Friday, August 25, 2023

ஆண்டின் பொதுக்காலம் 21 - ம் ஞாயிறு மறையுரை - 27.08.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 21- ஆம் வாரம் ஞாயிறு)

27.08.2023. 

எசாயா 22 : 19- 23,

உரோமையர் 11: 33-36,

மத்தேயு  16: 13 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இயேசு - எனக்கு யார்?


♦️உலகின் மீட்பராகிய இயேசுவை நான் (or) நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கின்றோம்.

♦️என்னுடைய தனிப்பட்ட இறையனுபவமே, எனக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை, வெளிப்படுத்தும் கருவி.

♦️நான் அனுபவமாக்கியக் கிறிஸ்துவைப் பிறருக்கு எவ்வாறு அறிவிக்கின்றேன்.

திருப்பாடல் 34 : 8 "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" என்று தாவீது நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

♦️ எனவே ஆண்டவர் இயேசுவை பேதுரு, பவுல் போல் சுவைத்து, அந்த இறையனுபவத்தைப் பிறருக்கு நாம் அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பாகிறது.

♦️நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும்.

நிகழ்வு


பெல்ஜியம் நாட்டில் 03.01.1840 - ல் பிறந்த தம்பியான் துறவற சபையின் குருவாகி இறைப்பணியாற்றினார். 1873 மே மாதம் 10 - ஆம் தேதி அவரின் ஆயரோடு மோலக்காய் தீவிற்கு தனது 33 - வது வயதில் வந்தார். அத்தீவில் பெரும்பாலானோர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அம்மக்கள் ஆயரைச் சூழ்ந்து நின்று அழுதனர். எங்களுக்கு ஒரு குருவானவரைத் தாருங்கள், என்று அழுது மன்றாடி கேட்டது அருட்தந்தை தமியானின் உள்ளத்தை உருக்கிற்று. எசாயா 6:8 "இதோ நான் இருக்கின்றேன் அடியேனை அனுப்பும்" இந்த எசாயாவை போல் இளம் அருள்தந்தை தமியான் தொழுநோயினர்களோடு பணியாற்ற முன் வந்தார்.

தொழுநோயாளர்களை கழுவி, தூய்மைப்படுத்துவது, மருந்துட்டு, ஆறுதல் வழங்கி, அவர்களோடு உண்டு, உறங்கி, அவர்களின் ஆடைகளைச் சுத்தம் செய்து, அன்புப் பணியாற்றினார்.

அம்மக்கள் குடி வெறியால் தங்களை மறக்க முயன்றனர். அறிவுரைக் கூறினார். அவர்களோ ஏற்க மறுத்து அவருக்கு எதிராக போராடினர். உள்ளம் நொந்து போனார் தந்தை தமியான்.

யோபு 3:3 "ஒழிக நான் பிறந்த அந்த நாளே, ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே" என்று யோபு தன் வேதனையில் புலம்பியதைப் போல், தந்தையும் மனம் வருந்தினார். ஆயினும் உள உவப்புடன் பணியாற்றினார்.

இறுதியில் தந்தை அவர்களும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தொழுநோயாளியாகி 1889 ஏப்ரல் 15 அன்று மரித்தார். அன்று மோலக்காய் தீவு முழுவதும் அழுதது தந்தைக்காய்.

♦️அன்புக்காய், அன்பு செய்து அழுகியவர்.

♦️ஆண்டவர் இயேசுவை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியவர்.

♦️ஏழையின் பங்காளன்.

♦️நலிந்தோரின் தேந்தரவாளர். 

இவரை திருஅவை புனிதராக உயர்த்தி தொழுநோயாளர்களின் பாதுகாவலராக அறிவித்து பெருமைப்படுத்தியது. தந்தை தமியானை உலகு மேற்கண்டவாறு புகழ்கிறது. நம்மைக் குறித்து மக்கள் என்னக் கூறுவார்கள். என்று சிந்திக்க வழிபாடு நம்மை அழைக்கிறது.

தலைமைத்துவம் எப்படிப்பட்டது

🔵கி.மு. 715 முதல் கி.மு. 687 வரை அசிரியப் பேரரசின் வளர்ச்சியில் பாலஸ்தீனம் அரசியல் நெருக்கடிக்குள்ளானது.

🔵பாலஸ்தீனத்தின் தலைமை அதிகாரியான "செபுனா" தன்னையும் பாலஸ்தீனத்தையும் காத்துக் கொள்ள எகிப்துடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்.

🔵ஆனால் இறைவாக்கினர் எசாயா பாலஸ்தீனம் தனித்திருக்க வேண்டும். ஏனெனில் முன்பு நம்மை அடிமைப்படுத்திய எகிப்தோடு ஒப்பந்தம் கூடாது என்றார்.

🔵அதற்கு மாற்றாக மன்னனும் மக்களும் மனம் திரும்பி, கடவுளிடம் நம்பிக்கைக் கொண்டு சரணடைய வேண்டும் என்றார் இறைவாக்கினர்.

🔵இதனை தலைமை அதிகாரி "செபுனா" எதிர்த்தான். எனவே அவன் நீக்கப்பட்டு "எலியாக்கிமை" தலைமை அதிகாரி ஆக்கினார். இது இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம்.

இன்றைய முதல் வாசகம் நமக்கு ஆழமான, தெளிவான சிந்தனையை முன் வைக்கிறது.

அன்றைய நாளில் மக்களை வழி நடத்துகிற தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், அதனால் ஏற்பட்ட விளைவு இவற்றை குறிக்கிறது.

முதன்மை அமைச்சர் நீண்ட அங்கி, இடைக்கச்சையும் அணிந்து காணப்படுவர். அவர்களுக்குரிய அதிகாரத்தின் அடையாளமாக திறவுகோலையும் வழங்குவர். இத்தலைவன் அரசனுக்கு அடுத்த நிலையில் ஆட்சி புரிவான். தலைவர்கள் திருப்பாடல்கள் 103:13 "தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல்" தம் மக்களை இரக்கத்துடன் வழிநடத்த வேண்டும். ஏரே 3:15 "என் இதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்கு கொடுப்பேன் அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழி நடத்துவார்கள்" என்பதைப் போல் அறிவோடும், ஞானத்தோடும் வழிநடத்த கூடியவர்களாக இருக்க வேண்டும். மாறாக மக்களை அதிகாரத்தால் அடிமைப்படுத்தி, மிரட்டி, பயத்திற்கு உள்ளாக்குவது அல்ல தலைமைத்துவம்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் தன் சொந்த மக்களை போல உள்ளத்தால் மதித்து, இரக்கம் காட்டி, நீதியோடு, ஞானத்தோடு வழிநடத்த வேண்டும். இந்த நெறிமுறையில் இருந்து தவறும் போது அவர்களை நீக்கி உரியவர்களை அமர்த்துவார் அதன் அடையாளமாக.

எசாயா 22:22 "அந்நாளில் தாவீதின் குடும்பத்தாரின் திறவுகோலை அவர் தோளின் மேல் வைப்பேன். "

எசாயா 22:23 "உறுதியான இடத்தில் அவனை முனை போல் அடித்து வைப்பார்கள்." என்று எல்லா அதிகாரமும், பலமும் வழங்கி மேன்மைப்படுத்துகிறார்.

🟣இன்று மக்களை வழிநடத்தும் தலைவர்கள், அரசியலாகட்டும், சமய தலைவர்களாகட்டும், எப்படி மக்களைச் சிதறடிக்கிறார்கள்.

🟣அதிகாரங்களை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள்.

🟣பதவிகள் பணிவிடை புரியவா? பழி வாங்கவா?

🟣அதிகாரங்கள் அன்பு பணி செய்யவா? அழிக்கவா?

🟣விவிலியம் காட்டும் "செபுனா" - வைப் போல் தன்நிலை இழக்காதிருக்க, தன்னிலை உணர்ந்து செயல்பட அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு உரையாடல் வழியாக உண்மையை உணர வைக்கிறார். "மானிட மகன்"யாரென்று மக்களின், சீடர்களின் கருத்தை சோதித்தறிகின்றார்.

🟡மக்கள் இயேசுவை இறைவாக்கினராக, புதுமை செய்பவராக, வியத்தகு செயல்களை செய்பவராக பார்த்தனர்.

🟡சீடரிடம் வினா தொடுக்கப்பட்டபோது அமைதியான அப்போஸ்தலர்கள் மத்தியில் பேதுரு அமைதியை குலைத்து அறிக்கையிட்டார்.


மத் 16:16 "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" இந்த அறிக்கை பேதுருவின் ஆழமான அனுபவ வெளிபாடு.

🟢உண்மையாகிய, வழியாகிய, வாழ்வாகிய கடவுளை பேதுரு சரியாய் புரிந்து கொண்டார்.

🟢இயேசு கல்வாரியில் இறக்கும்போது அங்கு நின்ற நூற்றுவர் தலைவர் இயேசுவைக் குறித்து மாற்கு 15:39 "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" என்றார். சிலுவையில் அவரோடு அறையப்பட்ட கள்வரில் ஒருவன் இயேசுவை குற்றமற்றவராக, மீட்பராகக் கண்டான் எனவே தான். லூக் 23:42 "இயேசுவே நீர் ஆட்சி உரிமை பெற்று வரும் போது என்னை நினைவிற்கொள்ளும் என்றான்" இதேபோல் எனக்கு இயேசு யாராக இருக்கிறார் என்று நம்மை நாம் சுய ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

🟢நம் தனிப்பட்ட அனுபவமே சான்றாக மாறும்.

பேதுரு என்ற பாறை

பேதுரு இயேசுவை நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று அறிக்கையிட்டது அவருடைய அனுபவத்தாலும் தந்தை கடவுளின் உடனிருப்பாலும் நிகழ்ந்தது.

எபி 12:2 "நம்பிக்கையை தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்" என்று அறிவுறுத்துவதைப் போல் பேதுரு இயேசு மீது கண்களை உறுதியாய் பதித்தார். எனவேதான் இயேசுவின போதனையைக் கேட்டு எல்லோரும் விலகிச் சென்ற போது, பேதுரு மட்டும் உறுதியாக இயேசுவை நம்பி. யோ 6:68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உன்னிடம் தானே உள்ளன" என்று அறிக்கையிட்டார்.

🔴பேதுரு தான் நம்பியது மட்டுமல்ல மற்றவரும் ஆண்டவர் இயேசுவில் உறுதி கொள்ள தன் அனுபவத்தால் சான்று பகிர்ந்தார்.

🔴பேதுருவின் நம்பிக்கை மற்றும் அனுபவம் என்னும் பாறை மீதுதான் திருச்சபைக் கட்டப்பட்டுள்ளது.

🔴தொடக்க கால திருஅவைக்கு நற்செய்தி அறிவிக்கும் போது இயேசுவை மூலைகல் என்றும், உலகம் முழுமைக்கும் மீட்பர் இவரே என்றும் உறுதிப்பட கூறினார்.

திப. 4:12 "இவராலயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்த பெயரும் கொடுக்கப்படவில்லை" என்றார். தலைமைச் சங்கத்தார் இயேசுவைக் குறித்து பேசக்கூடாது என்று அச்சுறுத்திய போது. திப 4. : 20 "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது" என்று உறுதியாக எடுத்துரைத்தார்.

இயேசுவின் வார்த்தைகளை கேட்டு செயல்படுகிறவர் பாறை மீது தன் வீட்டை கட்டியதுப் போல், இயேசு கிறிஸ்துவை மூலைக் கல்லாகக் கொண்டு, பேதுரு என்ற விசுவாச பாறை மீது கட்டப்பட்டுள்ள திருஅவையின் விசுவாச சான்றாகும்.

நம் வாழ்வில்

🟣உறுதியான, கற்பாறைப் போன்ற, அசைக்க முடியாத நம்பிக்கை நம்மில் உறுதி பெற்றிருக்கிறதா?

🟣உறுதியாக நம்பிக்கையும், தாழ்ச்சியும் கொள்ளும்போது எசாயா கூறுவது போல் உறுதியான இடத்தில் நம்மை இறைவன் வளர்த்தெடுப்பார் என்ற உறுதிபாடு இருக்கிறதா?

🟣குடும்பங்களை விசுவாச விளைநிலங்களாக பண்படுத்துகிறோமா? அதிகார அரங்குகளாக்குகிறோமா?

🟣நம் நம்பிக்கை, அனுபவம், பணி வாழ்வால் இயேசுவே எனக்கு மீட்பர் என்று சான்று பகர்வோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

1 comment:

  1. சிறப்பு..நன்றி தந்தையே..

    ReplyDelete