Friday, September 8, 2023

ஆண்டின் பொதுக்காலம் 23 - ம் ஞாயிறு மறையுரை - 03.09.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 23- ஆம் வாரம் ஞாயிறு)

10.09.2023. 

எசேக்கியேல் 33 : 7- 9,

உரோமையர் 13: 8-10,

மத்தேயு  18: 15 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நற்செயல்களால் தீமையை வெல்வோம்

♦️  அன்பும் உறவும் குடி கொள்ளும் இடம் ஆண்டவர் உறையும் இடம்.

♦️அன்பு அது கடவுளின் மறு பெயர்

♦️1 யோவான் 4:8 "கடவுள் அன்பாய் இருக்கிறார்"

♦️நாம் பிறரை, உலகை அன்பு செய்கிறோம் எனில் ஆண்டவர் இயேசுவைப் பிறருக்கு வழங்குகின்றோம்.

♦️நம்மிடம் வெளிப்படும் நல்ல பண்புகள் அனைத்தும் ஆண்டவரின் கனிகளே!

♦️நம் நற்செயல்களால் குறைகளை களைந்து வாழ்வாங்கு வாழ வழிபாடு அழைக்கிறது.

♦️பிறரின் தவறுகளைப் பற்றிப் பேசும் நாம், பிறர் தவறு செய்வதற்கான காரணத்தை அறிய முயற்சிப்பதில்லை.

♦️இன்றைய வழிபாடு பிறருக்கு அயலானாய் மாறி பிறர் நலம் பேண அழைக்கப்படுகின்றோம்.

♦️உண்மையை உணர்ந்து திரும்பி வாழும் மனிதன் மாமனிதன் ஆகிறான்.

நிகழ்வு

ஒரு கிராமத்தில் ஒருவன் திருடுவதைத் தன் தொழிலாகக் கொண்டிருந்தான். அவன் திருடுவது "ஆடு"களை. வீடுகளில், தொழுவங்களில், ஆட்டுப்பட்டிகளில், மேய்ச்சல் நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். பலமுறை ஊர் மக்கள் எச்சரித்தும் அவன் திருந்துவதாய் இல்லை. எனவே அவனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை கையும் களவுமாய் பிடிக்கத் திட்டமிட்டனர். ஆகவே ஆடு திருடும் போது பிடிப்பதற்காக பல இரவுகள் விழித்திருந்தனர். ஒரு நாள் அந்த ஆடு திருடன், திருடும் போது ஊர் மக்களிடம் பிடிபட்டான். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவன் நெற்றியில் "திருடு" என்பதைக் குறிக்கும் Steal என்று ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தாகிய "s" என்ற எழுத்தைப் பச்சை குத்தினர். அவன் நெற்றியில் "s" என்ற எழுத்து எல்லாருக்கும் தெரியும்படியாய் இருந்தது.

நாட்கள் கடந்து வருடங்களாகி  இருந்தது. ஒரு நாள் ஒரு குழந்தை தாயிடம் கேட்டது. அம்மா அந்த மனிதரின் நெற்றியில் "s" என்று எழுதி இருக்கிறதே ஏன்? என்று. தாய் சொன்னாள் "S" என்பது செயின்ட் புனிதன் (Saint) என்று. அந்த மனிதரை எல்லாரும் புனிதன் என்று தான் அழைத்தனர். கால ஓட்டத்தில் கடந்ததை மறந்து தன் நற்செயல்களால் மாமனிதராய் உயிர்த்து நின்றான்.

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை உங்கள் நற்செயல்களால் எண்பியுங்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைக்கு உயிருட்டினான். தன் வாழ்வில் நற்சிந்தனை, நற்செயல்களால் தீமையை வென்றான்.

🔵இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் பாபிலோனில் அடிமையில் இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு சாம காவலனாய் இருக்க ஆண்டவரால் அழைக்கப்பட்டார்.

🟡மக்கள் தவறான வழியில் செல்லும் போது அவர்களை எச்சரிப்பது எசேக்கியேலின் பணி. இந்த எச்சரிக்கையை ஏற்க தவறினால் தண்டனைக்கு ஆட்படுவர் என்ற உண்மையை துணிவோடு எடுத்துரைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.

எசேக்கியேலின் இறைவாக்குப்பணி:

♦️எசேக்கியேல் என்றால் "ஆண்டவர் ஆற்றல் அளிப்பவர்" என்று பொருள்

♦️கிமு 6 - ஆம் நூற்றாண்டில், எருசலேமின் வீழ்ச்சிக்குப் பின்னும், பாபிலோனியா அடிமைத்தனத்தின் போதும் வாழ்ந்தார்.


♦️இவரின் இறைவாக்குப் பணி பாபிலோனில் அடிமைகளாக இருந்தோர்க்கும், எருசலேமில் எஞ்சி இருந்தோர்க்குமாக அமைந்திருந்தது.

♦️பாபிலோனிய அடிமை வாழ்வில் துன்புற்று கலங்கிய மக்களை மாற்றத்திற்கு அழைக்கிறார்.

திருப்பாடல் 137:1 "பாபிலோனில் ஆறுகள் அருகே அமர்ந்து நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்" என்ற திருப்பாடல் வரிகள் அடிமை வாழ்வின் அவலத்தை விளக்குகிறது. 

♦️அழுவதும், அரற்றுவதும், புலம்புவதும் - வாழ்வைத் தந்து விடாது மாறாக, மனமாற்றமே புது வாழ்வை வழங்கும்.

♦️தீமையில் உழன்ற இஸ்ரயேலர் தன் குற்ற நிலையிலேயே சாகாமல் மனம் மாறி கடவுளின் அருள் நிலையில் வாழ, மனமாற இறைவாக்குரைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.

♦️நீ அவர்களுக்கு இறைவாக்குரை. அதைக் கேட்டு அவர்கள் மனம் மாறாவிட்டால் எசேக்கியேல் 33.8 "அத்தீயோர் தம் குற்றத்திலே சாவர்" அவ்வாறு அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட, இறைவாக்கினர் எசக்கியேலை ஆண்டவர் சாம காவலனாய் ஏற்படுத்தினார்.

♦️இறைவாக்கினரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் எசேக்கியேல் 18:21 "தீயவரோ தான் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி என் நியமங்கள் அனைத்தையும் கைக் கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி அவர்கள் சாகார்" என்று கடவுளின் இரக்கத்தை அறிவுறுத்துகிறார்.

தூய பவுல் உரோமையர் 2:4 "உங்களை மனமார செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார்" என்று எடுத்துரைக்கின்றார். நாம் மனமாறாவிட்டால் கடவுளின் சினமும், நீதித்தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில், நமக்குரிய தண்டனையை சேமித்து வைக்கிறோம் என்று எச்சரிக்கிறார். எனவே மாற்றம் பெற்று புது வாழ்வு வாழ்ந்து நற்செயல்கள் புரிய வழிபாடு அழைக்கிறது.

இன்றைய நற்செய்தி, பிறருடைய தவறுகளை எவ்வாறு சுட்டிக்காட்டுவது, எவ்வாறு திருத்துவது என்பதை பண்பட்ட முறையில் எடுத்துக் கூறுகிறது. தவறு செய்தவரைப் பண்படுத்த நெறிபடுத்த கண்ணியமான வழிமுறைகளை நற்செய்தி முன் வைக்கிறது.

1. தனியே அழைத்து திருத்துவது

சமூகத்திற்கு அல்லது திருஅவைக்கு எதிராக ஒருவர் தவறு செய்தால், குற்றம் செய்தவரை தனியே அழைத்து தவற்றை எடுத்துக் கூற வேண்டும். இதன் வழி அவர் திருந்தி வாழ வழி செய்கிறோமேயன்றி அவனை அவமதிப்பது அல்ல சபையின் எண்ணம். தவறு செய்தவர் யார்? என்ன தவறு செய்தார் என்பதை பிறர் அறியா வண்ணம் நடந்து கொள்வது மனித மாண்பின் உச்சம்.

கலாத்தியர் 6:1 "ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரை திருத்துங்கள்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார். இதன் வழி உறவு வலுப்பெற வழி செய்கிறது.

2. சாட்சியத்தோடு நெறிப்படுத்தல்

முதல் நிலையில் தீர்வு எட்டப்படவில்லை எனில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தால் உறுதி செய்து குற்றம் செய்தவரின் வழிமுறையில் மாற்றத்தை உணர முயல அழைக்கிறார். இதனை இணைச் சட்டம் உறுதி செய்கிறது. இணைச் சட்டம் 19 : 15 "எந்த ஒரு குற்றத்தையும், எந்தப்பழிப்பாவச் செயலையும் உறுதி செய்ய ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்."

இரண்டு அல்லது மூன்று நபர்கள், சாட்சியத்தோடு பேசினாலோ அல்லது அவர்களின் நாவன்மைமிக்கப் பேச்சுனாலோ தவறு செய்தவர் திருந்த வாய்ப்புண்டு. எனவே இத்தகைய படிநிலை வழிமுறை தவறிழைத்தவர்களை மனித நேயத்தோடும், மாண்போடும் வழிநடத்த உதவுகிறது.

3. திருச்சபை வழி பண்படுத்தல்

மேற்கூறிய இரு நிலைகளில் தவறு செய்தவர் மாற்றம் பெறவில்லை எனில் திருச்சபையார் வழி முயல அழைக்கிறார். சபையின் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும், தவறு செய்தவர் திருந்த வழி வகுக்கலாம் சபையின் ஒருமைப்பாடு, சமத்தும் ஆகிய உயரிய பண்பு நெறிகள் மாற்றுத்திற்கு உதவலாம்

திருஅவை, தவறு செய்தவர்கள் உணரும் பட்சத்தில் மன்னிக்கவும் திருந்த மறுக்கும் போது தண்டிக்கவும் கூடிய அதிகாரத்தை பேதுரு வழியாகப் பெற்றிருப்பதால் திருச்சபையாரிடம் ஒப்படைக்க அழைக்கப்படுகிறார். மத்தேயு 16:19 "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்பதன் வழியாக திருச்சபை வழி சமாதானம் செய்து நிறைவாழ்வு பெற அழைக்கிறார்.

4. உறவு நிலை இழத்தல்

திருச்சபைக்கும் ஒருவர் செவிசாய்க்கவில்லை எனில், தனிமனித, சமூக மற்றும் திருச்சபையின் உறவு நிலையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மத்தேயு 18:17 "திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்" வரி தண்டுபவர்களை யூதர்கள் பாவிகளாகக் கருதினர். இயேசு வரி தண்டுபவராகிய சக்கேயு வீட்டிற்குச் சென்றபோது பரிசேயர்கள். லூக்கா 19:11 "பாவியிடம் தங்க போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர். அதுபோல புற இனத்தாரையும் யூதர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை, மதிப்பதும் இல்லை. வாழும் சமூகத்தில் உறவு நிலை இழத்தல் என்பது, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவது. இதுவே அவருக்குத் தண்டனையாகக் கருதப்படும்.

தவறுவது மனித இயல்பு, தவற்றை நினைத்து வருந்தி, உறவாடும் இறை சமூகத்தோடு இணைந்து அருள் நெளியில் வாழ வழிபாடு அழைக்கிறது.

நம் வாழ்வில்


🔴பலவீனத்தால் வீழ்ந்தவர்களை உறவாலும், அருளாலும், பரிவோடு நடத்தும் மனநிலை நம்மிடையே உண்டா?

🟡நம்மோடு வாழ்கிறவர்களுக்கு சாம காவலனாய் செயல்படுகிறேனா?

🟣திருச்சபையின் ஒருமைப்பாட்டையும், சமத்துவ மதிப்பீடுகளை மதிக்கிறேனா?

🔵பிறர்நலம் பேணும் நல்ல சமாரியராய் செயல்படுகிறேனா? குறிப்பாக தவறும் போது உடன் பயணித்து உதவுகிறோமா?

🟢நல்ல பண்புகளால், மதிப்பீடுகளால் நற்செயல்களால் தீமையை வென்றெடுக்க நான் முயல்கிறேனா?

சிந்திப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment