Friday, October 27, 2023

ஆண்டின் பொதுக்காலம் 30 - ம் ஞாயிறு மறையுரை -29.10.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 30- ஆம் வாரம் ஞாயிறு) 29.10.2023. 

விடுதலைப் பயணம் 22 : 21-27,

1 தெசலோனிக்கர் 1: 5- 10,

மத்தேயு  22: 34 - 40.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


அன்பே வாழ்வுக்கு அடித்தளம்

அன்பு என்பது

வாழ்வு

அனுபவம்

மகிழ்வு

அன்பு என்பது

வல்லமை

உயிராற்றல்  

உயிர் சக்தி

♦️உலகின் மனித இயக்கு சக்தியும் அன்புதான்.

♦️அன்பு என்பது இறைவனின் பெயர் 1யோவான் 4:8 "கடவுள் அன்பாய் இருக்கிறார்". இந்த இறைவனையும், இறைவனின் சாயலாம் மனித உயிர்களையும் அன்பினால் கட்டிப்போட வழிபாடு அழைக்கிறது.

♦️அன்பு உள்ள இடத்தில் பொறாமை, தற்பெருமை, இறுமாப்பு, இழிவான செயல்கள் ஒருபோதும் இருக்காது.

♦️அன்பு - சுயநலத்திற்கும், எரிச்சலுக்கும் ஒருபோதும் இடம் தராது.

♦️அன்பு உள்ளவர்கள் பிறருக்கு எதிரியாய் புரணி பேசமாட்டார்கள், பிறருக்கு எத்தீங்கும் நினைக்க மாட்டார்கள்.

♦️அன்பு எதையும் எதிர்பார்த்து யாருக்கும் எதையும் செய்யாது.

♦️அன்பு காருண்யமாய் வெளிப்படும்  - அன்பு பிறருக்காய் தன்னை இழக்கும்.

நிகழ்வு (12.10.2023 ஊடகச் செய்தி)

சேலம் மாவட்டம், வீமனூர் என்ற கிராமத்தில் செல்வம் என்ற ஏழை தொழிலாளி, தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். சுய தொழில் தொடங்கும் ஆசை வரவே பலரிடம் கடன் வாங்கி, தனக்குத் தெரிந்த தொழிலாகிய "செங்கல் சூளை" தொழிலைத் தொடங்கினார்.

தொழிலில் செல்வம் எதிர்பார்த்த அளவு இலாபம் கிடைக்கவில்லை. தொழிலில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். தொழில் நஷ்டம் ஏற்பட செல்வத்திற்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கேட்க, உடனடியாக கடனை திருப்பி கொடுக்க வழி தெரியாத செல்வம் கடந்த ஏழு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தொழில் நஷ்டம், குடும்பத் தலைவரின் இறப்பு, கடன் சுமை இவற்றால் செல்வத்தின் மனைவி பிறேமா மற்றும் மூன்று குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். செல்வத்தின் மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றி வந்தார். இச்சூழலில், வறுமை, வேலையின்மை, கடன் இவற்றால் நெருக்கடிக்குள்ளான பிறேமாவால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கக் கூட முடியாத அவலத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வேளை சபரி முடி வாங்கும் நபர் வர தன் தலை முடியை மழித்து அதை 100-க்கு விற்று அதில் தன் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள் அந்த தாய். இந்தத் தாயின் காருண்ய அன்பை ஒருவர் முகநூலில் பதிவு செய்ய, பலருடைய எண்ணங்களை, உணர்வலைகளை அதிர்வுக்குள்ளாக்கியது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, மாவட்ட நிர்வாகம், விதவைகள் உதவித்தொகை அவருக்குக் கிடைக்க ஏற்பாடுச் செய்திருக்கிறது.

எத்தனை உறவுகள் கொட்டி கிடந்தாலும் தாயின் அன்புக்கு முன் அத்தனையும் குப்பை தான். எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயன்பிற்கு எதுவுமே ஈடில்லை.

இதேப்போன்ற உன்னதமான, உயிர் கொடுக்கும் பண்பை நம் வாழ்வுக்கு அடித்தளமாக்கத்தான் வழிபாடு அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் எத்தகைய மானுட நேய பண்புகளோடு அந்நியரைப் பராமரிக்க வேண்டும் என்பதை விடுதலைப் பயணம் வழி அறிகின்றோம். புற இனத்தவர் மேல் இஸ்ரயேல் மக்கள் கனிந்த அன்புள்ளத்துடனும், சகோதரப் பாசத்துடனும் அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் அடிமைகள் என்றோ, புறஇனத்தார் என்றோ பழிக்கக் கூடாது. லேவியர் 19:33 "உங்கள் நாட்டில் தங்கி இருக்கும் அன்னியருக்குத் தீங்கிழைக்காதே" என்றும் அவர்கள் மீது அன்பு கொண்டு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. 

இன்று நாம் வாழும் சூழலில் பிற சமயத்துவரோடு, பிற இனத்தவரோடு, பிற மொழியினரோடு, வேறு நிறமுடையவர்களோடு, வேறு வேறு தத்துவ நெறிகளை வாழ்வாக்குகிறவர்களோடு, வாழ வேண்டிய சூழலில் வாழ்கிறோம். நாம் அவர்கள் மீது காட்டும் பரிவும், இரக்கமும் என்ன? அனைவரையும் சகோதரராக, சகோதரியாக ஏற்கும், அன்பு செய்யும் மனப்பக்குவம் கொண்டுள்ளேனா? சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் பண்பு நெறிகளாக அல்லது வரைமுறைகளாக இறைவாக்கினர் மீக்கா அறிவுறுத்தும் போது, மீக்கா 6.8 "ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்கு காட்டியிருக்கிறாரே, நேர்மையைக் கடைபிடிப்பதிலும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்" என்று அறிவுறுத்துகிறார். 

நேர்மையோடு வாழ்வதும், பிறருக்கு, அயலாருக்கு இரக்கம் காட்டுவதும் இறை சமூகத்தில் தாழ்ச்சியோடு நடப்பதும் இறைவன் விரும்பும் பண்பு நெறிகளாம்.

வழிபாடு உணர்த்து அன்பை, அதன் பண்புகளின் அடிப்படையில் பகுத்தாய்வது நலம் பயக்கும்.

1. அன்பு தூயது

கடவுளின் மறு பெயராய் விளங்கும் அன்பு, தூயதாய் அமைய வேண்டும். தூயோராய் இருங்கள் ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் என்று இறைவன் நாம் கொள்ளும் அன்பு தூயதாய் அமைய வேண்டும் என்று ஆசிக்கின்றார். எனவேதான் இணைச்சட்டம் மற்றும் இன்றைய நற்செய்தியில் இணைச் சட்டம் 6:5, மத்தேயு 22:37 "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" என்பதை தலைசிறந்த கட்டளையாக ஆண்டவர் அறிவுறுத்துகிறார்.

குறையில்லா, பழுதில்லா அன்பை ஆண்டவர் அவரின் பிள்ளைகள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வாழ்வின் முதன்மையான இடம் படைத்த பரம்பொருளுக்கே என்பதையும் ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இதனை தூய பவுல் உரோமையர் 12:9 "உங்கள் அன்பு கள்ளம் மற்றதாய் இருப்பதாக தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். எனவே கறையும், குறையும் இல்லை தூயவரின் புனிதமான, தூயதான அன்பை நாம் வாழ்வாக்கி பிறருக்கு வழங்க அழைக்கிறார் இறைவன்.

2. அன்பு - தன்னை இழக்கும்

உலகின் சிறந்த அன்பு, பிறருக்காய் தன்னை இழக்கும் பேரன்பாகும்.  பலன் எதிர்பாரா பக்குவப்பட்ட, பண்பட்ட அன்பு தன்னை இழக்கும்.

யோவான் 15:13 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" மானுட குழந்தைகள் நமக்காய் மாபரன் இயேசு தன்னை இழந்து, அவரின் அன்பை உணரச் செய்தார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அன்பை உணராமலும், ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடாமலும், ஆண்டவரை விட்டு விலகிச் செல்வதில் கருத்தாய் இருந்த போதும், தன்னை இழந்து மக்களை மீட்டார் இதனை இறைவாக்கினர் ஓசேயா விளக்குகிறார். ஒசேயா 11:4 "பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து அன்பு கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன். அவர்கள் கழுத்தின் மேல் இருந்த நுகத்தை அகற்றினேன். அவர்கள் பக்கம் சாய்ந்து உணவூட்டினேன்" என்று இறைவன் ஒரு தாயைப் போல் சாய்ந்து உணவூட்டி அன்பு செய்கிறார் என்பதை உணர்த்துகிறது. கடவுள் என்ற நிலையில் இருந்து மாறி ஒரு தாயைப்போல் சாலபரிந்து ஊட்டும் அன்பு புலனாகிறது.

3. அன்பு - பிறர் நலம் பேணும்

இந்திய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மத்தேயு 22 :39 "உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு கூர்வாயாக" எந்த இறை வார்த்தை வழி பிறரை அன்பால் தாங்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

நாம் கடவுளை முழுமையாய் அன்பு செய்கிறோம் எனில் நம்மோடு வாழ்கிறவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.

1 யோவான் 4:21 "கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடம் இருந்து நாம் பெற்ற கட்டளை" என்று யோவானும், உரோமையர் 13:8 "பிறரிடத்தில் அன்பு கூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆகிறார்" என்று தூய பவுலும் பிறரை அன்பு செய்ய திருச்சட்டம் வழி அறிவுறுத்துகிறார்.

ஆண்டவர் இயேசுவும் நம் பிறரன்பின் வெளிப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் எனும் போது, பசியாய், தாகமாய், அன்னியராய், ஆடையின்றி, நோய்யுற்று மற்றும் சிறைபட்டுக் கிடக்கும் சகோதரர்களை ஏற்று அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதற்கு ஈடாகவும் என்கிறார்.

மத்தேயு 25:40 "மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பதிலிருந்து அயலாரில் ஆண்டவரை காண்பது அல்லது அயலாரை அன்பு செய்வது ஆண்டவரை அன்பு செய்வதற்கு இணையானது என்று புலனாகிறது.

🟢நாம் வாழும் இவ்வுலகில், அளவில்லா அன்பும், குறைவில்லா அன்பும், பிளவில்லா அன்பும், ஆத்மார்த்தமான தியாக அன்பும் மனித ஆளுமையின் அடித்தளத்தில் ஊற்றெடுப்பவை. இந்த அன்பை நாம் வாழ்வாக்குகிறோமா?

🟣கடவுளை முழு இதயத்தோடு ஏற்று,  அயலாரில் ஆண்டவரை காணும் உளப்பாங்கு நம்மிடம் உண்டா?

🟡கண்ணால் காணும் சகோதரனை அன்பு செய்யாமல், கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்ய இயலாது என்பதை உணர்கிறோமா?

🔴அன்பு என்பது வெறும் வார்த்தை அல்ல மாறாக அனுபவம் என்பதை உணர்கிறேனா?

சிந்திப்போம், செயலாற்றுவோம் அன்பை அனுபவமாக்குவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய இறைவாா்த்தை - 28.10.2023 (சனி)


 

சிந்திக்க சில வாிகள் - 28.10.2023 (சனி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (கடவுளின் குரலுக்கு செவிக்கொடுப்போம்) - 28.10.2023 (சனி)




 

Tamil Catholic Status song (இறை பராமாிப்பு அன்னையே) - 28.10.2023


 

Tamil Catholic Status song (கடவுளின் குரலுக்கு செவிக்கொடுப்போம்)- 28.10.2023


 

Thursday, October 19, 2023

ஆண்டின் பொதுக்காலம் 29 - ம் ஞாயிறு மறையுரை -22.10.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 29- ஆம் வாரம் ஞாயிறு) 22.10.2023. 

எசாயா 45 : 1, 4 - 6,

1 தெசலோனிக்கர் 1: 1- 5,

மத்தேயு  22: 15 - 21.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நற்சிந்தனை, நற்செயல்களால் நற்செய்தியாவோம்:

♦️ உலகை, அதில் வாழும் உயிர்களைப் படைத்த இறைவன் அனைத்தும் நன்று என்று கண்டார்.

♦️நல்லவைகளின் மணி மகுடமாக - மானிடரை தம் சாயலில் உருவாக்கினார்.

♦️நன்றாய் படைக்கப்பட்ட மனிதன் தன் சுயநலம், தீய சிந்தனை, தீய செயலால் மாண்பினை இழந்தான்.

♦️மனிதன் இழந்த மாண்பை மீட்க மீட்பர் மனிதரானார்.

♦️நல்லவற்றை வாழ்வாக்க மறுத்த மனிதன், நற்செய்தியாய் வந்த ஆண்டவர் இயேசுவையே -தன் தீய சிந்தனையால் சிக்க வைக்கப்பார்க்கிறான்.

♦️வார்த்தை மனு உருவான இயேசு ஞானத்தோடு தடைகளை உடைக்கிறார்.

♦️இன்றைய வழிபாடு வழியாக இந்த நல்ல இறைவன் நம் சிந்தனை, செயல், வாழ்வு, பணி வழியாக நற்செய்தியாய் மாற அழைக்கிறார்.

நிகழ்வு

♦️ஒடிசா மாநிலத்தில், தெற்கு ஒடிசா பகுதியில் மலைவாழ் மக்களின் வானதூதர் (An Angel for the tribals) என்று கொண்டாடப்படுகிறார்.                        Dr. ஓம்ஹார் ஹோதா (Dr. Omkar Hota)

♦️MBBS முடிந்ததும், மிக அடர்த்தியாக மலைவாழ் மக்கள் வாழும் மிக அடர்த்தியான காடுகள் நிறைந்த மல்கான்கிரியில் பணி அமர்த்தப்பட்டார்.

♦️அந்தப் பகுதிக்கு செல்ல சாலை இல்லை, அங்கு பாடசாலைகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, மின்சாரம் இல்லை, அரை நிர்வாணிகளாய் மக்கள் மட்டும் இருந்தனர்.

♦️2002 - ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டாலும் 15 ஆண்டுகள் அங்கு எந்த மருத்துவரும் பணியாற்ற முன் வரவில்லை.

♦️2017 - ஆம் ஆண்டு டாக்டர் ஓம்ஹார் ஹோதா அங்குப் பொறுப்பேற்றார்.

♦️மங்கான் கிரியிலிருந்து 92 கிலோமீட்டர் பயணம் செய்து சித்திரகொண்டா செல்ல வேண்டும். சித்திரகொண்டாவில் இருந்து 31 கிலோ மீட்டர் ரோடு இல்லா மலைப்பாதையில் தன் பொருள்களோடு நடந்து போனார்.

♦️மலைகள், பள்ளத்தாக்குகள், அவைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

♦️அந்த மக்கள் மக்கள் சளி, காய்ச்சல், மலேரியா, வயிற்றுப்போக்கு, உடல் வலி இவை தீய சக்திகளின் செயல் என மூடப்பழக்கங்களில் மூழ்கிக்கிடந்தனர்.

♦️அவர்களுக்கு இது தீய சக்தியல்ல நோய் என்பதை பல மாதங்களாக எடுத்துச்சொல்லி, புரியவைத்து, மக்களுள் ஒருவராக மாறிப் போனார்.

♦️அவர் தங்கும் அறை காலை, மருத்துவமனை, மாலை உறங்கும், சமைக்கும் இடமாக அமையும்.

♦️பல இரவுகள் மக்களின் மருத்துவ தேவைக்காக இரவு காட்டு வழி நடந்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து, பல உயிர்களைக் காக்கும் தேவதையாக வலம் வந்தார்.


♦️அண்மையில் ஒரு நாள் நிறைமாத கருவைச் சுமந்த பெண், பேறுகால வலியால் துடிக்க, இரத்தம் கசிந்த போது, அவளுக்கு வேறு மருத்துவ உதவி தேவை என்பதை உணர்ந்து, அந்தப் பெண்ணை கட்டிலில் வைத்து 12 கிலோமீட்டர் தூரம் தன் தோளில் சுமந்து, மருத்துவமனையில் சேர்த்து தாய் சேய் உயிர் காத்தார்.

♦️இப்படி பல நிகழ்வுகள். தன் வாழ்வைப் பற்றி சொல்லும் போது, அரசு மருத்துவமனையின் அவலங்களை நான் வளரிளம் பருவத்தில் என் தாயோடு கண்ணுற நேர்ந்தது. அப்போது என் தாய் என்னிடம் "நீ ஒரு மருத்துவராகி ஏழைகளுக்குப் பணியாற்ற வேண்டும்" என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். நான் அதை சத்தியமாக என் தாய்க்கு வழங்கி, இப்பணியை மன உவப்புடன், நிறைவுடன் பணியாற்றுகிறேன் என்றார்.

♦️டாக்டர் ஓம்ஹார் ஹோதா அவர்களின் அர்ப்பணம், தியாகம், எளிமை மலைவாழ் மக்கள் நலனில் கொண்ட அக்கறை தான் அவரை மலைவாழ் மக்களின் வானதூதர் என்றும், தெய்வ மனிதர் என்றும் தெய்வீக டாக்டர் என்றும் அழைக்கக் காரணமாயிற்று.

இந்த டாக்டர் நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் இவற்றால் மலைவாழ் மக்களுக்கு நற்செய்தியாய் விளங்கியதைப் போல் நாமும் வாழத்தான் வழிபாடு அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில். பாபிலோனில் அடிமை வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை மீட்க திருவுளம் கொண்ட இறைவன் பாரசீக மன்னன் சைரசை மீட்பின் கருவியாய் பயன்படுத்தினார்.

பாரசீக மன்னன் சைரஸ் இஸ்ரயேல் மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவியதால் கடவுள் அவனை ஆசீர்வதித்தார்.

கடவுள், மன்னன் சைரசு - க்கு பெயர் புகழ், வலிமை அளித்தார் இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றில் கடவுளின் கருவியாக திகழச்செய்தார். 

இஸ்ரயேல் (யூதர்களால்) மக்களால் பாவிகள் என்று கருதப்பட்டவர்கள் தான் புறஇனத்தார் இவ்வாறு இஸ்ரயேலர்களால் குறைவாக மதிப்பிடப்பட்ட புறவினத்து அரசன் ஆகிய சைரஸை தன் உதவியாளராக தேர்ந்தெடுக்கிறார் இறைவன் அவரைக் குறித்து இறைவன் சொல்லும்போது.

எசாயா 44: 28 "அவன் நான் நியமித்த ஆயன், என் விருப்பத்தை நிறைவேற்றுவான்" என்றும்" எசாயா 45 : 1 "ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்" என்றும் கூறும் இறைவார்த்தைகள் ஆண்டவருக்கேற்ற ஊழியனாக சைரஸ் விளங்கினார் என்பதை விளக்குகிறது. திருப்பொழிவு யூத அரசர்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் உரிய சிறப்பு. சைரஸைத் திருப்பொழிவு செய்ததன் வழியாக இறைவன் எல்லாருக்கும் உரியவர், எல்லைகளைக் கடந்தவர் என்பது புலனாகிறது. இது ஆண்டவரின் நிகரற்ற மாண்பை, வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

லூக்கா 1:42 "தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்" என்ற இறைவாக்கு சைரஸ் மன்னருக்கும் பொருந்தி நிற்கிறது. ஆண்டவரின் மாண்பை, சிறப்பை குறித்து எசாயா குறிப்பிடும்போது எசாயா 44 : 6 "தொடக்கமும் நானே முடிவும் நானே" என்று முழுமுதலாய் சுயம்பாய் இறைவன் இருக்கிறார் என்றும் இவர்

⭐பிற இனத்தாரை அடிபணியச் செய்வார். 

⭐குன்றுகளை சமப்படுத்துவார்.

⭐செப்புக்கதவுகளின் தாழ்பாழ்களை உடைப்பார். ⭐மறைத்து வைத்த கருவூலங்களை வெளிப்படுத்துவார்.

 என்று அவரின் செயல்பாடுகளை விளக்குகிறார். ஏனெனில் எசாயா 45:5 "நானே ஆண்டவர் வேறு எவரும் இல்லை, என்னையன்றி வேறு கடவுள் இல்லை" என்று தானே எல்லாவற்றிற்கும் எல்லாமான முழுமுதல் இறைவன் என்று விளக்குகிறார்.

இந்தக் கடவுளின் அளவற்ற அன்பை, மகத்துவத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் காண முற்படுகிறோமா? இஸ்ரயேலருக்கு மன்னன் சைரஸ் வழியாக நம்பிக்கையின் செய்தியை, வாழ்வை வழங்கிய இறைவன் நம்மையும் பிற இனத்தார்க்கு வாழ்வின் செய்தியாய் மாற அழைப்பு விடுக்கிறார். பெயர்ச்சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை சைரஸ் -க்கு அறியச் செய்த இறைவன், நம்மையும் உள்ளங்கையில் பொறித்து பெயர் சொல்லி அழைக்கும் போது, அவரின் விருப்பத்தை அறிய, குரலைக் கேட்க முன் வருகிறோமா?

இன்றைய நற்செய்தியில் சீசருக்கு மனவிருப்பின்றி வரி செலுத்தி வந்த பரிசேயரும், ஏரோதியரும் இயேசுவுக்கு எதிராக தங்களுள் புதிய உறவை உருவாக்குகிறார்கள்.

பரிசேயர்

♦️சமயத்தை உயிராய் நினைப்பவர்கள். 

♦️யூத சட்டத்தை நுணுக்கமாய் கடைபிடிப்பவர்கள்.

♦️ஒரே கடவுள் கொள்கை கொண்டவர்கள்.

♦️பிற இனத்தார் தங்களை ஆட்சி செய்வதை எதிர்ப்பவர்கள். உரோமை அரசுக்கு வரி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் 

♦️தீவிரவாதிகள்.

ஏரோதியர்

♦️அரசியல் தலைவர்கள். 

♦️ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள். 

♦️யூத சமய சடங்குகளைக் குறித்து கவலைப்படாதவர்கள்.    ♦️உரோமை அரசை ஏற்றவர்கள்.

♦️வரி செலுத்துவதை ஆதரிப்பவர்கள். 

இந்த இரு குழுக்களும் ஆண்டவர் இயேசுவை எதிர்ப்பதில் இணைந்து செயல்பட்டனர்.

🔵இவர்கள் இணைந்தது - ஆண்டவர் இயேசுவை அழிக்க.

🟢இயேசுவை பழிவாங்க - முரண்பாடுகள் ஒன்று பட்டு நிற்கிறது.

🟡இயேசுவிடம் இவ்வாறு கேள்வி கேட்பது இது முதல் முறையல்ல.

🟣கேட்கும் கேள்விகள் எல்லாம் சமயம் சார்ந்த கேள்வியாக, அரசியல் சார்ந்த கேள்வியாக, அமையும். எப்படி பதில் கொடுத்தாலும் ஒரு சாராரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும்.

சமயம் சார்ந்த கேள்விகள்

மத்தேயு 22 : 36 "போதகரே திருச்சட்டத்தில் தலைசிறந்த கட்டளை எது" 

மாற்கு  2:24 "ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்"

லூக்கா 10 : 25 "நிலை வாழ்வை உரிமையாக்க நான் என்ன செய்ய வேண்டும்"

லூக்கா 22 : 67 "நீ மெசியா தானா" யோவான் 2:20 "இந்தக் கோயிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் மூன்றே நாளில் இதை கட்டி எழுப்பி விடுவீரோ"

இதுபோன்று சமயம் சார்ந்த பல கேள்விகள் இயேசுவிடம் பரிசேயரால், ஏரோதியரால் கேட்கப்பட்டது 

அரசியல் சார்ந்த கேள்விகள்:

லூக்கா 23:3 "நீ யூதரின் அரசனா?" மத்தேயு 22:17 "சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?"

இந்த நற்செய்தில் வரும் வினா இது, எப்படி பதில் கொடுத்தாலும் சிக்க வைப்பார்கள். சபைஉரையாளர் 7:9 "மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்" என்பதை இறைமகன் இயேசு அறிந்திருந்தார் எனவே ஞானத்தோடு பதில் வழங்கினார். சபை உரையாளர் 7:12 "ஞானம் உள்ளவர்களுக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்" என்பதற்கு இணங்க இயேசுவின் பதில் அமைந்தது.

மத்தேயு 22:21 "சீசருக்குரியவற்றை சீசருக்கும் கடவுளுக்குரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள்" என்று ஞானத்தோடு பதில் கொடுத்தார். நீதிமொழி 11:8 "கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துபரின்றி விடுவிக்கப்படுவர்" என்ற இறை வார்த்தையின் ஒளியில் நாம் இறையச்சத்தோடும் அதன் பயனாய் கிடைக்கும் ஞானத்தோடும் வாழ ஆண்டவர் அழைக்கிறார்.

இன்றைய வழிபாடு நமக்கு அறிவுறுத்துவது பணிவு, இறையச்சம், ஞானம், நிறைவாழ்வு ஆண்டவரிடம்  பற்றுறுதி கொண்டு வாழ வேண்டுமென்று இவை வாழ்வாக்கப்படுமெனில் நல்ல சிந்தனைகள் நம் எண்ணத்தில் ஊற்றெடுக்கும், இதனால் நற்செயல்கள் புரியும் மக்களாக மாறுவோம்.

நற்செயல்கள் புரியும் போது பிறருக்கு நற்செய்தியாய் மாறுகின்றோம்.

நம் வாழ்வை ஆய்வோம்.

🔴பிறரின் வளர்ச்சியில் பொறாமை கொள்கிறேனா?

🟣பிறவிக்கு தீங்கு செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறேனா?

🟡பிறருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதில் இன்பம் காண்கிறேனா?

🟢சூழ்ச்சிகளால் பிறரை சிக்க வைத்து அதில் மகிழ்வு கொள்கிறேனா? 

சிந்திப்போம்!

நன்மை செய்யாமல் இருப்பது பாவம் என்பதை உணர்ந்து நற்சிந்தனை, நற்செயல்களால் நற்செய்தியாய் மாறுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

இன்றைய இறைவாா்த்தை - 20.10.2023 (வெள்ளி)


 

சிந்திக்க சில வாிகள் - 20.10.2023 (வெள்ளி)


 

இன்றைய வாசகங்கள் மற்றும் விளக்கவுரை (தீவினை செய்வோரை கண்டு அஞ்சாமல் உள்ள உறுதியோடு வாழ்வோம்) - 20.10.2023 (வெள்ளி)


 

Tamil Catholic Status song (கோடான கோடி மக்கள் குறை தீரவே) - 20.10.2023


 

Tamil Catholic Status song (தீவினை செய்வோரைக் கண்டு அஞ்சாமல் உள்ள உறுதியோடு வாழ்வோம்)- 20.10.2023