Saturday, December 9, 2023

ஆண்டின் திருவருகைக்காலம் 2 - ம் ஞாயிறு மறையுரை -10.12.2023.

இறைச்சிந்தனை 

தேனருவி மீடியா

(திருவருகை காலம் 2- ஆம் ஞாயிறு) 10.12.2023.

எசாயா 40 : 1 - 5,  9 - 11,

2 பேதுரு 3: 8 - 14,

மாற்கு 1: 1 - 8.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஆனந்தாவோம்

♦️குடும்பங்களில், சமூகத்தில், விழாக்கள் வரும்போது பலநாட்கள் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெறும்.

சமய விழாக்கள் வருகிறது என்றால் அதனைச் சிறப்புச் செய்ய பல நாட்கள் அதற்கான தயாரிப்பு நடைபெறும். அது போல,

உலக மீட்பரின் வருகையைச் சிறப்புச் செய்ய நம்மை ஆயத்தப்படுத்த அழைப்பு விடுகிறது திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறு.

♦️மீட்பரை வரவேற்க நம்மை ஆயத்தப்படுத்துவதென்பது அன்புச் செயல்களாலும் அறச்  செயல்களாலும், நல்ல சிந்தனைகளாலும், பிறநலப் பணிகளாலும் அமைய வேண்டும்.

நிகழ்வு 1 (நவம்பர் 2023 சமூக ஊடக செய்தி)

பிரபல தமிழ் யூடியூபர் "ஆரிப்" தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள HIV (எய்ட்ஸ்) தொற்றால் பாதித்தக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் என சுமார் 350 பேருக்கு தீபாவளிக்கான புத்தகங்கள் வழங்கியுள்ளார்.

அடுத்த கட்டமாக HIV (எயிட்ஸ்) பாதித்த குழந்தைகளை, அரசு அனுமதியுடன் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவரின் ஆவல், இதன் வழியாக

🔴இக்குழந்தைகள் மகிழும்.

🟣தாங்களும் வாழப் பிறந்தவர்கள் என்ற உணர்வு ஏற்படும்.

🟢இக்கு குழந்தைகளை புறக்கணிக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். என்ற இவரின் எண்ணத்தை மருத்துவர்கள் மற்றும் பெரியவர்கள் பாராட்டினர்.

நிகழ்வு 2 (நவம்பர் 2023 ஊடகச் செய்தி)

தஞ்சை அருகே ஓட்டங்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர் செல்வன் சிவகுரு பிரபாகரன் IAS. அவருக்கு திருமண வரன் பார்க்க பெற்றோர் தொடங்கிய போது பெற்றவுடன் மருத்துவம் படித்த பெண்தான் மனைவியாக வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அதோடு அவர் கேட்கும் வரதட்சணையும் அப்பன் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சிவகுரு பிரபாகரனின் நிபந்தனையை ஏற்று மருத்துவர் கிருஷ்ண பாரதி மணப்பெண்ணிடம் சிவகுரு பிரபாகரன் IAS கேட்ட வரதட்சணை என்னவென்றால், அவர் பிறந்த சொந்த கிராமமான ஒட்டங்காடு -ல் வாரத்திற்கு இரு நாட்கள், அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே வரதட்சணை. தன் வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எதிர்பார்த்த வரதட்சனை என்ற சமூக சேவையை மருத்துவர் கிருஷ்ண பாரதி மன நிறைவோடு செய்து வருகிறார்.

இந்த இரு நிகழ்வுகளும், இந்த சமூகத்தின் கடவுளின் அன்பை, பிரதிபலிக்கும் நல்ல உறவுகள், நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றும், சமயங்களை, சாதியை கடந்த மனித நேயமே, கடவுள் என்றும் வாழ்கிறார் என்பதை இந்த சமூகத்திற்கு உரக்கச் சொல்கிறது. இத்தகைய அன்பு செயல்களால் நம்மை நாம் ஆயத்தப்படுத்த வழிபாடு அழைக்கிறது.

இன்றைய  வழிபாடு மூன்று காலகட்டத்தில், மூன்று சமூகத்தில் எவ்விதங்களில் மெசியாவிற்காக ஆயத்தப்படுத்தப்பட்டார்கள் என்பதை விளக்குகிறது.

இறைவாக்கினர் எசாயா

இஸ்ரயேல் மக்களை ஆயத்தப்படுத்தினார், ஆண்டவராகிய கடவுள் எசாயாவை அழைத்து பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதலின் செய்தியாக உரைக்கிறார். பாலஸ்தீனத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நாடுகடத்தப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய கீழ்படியாமையை, உடன்படிக்கையை முறித்தல், மற்றும் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் மன்னித்துவிட்டார்.

எசா 40:1 "ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்றும் எசா 40:2 "அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது" என்றும் ஆறுதல்படுத்துகிறார். பாபிலோனிலிருந்து வெளிவந்த பாலைநில அனுபவமே இன்றைய முதல் வாசகம். இக்கடினமான பயணப் பாதையில் பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், குன்றுகள் தாழ்த்தப்படவும், கோணலானவை நேராக்கப்படவும், கரடு முரடானவை சமதாளமாக்கப்பட்டு செம்மைப்படுத்த அழைக்கிறார்.

🔵அன்பற்றவைப் போன்ற வாழ்வு அன்புச் சோலையாக மாறவும், வறண்ட, ஈரமில்லா, இரக்கமில்லா, கனிவில்லா பாலையை அன்பால், கனிவால், இரக்கத்தால் வளமைப்படுத்துவோம்.

🟡பாவத்தால் பாழ்வெளியான வாழ்வை பண்பட்ட வாழ்வால் செம்மைப்படுத்துவோம்.

🔴வாழ்வு தரும் வழிகளை விடுத்து -  வாழ்விழுந்தவர்கள் நேரிய வாழ்வால் தங்களைச் செம்மைப்படுத்தட்டும்.

🟣எனக்குத் திறமையில்லை, அழகில்லை, செல்வமில்லை, படிப்பில்லை என்ற தாழ்வு மனப்பான்மை என்னும் பள்ளத்தை, எனக்கு உறுதியூட்டும் கடவுளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற உயர்வான சிந்தனையை வளர்த்து வாழ்வை வளப்படுத்த அழைக்கப்படுகின்றோம்.

🟢நான், எனது என்ற அகந்தை, ஆணவக் குன்றுகள் தகர்க்கப்பட்டு நாம், நமது என்ற சமத்துவ பார்வையால் சமதளமாக்கப்பட அழைப்பு விடுக்கிறார் எசாயா.

திருமுழுக்கு யோவான்:

இவரது பணி

🔵மீட்பின் நற்செய்தியை அறிவிப்பது.

🟡இறைமகன் இயேசுவைப்பற்றி மக்களுக்கு முன்னறிவிப்பது.

🔴இறையரசை ஏற்பதற்கு மக்களை தயார் செய்வது.

🟣இயேசு பாவங்களை மன்னித்து நிறை வாழ்வளிப்பவர் என்பதை தீர்க்கமாய் அறிவிப்பது, ஏனெனில் திருமுழுக்கு யோவானின் காலத்தில் மக்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தனர்.

மத் 1:21 "அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" எனவே பாவங்களை மன்னிக்கின்ற, மீட்பு வழங்குகின்ற "இம்மானுவேல்" வரப்போகின்றார். அவருக்காக வழி ஆயத்தம் செய்வதுதான் தன் பணி என்பதை அறிவித்தார்.

மாற்கு 1:2 "இதோ என் தூதனே உனக்கு முன் அனுப்புகிறேன் அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்" என்ற இறைவார்த்தையை நிறைவு செய்யும் விதமாய் திருமுழுக்கு யோவானின் பணி அமைந்திருந்தது.

கி.மு. 5-ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்த இறைவாக்கினார் மலாக்கி, தன் இறைவாக்கில் பாவத்தில் உழல்கின்ற மக்களைத் தூய்மைப்படுத்த மெசியா வருவார்.

அவரது வருகைக்கு முன் வழியை ஆயத்தம் செய்ய வேண்டும் என்ற இறைவாக்கை திருமுழுக்கு யோவான் நிறைவாக்கினார்.

மாற்கு 1:7 "என்னை விட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட எனக்கு தகுதி இல்லை" என்று கடவுள் முன் பணிவும், தாழ்ச்சி உடைய ஊழியராக விளங்கினார்.

நாம் பாவங்களிலிருந்து விடுபட நம்மிடம் உள்ள தாழ்வு மனநிலை என்ற பள்ளத்தாக்கை மாற்றி சுயநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டு நிரப்புவோம்.

ஆணவம், அகங்காரம், தற்பெருமை என்ற குன்றை தாழ்ச்சி, பிறரன்புப் பணிகளால் சமப்படுத்துவோம்.

நம்முடைய கோணலான, கரடுமுரடான பாதைகளை, அன்புச் செயல்களாலும், இரக்கச் செயல்களாலும், அறச்செயல்களாலும் சீர்படுத்த அழைக்கிறார் திருமுழுக்கு யோவான். ஏனெனில் அவரின் வாழ்வு, பணி இரண்டும் தாழ்ச்சி, எளிமைக்கு சான்றாகின.

மாற்கு 1:6 "யோவான் ஒட்டகம் முடி ஆடையை அணிந்திருந்தார், தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார் வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் உண்டு வந்தார்" இப்படி எளிய, தூய, அர்ப்பண வாழ்வு வாழ்ந்து, மெசியாவின் வருகைக்கு ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானை மத் 11:11 "மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று ஆண்டவர் இயேசு சிறப்புச் செய்தார்.

தூய பேதுரு

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எதிர்நோக்கி பிருந்த தொடக்கக் கால கிறிஸ்தவர்கள், ஆண்டவரின் வருகை தாமதமானதால் உள்ளம் சோர்ந்தனர். அவர்களை உறுதிப்படுத்திய, ஆறுதல் படுத்திய வார்த்தைகளே இந்த இரண்டாம் வாசகம்

🟢ஆண்டவராகிய கிறிஸ்து காலம் தாழ்த்தமாட்டார்.

🔵அவர் நமக்காய் பொறுமையாய் காத்திருக்கிறார்.

2 பேதுரு 3:9 "அவர் அவ்வாறு காலம் தாழ்த்துவதில்லை, மாறாக உங்களுக்காக பொறுமையோடிருக்கிறார்" 

தீயவரின் அழிவை ஆண்டவர் விரும்புவதில்லை. அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் அவரின் ஆவல்.

♦️♦️எசே 18:23 "உண்மையில் பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்" என்பதே இறைவிருப்பு.

♦️♦️உரோ 2:4 "உங்களை மனமாற செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா" என்று தூய பாவம் கடவுளின் பரிவையும் இரக்கத்தை விளக்குகிறார்.

♦️♦️இறைவனின் இரக்கத்திற்காய் காத்திருப்போருக்கு இறைவன் அளிக்கும் பரிவு 

🔴புதிய வானம் 

🟣புதிய பூமி

♦️♦️நம் புனித வாழ்வே புதிய வானத்தையும் புதிய பூமியையும் நமக்குப் பெற்றுத் தரும்.

♦️♦️புனித வாழ்வின் தொடக்கம் மாசு மறுவற்ற தூய வாழ்வு. தூய வாழ்வால் மெசியாவை வரவேற்க ஆயத்தமாவோம்!

இறையாட்சியை உரிமையாக்கி கொள்வோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment