Friday, July 14, 2023

ஆண்டின் பொதுக்காலம் 15 - ம் ஞாயிறு மறையுரை - 16.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 15- ஆம் வாரம் ஞாயிறு)

16.07.2023. 

எசாயா  55 : 10 -11,

உரோமையர் 8:18 - 25,

மத்தேயு  13: 1 - 23.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.



                                          பலன் கொடுப்போம்

♦️மனித கண்டுபிடிப்பின் உச்ச மொழி. வார்த்தை உணர்வுகளின் புறப்பாடு.

♦️வார்த்தை ஒரு அடையாளம், மனித வாழ்வின் உளமாற்றங்களால் ஏற்படும் உணர்வுகளான வெறுப்பு, கோபம், சாந்தம், அமைதி ஆகியப் பண்புகளை வார்த்தை வழி வெளிப்படுத்துகிறோம்.

♦️வார்த்தைகள் ஆக்க சக்தியாகவும் புலப்படும்,  அழிவுசக்தியாகவும் வெளிப்படும்.

♦️வார்த்தைகள் பலன் கொடுக்கவும் செய்யும், பலனை இல்லாமல் ஆக்கவும் செய்யும்.

♦️ஆண்டவரின் வார்த்தைகள் உயிருள்ள, ஆற்றல் மிக்க, இருபுறமும் கருக்கு வாய்ந்த எந்த வாளிலும் கூர்மையானதாக அமைந்துள்ளது.

♦️இந்த வார்த்தை - நம் உள்ளத்தில் நாள்தோறும் விதைக்கப்படுகிறது. ஆனால் நம் வாழ்வில் அது பலன் கொடுக்கிறதா? என்று நம்மை நாம் ஆய்வு செய்ய வழிபாடு அழைக்கிறது. 

🟣இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் நாம் நூறு மடங்கு பயன் கொடுக்கிறவர்களாக மாற வேண்டும் என்பதுதான்.

🟣நம் வாழ்வு வாழ்வதற்கே, அதை பயனுள்ளதாய் வாழ தான் அழைக்கப்படுகின்றோம்.

🟣நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதும் நம் வாழ்வின் பொருள் உணர்வதுமே, நம்மை பலன் கொடுப்பவர்களாக உருமாற்றுகிறது.


நிகழ்வு

நைஜீரியா நாட்டின் ஃபெமி ஒடெடோலா என்பவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பத்து செல்வந்தர்களில் ஒருவர். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணம் எது என்று. அவரின் பதில் இவ்வாறு அமைந்தது. என் வாழ்வை நான்கு நிலைகளில் பிரித்துப் பார்க்கின்றோம். முதல் நிலை என் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பருவம். பணம் சேர்ப்பது தான் மகிழ்ச்சி என்று நினைத்து கோடி கோடியாய் பணம் சேர்த்தேன். என்னிடம் பணம் நிரம்பி வழிந்தது. ஆனால் மகிழ்ச்சி இல்லை.

இரண்டாம் நிலையில் பெரிய பெரிய கலைப்படைப்புகள், ரேல்க்ஸ் கடிகாரம், உலகின் விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை வாங்கி சேர்த்தேன். அதிலும் நான் மகிழ்ச்சியை கண்டடையவில்லை.

மூன்றாம் நிலையில் பெரிய project எடுக்க ஆசைப்பட்டேன். இக்காலகட்டத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தின் 95% (விழுக்காடு) டீசல் என் வழியாகத்தான் சந்தைப்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள மிகப்பெரிய கப்பல் என்னுடையதுதான். இதுவும் நிறைவையும், மகிழ்ச்சியையும் வழங்கவில்லை.

நான்காம் நிலையில் ஒரு நாள் என் நண்பர் சொன்னார். நைஜீரியாவில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு 200 சக்கர நாற்காலி (wheel chair) கேட்கிறார்கள், அவர்கள் அனைவரும் போரில் சிக்குண்டு கை, கால்களை இழந்த பிள்ளைகள் அவர்களுக்கு 200 wheel Chair வாங்கி விட்டு, அதை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்றார். ஆகவே அந்த நிகழ்வுக்கு நான் போனேன் எல்லாரும் 18 வயதிற்கு குறைவானவர்கள். எல்லாருக்கும் Wheel Chair வழங்கிவிட்டு நான் வெளியே செல்ல முற்படும் போது, 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை தன் wheel Chair - இல் இருந்து கீழே இறங்கி மிக விரைவாக ஊர்ந்து என்னிடம் வந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டது. எதற்கு என் கால்களைப் பிடிக்கிறாள் என்று தெரியாமல் குனிந்து அக்குழந்தையின் கையைப் பிடித்து, என்ன வேண்டும் என்று கேட்டேன். அந்தப் பதினைந்து வயதுக்கு குழந்தை என்னைப் பார்த்துச் சொன்னது. உங்கள் முகத்தை ஒருமுறை நான் பார்க்க வேண்டும். ஏனெனில் இனி உங்களை நான் பார்ப்பேனா என்பது எனக்கு தெரியாது உங்களை நான் சொர்க்கத்தில் பார்க்கும் போது அடையாளம் கண்டு நன்றி சொல்லனும் என்றதாம் அக்குழந்தை. அக்குழந்தையின் வார்த்தை என்னை வெகுவாய் பாதித்தது. இந்த சிறிய உதவி அக்குழந்தைகளுக்கு எத்தகைய மகிழ்வை, நிறைவை கொடுத்தது என்பதை கண்டு கண்கள் பனிக்க மகிழ்ந்தேன்.


வாழ்வின் மகிழ்வு

🔵பணம் சேர்ப்பதில் இல்லை

🔵பெயர் புகழில் இல்லை

🔵அந்தஸ்த்தில் இல்லை மாறாக

🔵அடுத்தவரைத் தூக்கி விடுவதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து என்னையே மாற்றிக் கொண்டேன். என்னை மாற்றத்திற்கு உட்படுத்தியது என் நண்பனின் வார்த்தை என்றார் ஃபெமி ஓடெடோலா.


ஆம் நம் வார்த்தைகள் பயன் கொடுக்கிற வார்த்தைகளா? சிந்திப்போம்!


இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் போது, பலன் தராமல் ஒருபோதும் இருப்பதில்லை, என்கிறார். வானத்திலிருந்து பொழியப்படும், பனியும் - மழையும் - நிலத்தினை நனைத்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் கொடுத்து வாழ்விப்பது போல் ஆண்டவரின் வார்த்தையும் வாழ்வு வழங்கும். யோவான் 6:68-ல் இது பேதுரு ஆண்டவரிடம் "நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்று ஆண்டவரின் வார்த்தை வாழ்வு கொடுக்கும் ஆற்றல் படைத்தது என்பதை அறிக்கையிடுவதைப் பார்க்கின்றோம். திருவிவிலியத்தில் உள்ள ஆற்றல் மிக்க வாழ்வு வழங்கும் வார்த்தைகள் பலருடைய வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

🟢உலகத்தின் போக்குகளும், உலகத்தின் இன்பங்களும், கற்ற கல்வியும் கதியென்று பாவத்தில் நிலைத்து நின்ற அகுஸ்தினாரின் உள்ளத்தை உரோமையர் 13: 14 "பகலில் நடப்பது போல் மதிப்போடு நடந்து கொள்வோமாக, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிரப்போமாக" என்ற பவுலின் வார்த்தைகள் பண்படுத்தியதால் புனித அகுஸ்தினாராக, திரு அவையின் மறை வல்லுனராக மாறினார்.

🟢பாவியான அகுஸ்தினார் புனித அகுஸ்தினராக மாறி பல மடங்கு பலன் கொடுப்பவராக மாறினார்.

🟢கல்வி, பதவி, புகழ், செல்வம், அதிகாரம், குடும்பம், அந்தஸ்து இவைதான் வாழ்வு என்று நினைத்து எவரையும் மதியாது வாழ்ந்த சவேரியார் புனித இஞ்ஞாசியார் உரைத்த திருமறை வார்த்தைகளால் உள்ளம் குத்துண்டு, மாற்றம் பெற்றார்.

மத். 16:26 "மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன, அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்" என்ற வார்த்தைகளால் மாற்றம் பெற்று பல ஆயிரம் ஆன்மாக்களை அறுவடை செய்தார் கிறிஸ்துவுக்காக.


🟢ஆன்மாவை காத்துக் கொண்டதன் வழியாக, மாபெரும் புனிதராய், அழியாத உடலாய் உலகிற்கு, சான்று பகர்கிறார்.

இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா,  பனியும், மழையும் நிலத்தை நனைத்து பலன் கொடுப்பதைப் போல், உயிருள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மிகுந்த பலனைத் தரும் என்கிறார்.

♦️அந்த ஆற்றில் மிக்க வார்த்தைகளால் தான் தொடக்க நூலில், உருவமற்ற உலகை ஒருங்கமைத்து, ஒளி, நிலம், நீர், பயிர், பச்சைகள், விலங்குகளைப் படைத்து எல்லாவற்றையும் நன்று என்று கண்டார்.

♦️நன்றாய் படைக்கப்பட்டவை அனைத்தும் ஆண்டவரின் வார்த்தையில் வந்தவையே 

திபா. 33:9 "அவர் சொல்லி உலகம் உண்டானது. அவர் கட்டளையிட அது நிலை பெற்றது" என்ற இறைவாக்கு, ஆண்டவரின் வார்த்தையின் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் போல் பலம் கொடுக்க அழைக்கிறார் இறைவன்.

நான்கு விதமான மனங்களில் இறைவார்த்தை என்னும் விதை விதைக்கப்பட்ட போது எப்படி பலன் கொடுத்தது என்பதை நற்செய்தி விளக்குகிறது.


வழியோரம்


♦️இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ள விரும்பாதவர்கள்.

♦️பரிசேயர், சதுசேயர், மறை நூல் அறிஞர்

♦️பொறுப்பற்றத்தனமாக, கண்டும் காணாதவர் போல் செல்வது எ.கா. -இக்காலகட்டத்தில் இளைஞர் மற்றும் சிறுவர்கள் - பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள், சமூகத்தின் வாழ்வியல் நெறி கேட்டு செவிமடுக்காமல் இருப்பது.

ஊதாரி மைந்தன் உவமையில் வரும் பொறுப்பற்ற மகன்.


பாறை

இறைவார்த்தையைக் கேட்பவர்கள், விட்டுவிடுவார்கள் இதயங்கள் ஈரமற்று, வறண்டு போகும் இயேசுவின் நாட்களில் ஆட்சி செய்த ஏரோது, திருமுழுக்கு யோவானின் தலையைக் கேட்ட ஏரோதியா போன்றவர்கள் பாறை நிலத்திற்கு ஒப்பானவர்கள்.

மத் 13:15 "இம் மக்களின் நெஞ்சம் கொழுத்துப் போய்விட்டது காதும் மந்தமாகிவிட்டது இவர்கள் தம் கண்களை மூடிக்கொள்கிறார்கள்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்கிறவர்கள்.

எ.கா. - இன்றைய பாசிச ஆட்சியாளர்கள்.


முட்செடி


♦️உள்ளம் வலுவுள்ளது உனுடலோ வலுவற்றது என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஒப்பானவர்கள்.  நல்லது செய்ய நல்லபடி வாழ ஆர்வமிருக்கும், ஆனால் உள்ள பலவீனத்தில் வீழ்ந்து போவார்கள்.

♦️தொடக்க நூலில் 25 - ஆம் அதிகாரத்தில் வரும் யாக்கோபின் சகோதரன் ஏசா, ஒருவேளை உணவிற்காக வாழ்நாள் ஆசீரை  இழந்தது போல் நாமும் பல நேரங்களில் தவறிப்போகின்றோம்.

♦️பேதுரு, கெத்சமனே - யில் செபிக்கச் சென்ற போது தூங்கினார். இயேசுவை மூன்று முறை மருதலித்தார், ஊனுடல் வலுவற்றது என்பதை நிரூபித்தார்.

♦️இன்று நாம் மதிப்பீடுகளை இழந்து சுய புகழுக்காக அற்ப அரசியல்வாதிகளைப் போல் வாழ்கிறோமா? சிந்திப்போம்.


நல்ல நிலம்



♦️இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அன்னை மரியாள்.

♦️இறைவார்த்தைதான் வாழ்வு, வளம் என்று வாழ்கிறவர்கள் நூறு மடங்கு பலன் கொடுப்பார்கள்.

லூக். 1:38 "நான் ஆண்டவரின் அடிமை" என முழுவதும் சரணாகதி அடைதல்.

♦️முழுவதும் சரணடைகின்றவர்கள் 100 மடங்கு பலன் கொடுப்பர். திருச்சபையில் நாம் கொண்டாடும் புனிதர்கள் எல்லாரும் நூறு மடங்கு பலன் கொடுத்தவர்கள். திபா. 34:8 "ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்" என்ற தாவீதின் வார்த்தைக்கு ஏற்றவாறு ஆண்டவரை சுவைத்து 100 மடங்கு பலன் வழங்கியவர்கள்.

✝️கிறிஸ்துவில் இணைகிறவரும் (மாற்கு 3:14)

✝️ஆண்டவரை சுவைப்பவரும் (திபா. 34:8)

✝️சிலுவையை சுமக்கிறவரும்    (மத் 16:24)

✝️தன்னை இழப்பவரும்                 (மத். 10:39)

✝️ஆண்டவருக்கு தன்னை அடிமையாக்குகிறவரும்              (லூக். 1:38) 

நூறு மடங்கு பலன் கொடுப்பார். நம்மை நாம் - ஆய்வு செய்வோம்.

நூறு மடங்கு பலன் கொடுப்பவராவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment