Friday, October 6, 2023

ஆண்டின் பொதுக்காலம் 27 - ம் ஞாயிறு மறையுரை -08.10..2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 27- ஆம் வாரம் ஞாயிறு) 08.10.2023. 

எசாயா 5 : 1 - 7,

பிலிப்பியர் 4: 6- 9,

மத்தேயு  21: 33 - 43.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நேர்மையோடு நற்பலன் கொடுப்போம்

♦️பழைய ஆலய வழிபாட்டு பாடல் ஒன்று

"பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்

பண்பட்ட நிலம்போல் பலன் கொடுப்பீர்" என்று பாடப்படும்.

♦️இயேசுவின் சீடர்கள் யார் எனில் உரிய காலத்தில் நீதியோடும், நேர்மையோடும் நல்ல பலன் கொடுப்பவர்களே.

♦️இறைவன் நம்மிடம் நற்கனிகளை எதிர்பார்க்கும் போது, நம் செயல்பாடுகள் பயனற்றவையாக மாறிவிடக்கூடாது.

♦️நீதி, உண்மை, நேர்மை, பரிவு ஆகிய பண்புகளை உயிரினும் மேலாக நாம் கடைபிடித்தால் நாம் நற்கனி கொடுப்பவராவோம். இல்லையெனில் நாம் பயனற்றக் காட்டு பழங்களையே வழங்குவோம்.

♦️இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இதை நமக்கு மிகத் தெளிவாக இயம்புகிறது.

♦️மனிதரிடம் சுயநலம் ஊற்றெடுக்கும் போது, இறைவனின் விருப்பு நிறைவேறாது. மாறாக நாம் சுயநலத்தை இழக்கும் போது கடவுளின் விருப்பை நிறைவேற்றுவோம்.

♦️ஆண்டவர் விரும்புவது நொறுங்கிய எளிய உள்ளமும், நீதியான அறச்செயல்களும், பரிவும், இரக்கமும் நிறைந்த காருண்ய அன்புச் செயல்களுமே.

நிகழ்வு

சீக்கிய மதகுரு குருநானக், அன்பர்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்துவது வழக்கம். ஒருமுறை ஒரு பெரிய செல்வர் அவருக்கு விருந்து வழங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். குருநானக் அந்த செல்வருடைய வீட்டிற்கு உணவருந்த சென்றார். அவருக்கு அறுசுவை உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குரு நானக் அங்கு உணவருந்தாமல் திரும்பி விட்டார். அன்று அவர் ஒரு ஏழை தொழிலாளி வீட்டிற்குச் சென்றார். அவர் கொடுத்த எளிய உணவை அமுதமாக ஏற்று உண்டார். மகிழ்ச்சியில் உளம் பூரித்தார். குருநானக்கோடு இருந்தவர்கட்கு ஒன்றும் புரியாமல் திகைத்தனர். அவர்கள் அவரிடம் நீங்கள் ஏன் செல்வருடைய வீட்டில் உணவருந்தாமல், அந்த ஏழையின் வீட்டில் உணவருந்தினீர்கள் என்று கேட்டனர். அதற்கு குருநானக் பதில் இவ்வாறு அமைந்தது.

அந்த செல்வந்தர் அறுசுவை உணவை விலை உயர்ந்த பாத்திரத்தில் என் முன் வைத்தார். அந்த உணவில் அவர் சுரண்டிய ஏழைகளின் இரத்தம் கலந்திருப்பது என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த இரத்த வாடையில் எப்படி உணவருந்த முடியும்? நான் உணவை தொடாமலே திரும்பி வந்து விட்டேன்.

ஆனால் அந்த ஏழை இன்முகத்தோடு தந்த அந்த உணவில் அவனது நேர்மையான உழைப்புத் தெரிந்தது, மனித அன்பு இருந்தது, உறவின் சிறப்பு மிளிர்ந்தது. ஆகவே அன்புறவோடு உண்டு மகிழ்ந்தேன் என்று பதில் சொன்னார்.

இன்றைய வழிபாடு வழியாக இறைவன் விரும்புவது அல்லது நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது அறச்செயல்களையும் நீதியான சமூக முன்னெடுப்புகளையும், முழு மனித விடுதலையையும் தான். ஆனால் இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் அதற்கு முரணான செயல்பாடுகளை எசாயா வழியாகவும் மத்தேயு வழியாகவும் அறிகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில்

♦️இஸ்ரயேல் என்னும் திராட்சை தோட்டத்திற்கு, தோட்ட உரிமையாளராகிய இறைவன் செய்ய வேண்டிய அனைத்தையும் நேர்த்தியாய் செய்தார்.

♦️எகிப்தியரின் அடிமைதளையில் இருந்து விடுவித்து, கானான் நாட்டிற்கு (செழிப்பான நாட்டிற்கு) அழைத்து வந்து முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.

🔴எசாயா 49:16 "கருத்தாகினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" எசாயா 46:16 "என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்" என்று பரிவும், இரக்கமும், அன்பும் காட்டி பேணினார் இறைவன்.

🔵இஸ்ரயேல் என்னும் திராட்சை கொடிக்காக இறைவனே நிலத்தை பண்படுத்தினார்.

🔵அன்பு நீர் வார்த்தார், பாச உரமிட்டார், பராமரிப்பு என்னும் வேலி அமைத்தார், கனி தராத கிளைகளை தறித்தார்.

🔵கனி தரும் கிளைகளை மிகுந்த கனி தர கழித்து விட்டார்.

🔵காவல் கோபுரம், பழம் பிழிய ஆலை அமைத்தார்.

♦️யோவான் 15:2 "கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்து விடுவார். கனிதரும் அனைத்து கொடிகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்து விடுவார்"

🟢இவ்வாறு பராமரிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களிடம் இறைவன் எதிர்பார்த்தது, நல்ல திராட்சை குலைகள், நற்கனிகள்.

🟢இஸ்ரயேல் கானானிலே ஆண்டவரின் வழியில், அன்புப் பணியில் நீதியோடும் நேர்மையோடும் நடக்க வேண்டும் என்பதுதான்.

🟢நல்ல விளைச்சல், நற்கனிகளை எதிர்பார்த்து இருக்க கிடைத்தது என்னவோ, ஏமாற்றமும், வேதனையும் தான்.

♦️எசாயா 5:4 "நற்கனிகளை தரும் என்று நான் காத்திருக்க காட்டுப் பழங்களை அது தந்ததென்ன" என்று வருந்தினார்.

எசாயா 5:7"படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே அவர் ஆர்வமுடன் நட்டக்கன்று யூத மக்களே நீதி விளையுமென்று எதிர்நோக்கி இருந்தார், ஆனால் விளைந்ததோ, இரத்தப் பழி, நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார் ஆனால் தழைத்ததோ முறைப்பாடு" என்ற எதிர்பார்ப்பு கானல் நீராய் மாறி போனதை எசாயா வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.

♦️செக்கரியா 2:8 "உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான்" என்ற அளவிற்கு இறைவனால் பராமரிக்கப்பட்ட திராட்சைச் செடியாகிய இஸ்ரயேலர், காட்டுக் கனிகளை ஈந்தனர். இந்த இஸ்ரயேலரைப் போல் நாம் காட்டுப் பழங்களை கொடுக்கிறோமோ? நற்கனி கொடுக்கிறோமோ?

அருள் அடையாளங்கள் அருள் வாழ்வில் நம்மை ஆழப்படுத்த திருவை தந்த அருளின் ஊற்றுகள். பக்தி முயற்சிகள் நம்மைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இன்றும் அன்பற்ற, அநீதியான, தீமை நிறைந்த பழிவாங்கும் எண்ணம் கொண்ட, பிறரை ஏமாற்றத் துடிக்கும் தீமைக்கு அடிமையான வாழ்வைதான் வாழ்வாக்குகிறோம்.

ஆனால் இறைவன் நம்மிடம் விரும்புவது, ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாகி, நல்ல சமாரிய மனநிலையோடு, அறச்செயல்களையும், நீதி, நேர்மை போன்ற மதிப்பீடுகளையும், ஒழுக்கமான வாழ்வியல் நெறிகளையும் வாழ்வாக்க வேண்டும் என்பதே.

இன்றைய நறசெய்தியில் ஆண்டவர் இயேசு, யூதர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாததை, குறைகாணத் துடிப்பதை, பழித்தீர்க்க உள்ளத்துக்குள் சிந்திப்பதை அறிந்தவராய், தன்னை எத்தகைய மரணத்திற்கு உட்படுத்த போகிறார்கள் என்பதை கொடிய குத்தகைக்காரர் உவமை வழியாக எடுத்துரைத்தார்.

நற்செய்தி கூறும் உவமையில் வரும் வீட்டுத் தலைவன் இறைவன், குத்தகைக்காரர் நாம், திராட்சைத் தோட்டம் நம் ஆன்மா. ஆன்மா எனும் திராட்சைத் தோட்டத்தை பேணி காப்பது நம் கடன். இந்த திராட்சைத் தோட்டத்தை நற்கனி கொடுக்கும் தோட்டமாக மாற்றுகிறேனா? காட்டுப்பழங்களை கொடுக்கிறேனா?

வீட்டுத் தலைவர் அனுப்பிய ஊழியர்களை, குத்தகைக்காரர்கள் அடித்தனார், கல்லால் எறிந்தனர், கொன்றனர். இது மக்களைக் குறிக்கிறது. யூதர்கள், இறைவனின் முகமாய் செயல்பட்ட இறைவாக்கினர்களை துன்புறுத்தினார். தந்தை கடவுளின் ஒரே மகனாகிய இயேசுவைக் கொன்றனர். ஆனாலும் தந்தை கடவுளின் பரிவு மக்கள் மேல் வெளிப்பட்டது.

உரோமையர் 2:4 "உங்களை மனமாற செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார்" என்று பவுலடியாரும். எசாயா 41:14 "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்" என்கிறார் ஆண்டவர் என்று இறைவாக்கினர் எசாயாவும் கடவுளின் குரலாய் நின்று ஆற்றுப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

திராட்சைத் தோட்டம் அமைத்து, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவு குழி வெட்டி, காவல் மாடமும் கட்டி, தோட்டத் தொழிலாளர்களிடம் ஒப்படைத்தார் என்பது, வாழ்வு தருகிறவராகிய கடவுளை அடைவதற்கு வேண்டிய எல்லா வழிகளையும், உதவிகளையும் குறையின்றி அருளுகின்றார் என்பதாகும்.

எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கும் ஒப்புயர்வற்ற வேலி திருச்சபையாகும்.

குத்தகைகாரர்கள் திட்டமிட்டு தீங்கு செய்வதுபோல் நாம் செய்யும் தீய செயல்கள் அமைகின்றன.

நம்முடைய தீச்செயல்களை சுயநலத்தால், பேராசையால் உரிமையாளரின் மகனை (கிறிஸ்துவை) கொலை செய்யும் அளவிற்கு தீங்கு நிறைந்தது.

இணைச்சட்டம் 5:21 "பிறர் வீடு, நிலம், அடிமைப்பெண், மாடு, கழுதை அல்லது பிறருக்குரிய எதையும் கவர்ந்திட விரும்பாதே" இது ஆண்டவர் கொடுத்தக் கட்டளை. இதனை மீறுவது நமக்கு நாமே அழிவைத் தேடுவதாகும்.

நற்செய்தியில் உரிமையாளரின் மகனைக் கொன்று தோட்டத்தை உரிமையாக்க நினைத்து தீங்கு செய்தவர்களை மத்தேயு 21:41 "அத்தீயோரை ஈவு இரக்கமின்றி ஒழித்துவிடுவார்" என்று அழைக்கின்றோம்.

இந்த உவமை நமக்கு உணர்த்தும் செய்தி, இறையரசைக் கட்டி எழுப்ப தந்தைக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலைக்கல் ஆண்டவராம் கிறிஸ்து என்பதே.

கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது என்ற இறைவாக்கு கிறிஸ்துவில் நிறைவேறிற்று.

நம் சிந்தனைக்கு

🟡இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் அறச்செயல்களைச் செய்கிறோமா? இல்லை அறத்திற்கு புறம்பான செயல்பாடுகளா?

🟣இறைவன் தேடும் நீதி, நேர்மை, உண்மை நம்மால் வாழ்வாக்கப்படுகிறதா இல்லை நீதிக்கு புறம்பான செயல்களா?.

🟢தம்மைப் போல் தூயவராய் வாழ அழைக்கிறார், வாழ்கிறோமா? இல்லை அறவாழ்வில் இருந்து விலகி நிற்கிறோமா?

🔵இறைவன் நம்மில் எதிர்பார்ப்பது சுதந்திரமான, வளமான வாழ்வு.  வாழ்வாக்குகிறோமா? இல்லை, சுயநலம், பொறாமை, பழி வாங்கல், பிறர் பொருள் மேல் ஆசை ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டு, வாழ்விழந்து நிற்கிறோமா?

🔴நேரிய உள்ளத்தோடு நல்லக்கனி கொடுக்க இறையருள் இரஞ்சுவோம்?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment