Thursday, December 21, 2023

ஆண்டின் திருவருகைக்காலம் 4 - ம் ஞாயிறு மறையுரை -22.12.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(திருவருகை காலம் 4- ஆம் ஞாயிறு) 24.12.2023.

1 சாமு 7 : 1 - 5,  8 - 12, 16,

உரோம 16: 25 - 27,

லூக்கா 1: 26 - 38.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பிக்கையில் நடைபெறும் அமைதி

🟣திருவருகைக் காலத்தின் 4-ம் ஞாயிறு அமைதி ஞாயிறாக திருஅவை சிறப்பிக்கின்றது.

🔵தாவீது தன்னிடம் கடவுள் ஒப்படைத்த மக்களை மகிழ்வோடும், சமாதானத்தோடும் வழி நடத்தினான்.

🔴மக்களுக்கு அமைதி நிறைந்த வாழ்வு வழங்கத் திருவுளம் கொண்ட இறைவனுக்கு தாவீது கோயில் கட்ட விழைகிறார். அதில் மகிழ்வும், அமைதியும், நிறைவும் காண்கிறார்.

🟢மரியாவின் ஆன்மீக வாழ்வு, மரியா தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து, அடிமையாக்கிக் கொண்டு அமைதியோடு நிறைவாய் வாழ்ந்ததே.

🟡நமது ஆன்மீகம் தாழ்ச்சி, பணி, மகிழ்ச்சி, அமைதி என்னும் பண்புகளில் நிறைவுறுகிறதா?

நிகழ்வு (25.12.2005 வார இதழ் செய்தி)

பரமேஸ்வரன், சூடாமணி நாகப்பட்டினத்தின் நம்பிக்கை தம்பதி. 2004, டிசம்பர், 26 பரமேஸ்வரன் தன் பிறந்தநாளைக் கொண்டாட, தன் உறவினர்கள் சிலருடன் தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போனார். மகிழ்வோடு பேசிக் கொண்டிருக்கும்போது, அவரது மகன் சொன்னான், அப்பா அங்கே பாருங்கள் வானத்துக்கு மேலே அலை வருது என்று, திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க முன்னே பனைமர உயரத்திற்கு அலை சீறிட்டு வந்தது. அவ்வளவுதான். கண்மூடி திறக்கும் முன், பரமேஸ்வரன் ஒரு மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்தார். பிறகு நடந்தவற்றை அவர் கூறும் போது

என் வாழ்க்கை மொத்தமாக முடிஞ்சு போனது புரிந்தது. எங்கும் பிணக்குவியல்கள். இறந்து போன ஆயிரக்கணக்கானவர்களில் நடுவில் என் குழந்தைகளை தேடினேன் மிகுந்த சிரமத்திற்கு பிறகு என் பிள்ளைகளை பிணமாகக் கண்டேன். எங்க பிள்ளைகளை நாங்களே குழி தோண்டி புதைத்தோம். நான்கு, ஐந்து நாள் நானும் என் மனைவியும் பைத்தியம் பிடித்தது போல் இருந்தோம். ஐந்தாம் நாள் நானும், என் மனைவியும் எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு சாமத்தான் பேட்டை, விழுந்தமாவடு கிராமங்கள் பக்கம் போய் பார்த்தோம்.

நான் மனைவி, குழந்தைகள் என்று ஐந்து பேரும் நேரம் கிடைக்கும் போது இப்பகுதிகளுக்கு வந்து அங்குள்ள குழந்தைகளுக்கு பாட நடத்துவோம். அந்தக் குழந்தைகள் எல்லாம் தாய் தந்தையை இழந்து அனாதைகளாய் நின்று கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் ஓடிவந்து எங்களை கட்டி அணைத்து அழுத போது இதயம் நொறுங்கிப்போனது. நாங்களும் அழுதோம். அப்போது என் மனைவி என்னிடம், நம்மிடம் பெரிய பங்களா, பணம், கார் எல்லாம் இருக்கு அதை யாருக்கு கொடுக்கப் போகிறோம். "இந்தக் குழந்தைகள் அத்தனை பேரையும்  நாம் தத்து எடுத்து வளர்க்கலாமே" என்று கேட்டார். நன்றாய் பட்டது மொத்தம் 16 குழந்தைகளை எங்களோடு அழைத்து  வந்தோம். ஆண்டவரின் புண்ணியத்தில் நான் மத்திய அரசு பணி புரிகிறேன். என் மனைவி எல்.ஐ.சி. அதிகாரி மாத நல்ல வருமானம் வருகிறது. எங்கள் கனவு, இலட்சியமெல்லாம் இந்த 16 குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறதுதான். நாங்கள் மகிழ்வாகவும், நிறைவாகவும், மன அமைதியாகவும் வாழ்கின்றோம். எங்கள் அமைதியான வாழ்வுக்கு காரணமே இக்குழந்தைகள் தான் என்று சூடாமணி கூறினார்.

இழப்பிலும், இருப்பதை வைத்து அல்லது, வாழும் சூழலில் நம்மை அமைதியாக, மகிழ்வாக ஆக்கிக் கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடம் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய நிகழ்வு இது.

இத்தகைய மானுட நேய செயல்கள் எல்லாம் இன்னும் இறைவன் வாழ்கிறார் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுவதோடு, அமைதியில் நிறைவு காண அழைக்கிறது வழிபாடு. 

இன்றைய முதல் வாசகத்தில்

இஸ்ரயேல் மக்களின் பாதுகாப்பாளரும், மீட்பரும், உடன் பயணிக்கிறவருமான இறைவன் உறைந்தது எளிய கூடாரத்தில். 

ஆடு மேய்த்த தாவீதை, இஸ்ரயேல் பேரினத்தின் அரசராக உயர்த்தி, எதிரிகளின் அச்சுறுத்தல்களின்று விடுவித்து அமைதியோடு ஆட்சி செய்ய உதவிய படைகளின் ஆண்டவர் எளிய கூடாரத்தில் வீற்றிருப்பதா? அவரால் உயர்த்தப்பட்ட நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். எனவே ஆண்டவருக்கு அழகிய ஆலயம் கட்டுவேன் என தாவீது உறுதிப்பாடு கொள்வது விளக்குகிறது.

ஆண்டவர் நான் நாத்தான் வழியாக, தான் தாவீதுக்கு செய்ததையும் செய்யப் போவதையும் எடுத்துரைத்தார்.

ஆடுமேய்த்த உன்னை அழைத்தேன், உன்னோடு இருந்தேன், உன் எதிரிகளை அழித்தேன், இஸ்ரயேல் மக்களுக்கென்று ஒரு நாடு, வழங்கி அதில் அவர்கள் நிலைக்க செய்வேன் என்று சொல்லியபோது தாவீதின் மனநிலை.

2 சாமு . 7:29 "உன் ஊழியனின் குடும்பம் என்றும் உன் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும். தலைவராகிய நீர் உரைத்துள்ளீர், உன் ஊழியனின் குடும்பம் என்றும் உன் ஆசியை பெறுவதாக" என்று அமைதியோடும் எளிமையோடும், ஆண்டவருக்கு நன்றி சொன்னார்.

இன்றைய நற்செய்தி மரியாவின் ஆளுமையை நமக்கு உணர்த்துகிறது. கடவுள் வானதூதரை கலிலேயாவில் உள்ள நாசரேத்து ஊரில் வாழ்ந்த, ஏழை மற்றும் இறை நம்பிக்கையோடு தூய வாழ்வு வாழ்ந்த "மரியா" என்னும் இளம் பெண்ணிடம் அனுப்பி அவளை, மீட்பின் கருவியாக தெரிந்தார்.

லூக் 1:28 "அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"

ஆண்டவர் மரியாவை தெரிந்தெடுத்து, ஆவியால் ஆற்றல்படுத்தி, ஆண்டவரின் பிரசன்னம் அவரோடு குடிக்கொண்டிருப்பதை உறுதி செய்தார். செக்.4:6 "உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல எனது ஆவியாலே ஆகும்" எங்க படைகளின் ஆண்டவரின் கூற்று மரியாளில் முழுமைபெற்றது.

மரியாவிடம் கடவுளின் அருள் நிறைவாய் தங்கி இருந்தது. லூக்கா 1:30 "கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர்" என்று தூதர் வாழ்த்தினார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் பார்வையில் தீயதைச் செய்ததால் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேல்ரை மிதியானியரிடம் ஒப்படைத்தார். பின்னைய நாளில் மிதியானியரை வென்று இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வழங்க ஆண்டவர் யோவாசின் மகன் கிதியோனைத் தேர்ந்தெடுத்தார். நீதி. 6:12 "வல்லமை மிக்க வீரனே ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்" என்று உறுதிப்படுத்தினார். அதேப்போன்று பாவத்திற்கு அடிமையாகிப்போன நம்மை மீட்க கடவுள் தேர்ந்தெடுத்த மரியாவுக்கு தூதர் வழி கொடுத்த உறுதிபாடு. லூக்கா 1:28 "ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்பதாம்.

சாதாரண ஏழை இளம் பெண் மரியா, ஆண்டவரின் தூதரின் உரையைக் கேட்டுக் கலங்கினாலும், உள்ள அமைதியோடும், உறுதியோடும், ஆழமான இறை நம்பிக்கையோடும் சொன்ன பதில் தான் லூக்கா 1:38 "நான் ஆண்டவரின் அடிமை உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று

வீடுகளில் பணிவிடை செய்பவர்கள், வேலை செய்பவர்களுக்கு கூட சில உரிமைகள் உண்டு. ஆனால் அடிமைக்கு இல்லை. நான் ஒரு அடிமையைப் போன்று, தந்தை கடவுளின் வார்த்தையை மட்டுமே என்னில் செயல் வடிவம் பெறும் என்று உறுதிபட உரைத்தார்.

மரியாவிடம் பிறந்த இயேசுவும் தன்னை பிலி 2:7 "தம்மையே பெருமையாக்கி அடிமையின் வடிவை ஏற்றார்" எனவே தான் ஒலிவ மலையில் இயேசு லூக்கா 22:42 "என் விருப்பப்படி அல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று தன்னை அமைதியாய் ஒப்புக்கொடுத்தார்.

கடவுளின் விருப்பை எவ்வித சலனமும் இன்றி ஏற்ற மரியாவை திருமறை இவ்வாறு லூக்கா 1:28 "அருள்மிகப் பெற்றவர்" லூக்கா 1:42 "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்" லூக்கா 1:43 "ஆண்டவரின் தாய்" என்று பெருமைப்படுத்துகிறது.

🟡மரியாவின் எளிய, ஆன்மீகத்தின், வெளிப்பாடு கிறிஸ்து என்னும் மீட்பர். அவரின் பிறப்பிற்கு நம்மை நாம் ஆயத்தப்படுத்தும் இந்த நாளில் நாமும்

🟢மரியாவைப்போல் அருள்மிகப் பெற்று, அதை உலகு வாழ்வு பெற வழங்கும், கடவுளின் கருவியாய் மாற, வாழ வரம் கேட்போம்.

🔵மரியாவைப்போல் தாழ்ச்சி, கீழ்படிதல் என்னும் புண்ணியத்தை வாழ்வாக்குவோம்.

🔴உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்ற மரியாவைப் போல், நமது பிள்ளைகள் - பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் அறநெறிகளில் வாழ முயல்வோம்!

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment