Friday, November 24, 2023

ஆண்டின் பொதுக்காலம் 34 - ம் ஞாயிறு மறையுரை -26.11.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 34- ஆம் வாரம் ஞாயிறு) 26.11.2023.

கிறிஸ்து அரசர் விழா

எசேக்கியேல் 34 : 11-12, 15 - 17,

1 கொரிந்தியர் 15: 20 - 26, 28,

மத்தேயு  25: 31- 46.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

மந்தையைத் தேடும் ஆயன்

திரு அவை திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை கிறிஸ்து அரசர் விழாவாக கொண்டாட நமக்கு அழைப்புத் தருகிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை அரசராகவும், ஆயராகவும் பார்த்தனர். திபா. 23:1 "ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை" என்றும் திபா. 110:1 "ஆண்டவர் என் தலைவரிடம் நான் உன் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் வலப்பக்கம் வீற்றிரும்" என்ற திருமறை வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகிறது.

நிகழ்வு

பேராசிரியரும், பேச்சாளரும், தமிழ் ஆர்வலருமான திருமதி. பர்வீன் சுல்தான் தன் உரை ஒன்றில் இவ்வாறு சொன்னார். ஒருமுறை அருட்தந்தை ஒருவரைச் சந்தித்தாராம். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, பாதர் எனக்கு இயேசுவின் மடியில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியாக மாற ஆசை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு பாதர் சற்று நேரம் பதில் கூறாமல் புன்னகைத்தாராம். ஏன் பாதர் பதில் கூறமாட்டீர்கள் என்றதும், பாதர், சுல்தான் பர்வீனாவைப் பார்த்து அது வேண்டாம் என்றாராம். ஏன் என்று கேட்க பாதர் சொன்னாராம்.

கருணை வடிவான இயேசுவின் மடியில் சாந்தமாய் தவழும் ஆடு நல்ல ஆடு இல்லை. அது மேய்ப்பனின் குரலை, வழியை விட்டுவிட்டு, வழித்தவறிச் சென்று,  முள்ளிலும் பாறை இடுக்கிலும் சிக்கி, காயப்பட்டது. நடக்க இயலாத காயப்பட்ட அந்த ஆட்டினைத் தான் ஆண்டவர் இயேசு தன் தோளிலும்,  மடியிலும் வைத்துப் பாதுக்காக்கின்றார் என்றாராம். அந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப்போனேன் என்று கூறினார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் எசேக்கியேல் வழி நாம் அறிய வருகின்றோம்.

இஸ்ரயேல் என்ற பேரினம் நல்ல தலைவர்கள் வழிகாட்டிகள் இல்லாமல் சிதறடிக்கப்பட்ட ஒரு காலம் உண்டு. எசே 34:5 "ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லா காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாகின" இச்சூழலில் ஆண்டவர் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக  எசே. 34:11 "நானே என் மந்தையைத் தேடிச் சென்றுப் பேணி காப்பேன்" என்று உறுதியும், நம்பிக்கையும் ஊட்டுகிறார். நல்ல ஆயர் மந்தைக்காக, ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார்.

யோவான் 10:11 "நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்" என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் உரம் சேர்ப்பதாய் அமைகிறது. நல்ல ஆயனாகிய கடவுள், எப்படி பராமரிப்பார், தேற்றுவார் என்பதை இறைவாக்கினர் எசேக்கியா விளக்குகிறார்.

தவறு செய்து, வழி தவறிச் செனறு, உறவை முறித்து உடலையும், உள்ளத்தையும் காயப்படுத்தி - அலைந்து திரிந்த இஸ்ரயேல் என்ற மந்தையைப் பார்த்து

♦️காணாமல் போனதைத் தேடுவேன்.

♦️அலைந்து திரிவதைத் திரும்பக் கொணர்வேன்.

♦️காயப்பட்டவற்றுக்குக் கட்டுப் போடுவேன்.

♦️நலிந்தவற்றை திடப்படுத்துவேன்.

என்று தனது காருண்ய அன்பை வெளிப்படுத்துகிறார். யோ 10:10 "நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாய் பெரும் பொருட்டு வந்துள்ளேன்" என்பதன் வழியாக, நிறைவாழ்வு வழங்குவதே நல்ல ஆயனாகிய தனது பணி என்றும், லூக்கா 19:10 "இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்" என்பதன் வழியாக நம்மை தேடி மீட்டு "பசும் புல்லில்ச் இளைப்பாறச் செய்து, அமைதியான நீர் நிலைக்கு அழைத்துச் சென்று, புத்துயிர் அளிப்பார்" என்னும் தாவீது      திபா. 23 - இல் கூறுகிறார்.

நல்ல ஆயராகிய கடவுளின் பராமரிப்பில், வழி நடத்துதலில், நீதியின் பாதைப் புலப்படும், சாவிற்குள்ளான நெருக்கடிகள் வந்தாலும் ஆண்டவர் ஆயராக இருப்பதால் எந்தத் தீங்கிற்கும் அஞ்சாதப்படி தோள்களில் சுமப்பார், அவருடைய அருள் நலமும், பேரன்பும் நம்மை விட்டு விலகாத படி உடனிருந்து வழி நடத்துவார் என்று நல்ல ஆயனின் பண்பு விளக்கப்படுகிறது.

இன்றைய நற்செய்தியில் அரவணைப்பும், பாதுகாப்பும் உள்ள மந்தையை தேடும் அரசராகப் புலப்படுகிறார்.

எசாயா 33:22 

"ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்

ஆண்டவரே நமக்கு நியாயம் வழங்குபவர்

ஆண்டவரே நமக்கு வேந்தர்

அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்" என்று இறைவன் அன்பும், அறனும், நீதியும் உடையவர் என்பதை விளக்குகிறார்.        எசாயா 50:7 "பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும் போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும்" ஆண்டவரின் அறமாக உணர்த்தப்படுகிறது.

பசித்திருப்பவனுக்கு உணவும், தாகத்தோடு இருப்பவருக்குத் தாகம் தீர்க்க நீரும், அன்னியரை ஏற்றுக் கொள்ளவும், ஆடையின்றி இருப்போரை உடுத்துவதும், நோயாளிகளைப் பராமரிப்பதும், சிறைப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதும் தந்தை கடவுளின் ஆசியை பெற்று தரும் வழிமுறைகளாகச் சுட்டப்படுகிறது.

துன்புறும், தேவையில் இருக்கும் மனிதரில் கடவுளைக் காணவும், எளியவரில் இயேசுவின் முகம் பார்க்கவும் வழிபாடு அழைக்கிறது. மத்தேயு 25:40 "மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பதன் வழியாக ஏழைகளின், நலிந்தவர்களின் வாழ்வியல் நிலைகளோடு நாமும் இணைந்து பணியாற்றப் பணிக்கின்றார். நான் சமூகத்திலிருந்து விலகி மக்களிடமிருந்து மாறுபட்டு நின்று இறைவனைக் காண்பது என்பது இயலாதக் காரியம்.

1 யோவான் 4:20 "தம் கண் முன்னே உள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர் கண்ணுக்கு புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது"  என்பதன் வழியாக மனிதரில் தான் மாபெரும் இயேசுவை இனம் காண முடியும் என்பது புலனாகிறது.

1 யோவான் 3:18 "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" அவ்வாறு நாம் நம் செயல்களால் கடவுளின் அன்புக்குரியவர் என்பதை விளங்கச் செய்வோம்.

நிகழ்வு

அன்னை தெரசா வாழ்ந்த நாட்களில் ஒருநாள், கொல்கத்தா நகர வீதியில், ஒரு வீட்டிலிருந்து பெண் ஒருவரை அடித்து இழுத்து வெளியே துரத்தினர் அவரது குடும்பத்தார். காரணம், அவளைப் பிடித்திருந்த தொற்றுநோய். நடுத்தெருவில் ஆதரவற்று நின்ற அப்பெண்ணின் அவல நிலையை கண்ட அன்னை, அந்த இளம் பெண்ணை அரவணைத்தார். தன் இல்லத்திற்கு அழைத்து வந்தார். நீராட்டி, ஆடை வழங்கி, உணவளித்து, ஆறுதலும், அடைக்கலமும் தந்தார். அன்னையின் அன்பு மழையில் நனைந்த அந்தப் பெண் "அன்னையே பல நாட்களாக பலவிதமான இன்னல்களை அனுபவித்து வந்த நான் இப்போது மன மகிழ்வோடும், மனநிறைவோடும் இருக்கிறேன்" என்றார்.

இத்தகைய அன்பு செயலும், அறச்செயலுமே கடவுளின் தீர்ப்பு நாளில் நம்மை தந்தையின் ஆசிக்குரிய மக்களினமாக இனம் காண வழி செய்யும்.

மதங்களைத் தாண்டிய மனிதநேயமும், மனிதனை மனிதராக மதிக்கும் உயர் பண்பும், தேவையை அறிந்து உதவுவதற்காக இதயத்தில் ஊற்றெடுக்கும் ஈரமும் தந்தையின் ஆசிக்குரியவராக நம்மை மாற்றும்.

நம் வாழ்வில்

நாம் வாழும் சூழலில் ஆயராம் இயேசுவின் பணியை சுமந்து நிற்கிறோம் என்ற உணர்வு உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும்.

🟢பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல ஆயராக திகழ்கிறோமா?

🔴பெரியவர்கள், இளையோர் குழந்தைகளை நேரிய வழியில் வழி நடத்துகிறோமா?

🟣ஆசிரியர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை அன்பு பாதையிலும் அறவழியிலும் நெறிப்படுத்துகிறோமா?

🟡அரசு பணிகளில் இருப்போர் ஆண்டவருக்குச் சான்று பகர அரிய வாய்ப்பு என்பதை உணர்ந்து செயலாற்றுகிறோமா?

🔵ஏழை, எளியவர், துன்புறுவோர், நலிவடைந்தோரின் சாமக் காவலன் என்பதை நாம் உணரும் உள்ளம் கொண்டிருக்கிறோமா?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment