Saturday, February 24, 2024

தவக்காலம் 2- ம் ஞாயிறு மறையுரை -25.02.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தவக்காலம் 2 -ம் ஞாயிறு

25.02.2024

தொநூ22 : 1 - 2, 9-13,15-18,  

உரோமையர் 8 : 31 - 34, 

மாற்கு 9: 2  - 10.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம் செயல்கள் மாட்சியை உணர்த்தட்டும்

🟣இயேசு தன் பாடுகளை முதன் முதல் அறிவித்தபோது, அதை எதிர்த்த பேதுருவை கடிந்து கொண்ட விதம் சீடர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

🔴சீடர்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த எதிர்பார்ப்பு எல்லாம், இயேசுவின் இந்த அறிவிப்பால் உடைந்து சுக்கு நூறாகி போனது.

🟡ஆனால் சீடர்களின் பலவீனம், அறியாமையை உணர்ந்த இயேசு, தம் பாடு, மரணம் இவற்றிற்குப்பின் வரவிருக்கும் வெற்றியை , மாட்சியை தம் உருமாற்ற நிகழ்வு மூலம் வெளிப்படுத்துகிறார்.

🟢பாடுகளை அறிவித்த போது துடித்துப்போன பேதுரு, உருமாற்றத்தின் மாட்சியைக் கண்டு பரவசமடைந்து பெருமகிழ்ச்சி கொள்கிறார். அதிலே நீடித்திருக்க, நிலைத்திருக்க விரும்புகிறார்.

🔵மலைமேல் பேதுரு, யாக்கோபு, யோவான் பெற்ற அனுபவத்தை, மக்களோடு பகிர்ந்து வாழ்வாக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆவல்.

🟣இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தான் கொண்ட விசுவாசத்தை மோரியாவில் - நிரூபணமாக்கி, அந்த இடத்திற்கு "யாவேயீரே" அதாவது "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்ற உள்ள உறுதியை வெளிப்படுத்தியதால், ஆண்டவரால்

தொநூ 22:17 "நான் உன் மீது உண்மையாகவே ஆசிப் பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்" என்று மாட்சிப்படுத்தப்பட்டதையும் பார்க்கின்றோம்.

🔴மாற்றங்கள் -இறைமாட்சியை உணர்த்தும் போது, அதை புரிந்து ஏற்றுக்கொள்ள ஆழமான நம்பிக்கை அவசியமாகிறது.

நிகழ்வு (2024 பிப்ரவரி ஊடகச் செய்தி)

ஒருவேளை உணவுக்கான, தங்களின் பெற்றோரைத் தவிக்கவிடும், பிள்ளைகளுக்கு நடுவில் வறுமை, நோய், பிள்ளைகளின் புறக்கணிப்பால் மற்றும் தனிமையில் வாழும் பல முதியவர்களுக்கு, தன் சொந்த பணத்தில் உணவை சமைத்து வீடுகள், வீதிகளுக்குச் சென்று கொடுக்கிறார் மும்பையைச் சார்ந்த டாக்டர் உதய் மோடி. பல ஆண்டுகளுக்கு முன்பு பசியால் தவித்த பெரியவருக்காக தனது சொந்த வீட்டிலிருந்து உணவை விநியோகிக்கத் தொடங்கிய டாக்டர் உதய் மோடி சில நாட்களிலேயே இதைப் போன்ற பலர் இருப்பதை அறிந்து Shravan Tiffin Seva என்று அமைப்பை நிறுவி தினமும் உணவு வழங்குகிறார்.  அதோடு Son's Home என்ற பெயரில் முதியவர் இல்லம் கட்டி பராமரித்து வருகிறார்.

நிகழ்வு 2

பைசாபத் (Faizabad) நகரில் வசிக்கும் முகமது ஷெரீப் என்ற 82 வயதான, ஒரு சாதாரண சைக்கிள் கடை வைத்திருக்கும் ஒரு எளிய மனிதர்.

1992-ல் ஒரு நாள் இவரின் மகன் காணாமல் போனான். மீண்டும் வீடு திரும்பி வருவான் என்ற எதிர்பார்ப்பு, ஏக்கத்தோடு நம்பியிருந்த நிலையில், ஒரு மாதம் கழித்து, தண்டவாளத்தில் மகனின் உடலின் பெரும் பகுதி காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு, உடலின் எஞ்சியப்பகுதி கிடைத்தது. இந்தக் கொடிய வலி வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்த முகமது ஷெரீப், அன்று முதல் இன்று வரை யாரும் உரிமை கோராமல் அனாதையாய் கிடக்கும் உடல்களை எடுத்து எந்த பாகுபாடும் பார்க்காமல் மத ரீதியாக அடக்கம் செய்துள்ளார். இதுவரை 25000 உடல்களை அடக்கியுள்ளார். இவரின் இந்த மனிதாபிமான செயலுக்காக 2020-ல் "பத்மஸ்ரீ" விருது வழங்கப்பட்டது. இருவேறு நிகழ்வுகள், ஆனால் இரு நிகழ்வுகளிலும் "மனிதம் " "மனித நேயம் " அடிப்படையாகிறது. டாக்டர் உதய் மோடி மற்றும் திருமிகு முகமது ஷெரீப் இருவரும் தங்கள் செயல்களால் மக்கள் மனங்களில் ஏற்றம் பெற்று உயர்ந்து நிற்கிறார்கள்.

இன்றைய வழிபாட்டின் முதல் வாசகம் மோரியா பகுதியில் அமைந்துள்ள மலையில் ஆபிரகாம் ஈசாக்கை ஆண்டவர் விருப்பப்படி பலியிடத் துணிந்ததையும், தந்தை கடவுள் அவரை மாட்சிப்படுத்தியதையும் விளக்குகிறது.

இன்றைய நற்செய்தியில் தபூர் மலையில் ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைந்து, தந்தை கடவுளோடு ஒன்றானார் என்பதையும், தந்தை கடவுள் அவரை மாட்சிப்படுத்தி மகிழ்ந்ததையும் உணர்த்துகிறது.

ஆபிரகாமின் நம்பிக்கையும், கடவுளின் கருணையும் :

ஆபிரகாம், சாரா இவரின் வயதான காலத்தில் கடவுளின் கொடையால் வழங்கப்பட்டவர் தான் ஈசாக்கு.

சிறுவன் வளர்ந்து வரும் வேளை ஆண்டவர் ஆபிரகாமிடம்

தொநூ 22:2 "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்கு காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்று கேட்டபோது ஆபிரகாம் எவ்வித மறுப்போ, எவ்வித மன கலக்கமோ இன்றி அதிகாலையில் ஆபிரகாம் பயணப்பட்டார் ஈசாக்குடன்.

ஆபிரகாமின் நம்பிக்கை எல்லாம் உரோ 4:17 "இறந்தவர்களை வாழ்விப்பவரும், இல்லாததை தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு" வாழ்ந்தார். எனவேதான் மோரியா நோக்கிய பயணப்பாதையில் ஈசாக்கு தன் தந்தையை பார்த்து,

தொநூ 22:7 "இதோ நெருப்பும், விறகுக் கட்டுகளும் இருக்கின்றன. எரி பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே" என்று தான் பலியாகப் போவது அறியாமல் கேட்டபோது ஆபிரகாம் "கடவுளே பார்த்துக்கொள்வார்" என்று பதில் கொடுத்தார்.

மலை உச்சியில் மகனை பலியிட முற்பட்டபோது மகனும், மறுப்பு சொல்லவில்லை, கடவுளும் கைவிடவில்லை ஆபிரகாமை

திபா 13:5 "நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் நீர் அளிக்கும் விடுதலையில் என் இதயம் களிகூறும்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப ஆண்டவர், ஆபிரகாமை மாட்சிப்படுத்தினார்.

ஆபிரகாமின் நம்பிக்கை தன் மீது அல்ல, மாறாக கடவுள் மீது பிலி 4:13 "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" என்பதை உறுதிப்பட வெளிப்படுத்தினார்.

நம் நம்பிக்கையின் ஆழம் என்ன?

நம் நம்பிக்கை செய்யலாக்கம் பெறுகிறதா?

யாக் 2:26 "உயிர் இல்லாத உடல் போல செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே" என் சொல். செயல்களால் நம்பிக்கையின் சிறந்த மாதிரியாக விளங்குகிறேனா?

ஆபிரகாமின் இறை நம்பிக்கை செயல் வடிவம் பெற்றது. ஆகவே அது அவரை மாட்சிப்படுத்தியது, உயர்த்தியது. நாம் இறைத்திட்டத்தை நிறைவேற்ற "நான் தயார்" என்ற பதில் கொடுக்க இயலுமா?

இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் உருமாற்றமும், தந்தை கடவுளின் செயலாக்கமும் உணர்த்தப்படுகிறது.

இயேசுவின் உருமாற்றத்தின் தேவை

🔴இயேசு "வார்த்தை மனு உருவானவர்" நம்மோடு ஒருவராக வாழ்ந்து, வளர்ந்து, தன்வாழ்வு, பணி இவற்றால் தந்தை கடவுளின் அன்புக்கு ஆட்பட்டார் என்பதை உணர்த்தவே இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்தது.

மாற்கு 9:7 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவருக்கு செவி சாயுங்கள்" நேரம் வந்துவிட்டது மணிமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டு, பலவாறு துன்புறுத்தப்படுவார். இறுதியில் சிலுவைச்சாவை வழங்குவர். அதை எதிர் கொள்ள தந்தை கடவுள் இயேசுவை வலுவூட்டிய நிகழ்வாக உருமாற்றம் அமைந்தது.

🟣 அல்லலுற்ற சீடர்களைத் திடப்படுத்த, துன்பம் வழி மாட்சி, மகிமை, வாழ்வு பெற முடியும் என்பதை உணர்த்த உருமாற்றம் நிகழ்ந்தது.

இயேசு தன்பாடு, மரணம், உயிர்ப்பு இவற்றைச் சொன்ன போது சீடர்கள் துயருற்றனர், வேதனைப்பட்டனர். பேதுரு இயேசுவை தனியே அழைத்து,

மத் 16:22 "பேதுரு அவரைத்  தனியே அழைத்து கடிந்து கொண்டு ஆண்டவரே, இது உமக்கு வேண்டாம் இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார் எனவே அவர்களைத் திடப்படுத்த உருமாற்றம் தேவைப்பட்டது.

🔵தந்தை கடவுளோடு நாம் ஒன்றாகும் போது நாம் எத்தகைய நிலையை அடைவோம் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது.

ஆண்டவரும் கடவுளமாகிய நாம் தூயவர் என்ற கடவுளோடு இயேசு ஒன்றான போது மாற்கு 9:3 "அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவிற்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின" அந்த அளவிற்கு மாட்சிப்படுத்தி சிறப்பு செய்தார்.

🟢இழப்பே வாழ்வு என்பதை உணர்த்திய நிகழ்வு. ஆபிரகாம் இழக்கத் துணிந்தார். விசுவாசத்தின் தந்தையானார். இயேசு கடவுள் நிலையில் இருந்து மனிதராகி, ஏழையாகி அடிமையானார் ஆகவே பிலி 2:11 "இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவும் அறிக்கையிடும்" என்பதன் வழியே இயேசு மாட்சி பெற்றார்.

🟡பழைய ஏற்பாடு கிறிஸ்துவில் முழுமை பெற்றது சட்டத்தை அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம் அதை நிறைவேற்றவே வந்தேன் என்பதன் வழியாக அது கிறிஸ்துவில் முழுமை பெற்றது.

🟢மோசே சட்டத்தின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கு இறைவாக்கினர்களின் அடையாளமாகவும் தோன்றியது கிறிஸ்துவில் சட்டமும், இறைவாக்கும் நிறைவு பெற்றது என்பதை உணர்த்தியது.

நம் வாழ்வில்

🟢 உரோ 6:8 "கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்" எந்த நம்பிக்கையில் போட்டி, பொறாமை களைந்து, ஆண்டவர் இயேசுவில் மாற்றம் பெறுவோம்.

🟣சமூக வாஞ்சை, சமூக சிந்தனை அந்த நிலையில் இருந்து விசாலமான பார்வை பெறுவோம்.

🔵சுயநலம் களைந்து பொதுநலனில் அக்கறை கொள்ளும் பார்வை பெறுவோம். அதுவே நம்மை மாட்சிப்படுத்தும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment