👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
தவக்காலம் 4 -ம் ஞாயிறு
10.03.2024
1குறிப்பேடு 36 : 14 - 16, 19 - 23,
எபேசியர் 2 : 4 - 10,
யோவான் 3: 14 - 21.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
இறையன்பை சுவைத்தலே - நிறைவாழ்வு
🟣இறையன்பிற்கு ஈடு இணை இல்லை, கடவுளின் அன்பை மதிப்பிட இயலாது, கடவுளின் பேரன்பை அளவிட முடியாது.
புலம்பல் 3:22 "ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை, அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை" என்ற இறைவாக்கினர் எரேமியாவின் கூற்று ஆண்டவரின் பேரன்பும், இரக்கமும் முடிவுறுதலும் இல்லை, தீர்ந்து போவதும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
🟡இந்த நிலையான பேரன்பாகிய இறைவனைச் சுவைத்தலே நிறைவாழ்வாகும்.
♦️அன்பு என்பது - வல்லமை, ஆக்கம், ஆற்றல், வாழ்வு
♦️அன்பு என்பது கடவுள் - "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (யோ 4:8)
♦️இந்த ஆண்டவராகிய கடவுளை சுவைத்தலே - நிறைவாழ்வு
♦️திபா 34:8 "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்" என்ற தாவீதின் வரிகள், நாம் இறைவனை, இறைவனின் பேரன்பை சுவைத்து மகிழ அழைப்பு விடுகிறது.
🟣இந்த உலகம் இன்னும் இயங்குகிறது என்றால், அதற்கு அச்சாணியாய் இருப்பது அன்புதான்.
🔵அன்பால் கசிந்துருகி, மக்களை மானுட நேயத்தோடு வழிநடத்தியவர்கள், கடவுளின் அன்பை இந்த உலகிற்கு வெளிச்சமிட்டவர்கள், மானுடத்தை அன்பால் வழி நடத்தியவர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
நிகழ்வு
ஒரு நாள் கர்மவீரர் காமராஜர் தன் வீட்டில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும், சிறுவனும் உள்ளே வந்தனர். பரட்டை தலையும், அழுக்குத் துணியும், அவர்களின் ஏழ்மையைப் பறைசாற்றின. பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட முற்பட, கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள். வீட்டின் வெளியே வந்த பெருந்தலைவர் காமராசர் அந்த குழந்தைகளிடம், யாரைப் பார்க்க வந்தீங்க? என்று கேட்டார். அந்த சிறுமி தயங்கியபடி, உங்களைத்தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா தவறி விட்டார். அம்மா மட்டும்தான். அண்ணனுக்கு டைப் ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களைப் பார்த்தால் உதவி செய்வீங்கன்னு எல்லாரும் சொன்னாங்க அதுதான் வந்தோம் என்றார்.
அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி அம்மா அனுப்பி வச்சாங்களா? என்று காமராஜர் கேட்க, அந்தக் குழந்தைகள் இல்லை ஐயா! நாங்களாக வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கிறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க என்று சொல்ல, அதற்கு மேல் கேட்க முடியாமல், வீட்டின் உள்ளே சென்று ஒரு கவருடன் வந்தார். அதை சிறுமியிடம் கொடுத்து இதில் கொஞ்சம் பணம் இருக்கு, அண்ணனுக்கு பீஸ் கட்டுங்க, அம்மா பேச்சை கேட்டு நல்லப் பிள்ளைகளா நடக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மறுநாள் அந்தப் பிள்ளைகள் மீண்டும் வந்தன. உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார். வாங்க! வாங்க என்று வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் ஐயா! அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டி வரச் சொன்னார்கள் என்று அந்த சிறுமி காமராஜரிடம் அந்த ரசீதை நீட்டினார். இந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டி வரச் சொன்னார்கள் என்று அந்த சிறுமி காமராஜரிடம் அந்த ரசீதை நீட்டினார். கர்மவீரர் கண் கலங்கி விட்டார்.
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகள் அவரை வணங்க, அவரும் தன் இரு கைகளை கூப்பி குழந்தைகளை வணங்கி, வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.
ஏழை பாமர மக்களுக்கு கர்மவீரர் காமராஜரின் பரிவும், கருணையும், இரக்கமும், அக்கறையும் கடவுளின் முகமாய் வெளிப்பட்டது. அதனை அனுபவமாக்கியவர்களின் வாழ்வு சான்றாகி போனது.
இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களுடைய தீச்செயல்களையும், கடவுள் அறச்சீற்றத்தையும், கடவுளின் பேரன்பும், பரிவும், வாழ்வு வழங்குவதாக எடுத்தியம்புகிறது.
ஆண்டவராகிய கடவுள் எந்த அளவிற்கு இஸ்ரயேல் மீது பேரன்பு கொண்டாரோ அந்த அளவிற்கு, இஸ்ரயேல் ஆண்டவருக்கு எதிராக, ஆண்டவரின் அன்பிற்கு விரோதமாய் செயலாற்றினர்.
ஓசே 11:2 "எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவிற்கு என்னை விட்டு பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்கு பலியிட்டார்கள்" என்பதற்கிணங்க, இஸ்ரயேலின் குருக்கள், தலைவர்கள், ஆண்டவரின் வழியினின்று விலகி, அருவருப்பான காரியங்களில் ஈடுபட்டு ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையால் பேணிக் காத்த திருக்கோயிலை தீட்டுப்படுத்தினர்.
ஆயினும் ஆண்டவர் அவர்கள் மீது பரிவும், இரக்கமும், பேரன்பும் கொண்டு, தம் தூதர்களை, இறைவாக்கினர்களை அவர்களை நெறிப்படுத்த அனுப்பினார்.
ஆனால் அவர்கள்
(i) ஆண்டவர் அனுப்பிய தூதர்களை ஏளனம் செய்தனர்.
(ii) ஆண்டவரின் தூதர்களின் வார்த்தைகளைப் புறக்கணித்தனர்.
(iii) இறைவாக்கினர்களை பழிந்து இழித்துறைத்தனர்.
எனவே ஆண்டவர் அவர்கள் மீது கடுஞ்சினம் கொண்டார். அவர்களை கல்தேய மன்னரிடம் அடிமைகளாக ஒப்படைத்தார். அவர்கள் எருசலேமை சூறையாடி அளித்தனர். அப்போது ஆண்டவர் மீண்டும் இஸ்ரயேல் மீது அன்பு கொண்டார்.
ஓசேயா 11:8 "எப்ராயிமே! நான் உன்னை எப்படி கை விடுவேன்; இஸ்ரயேலே உன்னை எப்படி கை நெகிழ்வேன்" என்று அவர்கள் மீது இரங்கினார்.
இந்த ஆண்டவரின் இரக்கம், பாரசீக மன்னனாகிய சைரசு வழியாக செயலாக்கம் பெற்றது. எருசலேம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பேரன்பால் வாழ்வு பெற்றனர்.
இன்றைய நற்செய்தியில், தன்னை இரவில் சந்தித்த பரிசேயரும் யூத தலைவர்களுள் ஒருவருமான நிக்கோதேம் வழியாக நமக்கு உணர்த்துவது, ஒளியாகி இயேசுவை ஏற்பதும், அவரில் ஆழமான நம்பிக்கை கொள்வதும், நிறைவாழ்வு என்பதனை எடுத்தியம்புகிறது.
தந்தை கடவுளின் விருப்பு, தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொண்டு, அவர் அளிக்கும் மீட்பை மானுடக் குழந்தைகள் நாம் வாழ்வாக்க வேண்டும் என்பதே.
யோவான் 3:16 "தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அழிக்கும் அளவிற்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்"
அந்த மகனாகிய மீட்பர் மீது நாம் கொள்ள நம்பிக்கை என்ன?
1. இறைவார்த்தை நிறை வாழ்வு தரும்
பேதுரு ஆண்டவரோடு உரையாடும்போது ஆண்டவர் இயேசுவின் வார்த்தையின் வல்லமையை உணர்ந்தவராய்
யோவான் 6:68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
2. இறை உணவு - நிறைவாழ்வு தரும்
யோவான் 6:51, 58 "விண்ணில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இயேசுவின் உடல் நிலைவாழ்வின் விருந்து என்பதை உணர்த்தி நிற்கிறது.
3. இறைமகன் இயேசு - நிலைவாழ்வு
வாழ்வது நான் அல்ல கிறிஸ்து எண்ணில் வாழ்கிறார் என்ற தூய பவுல் "கொலோசையா்" திருஅவையை கிறிஸ்துவில் உறுதிப்படுத்தும் போது கிறிஸ்துவே நமக்கு வாழ்வு என்பதே வலியுறுத்தினார்.
கொலே 3:4 "கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்" என்றார். ஆண்டவர் இயேசு கூட,
யோவான் 14:6 "வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்றார்.
வார்த்தை மனு உருவாகி, தன்னைப் பகிர்ந்து, வாழ்வு தந்த கடவுளின் பிள்ளைகள் நாம் அந்த இயேசுவை சுவைத்து நிறைவாழ்வை பெற்றுக்கொள்ள முனைவோம்.
நம் வாழ்வில்
🟡நிலைவாழ்வை உரிமையாக்க, கண்ணால் காணும் சகோதரனை அன்பு செய்து, அவர்கள் தேவைகளில் உடனிருப்பதே கண்ணால் காணாத கடவுள் தரும் நிறைவாழ்வுக்கு நம்மை தகுதிபடுத்துவதாகும்.
🔵சக்கேயு இயேசுவில் நம்பிக்கை கொண்ட போது பகிர்ந்தான். அது சக்கேயுவிற்கும், அவர் பகிர்ந்த சமூகத்திற்கும் மீட்பினை கொணர்ந்தது.
யோ 3:15 "ஆண்டவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரின் நிலைவாழ்வைப் பெறுவர்"
🟣நம் நம்பிக்கை வாழ்வு தரும் கிறிஸ்துவா? பில்லி சூனியம் மற்றும் மந்திரவாதங்களில் (எகா. தெரச்சி மீனின் வாலை வீடுகளின் முன் பகுதிகளில் வைத்திருப்பது மூடத்தனத்தின் உச்சம்)
🔴தன்னைத்தானே நேசிப்பதைப் போல் பிறரையும் நேசிக்க சொன்னார். நாம் பிறரோடு உறவு பாராட்டி, அன்பு செய்கிறோமா? இல்லை மேட்டிமை எண்ணம் கொண்டு பிரித்தாழ்கிறோமா?
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment