Friday, September 22, 2023

ஆண்டின் பொதுக்காலம் 25 - ம் ஞாயிறு மறையுரை -24.09.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 25- ஆம் வாரம் ஞாயிறு)

24.09.2023. 

எசாயா 55 :6 -9,

பிலிப்பியர் 1: 20-24, 27

மத்தேயு  20: 1 - 16.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

கடவுள் - நீதியும் இரக்கமும் உடையவர்

♦️நீதி, இரக்கம், மன்னிப்பு நம் வாழ்வில் இணையும் போது நாம் கடவுளின் முகங்களாக புலப்படுகிறோம்

♦️கடவுள் பல்வேறு அருட்கொடைகளால் நம்மை நிரப்பியிருந்தும் நாம் ஏழை, எளியவர், தேவையில் இருப்போர்க்கு இரக்கம் காட்ட தயங்குகிறோம்.

♦️நாம் வாழும் சமகாலத்தில் வாழும் ஒருவர் தேவையில் இருக்கிறார் எனத் தெரிந்தும் அவருக்கு உதவ முடியாதப்படி உள்ளங்கள் இறுகிப்போவது ஏன்?

♦️அவரவர்க்கு உரியதை அவரவர்க்கு வழங்குவது நீதி, அதை அவர் கேட்டு தான் கொடுக்க வேண்டும் என்பதெல்ல மாறாக, நாம் உணர்ந்து உரிய நேரத்தில் வழங்கும் போது நாம் கடவுளின் முகமாய் மாறுகிறோம்.

♦️இன்றைய நற்செய்தி சுட்டும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் நீதியும், பரிவும், இரக்கமும் உள்ளவராக விளங்குகிறார்.

♦️நாமும் இத்தகைய மனநிலையைப் பெற்று வாழத்தான் வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு:

அலுவலகம் செல்லும் போது காரில் இருந்து இறங்கி, ரோட்டோரம் அமர்ந்து காலணிகளுக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்த இளைஞர் அருகில் வந்தான் அருள். தன்னுடைய காலணிகளுக்கு பாலிஷ் போட வேண்டும் என்றான். பாலிஷ் போடும் இளைஞனுக்கு 20 வயதிருக்கும். அவனிடம் அருள் கேட்டான் இளைஞனாக இருக்கிறாயே! இதைவிட நன்கு உழைத்து அதிக வருமானம் வரும் வேலையை ஏன் நீ செய்யக்கூடாது என்று கேட்டான். உடனே அந்த இளைஞன் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு, தன் காலை மூடியிருந்த துணியை விலக்கினான். அப்போதுதான் அவன் கால் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அருள் உள்ளத்தால் அதிர்ந்து போனான் அவனுடன் அன்பொழுக பேசினான். அவனை பற்றிய விவரத்தை அறிந்தான். அவன் பெயர் ராம். இவனது உழைப்பை நம்பி ஓர் அக்கா, அம்மா தம்பி வாழ்ந்து வருகின்றனர். அக்காளை திருமணம் செய்து கொடுத்த கடன் இன்னும் இருக்கிறது என்றான்.

அருள் தன் நண்பர் வழியாக ஜெய்ப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கை கால் கிடைப்பதற்கான ஏற்பாடு செய்தான். ராமுவின் கால் அளவு அளக்கப்பட்டு, மிகக் குறைந்த நாட்களில், செயற்கை கால் வரவழைக்கப்பட்டு, மிக அவசரமாக, ராமுவிற்கு செயற்கை கால் பொருத்தும் பணியை அருள் தன் நண்பர் வழியாக செய்து முடித்தான். இந்நிகழ்வு சில வினாக்களை நம் முன் வைக்கிறது.

1. பொருள் மயமாகி போன உலகில் பிறரின் தேவைகளை உணரும் ஆற்றல் நம்மிடம் உண்டா?

2. அருள் என்ற இளைஞன் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்?

3. நம்மைக் கடந்து பிறருக்கான உணர்வுபூர்வமாக நேரம் செலவிட முன் வருவோமா?

இன்றைய வழிபாடு, பிறருடைய தேவையை உளப்பூர்வமாக உணர்ந்து, அவர்கள் கேட்காமலே, உரிய நேரத்தில் நாம் செய்தோம் எனில் அது நீதியாய், இரக்கமாய் பார்க்கப்படுகிறது.

தோட்ட உரிமையாளரின் செயல் உலகத்தார் பார்வையில் அநீதியாய் தெரிந்தாலும் கடவுளின் பார்வையில் அது நீதியாய் பட்டது. எனவேதான் ஆண்டவர் எசாயா 55 :8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்றார்.


இன்றைய முதல் வாசகம், பாபிலோனில் அடிமை வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், புலம்பி அழுத போது, இஸ்ரயேல் இனத்தை இறைவன் காப்பார், மீட்பார் என்ற ஆறுதல் மொழிகளை எசாயா வழங்குகிறார். ஏனெனில் கடவுள் மக்களோடு நெருங்கி, மக்கள் உணர்வுகளோடு வாழ்கிறார். இணைச்சட்டம் 4 : 7 "நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகி ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?" என்ற இறைவார்த்தை வழி கடவுளின் இரக்கத்தை, உடனிருப்பை நாம் உணரலாம்.

மன்னிக்கும் மாபரன்:-

இஸ்ரயேல் மக்கள் எப்போதெல்லாம் கடவுளை விட்டு விலகி சென்றார்களோ, அப்போது அவர்களை பிற நாட்டிற்கு அடிமையாக்கினார். (எகா: எகிப்து, பாபிலோன், அசீரியா, உரோமை) அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் நாளடைவில் தன்னிலை மறந்து போயினர் அதனால்

1. வாழ்வு தரும் நீரூற்றாம் ஒரே கடவுளை மறந்தனர்.

2. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்த உடன்படிக்கையை மறந்தனர்.

3. சிலை வழிபாட்டுக்குட்பட்டனர். 

4. படைப்பு பொருட்களை, படைத்த கடவுள் இவர்தான் என்று வணங்கினார்.

5. ஒழுக்க கேடான வாழ்வு வாழ்ந்தனர்.

இந்நிலையில் இறைவாக்கினர் எசாயாவின் குரல் இடியென ஒலித்தது. ஆண்டவரின் தண்டனைக்கு நீங்கள் ஆளாவீர்கள் என்றார். எசாயா 55:7 "கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக" என்று கண்டிப்புடனும், உரிமையுடனும் எசாயா கேட்டுக்கொண்டார். அதே நேரம் ஆண்டவரின் அன்பையும், மன்னிப்பையும் விளக்கினார் ஆண்டவரிடம் திரும்பி வந்தால் எசாயா 55:7 "அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்" என்று கடவுளின் மன்னிக்கும் அன்பை எடுத்துரைத்தார். திபா. 86.15 "என் தலைவரே நீரோ இரக்கம் மிகு இறைவன், அருள்மிகுந்தவர், விரைவில் சினமுறாதவர், பேரன்பும், உண்மையும் பெரிதும் கொண்டவர்" என்று தாவீது ஆண்டவரின் அன்பையும் இரக்கத்தையும் விளக்குகிறார்.

கடவுள் தம் எண்ணங்களுக்கு ஒத்துப் போகிறவர்களை தன் கருவியாக பயன்படுத்துவார் என்பது, புற இனத்தாராகிய சீருஸ் வழியாக இஸ்ரயேல் மக்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தார். இதன் வழி கடவுளின் எண்ணங்கள் நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்தி, கடவுளின் மன்னிப்பை, வழி நடத்துதலை, பராமரிப்பை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய நற்செய்தி கடவுளின் பேரிரக்கத்தை உணர்த்துகிறது. நிலைக்கிழார் தன் திராட்சைத் தோட்டத்தில் 1 நாள் கூலி 1தெனாரியம் பேசி விடியற்காலையில் பணியாளர்களை அனுப்புகிறார். பின் 9 மணி, 12 மணி பிற்பகல் 3 மணி இறுதியாக மாலை 5 மணி என ஐந்து நேரங்களில் பணியாளர்களை அனுப்புகிறார். மாலை ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும் 1 தெனாரியம் வழங்குகிறார். எனவே விடியற்காலையில் வந்தவன் தான் 1 தெனாரியம் கூலி பேசியதை மறந்து, தனக்கு அதிகமாய் கிடைக்கும் என எண்ணினான். தான் நினைத்தபடி நடக்காத போது புலம்புகிறான்.

சாதாரண நிலையில் ஒருவர் உழைத்த நேரத்தின் அடிப்படையில் நிலக்கிழார் செய்தது தவறாகத் தெரியலாம். ஆனால் நிலக்கிழார் நீதியும், இரக்கமும் உள்ளவர்.

1. விடியற்காலையில் திராட்சை தோட்டத்திற்கு வந்தவரிடம் 1 தெனாரியம் கூலி பேசப்பட்டப் படி கூலி வழங்கினார்.

2. நிலக்கிழாருடைய செல்வத்தை அவர் விரும்பும் நபருக்கு பகிர்ந்து கொடுப்பது அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.

3. நாம் மேலோட்டமாக பார்க்கின்றோம். நிலக்கிழார் அவரின் தேவைக்கு ஏற்ப கூலி வழங்கினார்.

1 சாமு 16:7 "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்பதற்கு ஏற்றார் போல் கடைசியாய் வந்தவரின், உள்ளத்து வலிகள், அவரின் குடும்பச் சூழல், தேவை அறிந்து உதவினார். இது கடவுளின் பேரன்பை உணர்த்தி நிற்கிறது.

🟢மற்றவருக்குத் தன்னை விடத் குறைவாக கிடைத்தால் போதும் என்ற குறுகிய மனம்.

🔵நான் முதலில் வந்தவன் எனவே நான் முதன்மையானவன் என்ற சுயநலம்.

🟣உரிமையாளரின் செல்வத்தைப் பங்கிடுவது அவரின் உரிமை என்பதை உணர முடியாத, ஏற்க முடியாத, இறுகிய மனம்.

🟡இவற்றைக் கடந்து தான் நிலக்கிழாருடைய செயல், கடவுளின் பேரிரக்கமாக பார்க்கப்படுகிறது.

நாம் யாராக இருக்கிறோம்:

🔴குறுகிய மனதோடு பிறரைக் குறித்து அக்கறையின்றி முறையிட்ட மனிதனா?

🟡தேவை உணர்ந்து கூலி கொடுத்த நிலக்கிழாரா?

தன்னிடம் சுயநலத்தோடு முறையிட்டப் பணியாளரையும் பண்போடு "நண்பா" என்று அழைத்தது, ஆண்டவர் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த யூதாஸை "தோழா" என்று இயேசு கனிவோடு அழைப்பதை நினைவூட்டுகிறது. (மத் 26:49 "தோழா எதற்காக வந்தாய்")

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு

🟢கடவுளுக்குப் பிரமாணிக்கத்தோடு வாழ்கிறேனா? இல்லை இஸ்ரயேலரைப் போல் புறக்கணித்து வாழ்கிறேனா?

🟣கடவுளின் பேரிரக்கத்தையும், மன்னிப்பையும் உணர்ந்து திரும்பி வாழ முயல்கிறேனா?

🔵நமக்கு எதிராய் செயல்படுகிறவர்களையும் தோழமையோடு மாண்போடு நடத்தும் பண்பட்ட மனநிலை உடையவராய் இருக்கிறோமா?

🟡தேவையில் இருப்பவரை இனம் காணும் பரிவுள்ளம் நம்மிடை உண்டா?

🟣தேவைக்கு ஏற்ப உதவுதலே நீதி என்பதை ஏற்கும், வழங்கும் மனபக்குவம் உண்டா?

சிந்திப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment