Friday, July 28, 2023

ஆண்டின் பொதுக்காலம் 17 - ம் ஞாயிறு மறையுரை - 30.07.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 17- ஆம் வாரம் ஞாயிறு)

30.07.2023. 

1 அரசர்கள் 3 : 5, 7 -12,

உரோமையர் 8 : 29 - 30,

மத்தேயு  13: 44 - 52.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஞானமுடன் விண்ணரசைத் தேடுவோம்

♦️ஒவ்வொருவர் வாழ்விலும் தேடல் மிக அவசியம். ஒன்று இன்னொன்றைத் தேடுவது இயற்கையின் நியதி. அதை எதை இழந்தாவது அடைய மனது உறுதிக் கொள்கிறது.

♦️இந்தத் தேடலில் வரும் தடைகளைத் தாண்டி, தான் தேடியதை அடைய மனது முயல்கிறது. 

♦️இந்தத் தேடலை இயேசு நமக்கு இன்றுக் கற்றுத் தருகிறார்.

♦️உலகை மீட்க வந்தக் கடவுள் தன் உயிரை இழந்து நமக்கு மீட்பைக் கொணர்ந்தார்.

♦️நமது இறையாட்சிக்கான தேடலில் நல்ல முத்தையும், புதையலையும் பெற, மற்றவற்றை இழந்து அவற்றை அடைவது போல நாம் நம் வாழ்வில் ஞானத்தையும், விண்ணரசையும் தேட வழிபாடு வழியாக அழைக்கிறார் இறைவன்.

நிகழ்வு (12.07.2023 ஊடகச் செய்தி)

டெலிகாம் உலகின் ஜாம்பவனாக திகழ்பவர் ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான திருமிகு. ஆனந்த கிருஷ்ணா, அவருடைய ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.  

டெலிகாம் உலகில் ஆனந்த கிருஷ்ணனை A.K. என்றுதான் அழைப்பர். A.K. - யின் நிகரச் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பு படி 40,000 கோடி.

தமிழைத் தாயகமாகக் கொண்டு பிறந்த சிரிபான்யோ, A. K. யின் பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை முன்னெடுப்பார் என்பது எழுதப்படாத விதி. டெலிகாம், மீடியா, எண்ணெய், கேஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சாட்டிலைட் போன்ற நிறுவனங்கள் சொந்தமாக இயங்குகிறது. கிட்டத்தட்ட ஒன்பது நிறுவனங்களில் A.K. முதலீடு செய்திருக்கிறார். இதிலிருந்து ஈட்டிய லாபம் மலேசியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது. 

தாய்மொழி தமிழாக இருந்தாலும் A.K. புத்த மதத்தைச் சார்ந்தவர். A.K. கல்வி மற்றும் சேவை மையங்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளல். இவரது தொழில் சாம்ராஜ்யத்தை இவரது மகன் சிரிபான்யோ தொடர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், தனது 18-வது வயதில் சிரிபானியோ புத்தமத துறவியாக மாறினார். 

சிறிது காலம் வேடிக்கை, ஓய்வு, தியானம், ஆன்மீக உரையாடல் என்று துறவறம் மேற்கொண்ட சிர்பான்யோ - வுக்கு இந்த வாழ்வு பிடித்து விட இந்த துறவர வாழ்வு நிரந்தரமாயிற்று.

பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான சிரிபான்யோ எளிமையாக தினமும் யாசித்து உணவு உண்ணும் எளிய துறவற வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். துறவி சிரிவானியோ தன் வாழ்வைக் குறித்து சொல்லும் போது இவ்வாறு மக்களிடம் யாசித்து உண்டு எளிமையாக வாழும் வாழ்வு என் மனதிற்கு மகிழ்வை, நிறைவை, நீங்கா ஆனந்தத்தைத் தருகிறது என்கிறார்.

தூய பவுல் பிலிப் 2:8 "கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன்" என்று சொன்னது போல, சிரிபானியோ உலக செல்வம் அனைத்தையும் குப்பையாக கருதி எளிய வாழ்வை அணிந்து மன ஆனந்தத்தை உரிமையாக்கியது இறையாட்சியின் செயலாய், ஞானமிக்க செயலாய் அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகம்

சாலமோன், மக்களை இறைவிருப்பப்படி வழி நடத்த இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெற்றதை சுட்டுகிறது. சாலமோன் பொன், பொருள், மண், எதிரி நாடுகள், செல்வம் வேண்டும் என்று கேட்கவில்லை, மாறாக கடவுளின் உரிமைச் சொத்தாகிய உம் மக்களுக்கு நான் நீதி வழங்க ஞானம் வேண்டும் என்றார்.

சாலமோனின் தாழ்ச்சியும், பணிவும்

சாலமோன் இறைவனிடம் மன்றாடும் போது கடந்த காலத்தை நினைவு கூர்கின்றார். ஆடு மேய்த்தத் தன்னுடைய தந்தை தாவீதை ஆண்டவர் கடைக்கண் நோக்கியதை நினைத்து நன்றி கூறினார்.

1 அரசர் 3.6 "என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும், நீதியுடனும் நேரிய உள்ளத்துடன் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர்" இந்த இறை வார்த்தைகள் கடந்த காலத்தை நன்றியோடு நினைவு கூர்ந்ததைக் குறிக்கிறது.

தான் ஆண்டவரிடம் வேண்டும் போது எளிய உள்ளத்தோடும் பேரன்போடும் ஆண்டவரோடு சாலமோன் உரையாடினார்.

1 அரசர் 3.7 "என் கடவுளாகிய ஆண்டவரே" என்று அழைத்த சாலமோன் கடவுளின் முன்னிலையில் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,    1அரசர் 3.7  "தான் செய்வதறியாத சிறுபிள்ளை" என்று ஆண்டவர் முன் பணிந்து மன்றாடுகின்றார். ஆண்டவர் என்ன வரம் வேண்டும் என்ற போது 1 அரசர் 3.9 "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும், தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று பணிவோடு வேண்டினார்.

சாலமோனின் இந்த எளிய, பணிவான வேண்டுதல் ஆண்டவருக்கு உகந்ததாய் பட்டது, ஏனெனில் சாலமோன்

1. நீடிய ஆயுளை கேட்கவில்லை,

2. பணம், புகழ் செல்வத்தைக் கேட்கவில்லை,

3. எதிரிகளின் நாடு, எதிர்களின் அழிவை கேட்கவில்லை. 

மாறாக மக்களை நீதியோடு வழிநடத்த ஞானத்தை மட்டும் தாரும் என்று மன்றாடினார். எனவே ஆண்டவர், சாலமோனின் எளிமை, தாழ்ச்சி, ஞானத்தின் மீது கொண்ட வேட்கை இவற்றால் உளம் மகிழ்ந்து சாலமோனை ஆசீர்வதித்தார்

1 அரசர் 3:12 "நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை"  என்று எளிமையுடைய சாலமோனை வானளாவ உயர்த்தி மாட்சிப்படுத்தினார். ஏனெனில் ஞானம் ஆண்டவரிடம் இருந்தே வருகிறது.

சீராக் 1:1 "ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. அது என்றும் அவரோடு இருக்கிறது."

ஞானம் உள்ளவனின் செயல்பாடு எவ்வாறு அமையும் எனில்

ஞானமுள்ளவர்

*நீதியோடு,

விவேகத்தோடு,

விரைவாக - செயல்படுவார்*

🟡ஞானத்திற்கான தேடல், தாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். ஞானத்தை நாம் பெற்றால் இருக்காரியங்கள் நிறைவேறும். சீராக் 4:11 "ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும் தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும்" என்று சீராக் எடுத்துரைக்கின்றார். எனவே ஞானத்தை ஆர்வமாய் தேட இறையருள் இரஞ்ச வழிபாடு அழைக்கிறது.

🔴மத்தேயு 13 - ஆம் அதிகாரத்தில் விண்ணரசை விளக்க எட்டு உவமைகளைக் கையாள்வார்.

🟣இன்றைய நற்செய்தியில் புதையல், முத்து, வலை என்று மூன்று உவமைகள் வழி இறையாட்சியை உரிமையாக்க அழைக்கின்றார். விண்ணரசு என்பது நாம் இறந்த பின் நமக்குக் கிடைக்கும் வாழ்வின் பரிசல்ல, வாழும் நாட்களில் இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றி, இயேசுவின் சீடர்களாக மாறி, அவரின் நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனாக செயல்படுவது.

♦️இது மனநிறைவு, அமைதியைத் தரும்.

🔵இன்றைய நற்செய்தியின் முதல் இரு உவமையில் (புதையல், முத்து) விலைமதிப்பற்ற, பொக்கிஷமாகிய புதையலையும், முத்தையும் உரிமையாக்க எல்லாவற்றையும் இழந்துப் புதையலையும், முத்தையும் தனதாக்கிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

⭐முதன் முதலில் இவை விலை மதிப்பற்றவை என்பவற்றை அறியும் ஆற்றல் ஞானம் அமைகிறது.

⭐அறிந்தவுடன் தன்னுடைமையாக்க விழைகிறார்.

⭐அதற்கான செயல்பாடு தனக்குள்ளே எல்லாவற்றையும் விற்று பொருளீட்டுவது

⭐இறுதியில் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் ஞானம் நிறைந்த செயல்.

⭐இது, தூய பவுல் கிறிஸ்து என்னும் புதையலைக் கண்டவுடன் எல்லாவற்றையும் குப்பையாய் கருதி, கிறிஸ்துவை ஆதாயமாக்கியதற்கு ஒப்பாகும் என்பதை உணர்த்துகிறது.

🟣மூன்றாவது உவமையாகிய வலை உவமையில்


♦️யார் யார் விண்ணரசுக்கு உரிமையாவர்

♦️யார் யார் விண்ணரசுக்கு வெளியே அழுகையும், அங்கலாய்ப்பு உள்ள தீச்சூளையில் தள்ளப்படுவர் என்பதை குறிக்கிறது. எது எப்படியாயினும் நாம் ஞானத்தோடும், விவேகத்தோடும் விரைந்து செயல்பட்டு இறையாட்சிக்குரியவராக மாற அழைக்கப்படுகின்றோம்.

🔴நல்ல மீன்களுக்கு ஒப்பானோர் யாரெனில் மத் 25:40 - ல் கூறப்படுவது போல "மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" எந்த இறை வார்த்தையில் வரும் மிகச்சிறியோர் யாரெனில் பசியாய், தாகமாய், அன்னியராய், ஆடையின்றி, நோயுற்று, சிறையில் இருப்போரை குறிக்கிறது. இவர்களைப் பேணுகிறவர்கள் இறையாட்சிக்கு உரியவராகவும், இவர்ளை மதியாதோர், பேணாதோர் அழுகையும், அங்கலாய்ப்பும் உள்ள தீச்சூளையில் தள்ளப்படுவர் என்று அறிவுறுத்தப்படுகிறது.

🔵எனவே நம் செயல்பாடுகள், ஞானமிக்கதாய் விரைந்து செயல்பட்டு இறையரசை உடமையாக்க வேண்டும். இவ்வாறு செயலாற்றும் போது   மத் 13:52 "தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரை போல் இருக்கின்றனர்" என்கிறார். அதாவது

♦️இறையாட்சியின் சீடர்கள் பழைய யூத பாரம்பரியம் தரும் நல்ல மதிப்பீடுகளையும், 

♦️இயேசு கொணர்ந்த புதிய இறையாட்சியின் கூறுகளையும், மீட்பையும், நற்செய்தியையும் வெளிக் கொணர்வதாக அமையும்.

இன்று நம் வாழ்வில்

🟡குடும்பங்கள் ஞானத்தால் கட்டி எழுப்பப்பட வேண்டும். தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம். தெய்வ பயத்தாலும், ஞானத்தாலும் கட்டி எழுப்பப்படும் குடும்பங்கள் தீமையை விலக்கி விழிப்புடன் செயல்படுவர். 

நீமொழி. 14:16 "ஞானமுள்ளவர் விழிப்புடையவர் தீமையை விட்டு விலகுவார்"

🔴ஞானமுள்ளவர் ஊனியல்பின் செயல்களைத் தவிர்ப்பார்.

(எ.கா) அழுக்காறு, குடிவெறி , பொறாமை, சண்டை, கட்சிமனப்பான்மை இவற்றை தவிர்க்கும் போது விண்ணரசுக்கு உரியவராவர்.

🔵இன்று நாம் விண்ணரசுக்குரியவராக மாற வேண்டுமெனில் பகைமையை விலக்கி அன்பையும் அநீதியை ஒழித்து நீதியையும், ஆணவத்தை அழித்து அருளையும், பிரிவினை மாற்றி சமாதானத்தையும் வாழ்வாக்குகிற சமூகமாக மாறுவோம்.

🟢புனித பிரான்சிஸ் அசிசியார் மன்றாடியது போல் அமைதியின் கருவியாய் என்னை மாற்றும் இறைவா என்று வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

1 comment: