Friday, August 18, 2023

ஆண்டின் பொதுக்காலம் 20 - ம் ஞாயிறு மறையுரை - 20.08.2023.

 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 20- ஆம் வாரம் ஞாயிறு)

20.08.2023. 

எசாயா 56 : 1, 6-7,

உரோமையர் 11: 13-15, 29-32,

மத்தேயு  15: 21 - 28.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்புவோம் நலம் பெறுவோம்

உலகின் மீட்பர் யூத குலத்தில் தோன்றினாலும், அவர் கொணர்ந்த மீட்பு அனைவருக்குமானது என்பதை இன்றைய வழிபாடு உணர்த்துகிறது.

குலத்தால், இனத்தால், மொழியால் மனிதன் வேறுபட்டாலும் இயேசுவை மீட்பராக ஏற்பதற்குத் தடையில்லை.

கொலேசையர் 3:4 "கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்" என்பதை நம்பிய கானானியப் பெண்ணின் ஆழமான உறுதியான நம்பிக்கையையும், நம்பிக்கையின் வெளிப்பாடாக இயேசுவிடம் அருள் பெற்றதையும் நாம் காண்கிறோம்.

சாதி, சமயம், இனம், மொழி கடந்து வாழ வேண்டுமெனில் தடைகள் பல உண்டு. நாம் அவற்றைத் தாண்டி தான் வாழ வேண்டும் என்பதற்கு கானானியப் பெண் நமக்குப் பாடமாகிறாள்.

மத்தேயு 15:28 "அம்மா உமது நம்பிக்கைப் பெரிது" என்று இயேசு ஆண்டவரால் பாராட்டப்பட்ட கானானியப் பெண்ணின் நம்பிக்கை என்னில் அமைந்திருக்கிறதா என சிந்திக்க அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் உள்ள புனித லூர்து அன்னைத் திருத்தலம், அதிகமான நோயாளிகள் நலம் பெற்று செல்லும் நலம் நல்கும் திருத்தலமாக அமைந்துள்ளது. ஒரு நாள், தன்னுடைய கால் ஊனமான  12 வயது சிறுவனை, தாய்  அன்னை காட்சி வழங்கி, அருள் வழங்கும் தூய லூர்து அன்னை பேராலயத்திற்கு அழைத்து வந்தாள். பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு ஒன்றாய் கூடி செபித்தனர். திருப்பலிக்கு பின் நற்கருணை ஆண்டவரை சுமந்து வந்து நோயுற்றோருக்கு ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெறும். அன்று அருட்தந்தை அவர்கள் நற்கருணை கதிர் பாத்திரத்தை சுமந்து அச்சிறுவன் அருகில் வந்தார். அச்சிறுவன் நற்கருணை ஆண்டவரை உற்றுப்பார்த்து "ஆண்டவரே நீங்கள் என்னை குணப்படுத்தவில்லை எனில் உங்கள் அம்மாவிடம் சொல்லி விடுவேன்" என்று கண்ணீரோடுக் கூறினான். திபா. 107:19 "உங்கள் நெருக்கடியில் ஆண்டவரைக் கூப்பிடுங்கள் அவர் உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பார்" என்பதற்கிணங்க நற்கருணை இருந்த கதிர் பாத்திரத்திலிருந்து பேரொளி படர்ந்து அச்சிறுவனை ஆட்கொள்ள, அச்சிறுவன் எழுந்து நடந்தான் ஆனந்த கண்ணீரோடு.      விடுதலை பயணம் 15:26 "நானே உங்களை குணமாக்கும் ஆண்டவர்" என்ற ஆண்டவரின் வார்த்தைகள், சிறுவனின் நம்பிக்கையில் நிறைவேறியதை நமக்கு உணர்த்துகிறது. 

இன்றைய வழிபாடு கடவுளின் சில பண்பு நலன்களை நமக்கு உணர்த்தி நிற்கிறது.

1. கடவுள் பொதுவானவர்

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள், ஆலயம், வழிபாடு, திருச்சட்டம் ஆகியவை முக்கிய இடம்பெறுகிறது. கடவுள் எல்லாருக்கும் தந்தை, அதுபோல இறைவனை வழிபடும் ஆலயம் அனைவருக்கும் பொதுவானது என்பதையும், கடவுளின் அன்பு, பரிவு, இரக்கம் அவருக்கு அஞ்சும் அனைவருக்கும் உரியது என்பதை உறுதிபட எடுத்துரைக்கிறது.

இஸ்ரயேல் மக்களின் மத்தியில் கடவுள், ஆலயம் என்பது எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட, உரிமை குடிமக்களாகிய அவர்களுக்கே உரியது என்ற ஆணவம் இருந்தது. ஆலயம் கட்டுவது மற்றும் ஆலயப் பணிகளில் பிற இனத்தார் இணைய முடியாது. எஸ்ரா 4:3 "நாங்கள் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோயில் கட்டுவோம்" என்று மேன்மைப் பாராட்டினர். இச்சூழலில் தான் இறைவாக்கினர் எசாயா கடவுள் ஆலயம் எல்லாருக்கும் பொதுவானது என்ற சமத்துவ சிந்தனையை நிலைநாட்டுகிறார். 

எசாயா 56.7 "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்" என்கிறார் இறைவாக்கினர் எசாயா. இஸ்ரயேலின் அரசர் சாலமோன் ஆண்டவருக்கு ஆலயம் கட்டிய பின்பு, இந்த ஆலயத்தில் இஸ்ரயேல் மட்டுமின்றி புறவினத்து மக்களின் வேண்டுதலையும், ஆண்டவர் கேட்டருள் புரிய மன்றாடுகிறார்.

1 அரசர் 8:43, "உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அந்நியர் கேட்பதையெல்லாம் அருள்வீராக" என்று வேண்டுகிறார். இதனால் உலகின் எல்லாரும் உமது அன்பு பிள்ளைகள் என்றாகி, உமக்கு அஞ்சி வாழ்வர். அதனால் உமது பெயர் மாட்சியுறும் என்று வேண்டுவதன் வழியாக, கடவுள், ஆலயம் அனைவருக்கும் பொது என்கிற கருத்தை ஆழமாய் உணர்த்துகிறது.

2. கடவுள்-இரக்கமுள்ளவர்

புற இனத்தாரின் திருத்தூதர் என்று தன்னை அடையாளப்படுத்திய தூய பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் பேரிரக்கத்தை சுட்டிக் காட்டுகின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் இயேசுவை ஏற்கவும், நம்பவும் மறுத்தபோது புற இனத்து மக்கள் வாழ்வு தருபவரான இயேசுவை நம்பினர், ஏற்றுக் கொண்டனர். அவர்களின் நம்பிக்கையில் மீட்பைப் பெற்றுக் கொண்டனர்.

இஸ்ரயேல் மக்களின் கீழ்படியாமையால் அனைவருக்கும் மீட்பு சொந்தமாயிற்று, ஆயினும், தம் வழிமரபுகளை, பிடிவாதங்களை, கீழ்படியாமை, ஏற்றுக்கொள்ள மறுக்கும் தீமைகளை விட்டு விலகி கடவுளிடம் வந்தால் எசாயா 56.7 "அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்று ஆண்டவரின் இரக்கத்தை, தூய பவுல் வழியாக அறிகின்றோம்.

3. நம்பிக்கையும் நலமும்

இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமான மீட்பரா? என்ற ஐயப்பாட்டை இன்றைய நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. இயேசுவின் இரக்கத்தை, அருளை, நலன்களைப் பெற "நம்பிக்கையே" அளவுகோலாக அமைந்துள்ளது.

இன்றைய நற்செய்தி - நாம் தொடர்ந்து, இடைவிடாமல் உள்ள தளர்ச்சியின்றி செபிக்க வேண்டும் என்பதை கானானியப் பெண் வழி உணர்த்துகிறார். இன்றைய நற்செய்தியில் அப்பெண் 3 முறை இறைவனிடம் இரஞ்சி நிற்பதைப் பார்க்கின்றோம்.

மத்தேயு 15:22 "ஐயா தாவீதின் மகனே எனக்கு இரங்கும்"

மத்தேயு 15:25 "ஐயா எனக்கு உதவியருளும்"

மத்தேயு 15:27 "ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறுத்துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து வேண்டிக் கொண்டதால் நலமும், பாராட்டும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்துப் பெற்றுக் கொண்டார்.

திருப்பாடல் 20:4 "உமது மனது விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக" என்ற இறைவாக்கு ஏற்ப கானானியப் பெண்ணின் மன விருப்பை ஆண்டவர் நிறைவேற்றினார்.  

மத்தேயு நூல் இன்னொரு நிகழ்வையும் உறுதியான தொடர் வேண்டுதலை உணர்த்த நமக்கு வழங்குகிறார்.

பார்வையற்ற இரு மனிதர்களின் மன்றாட்டு அவர்களுக்கு நலம் நல்கியது.

மத்தேயு 20:30 "ஆண்டவரே தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்"

மத்தேயு 20:31 "ஆண்டவரே எங்கள் கண்களைத் திறந்தருளும்". என்ற தொடர்ச்சியான வேண்டுதலினால் பார்வையைப் பெற்றுக் கொண்டதை விவிலியம் உணர்த்துகிறது. நம்பிக்கை, உறுதிபாடு, தொடர் தேடல் வாழ்வைப் பெற்றுக் கொடுத்தது. 1தெச 5:17 "இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார். நாம் தொடர்ந்து செபிக்கும்போது உறுதியான மனத்தோடு செபிக்க அழைக்கப்படுகின்றோம்.

யாக் 1:6 "நம்பிக்கையோடு ஐயப்பாடின்றி  கேட்க வேண்டும்"  எனவே நம்பிக்கையோடு ஐயமின்றி வேண்டி நலம் பெற வழிபாடு அழைக்கிறது ஏனெனில் திபா 9:10 "உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை" நாம் ஆண்டவர் இயேசுவை நம்பிக்கையோடு நாடி, தேடி நலன்களைப் பெற்றுக் கொள்வோம்.

நம் வாழ்வில்

🔵நம் நம்பிக்கையின் உறுதிப்பாடு என்ன?

🔴நாம் யாரை நம்புகின்றோம்?

🟢பிறரை விட நாம் உயர்ந்தவர் என்ற, பிரித்தாளும் மனப்பான்மை என்னில் உறைகிறதா?

🟣நாம் நினைப்பவை, வேண்டுவதை உடனடியாக கிடைக்கவில்லை எனில், விசுவாசத் தளர்வு கொள்கிறேனா? இல்லை கானானியப் பெண் போல் நிலைத்து நிற்கிறேனா?

🟡ஆலயத்தில், இறைவன் முன் அனைவரும் சமமே என்ற உயர்நிலையை மனதில் ஏற்றிருக்கிறேனா?

🔵இறைவன் - பொதுவானவர், இரக்கமுள்ளவர், அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நலமும், வாழ்வும் பெறுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment