Friday, March 1, 2024

தவக்காலம் 3- ம் ஞாயிறு மறையுரை -03.03.2024.

👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தவக்காலம் 3 -ம் ஞாயிறு

03.03.2024

விடுதலை பயணம் 20 : 1 - 17, 

1கொரிந்தியர் 1 : 22 - 25, 

யோவான் 2: 13  - 25.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

தூய அகமே ஆலயம்

🔵இன்றைய வழிபாடு அகத்தூய்மையே ஆலயத்தூய்மை என்பதை மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

🟣மனித வாழ்வை பண்படுத்தும் பத்து கற்பனைகளை வழங்கி நாம், இறைவனையும், இறைவனுக்குரிய ஓய்வு நாளையும் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்றும்,

🟢பிறரை, இந்த சமூகத்தை எத்தகைய மாண்போடும் புனிதத்தோடும் பேண வேண்டும் என்பதையும் முதல் வாசகம் அறிவுறுத்துகிறது.

🟡ஆலயம் என்பது உங்கள் அதிகாரங்களையும், சட்டங்களையும் பங்கிடும் தளங்கள் அல்ல.

🔴ஆலயம் என்பது உங்கள் ஆடம்பரத்தினை, வெளிப்படுத்தும் கூடாரங்கள் அல்ல. மாறாக ஆண்டவரே ஆவியிலும், உண்மையிலும் வழிபடும் இடம் என்பதையும்,

🔵ஆலயம் உறவோடு வாழும் சமூகத்தில் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தும் ஒன்றிப்பின் தளம், என்பதனையும் இன்றைய நற்செய்தி உணர்த்துகிறது.

🟣ஆலயங்கள் இறைமையை, மனிதத்தை, உறவை, ஆன்மீகத்தை தொலைத்து, பொருளாதாரத்தையும், அதிகாரங்களையும் மையப்படுத்தும் போது, அது கள்வர் குகையாய் மாறி போகிறது.

🟢சட்டங்களை, சடங்குகளை முன்னிலைப்படுத்தி, கடவுளின் சாயலாக, கடவுளின் பாவனையாகப் படைக்கப்பட்ட மனிதர் மிதிபட்ட போது, ஆண்டவர் சாட்டையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 

நிகழ்வு

ஏழை பக்தன் ஒருவன் நடந்து ஊர் ஊராகச் சென்று ஆலயங்களை தரிசித்து, ஆண்டவரை வழிபட்டு மன மகிழ்வு அடைந்தான். ஒருநாள் மதியம் நடந்து, களைத்து சோர்ந்து போன பக்தன், அருகில் இருந்த புத்தஹரை கண்டு உள்ளே ச் சென்றான். சோர்வினால் கண்ணயர்ந்து கால்களை நீட்டி தூங்கிப்போனான். சற்று நேரத்தில் அந்த புத்தஹரின் பொறுப்பாளரும், குருவுமாய் இருந்தவர் வந்து, அந்த பக்தரை எழுப்பி, சினத்தோடு கேட்டார் இப்படியா ஆண்டவரின் அருள் பிரசன்னத்தை உணர்த்தும் பீடத்தை நோக்கி கால்களை நீட்டி தூங்குவது. உனக்கு அறிவே இல்லையா வெளியே போ என்று கத்தினார்.

பக்தர் எழுந்து இருந்து, அந்தக்  குருவைப் பார்த்து ஐயா! என்னை மன்னியுங்கள் உடல் சோர்வினால் தூங்கினேன். ஆனால் ஒரு வழிகாட்டுங்கள்.

இறைவன் இல்லா இடமும், திசையும் எனக்குக் காட்டுங்கள். நான் அங்கு படுத்து சற்று இளைப்பாறிச் செல்வேன் என்றார். அதோடு, ஆலயங்கள் மனிதனின் தேவைக்கு தானே, எனவே மானுட உறவோடும், மானுட மதிப்போடும், மானுடத் தோழமையோடும் நடந்து கொள்வோம் என்று சொல்லி கடந்து போனார்.

இன்றைய வழிபாடு கூட இதைத்தான் நமக்கு உணர்த்தி நிற்கிறது. ஆலயம், ஏழைகள், நலிந்தவர்கள் பால் அக்கறையும், மானுட நேயப் பேணலும் நிலைபெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு வியாபாரிகளை சாட்டையால் துரத்துகிறார்.

எருசலேம் ஆலயத்தின் சிறப்பு

🟢இஸ்ரயேல் (யூத) மக்களுக்கு எருசலே மாலியம் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், யூத மக்களின் அடையாளமாகவும் விளங்கியது.

🟣இந்த உலகில் கட்டப்பட்ட ஆலயங்களில் மிகவும் அழகு வாய்ந்ததும், கலைநயம் மிக்கதும், சிறந்த வேலைபாடுகள் நிறைந்ததாயும் அமைந்திருந்தது. எனவே தான் திருப்பாடல் இவ்வாறு அதன் பெருமையை பேசுகிறது.


திபா 84:1 "படைகளின் ஆண்டவர் உமது உறைவிடம் எத்துணை அருமையானது" என்று

🔴இந்த எருசலேம் ஆலயத்தில்தான் உடன்படிக்கையின் பேழை வைக்கப்பட்டிருந்தது. எனவே எருசலேம் ஆலயம் கடவுளின் பிரசன்னத்தை உணர்த்தியது. இதை அனுபவமாக்கிய தாவீது

திபா 84:10 "வேற்று இடங்களில் வாழும் ஆயுத நாள்களிலும் உம் கோயில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது" என்று மனதுருகினார்.

🔵குழந்தை இயேசுவை , அருள் நிறைந்த மரியாவும், நேர்மையாளர் சூசையும் காணிக்கையாக அர்ப்பணம் செய்தது இந்த ஆலயத்தில் தான்.

லூக்கா 2:22 "மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எரிசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்"

🟢இங்கு ஆண்டவர் இயேசு, தந்தை கடவுளை, "அப்பா" என உரிமையோடு அழைத்தார்.

🟣கல்வாரியில் ஆண்டவர் இயேசு, தந்தை கடவுளின் கையில், தன் உயிரை ஒப்புக்கொடுத்த நேரம் தூயகத்தையும், திருத்துயகத்தையும் பிரித்து நின்ற கோயிலின் திரை கிழிந்ததும் இந்த ஆலயத்தில் தான்.

மத்தேயு 27:31 "அதே நேரத்தில் திருக்கோயிலின் திரை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக்கிழிந்தது" இதன் வழியாக விண்ணையும் மண்ணையும் பிரித்த தடையை மாற்றினார் இறைமகன் இயேசு. இத்தனை சிறப்பு மிக்கது எருசலேம் ஆலயம்.

ஆண்டவர் ஏன் சாட்டை எடுத்தார்

ஆண்டவர் இயேசு பாஸ்கா விழா கொண்டாட எருசலேம் ஆலயத்திற்கு வருகிறார். அங்கே ஆடு, மாடு விற்கப்படுகிறது. நீதிக்குப்புறம்பான, மானுட மாண்பைச் சிதைக்கும் செயல்கள் நடைபெறுவதைக் கண்டு மனம் நொந்தார்.

என்ன அநீதி நடந்தது

(i) பெரிய குரு பணிநிலை பணத்திற்கு விற்கப்பட்டது. பெரிய குரு பணிநிலை, புனிதமாகபுனிதமாக, கடவுளின் கொடையாக கருதப்பட்டது. குலுக்கல் முறையில் அதைத் தெளிவு செய்தனர். ஆனால் இயேசு ஆலயத்திற்கு வந்த காலக்கட்டத்தில் வியாபாரத்தளமானது.

லூக்கா 1:9 "குருத்துவ பணி மரபுக்கேற்ப ஆண்டவரின் திருக்கோயிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யார் என்று அறிய சீட்டுக்குலுக்கி போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது"  இந்த செக்கரியாவைக் குறித்து திருமறை, கடவுள் பார்வையில் நேர்மையாளராய் விளங்கினார். குருத்துவ பணிக்கு நேர்மையாளர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பணத்திற்கு பரிசேயர், சதுசேயர் இணைந்து தலைமைக்குருவை நியமித்தது அநீதி.

(ii) அன்றே நாளில் பழக்கத்தில் இல்லாத "செக்கல்" நாணயம் தான் காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ஆனால் வழக்கத்தில் திராக்மா "தெனாரியம்" என்ற நானே வழிமுறை தான் இருந்தது. வரிச்சென்த்தும் போது திராக்மா "தெனாரியம்" ஆகிய நாணயங்களை செக்கலாக மாற்ற வேண்டும் அதற்கு கூலியாக ஆறில் ஒரு பங்கு நாணய மாற்று வரியாக செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ரூபாய் 100-க்கு 16.16 காசு மாற்றுவரியாக கட்ட வேண்டும்.

(iii) ஏழைகளின் காணிக்கை தரமற்றது என்று நிராகரித்தனர் காரணம் பரிசேயர், குருக்கள் இணைந்து எருசலேம் ஆலயத்தில் கடைகள் வைத்திருந்தனர். அந்த கடைகளில் விற்கப்படும் காணிக்கை பொருட்கள் தாம் காணிக்கை செலுத்த தரமானது, தூயது என்று நியாயம் கற்பித்து அதிக விலைக்கு விற்றார்கள். அங்கிருந்து வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள் (எகா. புறா, ஆடு, மாடு)

(iv) காணிக்கை என்ற பெயரில் மக்களிடமிருந்து பணம் உறிஞ்சப்பட்டது. பல்வேறு தேவைகளை குறிப்பிட்டு 13 காணிக்கைப் பெட்டிகள் எருசலேம் ஆலயத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு கட்டாய காணிக்கை வசூலிக்கப்பட்டது. மக்கள் நம்பிக்கையின் பெயரால் ஏமாற்றப்பட்டார்கள்.

(V)எருசலேம் ஆலயத்தில் பல இடப்பிரிவு நிலை இருந்தது.

திருத்தூயகம் - தலைமைக்கு ஒரு மட்டும் செல்வார் -இன்று நற்கருணை பேழையை குறைக்கும்.

தூயகம் - மற்ற குருக்கள் நிற்பர் - நம் பலிப்பீடம்.

பிரகாரம் - உதவி புரியும் லேவியர்கள் நிற்பர் - இன்றைய பீடச்சிறார் நிற்கும் பகுதி.

மையப் பகுதி - பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், யூதர்கள் நிற்கும் பகுதி - இன்று இறைமக்கள் நிற்கும் பகுதி.

வெளிப்பகுதி -அங்கு புறவினத்தார் நிற்பர் - ஆலயம் சுற்றிலும், வராண்டா போன்ற இடம்

இந்த வெளிப் பகுதியில் தான் புறஇனத்தார் நின்று வழிபடுவர் இந்த இடத்தை தான், ஆடு, மாடு, விற்க நாணய மாற்ற பயன்படுத்தினர்.

அன்பு, அறம், இரக்கம், பரிவு, நீதி நிலைக்க வேண்டிய ஆலயம் இவ்வாறு திருடர் கூடாரமான போது ஆண்டவர் நீதியின் சூரியனாய் பொங்கி எழுந்தார்.

திபா 69:9 "உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது" என்ற திருப்பாடல் வரிகள் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயம் மீது கொண்ட பற்றை உணர்த்தியது.

ஆலயத்தின் தூய்மையைப் பேண வலியுறுத்தும் கடவுள் ஓய்வு நாளையும் தூய உள்ளத்தோடு, புனிதத்தோடு கொண்டாட அழைக்கிறார்.

விப 20:8 "ஓய்வு நாளைத் தூயதாகக் கடைபிடிப்பதில் கருத்தாய் இரு" என்றும்

விப 20:10 "ஏழாம் நாளே உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்" என்றும் ஓய்வு நாளை குறித்தும் தூயதாய் கடைபிடிப்பதன் தேவையையும் வழிபாடு உணர்த்துகிறது.

இன்று நாம்

🟣ஓய்வு நாளை (ஞாயிறு வழிபாட்டில்) புனிதமாய் சிறப்பு செய்கிறோமா?

🟢ஞாயிறு வழிபாடு உறவின் ஒன்றிப்பு என்பதை புரிந்திருக்கிறோமா?

🔵ஆலயம் - சுயப்புகழை பாடும் தளமாக மாற்றுகிறோமா? (என் குடும்பம் நான் செய்தேன்)

🔴ஆலயம் ஏழைகள், நலிந்தவர் நலனில் அக்கறை கொள்ளும் தளமாக அமைகிறதா?

🟡நம் இறையனுபவத்தைச் செயல் வடிவம் கொடுக்கும் தளமாக ஆலயம், வழிபாடு அமைகிறதா?

🟣அகத்தைத் தூய்மைப்படுத்தும் போது ஆலயமும் புனிதம் பெறும்.  

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment