Friday, October 13, 2023

ஆண்டின் பொதுக்காலம் 28 - ம் ஞாயிறு மறையுரை -15.10.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 28- ஆம் வாரம் ஞாயிறு) 15.10.2023. 

எசாயா 25 : 6 - 10,

பிலிப்பியர் 14: 12- 14, 19 - 20,

மத்தேயு  22: 1 - 14.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இறைவனின் விருந்துக்கு தகுதியுடையவராவோம்

♦️உணவு-உயிரின் அடையாளம்,

விருந்து-மகிழ்வை, உறவை வெளிப்படுத்தும் ஓர் சமூக கூடுகை.

♦️விருந்தில்-மகிழ்ச்சி, ஆரவாரம், அக்களிப்பு நிறைந்திருக்கும்.

♦️விருந்தில்-துன்பம், புலம்பல், அழுகை இருக்காது.

♦️விருந்தில்-புத்தாடை ஆபரணங்கள் அணிந்து நம்மை ஆயத்தப்படுத்துகிறோம்.

♦️விருந்து-ஒரு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு.

♦️இன்றைய வழிபாட்டில் இறைவன் இறைப்பிரசன்னத்தில் நிறைமகிழ்ச்சியில் பங்கு கொள்ள அழைக்கிறார்.

♦️மகிழ்ச்சியில் பங்கு கொள்ள அழைப்பவர் யார் என்பதை மறந்து போகிறார்கள்.

♦️இறைவன் தரும் மகிழ்ச்சி, சமாதானத்தை விட, இவ்வுலகின் பொருட்களில் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானது என்று எண்ணுகின்றனர்.

♦️கிறிஸ்துவைத் தொடக்கத்திலே தெரிந்திருக்கும் நாம் கிறிஸ்து யார் என்பதை அறிந்திருக்கிறோமா?

♦️கிறிஸ்துவை உண்மையாய் அறிந்தவர் கிறிஸ்துவின் விருந்துக்குரியவராவர்.

♦️இன்றைய வழிபாடு நம்மை நாம் இறைவனின் விருந்திற்கு தகுதியுடையவராக, ஏற்புடையவராக மாற அழைக்கிறது.

நிகழ்வு (ஒரு கற்பனைக் கதை)

ஒரு நாள் மூன்று சிற்பங்கள் கடலில் நீராடச் சென்றன.

1. கருங்கல் சிற்பம்

2. பஞ்சு பொம்மை சிற்பம்

3. உப்புப்படிக சிற்பம்

கருங்கல் சிற்பம் முதலில் நீராடச் சென்றது, கடலில் நன்றாக களிப்போடு குளித்தது, தன்னை நன்றாக சுத்தம் செய்து, மிகத் தூய்மையாக வெளியே வந்தது. ஆனால் சற்று நேரத்தில், கதிரவனின் வெம்மையில் காய்ந்தது, மீண்டும் தூசு படிந்து, அழுக்கடைந்தது.

இரண்டாவதாக பஞ்சு பொம்மை சிற்பம் கடலில் குளிக்கச் சென்றது, பொம்மையின் உள்ளும், புறமும் நன்றாக நனைந்தது, மகிழ்ந்த பொம்மை கரையேற விரும்பாமல் நீண்ட நேரம் நீராடியது. இறுதியில் நீர் சொட்டச் சொட்ட கரையேறியது, வெளியே வந்த பின்பும் ஒரு சில நாட்கள் ஈரமாக இருந்தது. பிறகு அது காய்ந்தது. ஆனால் அழுக்கடைந்தது.

மூன்றாவதாக உப்பு பொம்மை சிற்பம் கடலுக்குள் இறங்கியது. சில மணித்துளிகளில் கடலில்  இரண்டறக் கலந்தது. சிலர் உப்பு பொம்மை காணாமல் போய்விட்டதாகக் கூறினர். வேறு சிலர் அது ஒன்றும் இல்லாமல் போனதாக பரிகசித்தனர் மற்றும் சிலர் அது தன்னை அழித்துவிட்டதாக எள்ளி நகையாடினார். ஆனால் உண்மை யாதெனில் கடலிலிருந்து வந்த உப்பு, அதே கடலோடு கரைந்ததால் கடலளவு பரந்து விட்டது, கரை காணா கடலின் பிரம்மாண்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.

இன்றைய வழிபாடு வழியாக, கரையில்லாக் கருணை கடலாகிய கடவுள் தம் விருந்திற்கு அழைக்கின்றார். நான் அப்பேரன்பு கடவுளோடு இரண்டற கலக்குறோமா? அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்தியிருக்கிறோமா? இல்லை, நாம் தகுதி இழந்து நிற்கிறோமா? சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இறைவன் நமக்கு அருளும் மீட்பை இறைவாக்கினர் எசாயா சுட்டுகிறார்.

எசாயா 25:6 "படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்" என்ற இந்த எசாயாவின் கூற்று இரு காரியங்களை உணர்த்துகிறது.

1. மலையும் இறைவனும்:

சமயங்களில் மலையை இறைவன் உறைவிடமாக பார்த்தனர். யூத மரபிலும் மலை கடவுளின் பிரசன்னம் உடனிருப்பது, உண்மை கடவுளை நிரூபித்த, கடவுளின் மாட்சியை, மீட்பைக் கொணர்ந்த இடமாக பார்க்கப்படுகிறது.

(1) சீனாய் மலை -மோசே அழைக்கப்பட்டது, புனித மலை, பத்துக்கட்டளைகள் வழங்கிய இடம்

(ii) கார்மேல் மலை-யாவே கடவுள் உண்மை கடவுள் என்று இறைவாக்கினர் எலியா வழியாக எண்பித்த மலை.

(iii) தாபோர் மலை-ஆண்டவரின் மாப்சியை, தந்தை-மகன் உறவை, சீடர்களுக்குப் புலப்படுத்திய மலை.

(iv) கல்வாரி மலை-மீட்பைப் பெற்றுத்தந்த மலை.

(v) எசாயா குறிப்பிடும் மலை எருசலேம் கட்டப்பட்டுள்ள சீயோன் மலை, இந்த மலை இறைவன் உறையும் இடமாக, இறைவன் மக்களை ஆசீர்வதிக்கும் இடமாகப் பார்க்கப்படுகிறது.

திருப்பாடல்கள் 128:5 "ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக" என்ற தாவீதின் வார்த்தைகள், சீயோன் மலை ஆண்டவர் உறையும் இடமாக, இறைவன் மக்களோடு உறவாடும் இடமாக பார்க்கப்படுகிறது. இம்மலையில் இறைவன் மக்களின் துன்பங்கள், பாவங்கள் அழித்து புது வாழ்வு தரும் இடமாக பார்க்கப்படுகிறது. நாமே அவராகவும், அவர் நாமாக இரண்டற கலந்துரையாடும் இடமாக அமைகிறது. இதனை தாபோர் மலை அனுபவத்தில் தன்னை இறையனுபவத்தில் இழந்த பேதுரு மத்தேயு 17:4 "ஆண்டவரே நாம் இங்கே இருப்பது நல்லது பார்க்கிறேன்" என்று இயேசுவோடு பேசுவதைப் பார்க்கின்றோம். எனவே மலையோடு இறைவனின் உடனிருப்பை விவிலியம் நமக்கு உணர்த்துகிறது. (இந்து சமயத்திலும், திருப்பதி, பழனி, மருதமலை, குன்றத்தூர், திருப்பரங்குன்றம், சபரிமலை ஆகியவை இறைவன் உறையும் இடங்களாக பார்க்கப்படுகிறது)

2. விருந்தின் சிறப்பு

இந்த விருந்தை தயாரிப்பவரும், விருந்தும் இறைவனே. யோவான் 6:51 "விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இறைவன் தரும், ஆன்ம வாழ்வின் உணவை குறித்து யோவான் விளக்குகிறார்.

இந்த விருந்தினால் விளையும் பலன்களை இறைவாக்கினர் எசாயா இவ்வாறு விளக்குகிறார்.

(i) முகத்தை மூடியுள்ள முக்காட்டை மாற்றுவார்.

(ii) துன்பத்துகிலை தூக்கி எறிவார்.

(iii) சாவை ஒழித்து விடுவார்

(iv) எல்லாருடைய கண்ணீரையும் துடைத்து விடுவார்.

(v) மக்களின் நிந்தையை அகற்றுவார் - என்று இறைவன் தரும் விருந்தினால் வரும் நன்மைகளை முதல் வாசகம் உணர்த்துகிறது.

ஆண்டவர் இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து நோய்களைக் குணப்படுத்தி, இறந்தவர்களுக்கு வாழ்வு வழங்கி முடவர்க்கும், பார்வையற்றவர்க்கும் நலன்களைப் பொழிந்தார். தன் பணி வாழ்வின் இலக்கினை ஆண்டவர் இயேசு எடுத்துரைத்தபோது                

 லூக்கா 4:18 - 19 இறைவார்த்தைகளில்

(i) ஏழைகளுக்கு நற்செய்தி

(ii) சிறைப்பட்டோர் விடுதலை

(iii) பார்வையற்றோருக்கு பார்வை

(iv) ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை

(v) அருள்தரும் ஆண்டினை முழக்கமிட என்று சொன்னபோது லூக்கா 4:20 "தொழுகை கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரை நோக்கியிருந்தன" என்பதன் வழி மனித இடர்களை மாற்ற வந்த மாபரன் இவர்தான் என்பதை மக்கள் கண்டு கொண்ட மகிழ்ச்சி வெளிப்பட்டது.

ஆண்டவர் படைக்கும் இந்த விருந்தும், மனித வாழ்வில் இருக்கும் முக்காடு, துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை இவற்றை மாற்றி, மகிழ்வை, அக்களிப்பை தருவதாய் உறுதியளிக்கின்றார் எசாயா.

3. அழைக்கப்பட்டோரின் மனநிலை

இந்த நற்செய்தியில் ஆண்டவர் மூன்று முறை விருந்திற்கான அழைப்பை விடுக்கிறார்.

1. முதல் முறை அழைத்தபோது கண்டுகொள்ளாத, விருப்பற்ற நிலையில் உள்ள மக்களை பார்க்கின்றோம்.

2. இரண்டாம் முறை அழைத்தபோது பொருட்படுத்தா மக்கள் சாக்குப் போக்குச் சொல்லுகிறார்கள்.

ஒருவன் வயலுக்குச் செல்கிறேன் என்றான். ஒருவன் கடைக்குப் போகிறேன் என்றான். இது பல்வேறு போலியான காரணங்களைச் சொல்லி புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம்.

யோவான் 1:11 "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை" என்ற யோவானின் கூற்று நினைவு கூறத்தக்கது. ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள், அழைத்தப் பணியாளர்களை இழிவுபடுத்தி கொலை செய்கிறார்கள். இது வெளிவேட பரிசேய மனநிலையைக் குறிக்கிறது.

3. மூன்றாவது அழைப்பு பொதுவாக வழங்கப்படுகிறது. உரியவர்கள் புறக்கணித்த போது அழைப்பு, எல்லாருக்கும் பொதுவாகிறது அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

யோவான் 1:12 "அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்" அழைப்பை ஏற்றவர்கள் கடவுளின் பிள்ளைகள் ஆனார்கள்.

மூன்றாவது அழைப்பு ஒரு பரந்துபட்ட அழைப்பு. இதில் ஏழைகள், சாலை ஓரத்தில் வசிப்போர், வரி தண்டுவோர், விலைமாதர், பாவிகள், புற இனத்தார் எல்லாரும் அடங்குவர். யூதர் - பார்வையில் இவர்கள் முகவரியற்றவர்கள். ஆண்டவர் தம் விருந்தின் வழியாக இவர்களின் முக்காட்டை மாற்றி, துன்பத்தை நீக்கி, சாவை ஒழித்து, கண்ணீரைத் துடைத்து, நிந்தையை மாற்றி அக்களிப்பால், நிறை வாழ்வால் நிரப்புவார்.

இந்த விருந்திற்கு நம்மைத் தகுதிப்படுத்தத்தான் ஆண்டவர் அழைக்கிறார்.

🔴எளிய உள்ளமும், தாழ்ச்சி நிறைந்த மனதும், நல்லதை ஏற்கும் உளப்பாங்கும், நம்மை தகுதிப்படுத்தும்.

🔵ஆண்டவரின் அன்பு நெறியில் நாம் பயணமாவது நம்மை விருந்திற்கு தகுதியாக்கும்.

🟢இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் அவரின் விருந்திற்கு ஏற்றவராவோம்.

🟡விருந்து என்பது இறையாட்சி. அடையும் வழி தூய வாழ்வு. லேவியர் 19:2 "தூயவராய் இருங்கள் ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்" என்று தூய வாழ்வை இறையாட்சி விருந்தின் அடையாளமாய் சுட்டுகிறார்.

🟣தூய உள்ளமாகிய திருமண ஆடை அற்றோரைப் புறம்பே தள்ளுகிறார்.

🟡இரக்கமுள்ள கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, இறைசாட்சியின் பண்புகளை.

🟢இரக்கமற்ற, தூய்மையற்ற, வெளிவேட, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைப் போன்ற பரிசேயர் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

🔵எளிய உள்ளமும், தூய மனமும் கொண்ட எளிய மக்களை உரிமையாக்கினார். நாமும் நம் சிந்தனை, செயல்களால் நம்மை இறையாட்சி விருந்துக்கு தகுதியுள்ளவராக்குவோம்.

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment