இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
(பொதுக்காலம் 19- ஆம் வாரம் ஞாயிறு)
13.08.2023.
1 அரசர்கள் 19 : 9a, 11-13a,
உரோமையர் 9: 1- 5,
மத்தேயு 14: 22 - 33.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
ஆண்டவரோடு பயணமாவோம்
இயேசுவின் பணி முழுவதும் செபம் முக்கிய பங்கு ஆற்றியது. கருக்கலோடு எழுந்து செபித்தார், தனிமையில் செபித்தார், இரவெல்லாம் செபித்தார் என்று பார்க்கின்றோம்.
இறைதந்தையோடு கொண்ட ஆன்மீக உறவால் மக்களுக்கு நலம் நல்கினார்.
தம்மில் நம்பிக்கை கொள்ளும் எவரையும் இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. வாழ்வு பயணத்தில் வரும் சவால்களில், சங்கடங்களில், நாம் வாழ்வு தரும் இயேசுவை விரும்பி தேடுகிறோமா? ஏனெனில் திருப்பாடல் 9:10 "ஆண்டவரே உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை" என்று தாவீது தன் வாழ்வின் அனுபவத்தால் சான்று பகர்ந்தார்.
நாம் துன்புற்று, கதி கலங்கி ஆண்டவரை கூவி அழைக்கும் போது ஆண்டவர் நமக்குத் தரும் செய்தி துணிவோடிருங்கள், அஞ்சாதீர்கள் என்பதுதான்.
நம் வாழ்வில் கொந்தளிப்பில் சிக்கி, மருண்டு நிற்கும் நமக்கு, பேதுருவைத் தூக்கி நிறுத்தியதை போல் நம்மை நிறுத்துவார் என்ற நம்பிக்கையை, துணிவை நமக்கு அருள்கிறது இன்றைய வழிபாடு.
நிகழ்வு
ஒரு நாள் யாரும் எதிர்பாரா நேரத்தில் ஒரு பலமாடி கட்டிடத்தில் தீ பற்றியது. அதை அறிந்த மக்கள் உயிரைக் காத்துக் கொள்ள விரைவாக, அலறி அடித்து ஓடினர். ஒரு வீட்டில் ஒரு சிறுவன் மட்டும் மாட்டிக் கொண்டான். படியேறிச் சென்றுச் சிறுவனை மீட்க முடியாது. மக்களின் அலறல் சப்தம் கேட்டு பின்புறக் கதவைத் திறந்தான் சிறுவன். எல்லாரும் அவனிடம் "கீழே குதித்து வா" நாங்கள் பிடித்துக் கொள்வோம் என்று உறுதிக் கூறினார். ஆனால் அச்சிறுவன் கீழே குதிக்க மறுத்து விட்டான். மக்கள் மீண்டும் சொன்னார்கள் நீ குதிக்கவில்லை எனில் எரிந்து போவாய் என்று. அப்போதும் அவன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரத்தில், அச்சிறுவனின் தந்தை, அலறிக் கொண்டு ஓடி வந்தார். மகனே! கீழே குதி, அப்பா உன்னை பத்திரமாய் பிடித்துக் கொள்கிறேன், என்று சொல்லி முடிப்பதற்குள் அச்சிறுவன் கீழே குதித்து விட்டான் எல்லாருக்கும் மிக ஆச்சரியம். அச்சிறுவனிடம் கேட்டார்கள், நாங்கள் உன்னைக் கீழே குதிக்கச் சொன்னபோது குதிக்காத நீ, இறுதியில் எப்படிக் குதித்தாய் என்று. சிறுவன் சொன்னான், குதிக்கச் சொன்னது என் அப்பா, என் அப்பா நான் அழிவுறவிடமாட்டார். என் அப்பா என்னைத் தாங்கி கொள்வார் என்று எனக்கு தெரியும் என்றான்.
ஒரு குழந்தை தன் தந்தை மீதுக் கொண்ட உறுதியான அளவிட முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு இது. இஸ்ரயேல் மக்களை வாழ்வின் நாட்டிற்கு அழைத்து வந்த போது ஆண்டவரின் பராமரிப்பு எவ்வாறு இருந்தது எனில் இணைச் சட்டம் 1:31 "ஒருவன் தன் மகளைத் தூக்கி செல்வது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே" என்று உணர்த்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில் எலியாவைத் தேற்றி பாதுகாப்பதைப் பார்க்கின்றோம்.
1 அரசர் 18-ம் அதிகாரத்தில் பாகாலின் பொய்வாக்கினர் 450 பேரும் வாளினால் கொல்லப்பட்டனர். உண்மை கடவுள் யாவே என்பதை நிரூபணமாக்கினார்.
பொய்வாக்கினர் அனைவரும் வாளினால் கொல்லப்பட்டதை ஆகாபு, ஈசபேலுக்கு தெரிவித்தான். ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, நீ அவர்கள் உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிப்பேன் என்று சபதம் செய்கிறார். இதனால் பயந்த எலியா, யூதேயாவில் இருந்து தப்பி ஓடினார். அவர் பாலைநிலத்தில் பயணம் செய்து களைத்தபோது, சுட்ட அப்பமும், குவளையில் தண்ணீரும் கொடுத்து பாதுகாத்தார். அங்கிருந்து நடந்து ஒரேபு என்று கடவுளின் மலையை அடைந்தார். அங்கு ஒரு குகையில் தங்கினார். ஆண்டவர் குகையின் வெளியே அழைத்து அடக்கமான மெல்லிய ஒலி வழியாக எலியாவை ஆட்கொண்டார். இந்நிகழ்வு வழியாக, தமக்கு அஞ்சிய, நம்பிக்கையில் உறுதியாய் நின்ற தம் ஊழியன் எலியாவை, ஈசபேலின் கைகளில் நின்று பாதுகாத்து இறைவாக்கினருள் மாண்புறச் செய்தார். ஆண்டவருக்கு அஞ்சும் போது திருப்பாடல் 27:5 "கேடு வரும் நாளில் அவர் என்னை தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார். தன் கூடாதத்தினுள்ளே என்னை ஒழித்து வைப்பார். குன்றின் மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்." என்ற இறைவாக்கிற்கு ஏற்ப எலியாவை ஆண்டவர் குன்றின் மேல் வைத்து பாதுகாத்தார் என்பதை முதல் வாசகம் வழி அறிகின்றோம்.
இன்றைய நற்செய்தி, பெரும் புயலில் சிக்கித் தவித்தவர்களை எப்படி ஆண்டவர் உடன் வந்து மீட்டார் என்பதை விளக்குகிறது.
நம் வாழ்விலும், சிக்கல்கள், குழப்பங்கள், பேரெச்சம், கூச்சல் வரும்போது நாம் ஆண்டவரை உறுதியாய் தேடினால், நம்மை நலன்களால் நிரப்புவார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
திருப்பாடல் 105:3 "ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக" என்ற தாவீதின் விருப்பு இன்றைய நற்செய்தியில் நிறைவு பெறுகிறது. இன்றைய நற்செய்தியில் பேதுருவுக்கும் ஆண்டவருக்குமான ஆன்மீக உறவு பரிமாற்றத்தைப் பார்க்கின்றோம்.
பேதுருவின் இயல்பு என்ன?
(1) பேதுரு தன்னிலே பக்குவமற்றவர்
(ii) உணர்ச்சிவசப்பட்டு, விரைவாக செயலாற்றுபவர்.
(iii) பின் விளைவுகளைக் குறித்து சிந்திக்காதவர்.
(iv) எதிர்காலத்தை, தன்வாழ்வைக் குறித்து எந்தப் பார்வையும் அற்றவர். மத்தேயு 4:19 "என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று இயேசு அழைத்தபோது தன் தொழில் கருவியான படகு, வலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு பின் தொடர்ந்தார்.
(i) தன்னை அழைத்த கிறிஸ்துவைப் பார்த்ததில்லை.
(ii) அவர் யார் என்று அறிந்ததில்லை
(iii) தன்னை எதற்கு அழைத்தார் என்பது தெரியாது
(iv) எங்கு, எப்படி, பயணமாகின்றோம் என்பதும் அறியாதவர்
(v) வெகுளித்தனமாக செயல்படுபவர் (லூக் 9:33) "நாம் இங்கே இருப்பது நல்லது" (தாபூர் மலையில்)
(vi) பிடிப்பற்ற, உறுதியற்ற மனிதர் (மறுதலித்தவர், கெத்சமனேயில் தாக்கியவர்)
இந்தப் பேதுருவின் தலைமையில், சீடர்களை அக்கரைக்குச் செல்லுமாறு இயேசு படகில் அனுப்பி வைக்கின்றார்.
பொழுது சாயும் முன்பே படகு நெடுந்தொலைவு சென்று விட்டது. ஆனால் இரவில் நான்காம் காவல் வேளை வரை இலக்கை அடையவில்லை.
ஒன்றாம் காவல் வேளை (மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை)
இரண்டாம் காவல் வேளை (இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை)
மூன்றாம் காவல் வேளை (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை)
நான்காம் காவல் வேளை (அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை)
முதல் காவல் வேளையில் தொடங்கிய பயணம் அதிகாலை வரை இலக்கை அடைய முடியாமல் தடுமாறினார். ஏனெனில் தங்களின் திறமைக்கு முன் இயேசு கிறிஸ்துவை, அவரின் ஆற்றலை மறந்தனர். தங்களின் பலத்தை இழந்த போது ஆண்டவரைத் தேடினர். இன்றைய நற்செய்தி சில உண்மைகளை உணர்த்துகிறது.
1. ஆண்டவரை நம்பு - அவர் பெரியவர்
சீடர்கள் தங்களின் திறமை, ஆற்றல், தொழில் யுக்தி இவற்றை நம்பித்தான் பயணப்பட்டனர். இவர்களின் பலவீனத்தை, சோர்வை அறிந்த இயேசு அவர்களைத் தேடி கடல் மீது நடந்தார். இயேசு என்று அறியாத சீடர்கள் ஐயோ பேய் என்று அஞ்சி அலறினர். ஏன் பேய் என்று அலறினார் என்றால்
(i) யூதர்களைப் பொறுத்த அளவில் 'கடல்" பேய்களின் உறைவிடம்.
(ii) கடல் பயணத்தில் மரித்தவர்களின் ஆவி கடலில் அசைவாடும் என்று நம்பினர்.
(iii) இத்தகைய தவறான எண்ணங்களை மாற்றவும்
(iv) தீமையின் மேல் தனக்கு அதிகாரம் உண்டு என்று உணர்த்தவும்
(v) அவரை நம்பினால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை புரிய வைக்கவும்
(vi) இயேசு கடல் மீது நடந்து தன் வழியாக உலகின் தீமைகளை தன் காலடியில் மிதித்து வெற்றி கொண்டார் என்று பொருள் கொள்ளலாம்.
திருப்பாடல் : 107: 29 "புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ற ஆற்றலும் சக்தியும் படைத்தவராய் விளங்கினார்.
2. ஆண்டவரை நோக்குவோம் - மகிழ்ச்சியடைவோம்
துணிவோடு இருங்கள் நான் தான் அஞ்சாதீர்கள் என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தையைக் கேட்டாலும், அவரை உற்று நோக்கிய பேதுரு, நானும் உம்மோடு நடக்க ஆணையிடும் என்று வேண்டுகிறார். ஆண்டவர் இயேசுவும் வா என, பேதுரு ஆண்டவரை நோக்கி கடல் மீது நடந்து சென்றார். திருப்பாடல் 34 : 5 "அவரை நோக்கி பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்" என்பதைப் போல் பேதுரு அளவில்லா ஆனந்தம் கொண்டார்.
இயேசுவை நாம் நோக்கி, அவரோடு பயணமாகும் போது வாழ்வில் குழப்பங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் நம்மை மேற்கொள்ளாது. ஆண்டவரே நோக்கினால் அவர் நம்மோடு கூட வருவார். எப்போது பார்வையை இயேசுவிடமிருந்து மாற்றுகிறோமோ அப்போது அழிவை சந்திக்கின்றோம். இயேசுவோடு நடந்த, பேதுரு உலகை நோக்கினார். புயலை நோக்கினார், ஆபத்தில் மூழ்கத் தொடங்கினார். நம் வாழ்வு என்னும் படகில் நம்மோடு இயேசு இருந்தால் அல்லது நாம் இயேசுவோடு இருந்தால் அந்த பயணம் சுகமான, அமைதியான, மகிழ்வான பயணமாகும்.
3. செபம் - ஜெகமாகும்
திருப்பாடல் 34 : 4 "துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன் அவர் எனக்கு மறுமொழி பகந்தார் எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்" என்பதைப் போல் பேதுரு கடலில் மூழ்கும் போது இயேசுவை நோக்கி மத்தேயு 14 : 30 "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்று கத்த, இயேசு தன் கையை நீட்டி அவரை தூக்கினார். துன்ப காலத்தில் புலம்புவதைக் தவிர்த்து செபிப்போம் உடனடி மீட்பு நிச்சயம். திருப்பாடல் 34: 6 "இந்த ஏழை கூவியழைத்தான் ஆண்டவர் அவனுக்கு செவி சாய்த்தார். அவர் எல்லா நெருக்கடினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்" என்பதை போல் நம்பினால் நாம் கடவுளின் மாட்சியைக் காண்போம் வாழ்வு நிச்சயம்.
🟣இன்றைய வழிபாடு இயேசு மீது நம்பிக்கையை கொண்டு அவர் விழி பதித்து, வாழ்க்கையைத் துன்பக்கடல் மூழ்கடிக்காமல் பாதுகாக்க அழைக்கிறது.
🟢நம் வாழ்வு பயணத்தில் இயேசு இல்லையெனில் துன்பம், துயர், தனிமை, புரியாமை, உறவற்ற நிலை என்னும் புயல் காற்று வீசி நம்மை நிலைகுலைய செய்யாதபடி கிறிஸ்துவில் வேரூன்றி பயணமாவோம்.
🔴வாழ்வில் துயர்கள் வரும்போது நாம் யாரை நாடிச் செல்கிறோம். பேதுருவைப் போல் ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று அழைக்கிறோமா? இல்லை பில்லி சூனியம், மந்திரவாதம், குறி கேட்டல் இவற்றை நாடுகிறோமா?
🔵வாழ்வு தருபவர் இயேசு என்பதை நாம் மறந்து, நாகரீக மோகம், பணம், பதவி, புகழ் இவற்றில் நாட்டம் கொண்டால் வாழ்வு மூழ்கி போகும் எனவே இயேசுவை உறுதியாய் பற்றிக் கொள்வோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
பயனுள்ள சிந்தனை பகிர்வு...
ReplyDelete