Saturday, February 10, 2024

பொதுக்காலம் 6- ம் ஞாயிறு மறையுரை -11.02.2024.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 6 -ம் ஞாயிறு

11.02.2024

லேவி 13 : 1 - 2, 44 - 45,  

1 கொரி  10 : 31 - 11 : 1, 

மாற்கு 1: 40  - 40.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பிக்கை, முயற்சி - வாழ்வு தரும்

🔵இயேசு செய்த புதுமைகளில் பெரும்பாலானவை நோய்களை குணப்படுத்தியதாக அமைந்திருந்தது.

🟡நம்பியவர்களை நலப்படுத்தி (உடல் + உள்ளம்) நலமுடனும், வளமுடன் வாழ வழி செய்தார்.

🟢இந்த வழிபாடு முதல் மற்று நற்செய்தி வாசகங்கள் தொழுநோய் பற்றியும், அது பாதித்தவர்களின் வாழ்வு முறைகளையும், குணமடைந்தால் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்துகிறது.

🔴நற்செய்தியில் நலம் பெற விரும்பும் ஒரு யூதன், தான் நலம் பெற்று மீண்டும் முழு மனிதனாக வாழ ஆசைப்படும் அவளின் உள்ள ஏக்கம் புலப்படுகிறது.

🟣எனவேதான் ஆண்டவர் இயேசுவிடம் அவன் வேண்டும் போது மாற்கு 1:40 "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகிறான்.

🔵இயேசு வாழ்வு தருவார் என்று நம்பினான், துணிந்து முன்னேறி வந்தான், தன் மன இயக்கத்தை வெளிப்படுத்தினான் வாழ்வு பெற்றான். 

நிகழ்வு (சமூக ஊடகச் செய்தி)

1965 - ஆம் ஆண்டு 8 வயது நிரம்பிய பிரேமா என்ற குழந்தை "டீ" போடும்போது ஸ்டவ் வெடித்து உடல் முழுவதும் வெந்து, காயம் ஏற்பட்டது. மூக்கு, உதடு, கழுத்து எல்லாம் ஒன்றாகி ஒரு இறைச்சி துண்டு போல் அவளுடைய உடல் காணப்பட்டது. அவளை இனி காப்பாற்ற இயலாது, அவள் இனி பிழைக்க மாட்டாள் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவருக்கு மருத்துவம் செய்த மருத்துவர்களின் அலட்சியத்தால், அவளின் மூக்கு, உதடு, கழுத்து, நெஞ்சு வரை சுருங்கி போனது. இவ்வேளை பிரேமாவின் தாய் தந்தை அவளை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அவளின் கழுத்து வழியாக ஆக்சிஜன் ட்யூப் போட இரண்டு நாள் முயன்றும் முடியாமல் போனது. குடும்பத்தாருக்கு இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. பிரேமாவின் தாய் மருத்துவனில் இருக்கும் சிற்றாலயத்தில் இருந்து இவ்வாறு செபித்தாள். "ஆண்டவரே என் மகளை உயிருடன் நீர் தந்தால் அவளை நான் படிக்க வைத்து மருத்துவராக்கி, இந்த மருத்துவமனையில் சேவை செய்ய வைப்பேன்" என்று, நான்காவது நாள் ஆக்சிஜன் போட முயன்ற போது வெற்றி கிடைத்தது. 12 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் அவள் கண் திறந்த போது, அவளின் தாய் கண்ணீரோடு சொன்னாள், நீ படித்து ஒரு மருத்துவர் ஆகணும் என்று. மூன்று வருட மருத்துவமனை வாழ்வு 58 அறுவை சிகிச்சைகள் முடிந்து விட்டிற்க்கு வந்தார்.

பெற்றோர் பள்ளிக்கூடம் அனுப்ப முயன்றபோது அவளின் உறவினர்கள் கூட, ஓடிக்கொள்ளுங்கள், பிணம் நடந்து வருகிறது என்று சொல்லி ஓடி மறைந்தனர். பிரேமா தன் முகத்தைப் பார்க்காமல் இருக்க, அவளின் தந்தை முகம் பார்க்கும் எல்லா கண்ணாடிகளையும் வீட்டில் இருந்து எடுத்து மாற்றினார். அழுது, அழுது நாட்கள் சென்றது. தாய் மீண்டும் சொன்னாள், நீ பள்ளிக்கூடம் போகவில்லை எனில் பின்னைய நாளில் வீடுகளில் பாத்திரம் கழுவிதான் வாழ வேண்டி இருக்கும். மாறாக படித்தால் மருத்துவராகிய ஏழைகளுக்கு உதவலாம் என்ற தாயின் வார்த்தை ஆழமாய் பதிய, உள்ளத்தில் உறுதி பெற்று, தன் சகோதரன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றாள். MBBS, MD முடித்தாள். தனக்கு முகத்தில் மூக்கும், உதடும் சரி செய்ய 58 அறுவை சிகிச்சை செய்த டாக்டர். ஜோசப்பிடம் உதவி மருத்துவராக சேர்ந்து, "பிளாஸ்டின் சர்ஜன்" ஆகப் பணியாற்றி, பின்னர் துறை தலைவரானார். உலகம் முழுவதும் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பயிற்சி வழங்கினார். 1998 இல் அமெரிக்க ஐக்கிய அரசு 14 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசு வழங்கி சிறப்பு செய்தது. அந்தத் தொகையை வைத்து பிரேமா தன் சகோதரியுடன் இணைந்து "அக்னி ரட்சை" என்ற அமைப்பைத் தொடங்கி 25000 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறுவாழ்வு வழங்கியுள்ளாள். இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கியதால் இந்த சாதனைப் பெண்ணை உலகம் அறிந்தது.

வலிகளும், ரணங்களும் நிறைந்த உலகை நம்பி முயன்று தானும் வாழ்ந்து பல்லாயிரம் மக்களை வாழவைத்த ஒரு சாதனைப் பெண்ணின் வரலாற்றுப் பதிவு இது.

இந்திய வழிபாட்டின் முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் தொழுநோயாளியின் மனக்காயங்கள், சமூகம் அவர்களை நடத்திய விதம், வாழ்வுக்காக ஏங்கும் அவர்களின் உள்ளங்கள், அதனால் வாழ்வு தரும் பரிவும், இரக்கமும் மன்னிக்கும் தாராள குணமும் உள்ள இயேசு மீது கொண்ட ஆழமான நம்பிக்கை, அதனால் பெற்ற நலன்களை எடுத்தியம்புகிறது.

தொழுநோயாளரும், சமூகப்பார்வையும்

பழைய ஏற்பாடு மற்றும் இயேசு வாழ்ந்த காலத்தில் தொழுநோய் தொற்று நோயாக, குணப்படுத்த இயலாத ஒரு நோயாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த எண்ணம் மாற்றப்பட்டாலும், முழுமையாக என்னும் மாறவில்லை.

அன்று தொழுநோய் தீட்டு நோயாகப் பார்க்கப்பட்டது. நோயாளர்கள் தங்களை தலைமை குருக்களிடம் காட்டி அவர்கள் இது பெருந்தொற்று (தொழுநோய்) என்று அறிவிப்பாளர்களானால் குடும்பங்களில் இருந்து விலக்கப்படுவர்.

அதோடு வாழும் சமூகமும் அவர்களைப் புறக்கணிக்கும் இணைச் சட்டம் 24:8 "தொழுநோய் குறித்து எச்சரிக்கையாய் இரு லேவியக் குருக்கள் உனக்கு கற்பிப்பது போல் அனைத்தையும் செய்வதில் மிக்ககவனமாயிரு" என்று எச்சரிக்கை விடுக்கிறது.

தொழுநோய் பாவத்தின் சம்பளம், கடவுளின் தண்டனை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

தொழுநோய் உள்ளவர்கள் சீழ்வடியும் தங்கள் உடலை கந்தைத் துணியால் கட்டி, கையில் மணியுடன் தீட்டு, தீட்டு என்று உரக்கச் சொல்லி தங்களை அறிமுகப்படுத்துவர்.

எனவே தொழில் நோயாளர்கள் உடல் காயங்களை விட, உள்ளக்காயங்களால், குற்ற உணர்வுகளால், தனிமையினால் உள்ளம் உடைந்து போய் வாழ்ந்தார்கள். அவர்களின் குற்ற உணர்வு அவர்களின் ஆன்மாவை அணு அணுவாய் அழித்தது. இத்தகைய உணர்வு நிலைகளோடு நடைபிணங்களாக உறவற்ற ஒரு வாழ்வு வாழ்ந்தனர்.

தொழுநோயாளனின் நம்பிக்கை

ஆயரில்லா ஆடுகள் மேல் இரக்கம் கொள்ளும், நோய்களைக் குணமாக்கி வாழ வைக்கும், எங்கும் நன்மை செய்யும் மீட்பா் வருகிறார் என்பதை அறிந்த தொழுநோயாளர் வாழ்வு பெற தாகம் கொண்டு இயேசுவைத் தேடி வந்தான். அவன் இயேசுவிடம், உடல், உள்ளம், ஆன்மா ஒருங்கிணைந்து, மனதுருகி வேண்டினான்.

மாற்கு 1:40 "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்" இது அவனது வாழ்வுக்கான ஏக்கத்தை நம்பிக்கையுடனும், தாழ்ச்சியுடனும் எடுத்துரைத்தான்.

மத்தேயு 6:8 "நீங்கள் கேட்க முன்னரே உங்கள் வலியை அறிந்திருந்தார்" எனவே அவர் மீது மனது இறங்கி பாிவு கொண்டு அவனைத் தொட்டு, தன் விருப்பை நலமாய் அருளினார். மாற்கு 1:41 "நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக என்றார்" மாற்கு 1:42 "உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க அவர் நலம் அடைந்தார்" இவ்வாறு வாழ்வு வழங்கிய இரு காரியங்களை வலியுறுத்தினார்.

1. நான் நலம் கொடுத்தேன் என்று யாருக்கும் சொல்ல வேண்டாம்.

2. குருவிடம் காட்டி. நீர் நலமடைந்துள்ளீர் என்பதை அவர் உறுதி செய்தபின், மோசே நியமப்படி ஆலயத்தில் காணிக்கை செலுத்தி பின் சமூகத்தோடு வாழ் என்றார்.

ஆனால் அவர் எதைச் செய்ய வேண்டாம் என்றாரோ அதை உள்ள உவகையால், வாழ்வு பெற்ற மகிழ்வால், உள்ளத்தில் பொங்கிய நன்றி உணர்வால் உந்தப்பட்டு, இயேசுவைக் குறித்துச் சான்று சொன்னார்.

மாற்கு 1:45 "அவர் புறப்பட்டுச் சென்று இந்த செய்தி எங்கும் அறிவித்து பரப்பி வந்தார்"  

இவர் நலமடைந்ததை, இவருடைய அனுபவசாட்சியைக் கண்ட, கேட்ட மக்கள் தாங்கள் வாழ்வு பெற இயேசுவை சூழ்ந்ததைத் திருமறைவழி அடைகின்றோம்.

தொழுநோயாளியின் நம்பிக்கை, அவரின் முயற்சி, அவருக்கு வாழ்வு வழங்கியது இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்துவதோடு, நம் விசுவாச வாழ்வுக்கு ஒரு சவாலாகவும் அமைகிறது.

யாக்கோபு 2:26 "உயிர் இல்லாத உடல் போல செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே" என்பதை மனதில் தாங்கி, நம் விசுவாசத்தை சற்று உரசிப் பார்ப்போம்.

ஒருவேளை இன்று தொழுநோயாளர்கள் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலத்தின் சக்கரத்தில் சிக்கி சமூக குற்றத்திற்குள்ளாகி, சிறையிலிருக்கும் நபர்களை அவர்களின் குடும்பங்கள் மீது நம் எண்ணங்கள் என்னவாக இருக்கிறது. பரிவும், இரக்கமும் உள்ள ஆண்டவரின் பிள்ளைகள் நான் அவர்களை சகோதர அன்பினால் தாங்குகிறோமா? 

போரினால், தீவிரவாதத்தால் புலம்பெயர்ந்த மக்களிடம் நாம் காட்டும் கரிசனை என்ன?

சாதியினால் மக்களை புறந்தள்ளும், ஒதுக்கும் மனநிலை, நோயாளிகளையும் புறந்தள்ளிய யூத சமூகத்தின் வல்லாதிக்க மனநிலை நம்மிடையும் நிலை பெற்றிருப்பதை சமூகத்திற்கு உணர்த்துகிறது.

யாக்கோபு 2:17 "நம்பிக்கை செயல் வடிவம் வராவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” என்ற புனித யாக்கோபின் வார்த்தையை மனதில் நடத்தி நாம் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை செய்லாக்கத்திற்கு உட்படுத்தும் போதும், நாம் வாழ்வோம், சமூகம் வாழும், திரு அவை வளரும்.

ஆண்டவர் இயேசு அழகாய்ச் சொன்னார்.

மத் 25:36 "நான் பசியாய் இருந்தேன் நீங்கள் உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தணித்தீர்கள், அந்நியனாக இருந்தேன் என்னை ஏற்றுக் கொண்டீர்கள், நான் ஆடையின்றி இருந்தேன் நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள், நோயுற்றிருந்தேன் என்னை கவனித்துக் கொண்டீர்கள், சிறையில் இருந்தேன் என்னைத் தேடிவந்தீர்கள்" எந்த இறை வார்த்தையில் ஒரு நம்பிக்கையாளரின் பிறநல பண்பும், பணியும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு நாம் செய்யும் உதவி,

மத் 25:40 "மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்ற ஆண்டவரின் அருள்வாக்கை நாம் நம்பிக்கையாலும்,  செயல்களாலும் உறுதிப்படுத்தி வாழ்வு வழங்குவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment