Thursday, February 15, 2024

தவக்காலம் 1- ம் ஞாயிறு மறையுரை -18.02.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தவக்காலம் 1 -ம் ஞாயிறு

18.02.2024

தொநூ 9 : 8 - 15,  

1 பேதுரு  3 : 18 - 22, 

மாற்கு 1: 12  - 15.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

மனம் மாறி நற்செய்தியாய்

🔵இன்றைய வழிபாடு மனமாற்றம் பெற்று இறையாட்சியின் செயல் வீரர்களாய் மாற, வாழ அழைப்பு விடுக்கிறது.

🟣இறையாட்சி என்பது நம் செயல்களால் நாம் தந்தை கடவுளின் உரிமை சொத்து என்பதை உணர்த்துவதோடு, மானுட குழந்தைகள் நாம் சகோதரர் என்ற உயர் மதிப்பை உரக்க எடுத்துரைப்பதாகும்.

🔴நம் செயல்கள் நாம் கடவுளின் பிள்ளைகள், இறையாட்சியின் பிள்ளைகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

🟢நம் வாழ்வில் நல்லவற்றை, நல்ல மதிப்பீடுகளை, நல்ல சிந்தனைகளை வாழ்வாக்கும்போது இந்த உலகிற்கு நாம் நற்செய்தியாகின்றோம்.

🟡நம் நற்செயல்கள் மாற்றத்திற்கான வெளிச்சப்புள்ளியாய், புளிக்காரமாய் செயல்பட வேண்டும்.

🔵தொடக்க நூலில் மனிதன் இறைவனை மறந்து, இறைவன் மனம் வருந்தும்படி வாழ்ந்த காலத்தில் நோவா - அம்மக்களுக்கு நற்செய்தியாக விளங்கினார்.

🔴பாவத்தில் திளைத்த நம்மை மீட்க நீதிமானாகிய, பாவமே அறியாத கிறிஸ்து நமக்காகத் தன்னை இழந்தது நற்செய்தி என்பதை தூய பேதுரு எடுத்துரைக்கின்றார்.

🟢இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பும் இதுதான், நம்முடைய சுயநலனை, குறுகிய, பிறரன்பற்ற, செயல்களைக் கடந்து இறைவனோடும், பிறரோடும்,  நம்மோடும் உறவைப் புதுப்பித்து, இறையாட்சியின் பிள்ளைகளாய் நற்செய்தியாய் வாழ அழைக்கிறது.

🟣எல்லாவற்றிற்கும் மேலாக மாற்றம் வரும்போது இறைவன் தங்கும் புனிதமிக்க இடமாகின்றோம்.

நிகழ்வு 1

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகரம் "வியன்னா". இங்கு வசித்து வருபவர் 31 வயதான மெரின்எங்கல்ஹோம்.  இவ் மிகப்பெரிய செல்வந்தர். அவர் தன்னிடமிருந்து சொத்தின் பெரும் பகுதி அதாவது 25 மில்லியன் யூரோவை ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். இத்தொகையில் இந்திய மதிப்பு 227 கோடி ரூபாயாகும், ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இவரின் செயல் நற்செயலாகியது.

நிகழ்வு 2

ஈரோட்டைச் சார்ந்த 23 வயதான இளம் பெண் மனீஷா. இவர் இறைச்சி வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணசாமியின் மகள். தன்னுடைய சிறு வயதிலேயே வார இறுதி நாட்களில் இறைச்சி கடைக்குச் சென்று, தந்தைக்கு உதவுவார். தந்தை தன்மகள் மனீஷாவுக்கு கொடுக்கும் சிறிய தொகையை சேமித்து வைத்து ஏழைகளுக்கு உணவு, உடை வாங்கி கொடுத்து மகிழ்வார். 12- ஆம் வகுப்பு முடித்து B.Scநர்சிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து முடித்து "நந்தா" கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சாலை மற்றும் வீதிகளில், பஸ் நிலையங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும், முதியவர், அனாதைகள், மனநிலை குன்றியோர், பசியால் துன்புறுவோர் ஆகியோரை இனம் கண்டு, அவர்களைத் தூய்மைப்படுத்தி, உணவு, உடை வழங்கி அரசு துணையோடு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 350 - க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், மனிஷாவால் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 23 வயதான ஈரோட்டு மனீஷா பல ஆயிரம் குழந்தைகளுக்கும், பல ஆயிரம் இளைஞர்களுக்கும் நற்செய்தியாக வாழ்கிறார்.

மனதுருகும் இறைவன்

கடவுள் எல்லாவற்றையும் படைத்த பின்பு, மனிதரை தம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம் என்று எண்ணி, மானுடரை அவருடைய சாயலில் படைத்து மகிழ்ந்தார். தொநூ 1:31 "கடவுள் தான் உருவாக்கி அனைத்தையும் நோக்கினார். அதை மிகவும் நன்றாய் இருந்தது" ஆனால் மனிதன் தான் கடவுளின் சாயல் என்பதை மறந்து, பேராசை, வஞ்சகம், சூழ்ச்சி, கொலை, ஒழுக்கக்கேடு, வன்முறை ஆகியவற்றையே தன் வாழ்வாக்கியதால் தொநூ 6:6 "மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்ததது" என்று ஆண்டவரின் மனதுருக்கத்தை எடுத்தியங்குகிறது. ஆகவே வேதனையுற்றக் கடவுள்  தொநூ 6:7 "நான் படைத்த மனிதரை மண்ணில் இருந்து அழித்தொழிப்பேன். மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப்பறவைகள் வரை அனைத்தையும் அளிப்பேன்" என்றார். ஆனால் கடவுள் பார்வையில் நேர்மையோடு நடந்த நோவாவிற்கு ஆண்டவரின் அருள் பார்வைக் கிடைத்தது.

40 நாள் இரவும் பகலும் மண்ணுலகில் பெரும் மழை பெய்தது. ஆண்டவரின் அறிவுறுத்தல் படி பேழைக்குள் நுழைந்த நோவாவும், அவரின் குடும்பத்தாரும், பறவை, விலங்குகள் காப்பாற்றப்பட்டன.

பேரழிவிற்குப்பின் ஆண்டவர் நோவாவுடன் ஏற்படுத்திய நல்லுறவு உடன்படிக்கையையே இன்றைய முதல் வாசகம்.

இறைவன் நோவா மற்றும் அவன் பிள்ளைகளோடு மட்டும் உடன்படிக்கைச் செய்யவில்லை. மாறாக, விலங்குகள், பறவைகள், படைப்பனைத்தோடும் உடன்படிக்கை மேற்கொண்டார். இந்த உடன்படிக்கை மூன்று உண்மைகளை உணர்த்துகிறது.

1. மனிதன் கடவுளுக்குக் கட்டப்பட்டவன்.

2. நாம் படைப்புகள் மேல் கரிசனை கொள்ள வேண்டும். இதனை புனித பிரான்சிஸ் அசிசியார் வாழ்வாக்கினார்.

3. மக்கள் அனைவரும் கடவுளின் உடன்படிக்கையில் அடங்குவார் 

தொநூ 9:9 "இதோ நான் உங்களோடும், உங்களுக்குப் பின் வரும் உங்கள் வழி மரபினரோடும்" என் உடன்படிக்கையை நிலை நாட்டுவேன் என்கிறார் ஆண்டவர். இது நமக்கு உணர்த்துவது.

🟣நாம் தனித்த நிலையில், உறவற்ற நிலையில் இறைவனுக்குத் தொண்டு அல்லது பணி செய்ய இயலாது.

🟢சமூகத்தோடு நம்மை இணைத்து, மக்களை முழுமையாக ஏற்று அன்பு செய்து வாழும் போது இறைவனின் உடன்படிக்கைக்குத் தகுதியுள்ளவர் ஆகின்றோம்.

🔴எனவேதான் இறைவன் சின்னஞ்சிறு என் சகோதரர் ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்றார். எனவே கடவுளின் உடன்படிக்கை உணர்த்துவது மாற்றம் பெற்று நல்லவர்களாய் கடவுளுக்கு உகந்தவர்களாய் உறவோடு வாழ வேண்டும் என்பது.

மாற்றம் பெற காரணம்

தூய பேதுரு தன் திருமுகத்தில் இரு காரியங்களை வலியுறுத்துகிறார்.

ஆண்டவராகிய இயேசு,

🟡பாவமே அறியாதவர் - பாவிகளாகிய நமக்காகவும்,

🟡நீதியுள்ளவர் - நீதியற்ற, அநீதர் நம்மை மீட்பதற்காக பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு தன்னை ஒரு முறை பலியாக ஒப்புக்கொடுத்ததன் வழியாக நாம் மீட்கப்பட்டோம்.

எபி 10:10 "இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை  தம் உடலை பலியாக செலுத்தியதன் மூலம் நாம் தூயராக்கப்பட்டிருக்கின்றோம்". எனவே நாம் நம்மை மாற்றிதான் ஆக வேண்டும்.

நற்செய்தியாய் வாழ அழைப்பு

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பாலை நிலத்தில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு, சோதனைகளை வென்ற பின்பு இயேசு கலிலியோவுக்கு வந்து நற்செய்திப் பறைசாற்றினார். காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனமாறி நற்செய்தியை நம்புங்கள் என்பது ஆண்டவர் இயேசுவின்  அறைகூவல்.

இறையாட்சி, நற்செய்தி என்பது -எங்கோ, யாருக்கோ அந்த மாறாக நம்மில் நிலை பெற வேண்டியது. இறைவன், படைப்புகள் வழி, மகன் இயேசு வழி, நற்செய்தி வழியாக, அருள் அடையாளங்கள் வழியாக என்றும் நமக்கு அழைப்பு கொடுக்கிறார். இறையரசு நம்மிடையே குடிகொண்டுள்ளது. எனவே மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபட்டு நற்செய்தியாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.

இறைவனின் அளப்பரிய அன்பை நாம் ஏற்றுக் கொண்டால் அவவிறைவனை பிறர்தோழமையில், பிறரன்பில், நீதி நிலைநாட்டுவதன் வழி வெளிப்பட வேண்டும். அது பிறருக்கு நற்செய்தியாய் அமையும்.

இறையாட்சியின் பிள்ளைகள் நாம், நான், எனது என்ற சுயநலம் தவிர்த்து, நாம் கடவுளின் அன்பு பிள்ளைகள் என்ற உணர்வோடு, அன்பு, சமாதானம், உறவு வாழ்வுக்குள் பயணப்படும் போது பிறருக்கு நற்செய்தியாய் புலப்படும்.

திபா 119:11 "உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்", என்ற தாவீதின் வரிகளை, உள்வாங்கி, தீமையை விலக்கி நன்மைகளால் அணி செய்யும் போது நற்செய்தியாய் அமைகின்றோம்.

🟡மனித நேய செயல்களால் நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை உலகிற்கு உணர்த்தும் போது அது மற்றவர்களுக்கு நல்ல செய்தியாய் அமையும்.

🔴நம்மிடம் உள்ள ஆணவம், அகங்காரம், வரட்டு கெளரவம் எல்லாவற்றையும் களைந்து நாம் சகோதரர் என்ற உணர்வு உயிர் தரும் போது நற்செய்திக்குச் சான்று பார்க்கின்றோம்.

🟣தேவையற்ற வன்மங்களை களைந்து உறவுக்கு உயிரூட்டும் போது அது நல்ல நற்செய்தியாய் அமையும்.

 🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment