Friday, October 27, 2023

ஆண்டின் பொதுக்காலம் 30 - ம் ஞாயிறு மறையுரை -29.10.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 30- ஆம் வாரம் ஞாயிறு) 29.10.2023. 

விடுதலைப் பயணம் 22 : 21-27,

1 தெசலோனிக்கர் 1: 5- 10,

மத்தேயு  22: 34 - 40.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


அன்பே வாழ்வுக்கு அடித்தளம்

அன்பு என்பது

வாழ்வு

அனுபவம்

மகிழ்வு

அன்பு என்பது

வல்லமை

உயிராற்றல்  

உயிர் சக்தி

♦️உலகின் மனித இயக்கு சக்தியும் அன்புதான்.

♦️அன்பு என்பது இறைவனின் பெயர் 1யோவான் 4:8 "கடவுள் அன்பாய் இருக்கிறார்". இந்த இறைவனையும், இறைவனின் சாயலாம் மனித உயிர்களையும் அன்பினால் கட்டிப்போட வழிபாடு அழைக்கிறது.

♦️அன்பு உள்ள இடத்தில் பொறாமை, தற்பெருமை, இறுமாப்பு, இழிவான செயல்கள் ஒருபோதும் இருக்காது.

♦️அன்பு - சுயநலத்திற்கும், எரிச்சலுக்கும் ஒருபோதும் இடம் தராது.

♦️அன்பு உள்ளவர்கள் பிறருக்கு எதிரியாய் புரணி பேசமாட்டார்கள், பிறருக்கு எத்தீங்கும் நினைக்க மாட்டார்கள்.

♦️அன்பு எதையும் எதிர்பார்த்து யாருக்கும் எதையும் செய்யாது.

♦️அன்பு காருண்யமாய் வெளிப்படும்  - அன்பு பிறருக்காய் தன்னை இழக்கும்.

நிகழ்வு (12.10.2023 ஊடகச் செய்தி)

சேலம் மாவட்டம், வீமனூர் என்ற கிராமத்தில் செல்வம் என்ற ஏழை தொழிலாளி, தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். சுய தொழில் தொடங்கும் ஆசை வரவே பலரிடம் கடன் வாங்கி, தனக்குத் தெரிந்த தொழிலாகிய "செங்கல் சூளை" தொழிலைத் தொடங்கினார்.

தொழிலில் செல்வம் எதிர்பார்த்த அளவு இலாபம் கிடைக்கவில்லை. தொழிலில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். தொழில் நஷ்டம் ஏற்பட செல்வத்திற்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கேட்க, உடனடியாக கடனை திருப்பி கொடுக்க வழி தெரியாத செல்வம் கடந்த ஏழு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தொழில் நஷ்டம், குடும்பத் தலைவரின் இறப்பு, கடன் சுமை இவற்றால் செல்வத்தின் மனைவி பிறேமா மற்றும் மூன்று குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். செல்வத்தின் மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றி வந்தார். இச்சூழலில், வறுமை, வேலையின்மை, கடன் இவற்றால் நெருக்கடிக்குள்ளான பிறேமாவால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கக் கூட முடியாத அவலத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வேளை சபரி முடி வாங்கும் நபர் வர தன் தலை முடியை மழித்து அதை 100-க்கு விற்று அதில் தன் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள் அந்த தாய். இந்தத் தாயின் காருண்ய அன்பை ஒருவர் முகநூலில் பதிவு செய்ய, பலருடைய எண்ணங்களை, உணர்வலைகளை அதிர்வுக்குள்ளாக்கியது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, மாவட்ட நிர்வாகம், விதவைகள் உதவித்தொகை அவருக்குக் கிடைக்க ஏற்பாடுச் செய்திருக்கிறது.

எத்தனை உறவுகள் கொட்டி கிடந்தாலும் தாயின் அன்புக்கு முன் அத்தனையும் குப்பை தான். எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயன்பிற்கு எதுவுமே ஈடில்லை.

இதேப்போன்ற உன்னதமான, உயிர் கொடுக்கும் பண்பை நம் வாழ்வுக்கு அடித்தளமாக்கத்தான் வழிபாடு அழைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் எத்தகைய மானுட நேய பண்புகளோடு அந்நியரைப் பராமரிக்க வேண்டும் என்பதை விடுதலைப் பயணம் வழி அறிகின்றோம். புற இனத்தவர் மேல் இஸ்ரயேல் மக்கள் கனிந்த அன்புள்ளத்துடனும், சகோதரப் பாசத்துடனும் அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் அடிமைகள் என்றோ, புறஇனத்தார் என்றோ பழிக்கக் கூடாது. லேவியர் 19:33 "உங்கள் நாட்டில் தங்கி இருக்கும் அன்னியருக்குத் தீங்கிழைக்காதே" என்றும் அவர்கள் மீது அன்பு கொண்டு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. 

இன்று நாம் வாழும் சூழலில் பிற சமயத்துவரோடு, பிற இனத்தவரோடு, பிற மொழியினரோடு, வேறு நிறமுடையவர்களோடு, வேறு வேறு தத்துவ நெறிகளை வாழ்வாக்குகிறவர்களோடு, வாழ வேண்டிய சூழலில் வாழ்கிறோம். நாம் அவர்கள் மீது காட்டும் பரிவும், இரக்கமும் என்ன? அனைவரையும் சகோதரராக, சகோதரியாக ஏற்கும், அன்பு செய்யும் மனப்பக்குவம் கொண்டுள்ளேனா? சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் பண்பு நெறிகளாக அல்லது வரைமுறைகளாக இறைவாக்கினர் மீக்கா அறிவுறுத்தும் போது, மீக்கா 6.8 "ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்கு காட்டியிருக்கிறாரே, நேர்மையைக் கடைபிடிப்பதிலும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்" என்று அறிவுறுத்துகிறார். 

நேர்மையோடு வாழ்வதும், பிறருக்கு, அயலாருக்கு இரக்கம் காட்டுவதும் இறை சமூகத்தில் தாழ்ச்சியோடு நடப்பதும் இறைவன் விரும்பும் பண்பு நெறிகளாம்.

வழிபாடு உணர்த்து அன்பை, அதன் பண்புகளின் அடிப்படையில் பகுத்தாய்வது நலம் பயக்கும்.

1. அன்பு தூயது

கடவுளின் மறு பெயராய் விளங்கும் அன்பு, தூயதாய் அமைய வேண்டும். தூயோராய் இருங்கள் ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் என்று இறைவன் நாம் கொள்ளும் அன்பு தூயதாய் அமைய வேண்டும் என்று ஆசிக்கின்றார். எனவேதான் இணைச்சட்டம் மற்றும் இன்றைய நற்செய்தியில் இணைச் சட்டம் 6:5, மத்தேயு 22:37 "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" என்பதை தலைசிறந்த கட்டளையாக ஆண்டவர் அறிவுறுத்துகிறார்.

குறையில்லா, பழுதில்லா அன்பை ஆண்டவர் அவரின் பிள்ளைகள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வாழ்வின் முதன்மையான இடம் படைத்த பரம்பொருளுக்கே என்பதையும் ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். இதனை தூய பவுல் உரோமையர் 12:9 "உங்கள் அன்பு கள்ளம் மற்றதாய் இருப்பதாக தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். எனவே கறையும், குறையும் இல்லை தூயவரின் புனிதமான, தூயதான அன்பை நாம் வாழ்வாக்கி பிறருக்கு வழங்க அழைக்கிறார் இறைவன்.

2. அன்பு - தன்னை இழக்கும்

உலகின் சிறந்த அன்பு, பிறருக்காய் தன்னை இழக்கும் பேரன்பாகும்.  பலன் எதிர்பாரா பக்குவப்பட்ட, பண்பட்ட அன்பு தன்னை இழக்கும்.

யோவான் 15:13 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" மானுட குழந்தைகள் நமக்காய் மாபரன் இயேசு தன்னை இழந்து, அவரின் அன்பை உணரச் செய்தார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அன்பை உணராமலும், ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடாமலும், ஆண்டவரை விட்டு விலகிச் செல்வதில் கருத்தாய் இருந்த போதும், தன்னை இழந்து மக்களை மீட்டார் இதனை இறைவாக்கினர் ஓசேயா விளக்குகிறார். ஒசேயா 11:4 "பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து அன்பு கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன். அவர்கள் கழுத்தின் மேல் இருந்த நுகத்தை அகற்றினேன். அவர்கள் பக்கம் சாய்ந்து உணவூட்டினேன்" என்று இறைவன் ஒரு தாயைப் போல் சாய்ந்து உணவூட்டி அன்பு செய்கிறார் என்பதை உணர்த்துகிறது. கடவுள் என்ற நிலையில் இருந்து மாறி ஒரு தாயைப்போல் சாலபரிந்து ஊட்டும் அன்பு புலனாகிறது.

3. அன்பு - பிறர் நலம் பேணும்

இந்திய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மத்தேயு 22 :39 "உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு கூர்வாயாக" எந்த இறை வார்த்தை வழி பிறரை அன்பால் தாங்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

நாம் கடவுளை முழுமையாய் அன்பு செய்கிறோம் எனில் நம்மோடு வாழ்கிறவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.

1 யோவான் 4:21 "கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடம் இருந்து நாம் பெற்ற கட்டளை" என்று யோவானும், உரோமையர் 13:8 "பிறரிடத்தில் அன்பு கூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆகிறார்" என்று தூய பவுலும் பிறரை அன்பு செய்ய திருச்சட்டம் வழி அறிவுறுத்துகிறார்.

ஆண்டவர் இயேசுவும் நம் பிறரன்பின் வெளிப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் எனும் போது, பசியாய், தாகமாய், அன்னியராய், ஆடையின்றி, நோய்யுற்று மற்றும் சிறைபட்டுக் கிடக்கும் சகோதரர்களை ஏற்று அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதற்கு ஈடாகவும் என்கிறார்.

மத்தேயு 25:40 "மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பதிலிருந்து அயலாரில் ஆண்டவரை காண்பது அல்லது அயலாரை அன்பு செய்வது ஆண்டவரை அன்பு செய்வதற்கு இணையானது என்று புலனாகிறது.

🟢நாம் வாழும் இவ்வுலகில், அளவில்லா அன்பும், குறைவில்லா அன்பும், பிளவில்லா அன்பும், ஆத்மார்த்தமான தியாக அன்பும் மனித ஆளுமையின் அடித்தளத்தில் ஊற்றெடுப்பவை. இந்த அன்பை நாம் வாழ்வாக்குகிறோமா?

🟣கடவுளை முழு இதயத்தோடு ஏற்று,  அயலாரில் ஆண்டவரை காணும் உளப்பாங்கு நம்மிடம் உண்டா?

🟡கண்ணால் காணும் சகோதரனை அன்பு செய்யாமல், கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்ய இயலாது என்பதை உணர்கிறோமா?

🔴அன்பு என்பது வெறும் வார்த்தை அல்ல மாறாக அனுபவம் என்பதை உணர்கிறேனா?

சிந்திப்போம், செயலாற்றுவோம் அன்பை அனுபவமாக்குவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment