Saturday, September 30, 2023

ஆண்டின் பொதுக்காலம் 26 - ம் ஞாயிறு மறையுரை -01.10..2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 26- ஆம் வாரம் ஞாயிறு) 01.10.2023. 

எசேக்கியேல் 18 : 25 - 28,

பிலிப்பியர் 2: 1- 11,

மத்தேயு  21: 28 - 32.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

முரண்களை முறியடிப்போம்

♦️அழகிய வாழ்வை அர்த்தமிழக்கச் செய்வது, முரண்பாடான செயல்பாடுகளும், பேச்சுக்களும்.

♦️நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்களில் நாற்றமடிக்கும் தீமைகள் புதைந்து கிடப்பது வாழ்வியல் முரண்கள்.

♦️தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற அரசியல்வாதிகள் அதன்படி நடப்பதில்லை.

♦️செருப்பாய் தேய்ந்து உழைப்போம் என்பவர்களுக்கு, மக்களின் தேவையின் குரல்கள் செவிகளில் ஒலிப்பதில்லை. ஆனால் இன்றைய வழிபாடு சுயம் அறிந்து, தன்னிலை உணர்ந்து வாழ்வில் முரண்பாடுகளை முறியடித்து நேர்மையோடும், உண்மையோடும் வாழ அழைக்கிறது.

நிகழ்வு

அன்பான அழகான குடும்பம். கணவன் மனைவி ஒரு மகன் என்று மகிழ்வோடு வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வின் நலனுக்காக கார் ஒன்றை வாங்கினர். குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. குடும்பத் தலைவர் மிக கவனமாக அந்த வாகனத்தை ஓட்டிச்செல்வார். சிறு சிராய்ப்புகள் வராதபடி பார்த்துக் கொண்டார். கார் வாங்கிய பின் ஒரு நாள் தன் மனைவி, மகனோடு நேரத்தைச் செலவிட்டபோது தன் மகனை அணைத்துக் கொண்டு தந்தைச் சொன்னார். மகனே! உன்னை நான் அதிகம் அன்புச் செய்கிறேன். உனக்காகத்தான் இந்தக் கார் என்றார். 1- ஆம் வகுப்பு படித்த அந்தக் குழந்தையின் உள்ளத்தில் மகிழ்ச்சியின் மத்தாப்புகள் பூத்தது.

ஒரு நாள் தந்தை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். சிறுவன் தன் தாயோடு வீட்டில் இருந்தான். தந்தை சொன்ன அன்பு மொழிகள், அவன் நினைவுக்கு வந்தது தந்தைக்கு நன்றி சொல்ல நினைத்து, அக்குழந்தை ஒரு சிறு கல்லை எடுத்து காரின் கதவில் thank you Daddy என்று எழுதினான், அப்படி காரில் எழுதக்கூடாது என்று அக்குழந்தைக்கு தெரியாது.

மாலை தந்தை வந்தவுடன் குழந்தை தான் எழுதியதை, தன்னை அதிகமாய் அன்பு செய்கிறேன், எனக்காகத்தான் இந்த கார் வாங்கினேன் என்ற தந்தையிடம் காட்டியது. காரில் சிராய்வுகளைக் கண்ட தந்தை கோபத்தின் உச்சிக்கு சென்றார். அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அக்குழந்தையின் விரல்களைப் பிடித்து வைத்து ஓங்கி அடித்தான். அக்குழந்தை வலியால் துடித்தது. இரத்தம் கசிந்தது, சற்று நேரத்தில் குழந்தை வலியிலேயே மயங்கி போனது.

குழந்தையை காரில் ஏற்றிக்கொண்டு தந்தையும், தாயும் மருத்துவமனைக்கு போனார்கள். மருத்துவர் "XRay" எடுக்கச் சொன்னார் எடுத்தார்கள். மருத்துவர் பெற்றோரை அழைத்துச் சொன்னார், குழந்தையின் இரு விரல் நன்றாய் சிதைந்து போயிற்று உடனடியாக விரல்களை நீக்க வேண்டுமென்று, துடித்துப் போனான், அலறினான், அழுதான், மருத்துவம் செய்யுங்கள். எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை விரல்களை வெட்ட வேண்டாம் என்று, மருத்துவச் சொன்னார் விரல்களை எடுக்கவில்லை எனில் உயிருக்கு ஆபத்து என்று, குழந்தையின் இரு விரல்கள் அகற்றப்பட்டது. சோகத்தோடு குழந்தை வரைந்ததை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை. அப்போதுதான் அவன் கண்ணில் அக்குழந்தை எழுதியது பட்டது. Thank you Daddy என்று நன்றி சொன்ன குழந்தையின் வாழ்வில் பெரிய வடுவை ஏற்படுத்தி விட்டேனே என்று அழுதான். பெயிண்ட் அடித்தால் இந்த இந்த சிராய்ப்பு மாறிப்போகும். ஆனால் என் குழந்தையின் விரல் மீண்டும் வராதே என்று புலம்பினான்.

🟣பொருள் மைய உலகில் மனித உறவுகள் அர்த்தமிழக்கிறது.

🟣சுயம் அறிந்து, தன்னிலை உணராத போது நாம் வாழ்வில் முரண்பட்டுக் கிடக்கிறோம் இந்த தந்தையைப் போல்.

குழந்தைதான் என் உயிர், குழந்தையை அன்பு செய்கிறேன் என்றவன் ஆத்திரத்தில் அறிவிழந்தது அவனது பலவீனம். பல நேரங்களில் நாம் இவ்வாறு தான் முரண்பட்டு நிற்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் தந்தையிடம் திராட்சைத் தோட்டத்திற்கு போகிறேன் என்றவர் போகவில்லை. போகமாட்டேன் என்றவர் போகிறார். தன்னிலை உணர்ந்து, தேவை அறிந்து மாற்றம் பெற வழிபாடு அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் தீயவர்கள், தீமையின் பாதையில் நடந்து அழிவுறுவதை கடவுள் ஒரு போதும் விரும்புவதில்லை. தீயவர்களும் தன் தவற்றை உணர்ந்து நல்ல பாதையில் நடக்கவே விரும்புகிறார். அப்போது அவர்கள் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.

எசே . 18:27 "பொல்லார் தாம் செய்த பொல்லாப்பின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால் தம் உயிரைக் அவர்கள் காத்துக் கொள்வார்" என்று இறைவாக்கினர் எச்சரிகின்றார்.

மத்தேயு நற்செய்தி 26 ஆம் அதிகாரத்தில் மூன்று முரண்பட்ட நிகழ்வுகளை மத்தேயு நமக்கு விளக்குகின்றார்.

1. மத்தேயு 26: 34 "இன்றிரவில் சேவல் கூவும் முன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்று எச்சரித்தார். பேதுரு மறுதலித்தார். மனம் வருந்தினார்.

2. மத்தேயு 26:40 "ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா, மத்தேயு 26:41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது" என்று கூறி சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபிக்க அழைக்கின்றார்.

3. மத்தேயு 26:47 - 50 ஆண்டவர் இயேசு சீடர்களோடு பந்தியில் அமர்ந்த போது தம் சீடர்களிடம் என்னை உங்களில் ஒருவன் காட்டிக் கொடுப்பான் என்றார், எல்லோரும் ஆதங்கப்பட்டனர். நானோ, நானோ என்று அங்கலாய்தனர். அவரைக் காட்டி கொடுத்த யூதாசும் ரவி நானோ என்று அவரிடம் கேட்டான். இயேசு அவரிடம் நீயே சொல்லிவிட்டாய் என்று சொல்லி அவனின் செயலை முன் உணர்த்தினார்.  ஆனால் தன்னிலை மறந்து, பொருளுக்கு அடிமையான யூதாசு படை வீரர்களிடம் நான் யாரை முத்தமிடுகிறேனோ அவரை பிடித்துக் கொள்ளுங்கள் என்று அடையாளப்படுத்தியிருந்தான். அதேபோன்று ஆண்டவரிடம் வந்து மத்தேயு 26:49 "ரபி வாழ்க எனக்கூறி கொண்டே அவரை முத்தமிட்டான்" அன்பின் அடையாளமான முத்தம் துரோகமாக மாறிப்போனது வாழ்க! என்ற வாழ்த்தொலி ஒழிக என்று அழிவினை ஓங்கி ஒலித்தது.

இவை நமக்கு உணர்த்தும் செய்தி,  மனிதர் நாம் நம்மிலே முரண்பாடுகளோடு வாழ்கிறோம். எனவே தான் தூய பவுல் உரோமையர் 7:15 "நான் செய்வது என்னவென்று எனக்கேத் தெரியவில்லை எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை, எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்" என்று தன் மனப்போராட்டத்தை வெளிப்படுத்தினார்.

இன்றைய நற்செய்தி தந்தைக்கும் இருமகன்களுக்குமான உரையாடல், திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற இருவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். மூத்த மகனிடம் அழைப்பு விடுத்த போது, அவன் நான் போக விரும்பவில்லை என்றான். ஆனால் மனம் மாறிச் சென்றான். இளைய மகனிடம் அழைப்பு விடுத்தார். உடனே போகிறேன் என்றான் ஆனால் போகவில்லை. 

இந்த நிகழ்வு இரு உண்மைகளை உணர்த்துகிறது.

1) நாம் கொடுத்த வாக்குறுதியை மீறுவது, நான் போகிறேன் என்று தந்தையிடம் கூறிவிட்டு, உதாசீனப்படுத்துவது, இது பிரமாணிக்கம் தவறுவது ஆகும்.


(எகா.) திருமண நிகழ்வில் கணவன் மனைவி கொடுத்த வாக்குறுதி மீறப்படும் போது, இளைய மகனின் மனநிலையில் நாம் செயல்படுகின்றோம்.

பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரைகள், வழிநடத்துதல்களுக்கு எதிராக செயல் புரியும்போது, இளைய மகனின் வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றோம். எனவே ஆண்டவர் இயேசு மத்தேயு 5 : 37 "நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள்" என்று தீர்க்கமாய் அறிவுறுத்தினார்.

2) கடவுளின் அன்பு உறவில் நாம் நிலைக்க வேண்டும் எனில் அவரின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் மூத்த மகன் மேலோட்டமாய் முடியாது என்றாலும் பிறகு தன் எண்ணத்தை மாற்றி தந்தை விருப்பத்தை நிறைவேற்றினார்.

ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு உண்மையான, ஆழமான, எதார்த்தமான உறவு எது என்பதை உணர்த்திய போது மத்தேயு 12 : 50 "விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்" என்று கூறினார்.

லூக்கா 1:38 "நான் ஆண்டவரின் அடிமை உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற அன்னை மரியா தந்தை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றியவர். அவரைப் போல கடவுள் நம்மையும் அழைக்கின்றார். இன்றையச் சூழலில் இறைவன் நம்மை


🟡நீதியை நிலைநாட்ட

🔵உண்மையை உறுதியாய் சொல்ல

🟢நிபந்தனையற்ற அன்பு செய்ய

🔴இயற்கையை பாதுகாக்க

அழைக்கிறார். நம் பதில் என்ன, முரண்களைத் தவிர்த்து, ஆம் என்று பதில் கொடுப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment