Friday, July 21, 2023

ஆண்டின் பொதுக்காலம் 16 - ம் ஞாயிறு மறையுரை - 23.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 16- ஆம் வாரம் ஞாயிறு)

23.07.2023. 

சாஞா.  12 : 13, 16 -19,

உரோமையர் 8 : 26 - 27,

மத்தேயு  13: 24 - 43.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஆற்றல் வழங்கும் இறைவன்

♦️கடவுளின் திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை.

♦️இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை அவர்களின் வாழ்வின் வரலாற்றில், அவர்களைப் பாதுகாத்து, இரக்கத்தோடு, நீதி வழங்கி பாதுகாக்கின்ற ஆற்றல் மிகு இறைவனை சாலமோனின் ஞான நூல் விளக்குகிறது.

♦️இன்றைய நற்செய்தியில் விண்ணரசை உவமை வாயிலாக புரிய வைக்கின்றார். இறையாட்சியில் நாம் பெறும் வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வின் நீட்சியே என்பதனை இன்றைய நற்செய்தியில் வரும் பயிர், களைகள் உவமையில் பயிர் ஒருபோதும் களையாக முடியாது. ஆனால் மனிதர் ஒருவர் நல்லவர் கெட்டவராகவும், கெட்டவர் நல்லவராகவும் முடியும். ஆனால் இறை விருப்பம் என்பது எல்லாரும் மீட்படைய, வாழ்வடைய வேண்டும் என்பதே.

♦️தீய வழி முறைகளின்று திருந்தி வாழ வேண்டும் என்பது இறை விருப்பு. எனவே, எசாயா 55:7 "மன்னிப்பதில் அவர் தாராள உள்ளத்தினர்" என்று இறைவாக்கினர் எசாயா உணர்த்துகிறார். இறைவன் எளியவர்களை வலுப்படுத்தி, ஆற்றல்படுத்தி, தம் இரக்கத்தால் வாழ செய்கிறார்.

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தின் பிள்ளைகளைக் கவனிக்கும் பணியில், மேரி என்ற ஏழை பெண் நியமிக்கப்பட்டார்.

அப்பெண் (மேரி) அழகு, பொறுப்புணர்வு, விவேகம், செயல்திறன், தொலைநோக்குப் பார்வை, கொள்கை பிடிப்பு, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை தன் வாழ்வில் வாழ்வாக்கினாள். அந்த செல்வந்தர் குடும்பத்தின் மூத்த மகன் மேரியை விரும்பினான். அவளின் கண்ணியமிகு செயல்பாடு அவனை ஈர்த்தது. தன் விருப்பத்தை தன் தந்தையிடம் சொன்னான். தந்தை  தன் மகனிடம், 5 காசுக்கு வழியில்லாத, வக்கில்லாத வேலைக்காரியை நீ விரும்புகிறாயா? உன் குடும்ப அந்தஸ்து என்ன? கௌரவம் என்ன? என்று பேசினார். இதனை மறைவாய் நின்று கேட்டாள் மேரி. உடனே வீட்டை விட்டு வெளியேறி, பாரிஸ் - நகர் சென்று, கடினமாக உழைத்து அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு தன் அறிவை பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் பயனாக புற்று நோயைக் குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்தார். அவர்தான் மேடம் மேரிகியூரி. அவள் கூறும்போது, "கடவுளின் அளப்பரிய ஆற்றலை வாழ்வில் உணர்கிறேன். ஏனெனில் நான் இயலாமையில் இருந்த நாட்களில் என்னை இழிவாய், கேவலமாய் பேசிய வார்த்தைகள் என்னை வலுப்படுத்தியது" சாஞா. 12:19 "உம் மக்களை தன்னம்பிக்கையில் நிரப்பினீர்" என்பது போல, வலுவற்ற மேரியை நம்பிக்கையூட்டி மாண்புற செய்தார் இறைவன். எத்தகைய பண்பு நெறிகளால் இறைவன் மக்களை வழிநடத்துகிறார் என்பதை வழிபாடு உணர்த்துகிறது.

1. பாதுகாத்து வழிநடத்தும் கடவுள்

இஸ்ரயேல் மக்கள் பலகால கட்டங்களில்  பல்வேறு நாடுகளுக்கு அடிமையாக மாற்றப்பட்டனர். எகிப்து, பாபிலோன் மற்றும் உரோமையருக்கு அடிமைகளாக இருந்தனர். எகிப்தில் பாரவோனின் அடிமையில் இஸ்ரயேல் மக்களின் துன்பத்தைக் கண்டு, நாம் இறங்கி வந்தோம் என்றுச் சொல்லி, மோசேயை அழைத்து, வலுவூட்டி, ஆற்றல்படுத்தி, மோசே வழியாக-இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வு வழங்கினார். பாலைவனப் பயணப் பாதையில் அவர்களின் அன்றாட தேவையில் இறைவன் உடனிருந்தார்.

பசிக்கு - மன்னாவும், காடையும், குடிக்க - நீரும், இரவு - பகல் நேரங்களில் நெருப்பாய், மேகமாய் இருந்து குறை ஒன்றும் வராதாபடி பாதுகாத்தார் இதனை தாவீது தி.பா. 121 : 3 "அவர் உன் கால் இடறாத படி பார்த்துக்கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்கிடமாட்ட்டார். தி.பா.12:4 இதோ இஸ்ரயேலைக் காக்கிறவர் கண்ணயற்வதுமில்லை உறங்குவதுமில்லை" என்று இறைவனின் பாதுகாப்பை எடுத்துரைத்தார்.

2. நீதியும் இரக்கமும் உடையவர்

இறைவனின் அளப்பெரும் செயல்களில் எல்லாம் நீதியும், இரக்கமும் அடிஒற்றி செல்லும். இன்றைய முதல் வாசகமாகிய சாலமோனின் ஞானநூலில் இதை நாம் காணலாம்.

சா.ஞா. 12:13 - "முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை"

சா.ஞா. 12:16 - "உமது ஆற்றலே நீதியின் ஊற்று"

சா.ஞா. 12:18 - "நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்" என்று சாலமோனின் ஞான நூல் இயம்புகிறது.

விடுதலைப்பயண நூலில், ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயிடம் அவர் பக்கமாய் நின்ற இறைவன், தான் ஆண்டவர் என்பதை அறிவித்தபோது, வி.ப. "34:6 - "ஆண்டவர் ஆண்டவர், இரக்கமும், பரிவும் உள்ள இறைவன், சினம் கொள்ளாத் தயங்குபவர் பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்" என்று எடுத்துக் கூறுவதை திருமறை வழி அறிகின்றோம். நாம் அந்த இரக்கமிகு கடவுளின், இரக்கத்தையும், கனிவையும், பரிவையும் அன்றாடம் அனுபவிக்கின்றோம். அவர் நம்மீது பரிவும், இரக்கமும் காட்டுவது போல் நாமும் பிறர் மீது இரக்கம் கொள்ள அழைக்கப்படுகின்றோம். மத். 5:7 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்ற இறைவார்த்தை நம்மில் வாழ்வாக்கப்பட உழைப்பது நம் கடமையாகும்.

இன்றைய நற்செய்தியில் கூட, நல்ல கோதுமை விதைகளை விதைத்தப்போது, தீயவன், களைகளை விதைத்து விட்டுச் செல்கிறான். இரண்டும் முளைக்கிறது. பணியளர்கள் களைகளை பிடுங்கி விடவா என்றபோது மத். 13:29 'வேண்டாம் களைகளைப் பறிக்கும் போது அவற்றோடு சேர்த்து, கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்" என்று அறுவடை வரை காலம் தாழ்த்துவதைப் பார்க்கிறோம். சிறிதளவேனும் தீமைகள், தவறுகள் நடந்து விடக்கூடாது என்பது இறைவனது நீதி.

எசா. 55:7 "கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும் அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்" என்று கடவுளின் இரக்கமும், பரிவும், நீதியும் புலப்படுவதைப் பார்க்கின்றோம்.

3. ஆற்றல்படுத்தும் இறைவன்

இறைமகன் இயேசு இறையாட்சியை மக்கள் மனங்களில் பதிவு செய்ய, மக்களின் அன்றாட வாழ்வோடு இயைந்துள்ள பொருட்களை உவமைப்படுத்துகிறார். கடுகுவிதை, புளிப்பு மாவு இவை இறையாட்சியின் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.

கடுகு


ஒருசிறு தானியம் இதை நாம் உலர்த்தினால் உடைப்பது கடினம். இந்தக் கடுகை போல் ஆழமான, உறுதியான நம்பிக்கையை நாம் வாழ்வாக்க வேண்டும்.

இச்சிறு கடுகு முளைத்து பெரிய மரமாகிறது. வானத்துப்பறவைகள் தங்கும் மரமாகி பண்படுகிறது. அதுபோல நம் நம்பிக்கை செய்லாக்கம் பெறவேண்டும். சமூகத்துக்கு பயன் பெற வேண்டும். நம்பிக்கை செயல்வடிவம் பெற்றால் அது இறையாட்சியின் செயல்பாடு.

புளிப்பு மாவு


குறைந்த அளவு மாவு - நிறைந்த அளவு உள்ள மாவோடு கலந்து அம்மாவை பண்படுத்துகிறது, சுவையூட்டுகிறது. அதுபோல கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் கிறிஸ்துவை இந்த உலகு அறிய, சுவைக்க, நல்ல கருவிகளாக (புளிப்புமாவைப்போல்) செயல்பட அழைக்கின்றார். ஏனெனில் வலுவற்ற, ஆற்றலற்ற நம்மை ஆற்றல்படுத்துவதும், வலுவூட்டுவதும் இறைவன்.

2 கொரி 12:9 "என் அருள் உனக்குப்போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்று நம்மை ஆற்றல்படுத்துகிறார்.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான், நாம் கடுகாக, புளிப்புமாவாக, நல்ல விதைகளாக மாறி நல்ல பலன் கொடுக்க அழைக்கின்றார்.

✝️நலிந்து போன சமூகத்தை நலப்படுத்துபவனாக செயலிழந்த மானுட குடும்பத்தை செய்லாக்கத்திற்கு அழைத்துச் செல்லும் புளிப்பு மாவாக செயலாற்றுகிறேனா? ஏனெனில் நாம் பலவீனப்படும்போது இறைவன் தன் பெலன் தந்து, நம்மை வழிநடத்துகிறார்.

அதேநேரம் மனிதன் சுயநலத்தால், தற்பெருமையால் கடவுளின் ஆற்றலை, அன்பை உணராமல் உதாசீனப்படுத்தும் போது கடவுள் வேடிக்கைப்பார்ப்பது இல்லை என்பதனை

சீஞா. 12:17 "மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும் போது நீர் உம்முடைய ஆற்றலை காட்டுகின்றீர் அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்" என்ற இறைவார்த்தையால் அறியலாம்.

தொநூல் 11-ஆம் அதிகாரத்தில் பாபேல் கோபுரத்தைத் தங்களின் புகழ், பெருமை, ஆற்றல், வலிமை, அறிவு இவற்றால் கட்டுகிறோம் என்ற ஆணவம் கொண்ட போது ஆண்டவர் அவர்களின் எண்ணங்களைச் சிதறடித்தார். அதே நேரம் எளிய ஆடு மேய்த்த மோசே, தாவீது இவர்களை மாண்புறச் செய்ததையும், ஆற்றல்மிகுத் தலைவர்களாய் மாற்றியதையும் திருமறை வழி அடைகின்றோம்.

நம் வாழ்வுக்குள் பயணிப்போம்


🟢நான் ஆண்டவரில் கொள்ளும் நம்பிக்கை இந்த சமூகம் மாற்றம் பெற, வாழ்வடைய, உயர்வடைய பயன்படுத்துகிறேனா?

🔵கடுகுவிதை, புளிப்புமாவு சிறுதாயினும் பலன் பெரிதாவதைப் போல் நாம், தனிமனிதராகவோ அல்லது குழுமமாகவோ இணைந்து நல்ல மதிப்பீடுகளால் மாண்புறச் செய்கிறோமா?

🟣கடவுள் எனக்குத் தந்த ஆற்றலை, சமூகத்தில் நலிந்தவர் வளர்ச்சிக்கு அர்ப்பணம் செய்யும் மனநிலை கொண்டிருக்கிறேனா?

🔴தூய பேதுரு, என்னிடம் பொன்னும் இல்லை, பொருளும் இல்லை நசரேயனாகிய இயேசு என்னோடு உண்டு, அவரை உனக்குக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லி, இயேசுவின் பெயரால் முடம் மாற்றி வாழ்வு கொடுத்தது போல் நாம் தீமையின் தளைகளை உடைக்க இயேசுவின் பெயரால் முன் வருகிறோமா?

🟡இன்று நம்மிடையே புரையோடிய சுயநலம், சாதிய வெறித்தனங்கள் என்னும் களைகளை களைய முயற்சிக்கிறோமா?

சிந்திப்போம்! 

செயல்படுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment