Friday, January 5, 2024

ஆண்டவாின் திருக்காட்சி ஞாயிறு மறையுரை -07.01.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

07.01.2024.

ஆண்டவரின் திருக்காட்சி

எசாயா 60 : 1 - 6,  

எபேசியர்  3: 2 - 3, 5 - 6, 

மத்தேயு 2: 1 - 12.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

தேடல்

🔵மீட்பர் இயேசுவை காண ஞானிகள் வந்தது, வாழ்வின் தேடலில் புதியது அனுபவம்

🟢பிறந்த மீட்பரை இடையர்கள், நேர்மையாளரான சிமியோன், இறைவாக்கினராகிய அன்னா ஆகிய யூத குலத்தவர் மட்டுமே பார்த்து மகிழ்ந்த போது முதல் முறையாக யூதர் அல்லாத கீழ்திசை ஞானிகள் மீட்பரை வணங்கி நிற்பதை விழா உணர்த்துகிறது.

🔴மீட்பர் இயேசு எல்லாருக்கும் மீட்பர். எல்லாருக்கும் எல்லாமானவர் என்ற செய்தியை இன்றைய விழா பறைசாற்றுகிறது.

🟡ஞானியர் இயேசுவை காண இரு வழிகளை பயன்படுத்தினர்.

1. இயற்கை

2. யூத மறைநூல் (பழைய ஏற்பாடு)

1. இயற்கை

பெத்தலகேமில் இயேசு பிறந்திருக்கிறார் என்பதை கிழக்கில் தோன்றிய விண்மீன் வழியாக அறிந்தனர் ஞானிகள். எனவே அவரைக் காண பெத்தலகேம் விரைந்தனர்.

மத் 2.2 "யூதர்களின் அரசராய் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கின்றோம்" என்று அரசன் ஏரோதிடம் கேட்டார்கள். இது ஏரோதுக்கு கலக்கத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

2. மறை நூல்

கலக்கமுற்ற ஏரோது தலைவர்களுக்குள், மறைநூல் அறிஞர்களை அழைத்து மெசியா எங்கே பிறப்பார் என்று வினவிய போது அவர்கள் இறைவாக்கினர் மீக்காவின் இறைவாக்கை நினைவு கூர்ந்து  மீக்கா 5:2 "நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கிறாய். ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்பதை எடுத்துக் கூறினர். மெசியாவைத் தேடி காண வந்த ஞானிகளுக்கு, இயற்கையும் யூதமறையும், மெசியாவை இனம் காட்டியது.

தேடல் - உண்மையை நோக்கி வழிநடத்தும், இவ்வுண்மையை அறிய வழி வகுக்கும்.

நிகழ்வு

1922 - இல் கேரளா மாநிலம் ஹரிபாட், அருகிலுள்ள சேப்பாட்டில் பிறந்தவர் கார்த்தியாயனி அம்மா குழந்தையாய் இருக்கும்போதே அவள் வேலை செய்ய வேண்டிருந்தது. ஆகவே பள்ளி படிப்பை நிறுத்தினார். பெரியவனானதும் திருமணம். ஆறு குழந்தைகள், பிள்ளைகளை வளர்க்க தெரு துப்புரவு தொழிலாளியாக, பணிப்பெண்ணாக வேலைச் செய்தாள். தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழும்பி தன் பணிகளை தொடர்வார்.

2018 - இல் தனது மகள் அளித்த ஊக்கத்தினால் தனது 96 ஆவது வயதில் கற்றல் தேர்வில் தேர்ச்சிப்பெற்றார். அக்சரலட்சம் என்ற திட்டத்தின் கீழ் 40362 பேருடன் இணைந்து தேர்வு எழுதினார். படித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தேர்வான கார்த்தியாயினி அம்மா 100 - க்கு 98 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

வெற்றி பெற்ற அவரை கேரளா கல்வி அமைச்சர் திரு. சி. ரவீந்திரநாத் மற்றும் கேரள முதல்வர் திரு. பினராய் விஜயன் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். 2020 மார்ச் - இல் இந்திய குடியரசு தலைவர் திருமிகு ராம்நாத் கோவிந்து அவர்களால் 2019- ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி பிரஸ் புரஸ்கார் - விருது வழங்கப்பட்டது. 10.10.2023 அன்று தனது 101 - வது வயதில் காலமானார். இளமையில் தவறிய கல்வியை தன் முதுமையில் தேடி முயன்று, வெற்றி கண்டார் கார்த்தியாயினி அம்மா. அறிவுக்கான தேடலில் உச்சம் தொட்டார். உலகு அவரை அறிந்தது.

மெசியாவுக்கான தேடலில் ஞானிகள் மெசியாவை, மீட்பரை கண்டடைந்து மகிழ்ந்த _ நாள் இன்று.

எசா. 60:3 "புற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்" என்ற இறைவாக்கு நிறைவான நாள்.

இந்த கடவுள் இனம், மொழி, மதம், பண்பாடு, சாதிகள், தேசம் எல்லாவற்றையும் கடந்தவர். அவர் நம்முள் ஒருவர், அவர் இம்மானுவேல்.

இன்றைய வழிபாடு, முதல் வாசகம் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில்

ஆண்டவரின் மாட்சி முன்னொரு காலத்தில் சீனாய் மலையில் தங்கியது போல, இப்போது ஆண்டவரின் மாற்றிய எருசலேமில் உதயமாகும்.

எசா 60:1 "எழு, ஒளி வீசு உன் ஒளி தோன்றியுள்ளது ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதிர்த்துள்ளது" எனவே ஆண்டவர் சீயோனாகிய எருசலேமில் தங்குவார். மக்கள் எருசலேம் நோக்கி வருவர்.

எருசலேமின் மகிமையை, மாட்சியைக் கண்டு புற இனத்தார் அதைக் காண ஓடி வந்தது போலவும்,

பெத்தலகேமில் பிறந்த இயேசு என்னும் ஒளியைக் காண கீழ்திசை ஞானிகள் வந்தது போலவும்,

கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நம்முடைய செயல்பாடுகளால், பிறர் ஈர்க்கப்பட்டு, பிறர் கிறிஸ்துவை நம்மிலே காண வேண்டும் என்று இன்றைய விழா அறிவுறுத்துகின்றது.

கிறிஸ்து என்ற பேரொளியை நம் வழியாக பிறருக்கு வழங்குகிறோமா?

திருத்தூதர் பணிகள் 2:42 - 47 உணர்த்தும் தொடக்கக்காலத் திருச்சபையில் நாள்தோறும் மக்கள் சேர்ந்தனர். அந்த சமூகம் வளர்ந்தது போல, பிற இனத்தாரை ஈர்க்கும் அல்லது, நமது எடுத்துக்காட்டான வாழ்வு முறையில் கிறிஸ்துவை வழங்கும் மக்களினமாக விளங்குகிறோமா?

இயேசு யூதருக்கு மட்டுமல்ல மாறாக மக்களினம் முழுவதற்கும் அவர் மன்னர் என்பதை இன்றைய நாள் உணர்த்துகிறது.

கிறிஸ்தவ வாழ்வில் அனைத்தும் கடவுளின் கொடையே. அவரது கொடையாகிய இரக்கத்தாலே நாம் வாழ்கின்றோம் என்பது தூய பவுலின் அசையா நம்பிக்கை.

1 திமொ 1:15 "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகிற்கு வந்தார். அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான்" அப்படிப்பட்ட பாவியாகிய என்னை கடவுள் தம் அருளினால் மீட்டார். அந்த அருள் எதற்காக எனில்,

உரோ 15:16 "அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்கு பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று" என்று மகிழ்ந்தார் தூய பவுல்.

2 சாமு 22:50 "பிற இனத்தார் இடையே உம்மைப் போற்றுவேன் உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்" என்பதற்கிணங்க தூய பவுல் புற இனத்தாரை கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கினார்.

யூதர் அல்லாதோரை கிறிஸ்துவை நோக்கி அழைத்து வந்தார் தூய பவுல். எனவே தான் தூய பவுல்

கலா 1:16 "தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிறஇனதாருக்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்த திருவுளம் கொண்டார்" என்று மகிழ்ச்சி கொண்டார்.

இந்திய நற்செய்தியில் ஞானிகள் ஏரோதிடம் மத் 2:2 "யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கின்றவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோம் அவரை வணங்க வந்திருக்கின்றோம்" என்றபோது ஏரோதிடம் கலக்கம், வஞ்சம், சூழ்ச்சி ஆகிய தீமைகள் குடி கொண்டது.

ஞானிகளால் காண முடிந்த இயேசுவை ஏரோதால் பார்க்க இயலவில்லை.

யார் யார் இயேசுவை காண்பவர்?

♦️இறையச்சமும், எளிய உள்ளமும் கொண்ட இடையர்கள் கண்டார்கள்.

♦️லூக் 2:16 "விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்"

♦️நேர்மையாளர் சிமியோன் கண்டார்.

♦️லூக் 2:28 "சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி புகழ்ந்தார்"

♦️நோன்பிருந்து ஜெபித்த அன்னா கண்டார். லூக் 2:37 "நோன்பிருந்து செபிப்பவர்"

♦️தாழ்ச்சியுடைய ஞானிகள் கண்டனர்.

♦️மத் 2:11 "வீட்டுக்குள் அவர்கள் போய் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதை கண்டார்கள். நெடுஞ்சாண் கடையாய் கிட் விழுந்து வணங்கினர்".

யார் யார் காணவில்லை?

♦️வஞ்சகமும், சீற்றமும் கொண்ட ஏரோது காணவில்லை.

♦️கடின இதயம் கொண்ட பரிசேயர்கள் காணவில்லை.

♦️அதிகார சதுசேயர்கள் காணவில்லை.

♦️மடமைக்குள் வாழ்ந்த மறைநூல் அறிஞர் காணவில்லை.

இவ்விரு குழுக்களில் நாம் எங்கு நிற்கின்றோம்?

🟡ஞானிகள் போல் உண்மையைத் தேடுவோம்.

🟣வாழ்வும், உண்மையும், வழியும்மாவரைத்  தேடுவோம் 

🟢காரிருளை அகற்ற வந்த பேரொளியைத் தேடுவோம்.

🔴தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டு ஆறுதல் தந்தவரைத் தேடுவோம்.

🔵ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்த ஒப்பில்லா தெய்வத்தை தேடுவோம்.

🟡மக்களுக்குச் சுமையாய் இருந்த நுகத்தை உடைத்த காருண்யக் கடவுளைத் தேடுவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment