Friday, March 22, 2024

குருத்து ஞாயிறு மறையுரை -24.03.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

குருத்து ஞாயிறு

24.03.2024

எசாயா 50 : 4 - 7, 

பிலிப்பியர் 2 : 6 - 11, 

மாற்கு 14: 1 - 15 : 47.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இலட்சிய மிகு எருசலேம் பயணம்

♦️இயேசுவின் எருசலேம் பயணம் ஒரு எழுச்சிப்பயணம்

♦️இலக்கும், இலட்சிய பிடிப்பும் நிறைந்த இறையாட்சிப் பயணம்.

♦️தன்னை இழக்க இதய உபப்புடன் பயணித்தப் பயணம்.

♦️கடுமையான சட்டங்கள், கொடிய தண்டனைகள், சுமத்தற்கரிய வரிகள் இவற்றால் நொறுக்கப்பட்ட மக்கள், இயேசுவை மீட்பராக ஏற்று ஓசன்னா பாடி அழைத்துச் சென்ற பயணம்.

♦️ஓசன்னா என்றால் "எங்களை விடுவித்தருளும்" எங்களைக் காப்பாற்ற வாருமே என்பதாகும்.

♦️வறியவர், நலிந்தவர்களுக்காய் நிலைப்பாடு எடுத்து, அவர்களுக்காக உழைக்க துணிந்தால் தன்னை பலியாக்க வேண்டும் என்பதை இயேசு நன்கறிவார்.

♦️எனினும் இயேசு பின்வாங்கவில்லை இலட்சியப்பிடிப்போடு, இலக்கை அடைய துணிந்து பயணமானார்.

♦️உரோமையரின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து நிலையான அரசை நிறுவுவார், அடிமை வாழ்விலிருந்து விடுதலையும், வெற்றியும் தருவார் என்று நம்பியிருந்த யூதர்கள், நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பார், அதற்குப் பலியாக எருசலேம் பயணப்பட்டார் என்பதை அறியாதிருந்தனர்.

♦️ஊரறிந்த கள்ளனோடு (பரபாவோடு) தன்னை ஒப்புமைப்படுத்தி, தன்னை இழிவுப்படுத்திக் கொல்வார்கள் என்பதை தெரிந்தும் இலட்சியத் துடிப்போடு, எழுச்சியோடு பயணமானார் இயேசு எருசலேம் நோக்கி.

♦️மிகத்திறந்த மனநிலையோடு, முள்முடி தாங்கி, கைகால்கள் ஆணிகளால் துளைக்கப்பட, ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்டு கழுமரத்தில் ஏற்றுவார்கள் என்பது தெரிந்தும் பாடுகளை ஏற்க எருசலேம் பயணமாகிறார் இயேசு.

நிகழ்வு

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் சண்டிகாரில் பல்ஜிந்தர்சிங் ரியார் மற்றும் டேக்தீர்குர் ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் ருக்மணி ரியார். சிறுவயதிலேயே IAS கனவைக் கருக்கொண்டவர். தன்னுடைய பள்ளி நாட்களில் ஆறாம் வகுப்பில் தோல்வியடைந்தார். இது ருக்மணி ரியாரின் மனதை சற்று அசைத்தது, சற்று பாதிப்படைந்தாள். ஆயினும் இலக்கை முன்னிறுத்தி, வருந்தி கற்றாள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் அமிர்தரசிஸ் உள்ள  குருநானக்தேவ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள டாடா உயர்கல்வி நிறுவனத்திலும் கற்றார். பின் IAS தேர்வுக்கான தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டு வீட்டிலிருந்தே தயாரித்தாள்.

2011-ஆம் ஆண்டு IAS தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றிப் பெற்றார். இலட்சிய மிகு பயணம், வெற்றியை வழங்கும். இலட்சிய மிகு பயணம் சாதனைகளைப் படைக்கும். இலக்கை அடைவதற்கு எத்த தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து வரலாறு படைக்கலாம் என்பதைத் தான் இன்றைய விழா நமக்கு உணர்த்தி நிற்கிறது.

🟣இயேசு தன் பணிக்காலத்தில், கலிலேயா, சமாரியா, கப்பர்நாகூம் , எருசலேம் பகுதிகளில் அதிகமாக சுற்றி வந்தார்.

🔴இயேசு கலிலேயாவில் பணி செய்த போது, அந்தப் பயணத்தில் மகிழ்வு, உற்சாகம், ஏற்றுக்கொள்ளல், புதுமைகள் நிறைந்ததாய் இருந்தது.

🔵இயேசுவின் பணிக்காலத்தில் ஒரு நிறைவான பணித்தளமாக கலிலேயா அமைந்திருந்தது.

🟡இயேசுவின் எருசலேம் பயணம், அவ்வளவு இனிமையானதாக இல்லை, புறக்கணிப்புகள், சதித்திட்டங்கள், அவமதிப்புகள் நிறைந்ததாய் அமைந்தது.

🟢எருசலேம் பயணம் - பாடுகளின் பாதையாய், துன்பம் நிறைந்ததாய் அமைந்திருந்தது.

யோவான் 5 - ஆம் அதிகாரத்தில் யூதர்களின் விழாவிற்காக எருசலேம் செல்கிறார். நோயுற்றவரை நடக்கச் செய்தார். இதனைப் பொறுக்காத பரிசேயர்

யோவான் 5:16 "ஓய்வு நாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரை துன்புறுத்தினார்கள்" அதுபோல

🟣கூடாரத் திருவிழாவிற்காக இயேசு போகிறார். அங்கு அவர் போதிக்கிறார். அவருடையப் போதனையை ஏற்காத பரிசேயர்.

யோவான் 7:30 "அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை" என்று பார்க்கின்றோம்.

🔴எருசலேமில் யூதர்களிடம், தந்தை கடவுளுக்கும் தனக்குமான உறவைக் குறித்துப் பேசுகிறார். ஏற்க மனம் இல்லா பரிசேயர்.

யோவான் 8:59 "அவர் மேல் கல்லறிய கற்களை எடுத்தார்கள் ஆனால் இயேசு மறைவாக, நழுவி கோவிலிலிருந்து வெளியேறினார்” 

இத்தகைய புறக்கணிப்பு, வேதனை, அவமானம் நிறைந்த பயணத்தின் உச்சம் தான், இந்த இறுதி எருசலேம் பயணம்.

🔵இந்த எருசலேம் பயணம் ஒரு இலட்சியம் நிறைந்த வெற்றி விழா.

இன்றைய விழாவின் பின்புலம் என்ன?

குருத்து வெற்றியினை உணர்த்தும் ஓர் அடையாளம். கி.மு. 164 - ஆம் ஆண்டு யூதா மக்களே, எருசலேமை பகைவர்களிடமிருந்து, விடுவித்து, தூய்மைப்படுத்திய நேரத்தில், இஸ்ரயேல் மக்கள் குருத்தோலைகளை ஏந்தி வெற்றிப் பவனி நடத்தினார்கள், நன்றி செலுத்தினார்கள்.

2 மக் 10:7 "எனவே தழைகளால் அழகு செய்யப்பட்ட கழிகளையும், மரக்கிளைகளையும், குருத்தோலைகளையும் ஏந்தியவர்களாய் தமது திருவிடத்தை வெற்றிகரமாக தூய்மைப்படுத்தும் படி செய்த கடவுளுக்குப் புகழ்பாக்கள் பாடி நன்றி செலுத்தினார்கள்"

கி.மு. 142 - ஆம் ஆண்டில் சீமோன் தலைமையில் பகைவரை அழித்து எருசலேமுக்கு விடுதலை வழங்கின போது

1 மக் 13:51 "புகழ்பாக்களையும், நன்றிப்பாக்களையும் பாடிக்கொண்டும், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும் யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகள் மீட்பிக்கொண்டும், கோட்டைக்குள் யூதர்கள் நுழைந்தார்கள்"

இந்த நீண்ட வரலாற்றுப் பின்புலத்தை யூதர்கள் மனதில் வைத்திருந்தனர். இயேசுவின் சமகாலத்தில் இஸ்ரேயலர் உரோமையருக்கு அடிமைகளாய் இருந்ததால் யூதா மக்கபேயர், சீமோன் போல இயேசு விடுதலை பெற்றுத் தருவார் என்ற உணர்வோடு விடுதலையின், புதுவாழ்வின், வெற்றி ஆர்ப்பரிப்பின் விழாவாகக் கொண்டாடினர், பாடி மகிழ்ந்தனர்.

🟡 "ஓசன்னா" எந்த எபிரேயச் சொல்லுக்கு "விடுதலை" "வெற்றியை" தாரும் என்று பொருள்படும்.

திபா 118:25 "ஆண்டவரே மீட்டருளும் ஆண்டவரே வெற்றி தாரும்" என்ற தாவீதின் வரிகள் இஸ்ரயேல் மக்கள் விடுதலைக்காக, வெற்றிக்காக ஏங்கினர் என்பது புலனாகிறது.

♦️ஆண்டவர் இயேசு அமைதியின் அரசராக எளிமையின் மன்னராக கழுதை மேல் பவனி வந்தார்.

♦️நாட்டில் அமைதியான காலங்களில் அரசர்கள் மக்களை சந்திக்க நகருக்கு வரும் போது கழுதையில் வந்தார்கள்.

♦️இயேசுவும் கோவேறு கழுதையில் பெத்தானியாவிலிருந்து எருசலேம் நகருக்கு வந்ததை இன்று நாம் நினைவு கூர்கின்றோம். இதன் மூலம் கிறிஸ்து அன்பின், அமைதியின், நீதியின் அரசர் என பொருள் கொள்ளலாம்.

யோ 12:14 "இயேசு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறி அமர்ந்தார்" இந்த நிகழ்வை இறைவாக்கினர் செக்கரியா முன் குறித்துள்ளார்.

செக்கரியா 9:9 "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு. மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ உன் அரசர் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றி வேந்தர், எளிமையுள்ளவர், கழுதையின் மேல் கழுதை குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகின்றார்" என்று இறைவாக்குரைத்தார்.

கழுதை மீது வரும் இந்த இலட்சிய வேந்தர் நீதியுள்ளவராக, எளிமை மிக்கவராக, அமைதி கொண்டவராக உலகம் முழுமையும் ஆட்சி புரிபவராக வந்தார்.

இந்த அரசரின் வருகை எதற்கென்றால்

எசேக்கியேல் 34:16 "காணாமல் போனதைத் தேடுவேன், அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன், காயப்பட்டவற்றிற்க்கு கட்டுப் போடுவேன், நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்"

🟣இத்தகைய கரிசனை, அன்பு, இரக்கமுள்ள அரசின் அன்பு பிள்ளைகள் நாம்.

தாழ்ச்சி, கனிவு, பரிவு, இரக்கம், அன்பு, எளிமை, தூய்மை ஆகிய பண்புகளை வாழ்வாக்க வேண்டும்.

குருத்து மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் அமைந்தது போல, நம் வாழ்வு பிறருக்கு மகிழ்வைக் கொடுப்பதாய் அமைய வேண்டும். (கரிசனை உள்ள பேச்சு, உடனிருப்பு, கனிவான செயல்கள் இவற்றால்)

🔵குருத்து - புதிய உறவை வெளிப்படுத்துவது, புதிய உறவை வலுப்படுத்துவது, குருத்தோலை விழா ஒரு உறவின் ஒன்றிப்பு விழா.

🟡 நாம், உறவோடும், உள அன்போடும், நடந்து கொள்கிறோமா?

🟢நாம் முறிந்த உறவுகளை சரி செய்கின்றோமா?

புதிய குருத்து -

புதிய எதிர்பார்ப்பு

புதிய மாற்றத்திற்கான முன்னெடுப்பு

புதிய வாழ்வின் முன்னடையாளம்

♦️இதை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்?

♦️கடவுளுக்கும் - மனிதருக்குமான உறவு பரிமாற்றம்

♦️உடன் வாழ்வோரில் கடவுளைக் காண, உடன் வாழ்வோரை மதிக்க உணர்த்தும் விழா.

சிந்திப்போம்!

செயலாக்கம் பெறுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment