Saturday, September 2, 2023

ஆண்டின் பொதுக்காலம் 22 - ம் ஞாயிறு மறையுரை - 03.09.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 22- ஆம் வாரம் ஞாயிறு)

03.09.2023. 

எரேமியா 20 : 7- 9,

உரோமையர் 12: 1-2,

மத்தேயு  16: 21 - 27.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இயேசுவின் சீடத்துவம் என்பது:

♦️இயேசு நமக்கு காட்டும் பாதை சற்றுக் கடினமானது. அது சிலுவைகள் நிறைந்தப் பாதை.

♦️தன்னை இழப்பதன் வழியாகவே வாழ்வை நிறைவாய் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்த்துகிறார் இயேசு.

♦️இழப்பு என்பது "ஆன்ம" ஆதாயமே.

♦️தூய பவுல் சொல்வது போல் ஒப்பற்ற செல்வமாகிய கிறிஸ்துவை ஆதாயமாக்க மற்ற செல்வங்களை (அறிவு, படிப்பு, பட்டங்கள், ஆஸ்தி, புகழ், செல்வம்) குப்பையாகக் கருதுவது.

♦️உண்மை சீடத்துவம் என்பது பற்றற்ற வாழ்வே.

♦️இந்த பற்றற்ற வாழ்வில் சிலுவை நமக்கு மீட்பை பெற்றுத் தரும் இனிய வழிமுறையாகிறது.

♦️இன்று இயேசு உணர்த்தும் உண்மைச் சீடத்துவத்தைச் சரியாய் புரிந்து பயணிக்கிறோமா? சிந்திக்க வழிபாடு அழைக்கிறது. 

♦️இயேசுவின் சீடத்துவம் மூன்று முக்கியமான பண்புகளை கொண்டுள்ளது.

1.சிலுவை சுமப்பது.

2.வாழ்வைக் காப்பது.

3.அன்பை வழங்குவது.

1. சிலுவை சுமப்பது

இன்றைய உலகில் சீடத்துவம் என்பது தலைவனைப் போல், ஏன் அதைவிட மேலாக ஆடம்பரம், வசதி, வாய்ப்புகள், இலஞ்சலாவண்யங்கள், ஊழல், அநியாயங்கள், அராஜகங்கள் செய்தால்தான் நிலைக்க முடியும் என்ற சிந்தனை, எண்ண ஓட்டம் நிலை பெற்றுள்ளது.

எனக்கு என்ன ஆதாயம்? என்ற வினாவோடு பயணமாகும் இக்காலத்தில் இயேசு, சீடனாக விரும்புகிறாயா? சிலுவையை சுமந்து கொள் என்கிறார்.

மத் 16:24 "என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம்  துறந்து தம் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்றார். தன்னல பாவ சிந்தனை மாறி, பொதுநல அன்புப் பணியும், அதற்காய் துன்பங்களைத் தாங்கும் மனநிலையும் சீடத்துவத்தின் அடி நாதம்.

ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் சிலுவை தான் நம்மை மீட்கும் என்பதை அனுபவமாக்கியவர்கள். இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எரேமியாவின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது.

எரேமியாவை ஆண்டவர் அழைத்த போது, அவர் ஆண்டவரிடம், நான் சிறுபிள்ளை, பேசத் தெரியாது என்று முறையிட்டார். ஆண்டவர் எரேமியாவிடம் மூன்று திட்டங்களை எடுத்துக் கூறினார். (எரே. 1:5)


(i) தாய் வயிற்றில் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்.

(ii) நீ பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன்.

(iii) மக்கள் இனங்களுக்கு இறைவாக்கினராக ஏற்படுத்தினேன்.

என்று கூறிய போது எரேமியா ஆண்டவருக்கு இசைந்தார். ஆண்டவரால் அழைக்கப்பட்டு, அனுப்பப்பட்ட எரேமியாவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, புறக்கணித்தனர், துன்புறுத்தினர். எரே 18:18 "வாருங்கள் எரேமியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்வோம்" என்று எரேமியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்தினர்.

எரேமியாவின் பாடுகள் கிறிஸ்துவின் பாடுகளோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. எரேமியா மனமாற அழைப்பு விடுத்த போது புறக்கணித்தனர். அந்நிய தெய்வ வழிபாட்டில் நிலைத்தனர், எரேமியாவை கிணற்றில் தூக்கி வீசினர். இஸ்ரயேலரின் பாவச் செயல்களைக் கண்டித்ததால் துன்புறுத்தினர். அப்போது தான் தாயின் கருவிலே என்னை அழைத்தேன் என்ற கடவுளே! எரே 20.7 "நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" என்று புலம்பினார். அப்போது ஆண்டவரின் பதில் மிக ஆறுதல் தருவதாய் அமைந்தது எரே 15:20 "உன்னை விடுவிக்கவும், காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன்" என்றும் எரே.30:17 "நான் உனக்கு நலம் அளிப்பேன். உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்" என்றும் தேற்றுவதைப் பார்க்கின்றோம்.

ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவர் பணி செய்யும் போது அவமானம், ஏளனம், பழிச்சொல், புறக்கணிப்பு, துன்புறுத்தல்கள், கேலி, கிண்டல், ஏற்றுக் கொள்ளாமை எல்லவற்றையும் தாங்குவதான் அவரின் சீடத்துவம். எரேமியா துன்பத்தில் புலம்பினாலும் எரே. 20.9 "உம் சொல் என் இதயத்தில் பற்றி எரியும் தீ போல இருக்கிறது" என்று அவரின் பணி செய்யத் தூண்டுவதாக அறிவுறுத்தினார். எனவே எரேமியாவைப் போல் துன்புறும் சீடனாய், சிலுவைகளை, ஏற்று அவரின் சீடத்துவத்தில் பங்கு பெற அழைக்கப்படுகின்றோம். எல்லா மறைசாட்சிகளும் சிலுவை வழிதான் சீடத்துவத்தை வாழ்வாக்கினர். 

2. வாழ்வைக் காப்பது:

வாழ்வைக் காப்பது என்பது ஆன்மாவைக் காப்பது, அழியும் உடலில் அழியாதது ஆன்மாவே, ஆண்டவரின் சீடர்கள் விழிப்பாபிருந்து ஆன்மாவைக் காத்துக் கொள்வர். ஆண்டவர் இயேசு மத் 16:26 "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன, அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" என்று வினா எழுப்பும் போது, அவரின் உயிர் மூச்சாகிய வாழ்வைக் காப்பது நம் கடன் என்பதை உணர்த்துகிறார். இவ்வார்த்தையால் ஆன்மாவை காத்துக் கொண்டவர்  புனித சவேரியார் அழியாத உடலால் புனிதத்தைப் பறைசாற்றுகிறார். வாழ்வை அல்லது ஆன்மாவைக் காத்தவர்களைத் திருஅவை புனிதர்களாக மாட்சிப்படுத்துகிறது.

உலகமும், இன்பமும் தான் வாழ்வு என்று மயங்கி கிடந்த அகுஸ்தினார், தன் வாழ்வை குறித்து சிந்தித்த போது மாற்றம் பெற்று புனிதரானார்.

உரோ 13:12 "இரவு முடியப் போகிறது. பகல் நெருங்கி உள்ளது ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்துக் கொள்வோமாக" என்ற இறை வார்த்தையால் மாற்றம் பெற்று ஆன்மாவை காத்துக் கொண்டார்.

சவுலாக வாழ்ந்து, யூதச் சமயம், பரிசேய குலம், திருச்சட்டம், தூய்மைச் சடங்குகள், அரசு, அதிகாரம் இவைதான் வாழ்வு தரும் என்ற அதிகார திமிரில் வாழ்ந்த சவுல், ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவைச் சுவைத்த பின் இயேசுவுக்காய் எல்லாவற்றையும் இழக்க துணிந்தார் அதுவே அவரை கலாத்தியர் 2:20 "இனி வாழ்பவன் நான் அல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" என்று பறைசாற்ற வழி வகுத்தது.

திருச்சபையின் எல்லா புனிதர்களும் வாழ்வை அழியாமல் காத்துக் கொண்டவர்களே.

3. அன்பை வழங்குவது:

சிலுவை சுமப்பவரும், வாழ்வை காத்துக்கொண்டவரும் அன்பை இவ்வுலகிற்கு வழங்குபவர்கள். யோவான் 15:12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை." 

ஆண்டவரின் பெயரின் பொருட்டு அவமானங்களை தாங்குகிறவர் பிறரையும், சமூகத்தையும் அன்பு செய்வான்.

ஆண்டவரின் பணிவாழ்வு அன்புதான். எனவேதான் 1யோவான் 1:8 "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்று .

அன்புப் பணி செய்கிறவர்களை, செய்தவர்களை கடவுளின் சாயலாக உலகு பார்க்கிறது. 1கொரிந்தியர் 13 : 13 "அன்பே தலை சிறந்தது" என்று தூய பவுல் எடுத்துக் கூறுகிறார்.

நிகழ்வு:

கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் மக்கள் மத்தியில் 5 ரூபாய் டாக்டர் என்று செல்லமாய் அழைக்கப்படுபவர் டாக்டர்
சங்கரே கெளடா 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டவர். யார் இந்த டாக்டர் சங்கரே கெளடா.

♦️கர்நாடகாவில் மருத்துவப் படிப்பில் தங்கம் வென்றவர்.

♦️கொல்கத்தா மருத்துவ பல்கலைக்கழகத்தில் M.D படித்தவர்.

♦️40 ஆண்டுகள் மருத்துவ சேவை. ♦️சொந்தமாக மருத்துவமனை இல்லை.

♦️எளிமையான தோற்றம், எளிய ஆசை.

♦️கால்களில் மிதியடி அணிவதில்லை.

♦️ஒவ்வொரு நாளும் பல நூறு நோயாளிகளை சோதித்து மருந்து வழங்குகிறார்.

♦️காலை 7:00 மணி முதல் மாலை 7 மணி வரை ஒரு துரித உணவு கடை அருகில் அமர்ந்து ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கிறார். இதற்காக அவர் பெற்றுக் கொள்கிற ஊதியம் ரூபாய் 5.

♦️கோடி கோடியாய் சம்பாதிக்கும் இந்த உலகில் ஒரு எளிய சிறிய வீட்டில் வசித்து வருகிறார் ஏழை மக்களின் அன்பிற்குரியவராகி, மக்களின் இதயங்களில் தெய்வமாய் உயர்ந்து நிற்கிறார்.

♦️இத்தகைய அன்புப் பணி - ஆண்டவரின் சீடத்துவப் பணியை நமக்கு உணர்த்தி நிற்கிறது. அழியும் இந்த உலகில் அழியாததும், அனைவரையும் ஒன்றாய் கட்டி போடுவதும் "அன்பே" என்பதை உணர்வோம்.

இன்றைய வழிபாடு இன்று நமக்கு உணர்த்துவது

🟣சீடத்துவ வாழ்வில் வரும் தடைகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்.

🔴பேதுருவைப் போல் சஞ்சலப்படுகிறோமா? இல்லை உறுதியூட்டும் ஆண்டவர் உடன் உண்டு என்று நிலைத்து நிற்கிறோமா?

🟢மனித மதிப்பீடுகளை தொலைத்து, மனித மாண்பை இழந்து, உலகப் போக்கிலே மதி மயங்கி வாழ்வை இழந்து நிற்கிறோமா?

🟡உரோ 12 :1 "கடவுளுக்குந்த தூய உயிருள்ள பலியாக உங்களை படையுங்கள்" என்று தூய பவுல் சொல்வது போல் நம்மை கடவுளின் விருப்பத்திற்கு ஒப்படைத்து அவரின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறோமா?

🔵சுயத்தை இழக்காமல் நம்மை இழந்து கடவுளின் உயிருள்ள சாட்சிகளாவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment