Friday, July 7, 2023

ஆண்டின் பொதுக்காலம் 14 ம் ஞாயிறு மறையுரை - 09.07.2023.

  




செக்கரியா  9:9-10,

உரோமையர் 8:9, 11-13,

மத்தேயு  11: 25-30.


அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

------------------------------------------------------------          

நம் மெசியா எத்தகையவர்

------------------------------------------------------------

♦️இன்றைய வழிபாடு மெசியாவின் வருகையின் போது எத்தகைய பண்பு நலன்கள் வெளிப்படும் அல்லது மெசியா எத்தகையவராய் இருப்பார் என்று எடுத்தியம்புகிறது.

♦️மெசியாவாகிய இயேசு, தந்தை கடவுளுக்கு நன்றி கூறி, தாம் வாழ்ந்த நாட்களில் உள்ளம் சேர்ந்து போன மக்களை தன் கனிவாலும் தாழச்சியாலும் ஆறுதல்படுத்துபவராகப் பார்க்கின்றோம்.

♦️இதன்வழியாக நாம் காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து செயல்படும் கருத்தான, பொறுப்பான, உணர்வுளள்வர்களாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

♦️மெசியாவின் வருகையின் போது நாம் அவரிடம் இருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளாக வழிபாடு சிலவற்றை முன் வைக்கிறது.


1. எளிமை - தாழ்ச்சி என்ற புனிதத்தை நமக்கு உணர்த்தி நிற்கிறது. 

இன்றைய நற்செய்தியில் கூட மத். 11:29 “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” என்று ஆண்டவர் இயேசு தம்மை அறிமுகப்படுத்துகிறார். இன்றைய முதல் வாசகத்திலும் செக் 9:9 "கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகின்றார்” என்று செக்கரியா அறிவுத்துவதன் வழி மெசியா எளிமையும், பரிவும் கனிவும் உடையவர் என்று உணரலாம்.

நம் திருவிவிலியத்தில் “குதிரை” போர் வீரர்களோடு இணைத்து கூறப்படும், விடுதலைப்பயணம் நூலும் செக்கரியா நூலும் இதை நமக்கு நன்கு உணர்த்துகிறது. வி.ப. 14:9 "பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை….” என்றும் செக். 1:8 "இதோ சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதன் ஒருவரை நேற்றிரவு கண்டேன்” என்ற இறைவார்த்தைகள் குதிரை, மற்றும் அதில் ஏறிவருவோர் பெரும்பாலும் போர்வீரர் அல்லது குதிரைவீரர், அல்லது வீரமிக்கவர் என்று பொருள்படுகிறது. ஆனால் மெசியா எளியவர். கழுதை சாந்தத்தை, அமைதியை, எளிமையை அடையாளப் படுத்துகிறது.

தொடக்கநூலில் யாக்கோபு தன் புதல்வனாகிய யூதாவைக் குறித்துச் சொல்லும் போது. தொ.நூ. 49:11 "அவன் திராட்சைச் செடியில் தன் கழுதையையும் செழுமையான திராட்சைக் கொடியில் கழுதைக் குட்டியையும் கட்டுவான்” என்றும். 1 அரசர்கள் முதல் அதிகாரத்தில் தாவீது தன் மகன் சாலமோனை தனக்குப்பின் அரசராகத் திருப்பொழிவு செய்ய அழைத்துவரும் போது 1அரசர் 1:33 "என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி  கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அறிவுறுத்துவதையும் திருமறைவழி அறிகின்றோம்.

மெசியாவாகிய இயேசுவைக் குறித்து மத்தேயு கூறும் போது இயேசுவை அமைதியின் காவலராக எளிமையின் இலக்கணமாக விளக்குகிறார்.

மத். 21:5 : "கழுதையின் மேல் ஏறிவருகிறார், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செக்கரியா அறிவுறுத்துவதை மத்தேயு உறுதி செய்கிறார். எனவே எளிய மெசியாவின் அன்புப் பிள்ளைகள் நாம் தாழச்சியும், சாந்தமும்,

எளிமையும், பரிவும் உள்ள மக்களாக மாற அழைக்கப்படுகின்றோம்.


2. நீதி, நேர்மை

மெசியாவைக் குறித்து இறைவாக்கினர் செப்பனியா கூறும்போது. செப் 2:3 "அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள் நேர்மையை நாடுங்கள்” என்று அறிவுறுத்துவதிலிருந்து நீதியையும், நேர்மையையும் இறைவனிடமிருந்துப் பிரித்துப் பார்க்க இயலாது, மேலும் இறைவாக்கினர் எசாயா.

எசா 32:17 "நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு நீதியின் வினாவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்” என்று விளக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். தி.பா. 96:13 “ஏனெனில் அவர் வருகின்றார் மண்ணுலகிற்கு நீதி தீர்ப்பு வழங்க வருகின்றார்” என்றும் தி.பா. 99:4 'வல்லமை மிக்க அரசரே நீதியை நீர் விரும்புகின்றீர் நேர்மையை நிலைக்கச் செய்கிறீர்” என்று மெசியாவின் செயல்கள், எவ்வாறு அமையும் என்பதை தாவீது எடுத்தியம்புகிறார், ஆண்டவர் இயேசுவும் தம் மலைப்பொழிவில், நீதி நிலை நாட்டும் வேட்கைக் கொண்டோரையும், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோரையும் பேறுபெற்றோர் என்றார். மெசியாவின் வருகையின் போது நீதியும், நேர்மையும் சிறப்புற நிலைபெறும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.


3. சமாதானம் அருள்பவர்

இன்றைய முதல் வாசகத்தில் செக்கரியா இறைவாக்கினர் செக். 9:10 "எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார், போர்க்கருவியான வில்லும் ஓடிந்து போகும் வேற்றினதாத்ருக்கு அமைதியை அறிவிப்பார் என்றும் சமாதனத்தின் அடையாளமாய் மெசியா வருவார்" என்கிறார். போர்கருவிகளின் அழிவு -  போரின் முடிவு, 

அமைதி - சமாதானத்தின் தொடக்கம் இறைவாக்கினர் எசயாயவும் முடிவில்லா அமைதியை அருள்பவர் இறைவன் என்றும், போர்க்கருவிகள் எல்லாம் உழைப்பதற்கான வாழ்வின் கருவிகளாக மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவுறுத்துகிறார். எசா 2:4 "அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள். ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது” என்கிறார் மேலும்.

எசா. 9:5 *"அமளியுற்ற போர்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும்,

இரத்தக்கறை படிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்”* என்பதிலிருந்து போர்வன்மங்கள் மறைந்து சமாதானமும், அமைதியும், மெசியாவின் வருகையில் நிலைபெறும். எங்கெல்லாம் போருக்கு எதிரான, அநீதிக்கு எதிரான குரல்கள் ஒங்கி ஒலிக்கின்றனவோ அங்கே மெசியாவின் பிரசன்னம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் போது தூதரின் வாழத்தும் இயேசு உயித்தெழுந்த பின் தம் சீடர்களைத் திடப்படுத்தும் போது வாழ்த்திய வாழ்த்தும் உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்பதுதான். எனவே மெசியா அமைதியை விரும்புகிறவராக வெளிப்படுகிறார்.


4. இரக்கமும், பரிவும்

இறைவன் மனதுருகும் கடவுள் பிள்ளைகள் துயருறுவதை விரும்பாதவர். ஆகவேதான் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் தவித்தபோது பரிவு கொண்டார் என்றுப் பார்க்கின்றோம் இயேசு பாவத்தை வெறுத்தார். ஆனால் பாவிகளை நேசித்தார். இயேசு, துன்புறுவோர், துயருறுவோர், ஒடுக்கப்பட்டோர், பாவிகள், சட்டத்தால் நசுக்கப்பட்டோர் மீது இரக்கம் காட்டுவார். மத். 11:28 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார் நமதாண்டவர் இயேசு.

தி.பா. 34:18 "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்" என்று தாவீதும் ஆண்டவரின் பரிவையும், இரக்கத்தையும் எடுத்தியம்புகிறார். எங்கு பரிவு, இரக்கம் குடிகொள்கிறதோ அங்கே மனிதம் குடிகொள்ளும்.

மானுடநேயப் பண்புகள் செழிக்கும், மனிதம் வாழும்.


நிகழ்வு 


29.06.2023 சமூக ஊடகச்செய்தி

நடிகர் படவாகோபி. ஹரிதா தம்பதியரின் மகள் ஆத்யா. ஆத்யா தன் ஐந்தாவது வயதில் திடீரென காலமானர். அவருடைய இறப்பிற்கு பிறகு, அவருடைய பிறந்தநாளை அக்டோபர் 18, 2007 "Aadya's Hug” என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றை நிறுவினார்கள். இதுவரை அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளைக் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்த டிரஸ்ட் - ன் நோக்கம் வாழ்வு மறுக்கப்படும் குழந்தைகட்கு வாழ்வும், அக்குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொண்டாடக் கற்றுக் கொடுப்பதுமாகும் என்கிறார். சுயநலங்கள் மலிந்த இந்த உலகத்தில் இரக்கமும், பரிவும், பொது நல்நோக்கம் கொண்ட பல நல்ல மனிதகளால் தான் உலகம் இன்றும் வாழ்கிறது. ஆண்டவர் இயேசுவின் வேண்டுதல் கூட, எளியவரை மையப்படுத்தியதாய் அமைந்தது. அகங்காரமும் ஆணவமும் கொண்ட ஞானிகளைத் தவிர்த்து எளிய, தாழச்சியுமான

குழந்தைகளை முன்னிலைப்படுத்துகிறார். எனவேதான் மத.; 11:25 “இயேசு, தந்தையே விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகட்டு வெளிப்படுத்தினீர்” என்று வேண்டினார். நம் ஆன்மாவில் பயணப்பட வழிபாடு நமக்கு அழைப்பு கொடுக்கிறது.


மெசியா, நாம் வாழ்வாக்க அழைப்பு விடுக்கும் மதிப்பீடுகள் நம்மில் நிலைபெறுகிறதா சிந்திப்போம்.


✝️ஆண்டவர் இயேசு கனிவும், மனத்தாழ்மையும் உடையராய் வாழ்ந்தது போல் நாம் நம் வாழ்வில் எளிமையும், கனிவையும், மனத்தாழ்ச்சியையும் வாழ்வாக்குகிறோமா?

✝️ஆண்டவர் இயேசு அநீதியோடும், உண்மைக்குப்புறம்பாக நேர்மையற்றும் இருந்த பரிசேயர்களை - வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்று கண்டித்தது போலவும் அநீதிகள் நடைபெற்ற எருசலேம் ஆலயத்தில் தனி ஒருவராய் நீதியின் சாட்டையை ஏற்றியது போல் அநீதிகளை, நேர்மையற்றவைகளைக் களைய முன்வருகிறேனா?

✝️அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுபவர் என்ற ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து அமைதியின் கருவியாய் நாம் செயலாற்றுகிறோமா?

✝️இரக்கமுடையோரையும், கனிவுடையோரையும் பாராட்டும் இறைவன், இந்த சமூகத்தை நாம் கனிவோடும், இரக்கத்தோடும் பார்க்க அழைக்கிறார். நாம் எத்தகைய உள்ளம் கொண்டு இந்த சமூகத்தைப் பார்க்கிறோம்.


சிந்திப்போம்!

மெசியாவின் அன்பு பிள்ளைகளாவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.

1 comment:

  1. சிறப்பு...வாழ்த்துகள்...

    ReplyDelete