Friday, September 15, 2023

ஆண்டின் பொதுக்காலம் 24 - ம் ஞாயிறு மறையுரை -17.09.2023.

 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 24- ஆம் வாரம் ஞாயிறு)

17.09.2023. 

சீராக்கின் ஞானம் 27 : 30- 28:7,

உரோமையர் 14: 7-9,

மத்தேயு  18: 21 - 35.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இரக்கத்தையும், மன்னிப்பையும் வாழ்வாக்குவோம்

♦️  தந்தை கடவுள் பேரன்பும், இரக்கமும் நிறைந்தவர்.

♦️நாம் அவரது பிள்ளைகள், நாம் அவரைப் போல பேரன்பும், இரக்கமும் கொண்டு வாழ்வாங்கு வாழ அழைக்கிறார்.

♦️இன்று நாம் இந்தப் புண்ணியங்களை வாழ்வாக்குகிறோமா?

♦️பிறர் நமக்கு எதிராக அல்லது, பிறர் நமக்குத் தீங்கு  செய்யும் போது, அவர்களை மன்னிக்கும் மனப்பக்குவம் நம்மிடம் உண்டா?

♦️நான் அளவில்லா இரக்கத்தையும், பரிவையும், அன்பையும், மன்னிப்பையும் இறைவனிடமிருந்து நாள்தோறும் பெறுகிறோம்.

♦️இறைவனிடமிருந்து இத்தகைய அருளாசியை பெறும் நாம் நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துகிறோமா?

♦️இயேசுவின் பரிவும், இரக்கமும் சிலுவையில் மன்னிப்பாய் வெளிப்பட்டது.

♦️நாமும் மன்னிப்பால் மாண்புற  இன்றைய வழிபாடு வழியாக அழைக்கிறார்.

♦️மன்னிப்பு நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. மாறாக கடுஞ்சினம், பகை உணர்வு, வெறுப்பு, கோபம் இவற்றை வாழ்வாக்கினால் நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்கிறோம்.

♦️மானுட வரலாற்றில் தீமை செய்தவர்களை மன்னித்தவர்கள் மாமனிதர்களாய், புனிதர்களாய், வரலாறாய் மாறினர்.

எகா: 

⭐கிரகாம் ஸ்டெயின்ஸின் மனைவி,

⭐திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்,

⭐காந்தியடிகள், ஆபிரகாம் லிங்கன்.

நிகழ்வு:

ஆயர் ஃபுல்ட்டன் ஷீன் ஒருமுறை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்குள்ள கைதிகளை சந்தித்து உரையாடி அவர்கள் உளமகிழ்வோடு வாழ வழிகாட்டினார். இறுதியில் அங்குள்ள கைதிகள் கூட்டத்திற்கு ஒரு உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் சொன்னது எல்லாருக்கும், அதிர்ச்சியையும், உள்ள நெகிழ்ச்சியையும் வழங்கியது.

நான் ஒரு ஆயராக இருக்கலாம், ஆனால் நானும் நீங்களும் ஒன்றுதான். நாம் எல்லாரும் தவறு செய்தவர்கள் தாம். உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம். நீங்கள் பிடிப்பட்டிருக்கிறீர்கள் எனவே நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். நான் இன்னும் பிடிபடவில்லை எனவே சிறைக்கு வெளியே இருக்கிறேன். உங்களைப் பழிக்கும் உலகிற்கு சிறந்த வழிகாட்டிகளாய் நீங்கள் மாற வேண்டும். என்றுச் சொல்லி கடவுளின் அளவில்லா இரக்கத்தையும், மன்னிப்பையும் எடுத்துச் சொன்னார்.

மீக்கா 7:19 

"அவர் நம் மீது இரக்கம் காட்டுவார் 

நம் தீச்செயல்களை மிதித்து போடுவார் 

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" என்று கடவுளின் பேரன்பையும் எசாயா 55:7 "மன்னிப்பதில் அவர் தாராள மனதினர்" என்று கடவுளின் மன்னிப்பையும் எடுத்துக் கூறினார். இந்த உரை கைதிகளின் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை உணர்த்தியது.

இன்றைய முதல் வாசகமாகிய சீராக்கின் ஞான நூல் வாழ்வுக்கு வேண்டிய வளமான அறிவுரைகளை அதிகம் வழங்குகிறது.

இவ்வுண்மைகள் காலத்தை வென்றவை, மன்னிப்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.

வாழ்வின் வளமைக்கு சீராக் இன்றைய வழிபாட்டின் வழி ஐந்து வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்.

1. வெகுளி, சீனம் ஆகிய வெறுப்புக்குரிய காரியங்களை விட்டொழித்து, பாவத்தில் விழாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் (சீராக் 27:30)

2. கடவுளின் தண்டனையில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் எனில் பிறரை பழிக்குப் பழி வாங்காமல் இருக்க வேண்டும். 

 (சீராக் 28:1)

3. நம் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் எனில் பிறர் நமக்குச் செய்த தீமைகளை நாம் மன்னிக்க வேண்டும்.  (சீராக் 28:2)

இதனையே ஆண்டவர் இயேசு    மத் 6:14 -ல் "மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணக தந்தையும் உங்களை மன்னிப்பார்" என்று எடுத்துரைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு செபிக்கக் கற்று தந்த போது கூட மத்தேயு 6:12 "எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னித்துள்ளது போல் எங்கள் குற்றங்களை மன்னியும்" என்று மன்னிக்க கற்றுத் தந்தார்.

4. கடவுளின் அருள் ஆசிரைப் பெற நாம் பிறர் மீது சினம் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்  (சீராக் 28:3) ஏனெனில் சினம் எல்லா தீமைகளுக்கும் காரணமாகிப் போகிறது எனவே தான் ஆண்டவர் இயேசு மத்தேயு 5:22 "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்" என்று எச்சரித்தார்.

கடவுளின் அன்புப் பிள்ளைகள் நாம் கனிவானச் சொற்களை கையாள அழைக்கிறார்.

நீமொழி 15:1 "கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும், கடுச்சொல்லோ சினத்தையும் எழுப்பும்" என்று எச்சரிக்கையும் செய்கிறார்.

5. மனிதர்களாகிய நாம் பிறருக்கு இரக்கம் காட்ட அழைக்கிறார்  (சீராக் 28:4) இரக்கம் காட்டுவது மன்னிப்புக்கான வழியாகப் பார்க்கின்றோம். லூக்கா 6:36 "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல், நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" என்று தந்தைக் கடவுளின் இரக்கத்தால் வாழும் நாம், பிறர் மீது இரக்கம் கொள்ள அழைக்கிறார்.

தந்தை கடவுளின் இரக்கத்தை விவிலியம் பல இடங்களில் எடுத்துக் கூறுகிறது.

எ.கா: தொநூ 18:16 முதல் உள்ள வார்த்தைகளில் ஆபிரகாம் சோதோம் நகர மக்களின்  தீச் செயலுக்காக, இறைவனிடம் இரக்கத்திற்காக மன்றாட இறைவன் இரக்கம் காட்டுவதைக் குறிக்கிறது.

யோனா ஆகமத்தில் நினிவே நகர் மக்கள் மீது இறைவன் இரங்கியதை பார்க்கின்றோம். இரக்கத்தின் வெளிப்பாடாய் மன்னிப்பும் வாழ்வும் பெற்றார்கள்.

இன்றைய நற்செய்தி, பிறர் தவறு செய்யும் போது கண்டனம் செய்வதும், தண்டிப்பதும், செய்யும் நன்மையை விட மன்னிப்பால் பல மாற்றங்களை உணர முடியும் என்பதை பேதுருவின் கேள்விக்கு பதில் சொல்வது போல் அறிவுறுத்துகிறார் இயேசு.

எத்தனை முறை? என்ற வினாவிற்கு, எத்தனை முறை தீங்கு செய்கிறார்களோ அத்தனை முறையும் மன்னிக்க அழைக்கப்படுகின்றோம்.

மத்தேயு 18:22 "ஏழு முறை மட்டுமல்ல எழுபது தடவை ஏழு முறை" என இயேசுக் குறிப்பிடுவது எண்ணற்ற முறை மன்னிக்க வேண்டும் என்பதே. ஏனெனில் நாம் ஆண்டவரிடம் இருந்து மன்னிப்பை எல்லா நாளும் பெறுகின்றோம் எனவே நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தில் கொலோ 3:13 "ஆண்டவர் உங்களை மன்னிப்பது போல் நீங்களும் மன்னிக்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார், தாவீது

திபா 130:3-4 "ஆண்டவரே நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்க முடியும். நீரோ மன்னிப்பு அளிப்பவர்" என்று கடவுளின் பரிவையும், மன்னிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

மன்னிப்பு வெறும் வார்த்தையில் அடங்கி விடாமல் நம் வாழ்வாக மாற வேண்டும். மன்னிப்பதற்கு மனத் துணிவும், திறந்த மனமும் தேவை.

இன்றைய நற்செய்தியில் அரசர் தன்னிடம் 10,000 தாலந்து கடன்பட்டவனை மன்னிக்கிறார். இத்தகைய மாபெரும் மன்னிப்பு பெற்றவன் தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்டவனை மன்னியாது, கழுத்தை நெரிக்கிறான், சிறையில் அடைத்தான். இது கடவுளின் மன்னிப்பைப் பெறும் மனிதன் பிற மனிதர்களை மன்னிப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.

கடவுளிடமிருந்து இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றவன் என்ற நிலையில், 100 தெனாரியம் கடன்பட்டவருக்கு


1. கடனை அடைக்கக் காலம் கொடுத்திருக்கலாம்.

2. கடன் சுமையை பாதியாகக் குறைத்திருக்கலாம்.

தான் மன்னிக்கப்பட்டது போல் 100 தெனாரியத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்து மன்னித்திருக்கலாம்.

னால் மனிதர் யார் அதிகமாய் நற்செயல்களைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் நற்செயல்களை பிறருக்குச் செய்வதில்லை எனவே தான் ஆண்டவர் இயேசு, மத்தேயு 18:35 "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்" என்றார். எனவே ஆண்டவரின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெறும் நாம் அதனை அனுபவமாக்கி, பிறருக்கு வழங்கி கிறிஸ்துவின் பிள்ளைகள் என்பதை நம் செயல்களால் பறைசாற்றுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment