எனவே விசுவாசத்தில் தளர்வு வராது நிலைத்து நின்று ஆன்மாவைக் காத்து, ஆண்டவருக்காய் பல ஆன்மாக்களை அறுவடை செய்வது சீடத்துவம்.

*நமது வாழ்வுக்குக் கடப்போம்*

இன்றைய உலகில் நல்ல சீடராய் வாழ்வது என்பது:

✝️நம்மை நாடி வருபவரிடம் அன்பாலும், ஆற்றல் படுத்தும் சொற்களாலும் உரையாடி,  எந்நிலையிலும் நாம் அவருடன் உண்டு என்ற நம்பிக்கையை வழங்குகிறோமா?

✝️நம் வாழ்வில் பல்வேறு தருணங்களில் பல்வேறு மனிதர்கள் நமக்கு உதவியாக, உற்றதுணையாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கு எலிசாவைப் போல் நன்றி பாராட்டியிருக்கிறோமா?

✝️பிறரின் தேவைகளை, மனதின் வலிகளை நாம் முழுவதும் அறிந்திருந்தும், அவ்வலிகளை மாற்ற, கேகசி போல் முன் வருகிறோமா?

✝️நம் வாழ்வில் வாழ்வு தந்து பராமரித்து வழிநடத்தும் கடவுளை முதன்மைப்படுத்தி, அவரின் சீடராக வாழ்கிறோமா? இல்லை பணம், பதவி, அதிகாரம் இவற்றை முதன்மைப்படுத்துகிறோமா?

✝️நானும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன் என்கிற தூய பவுலின் மனநிலை நம்மிடையே நிலைபெற்றுள்ளதா?

*சிந்திப்போம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. *ஜெரால்டு ஜெஸ்டின்* குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
*தேனருவி மீடியா*
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.

1 comment: