Friday, March 29, 2024

ஆண்டவாின் உயிா்பு மறையுரை -31.03.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

ஆண்டவரின் உயிர்ப்பு

31.03.2024

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

உண்மைகள் உயிா்கட்டும்

🔴மனித வாழ்வில் கஷ்டங்கள், தோல்விகள், தடைகளைக் கண்டு சோர்ந்து போகக்கூடாது என்பதற்கு உயிர்ப்பு ஓர் உந்து சக்தி.

🟣சோதனைகளால் உளம் சோர்ந்து போகிறவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையின் ஒளிக்கீற்று.

🔵சாவதற்கு சாவு மணி அடித்து சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு இயேசு விசுவாச மூலைக்கல்

🟡கல்லறைகள் உயிர்க்கும், கல்லறைகள் காவியம் ஆகும் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஓர் அடிநாதமாய் அமைகிறது.

🟢உயிர்ப்பில் நம்பிக்கையும், ஆன்மீகமும் துளிர்விடுகிறது.

🔴உயிர்ப்பு சாவிலிருந்து புது வாழ்வுக்கு கடக்கிறோம் என்ற கடத்தல் (பாஸ்கா) அனுபவத்தை எடுத்துரைக்கிறது.

🟣உண்மைகள் ஒருபோதும் உறங்கி விடாது உயிா்க்கும் என்பதற்கு "வழியும் உண்மையும், வாழ்வும் நானே" என்பதற்கு இயேசுவே சான்று.

🔵உண்மைக்குச் சான்று பகர்வதே என் பணி என்ற இயேசு இருளிலிருந்து வெளிச்சப்புள்ளியாய் உதித்து உண்மையை உரக்கச் சொன்னார்.

🟡"எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள், உண்மை என்பதை தம் உயிர்ப்பின் வழி நிருபணமாக்கினார்.

நிகழ்வு (2024 மார்ச் - ஊடகச் செய்தி)

ஓரளவு வசதிப்படைத்தோர் பயிலும் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, உலகின் நடைமுறைகளை புரிய வைக்க முதியோர் இல்லம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். 6,7 மற்றும் 8 - ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகள் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த நூற்றுக்கு அதிகமான முதியவர்களை தனித்தனியாக சந்தித்தனர். ஒரு சிறுமி திடீர் என்று கதறி அழுதாள். ஒரு வயதானவரை இறுகக் கட்டி அணைத்தவாறு அழுதாள், எல்லாரும் அவளைச் சூழ்ந்து நின்று ஏன் என்று விசாரிக்க உண்மைப் புலப்பட்டது.

இக்குழந்தை அவள் பாட்டியிடம் மிகபாசமாக இருப்பார். பாட்டியும் மிக அன்புடன் இருப்பார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பாட்டியை வீட்டில் காணவில்லை. பெற்றோரிடம் விசாரித்தாள். அவர்கள், அவளிடம் பாட்டி உறவினர் வீட்டிற்குச் சென்று இருக்கிறார் என்றனா், அவளும் தினமும் தன் பெற்றோரிடம் பாட்டிக் குறித்து விசாரிப்பார். அவர்கள் ஒரே பதிலைத்தான் கூறினர். உறவினர் வீட்டில் இருக்கிறார் என்று சொல்லப்பட்ட பாட்டியைத்தான் அக்குழந்தை முதியோர் இல்லத்தில் பார்த்து உள்ளம் உடைந்து, உணர்வுகள் பொங்க கட்டித் தழுவி அழுது, அதிர்ந்து போனது. பாட்டியும் கண்ணீரோடு பேத்தியைத் தழுவி கண்ணீர் வடித்தார்.

🟢வயது சென்றால் வாழ்வுக்கு ஆகாது என்று ஒதுக்கி பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் மனிதரின் ஈனச்செயல் இது. பொய்யுரைகளால் உண்மையான பாசத்தையும், நேசத்தையும், அன்பையும் நீ அடைந்து விட முடியாது.

🟣பொய்களை புனைந்து உறவுகளை நீ புதைத்து விட முடியாது.

🔵பிள்ளைகளின் மனங்கள் மலட்டுத்தன்மை எய்தியதால் அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் மலிந்து கிடக்கிறது.

🟡பாசப்பிணைப்பை பொய்களால் புதைத்தாலும் உண்மை உறவுகள் ஒரு நாள் உயிர்க்கும், என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவு.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று, உண்மையாகிய கிறிஸ்து எத்தகைய விதங்களில் உயிர்ப்பார் என்பதைச் சிந்திப்பது நல்லது.

1. யோவான் 1:5 "அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன் மேல் வெற்றிக் கொள்ளவில்லை" மக்கள் சட்டங்கள், பாரம்பரியம், ஆணவம், வீண் ஆடம்பரம் என்ற இருளில் இருந்த போது, கடவுள் எளிமையும், தாழ்ச்சியும், பரிவும் நிறைந்தவராய் ஒளிர்ந்தார்.

யோவான் 8:12 "உலகின் ஒளி நானே" என்ற இயேசு காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் காணுமாறு இருள் நிறைந்த கல்லறையில் இருந்து பேரொளியாய் உதித்தார்.

2. யோவான் 10:10 "ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாய் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்ற நல்லாயன் இயேசு, வழி தவறியவற்றையும், காணாமல் போனவற்றையும், அலைந்து திரிந்தவற்றையும், காயப்பட்டவற்றையும், நலிந்தவற்றையும் நிறைவாழ்வு நோக்கி வழிநடத்த நல்லாயனாய் இயேசு உயிர்த்தார்.

3. யோவான் 11: 25 "உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே" என்றவர் மானுடக் குழந்தைகள் பாவ நோயில் புதையுண்டு, மானுடம் மாண்பை இழந்து நின்றபோது வாழ்வு தரும் ஒளியாகிய கிறிஸ்து மானுடக் குடும்பத்தை மீட்கும் இலட்சிய பிடிப்பால் இருளாகிய கல்லறையில் இருந்து உயிர்தெழுந்தார். ஆகவே நாம் வாழ்வடைந்தோம்.

🟢 ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில் உண்மையாகிய கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் பித்தலாட்டங்கள், புரையோடிய பொய் புரட்டுகள் - இவற்றை நாம் அடக்கம் செய்துவிட்டு உண்மைக்கு உயிருள்ள சாட்சிகளாய் மாற அழைக்கிறது.

🔴 தவறுகளை நியாயப்படுத்தி  நம்மை நீதிமான்களாக சித்தரிக்கும் பரிசேய தனங்களைப் புதைத்து, உண்மைக்கு சான்று பகரும் உயிருள்ள சாட்சிகளாய் உயிர்ப்போம்.

🟣 உண்மைக்கு எதிரான பொய் பிரச்சாரங்கள், உண்மைக்கு புறம்பான புரணிகள், இழிவான செயல்களை அடக்கம் செய்துவிட்டு உண்மையை நீதியை நிலைநாட்டுவோம்.

🔵முகத்தின் முன் நல்லது பேசி, பின்னர் பழித்துரைக்கும் பரிசேயர் வெளி வேடங்களில் இருந்து உயிர்ப்போம்.

🟡கடமையைச் செய்யாமல் சோம்பித் திரியும் பொறுப்பற்ற தனங்களிலிருந்து உயிர்ப்போம்.

🔴போதை, மதுவிற்கு அடிமையாகி, மனித மாண்பை இழந்து விலங்கினும் கடையராய் சுற்றித் திரியும் அவல நிலையில் இருந்து உயிர்ப்போம்.

🟢இந்த சமூகத்தில், அருகில் வாழும் மக்களுக்கு நன்மை செய்யும் திறமை, வாய்ப்பு இருந்தும் செய்யாமல் பாராமுகமாய் இருக்கும் பொறுப்பற்ற நிலையில் இருந்து உயிர்ப்போம்.

🟣நான் என்னும் ஆணவம், பொறாமை, இணைந்து பணியாற்ற முன்வராமை, கட்சி மனப்பான்மையை புதைத்து, நாம் எல்லாரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்ற உயரிய சிந்தனையோடு ஒன்றுபட்டு வாழ, உழைக்க கடவுளின் கரங்களாய் உயிர்ப்போம்.

🔵வயது முதிர்ந்தவர்களை மதியாமை, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமை, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமை போன்ற உணர்வற்ற நிலையில் இருந்து விடுபட்டு, இவர்களின் சாமகாவலன், சமாரியன் நான் என்ற இறையாட்சியின் விழுமியங்களை தாங்கியவர்களாய் வாழ புதிதாய் பிறப்பெடுப்போம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment