👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
தவக்காலம் 5 -ம் ஞாயிறு
17.03.2024
எரேமியா 31 : 31- 34,
எபிரேயர் 5 : 7 - 9,
யோவான் 12: 20 - 33.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
மடிதல் வாழ்வா? சாவா ?
🔴தான் துன்புற்று, பாடுகள் ஏற்று, அவமான சின்னமாகி, இறந்தால்தான் மக்கள் வாழ்வு பெற முடியும் என்பதை ஆண்டவர் இயேசு நன்கறிவார்.
🟣பாடுகளின் தன்மையையும், அது நடைபெறும் காலத்தையும் இயேசு அறிந்திருந்தார். எனவேதான் பலமுறை சாவை முன்னறிவித்தார். இன்றைய நற்செய்தியில் கூட கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிதல் உவமை வழி தன் பாடு, மரணம் மற்றும் உயிர்ப்பு பற்றி விளக்கினார்.
🔵யூதர்கள், மீட்பர் தங்கள் இனத்தை மட்டுமே மீட்பார் என்ற நிலையில், மீட்பர் அனைத்து மக்களுக்கான ஆயன் என்றார்.
🟡இழப்பில் தான் இறையாட்சி பிறப்பெடுக்கிறது என்பதை மிக உறுதியாக எடுத்துச் சொன்னார்.
🟢கிறிஸ்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவின் அடி ஒற்றியப் பயணம் அப்படியானால், நாம் நம்மை இழந்துதான் மீட்பு பெற முடியும், வாழ்வு பெற முடியும் என்பது இயேசு தீர்க்கமாய் எடுத்துரைத்தார்.
♦️இன்றைய வழிபாடு, தவறும் மானுடத்தை தம் பேரன்பால் மன்னிக்கும் இறைவனையும்
♦️மானுடம் மீட்படைய, தன்னையே மனம் உவந்து ஒப்புக்கொடுத்த இயேசுவின் தற்கையளிப்பையும்,
♦️மனுக்குல வாழ்வுகாய், உயர்விற்காய், கோதுமைமணி போல மடிந்து, வாழ்வு வழங்கும் கிறிஸ்துவின் பேரன்பை எடுத்துக் கூறுகிறது.
நிகழ்வு
புனித அன்னை தெரசா அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றை "அன்பு மனம்" என்ற நூல் விளக்குகிறது. அறை ஒன்றில் எட்டு மாத குழந்தை ஒன்று படுத்திருக்கிறது. அதை சூழ்ந்து ஐந்து குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறது. இக்கு குழந்தைகளின் பெற்றோர் எங்கே? ஏன் குழந்தைகள் தனித்து நிற்கிறார்கள்?
குடும்பத்தின் வறுமை தாங்க முடியாமல், தந்தை குடும்பத்தை நிராகரமாய் விட்டுச்சென்றான். கணவனின் பொறுப்பற்ற தனத்தால் உள்ளம் உடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார். பசி, பட்டினியால் வாடிய குழந்தைகளுக்கு வாய்விட்டு கூட அழ முடியாத பரிதாப நிலை.
மூத்தவள் ரீட்டா, 12 வயது, இளைய பிள்ளை 8 மாத குழந்தை, மூத்தவள் ரீட்டா, தன் தங்கை தம்பிகளை காப்பாற்ற வீடுகளில் பாத்திரம் தேய்த்தாள். வீடுகளை சுத்தம் செய்தாள். இந்த நிகழ்வை "ஸ்டேட்ல்மேன்" என்னும் ஆங்கில நாளிதழ் "அழவும் முடியாமல் போன மழலை" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. செய்தியைப் படித்த சிலர் இக்குழந்தைகளுக்கு உதவ முன் வந்தனர். இச்செய்தி அன்னை தெரசாவிற்கும் தெரிய வருகிறது. உடனே அன்னை, அத்தனை குழந்தைகளையும் தாமே வளர்க்க முன் வந்து, தன் சிசுபவனில் சேர்க்கிறார். அழமுடியாமல் போனக் குழந்தைகள் அழுகை மறந்து வாழ்ந்தனர்.
தன் உடன் பிறந்தோருக்காய் தன்னை இழக்க ரீட்டா முன்வந்த போது எல்லாரும் வாழ்வு பெற்றனர்.
புதிய உடன்படிக்கை
பழைய உடன்படிக்கையில், வெளிசடங்குகள். சம்பிரதாயங்கள், சட்டங்கள் புதைந்து கிடந்தது. ஆனால் புதிய உடன்படிக்கை. இரக்கத்தாலும், பரிவாலும், உறவுகளாலும் கட்டமைக்கப்பட்டது.
எரேமியா 31:33 "நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" என்ற உறவு நிலைக்குள் இருந்தது.
பழைய உடன்படிக்கை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற நியமங்களை வாழ்வாக்கியது.
புதிய உடன்படிக்கை மன்னிப்பையும், இரக்கத்தையும் நிறைவாய் வழங்கி மக்களை வாழ்விப்பதாய் அமைகிறது.
எரேமியா 31:34 "அவர்களது தீச்செயலை நான் மன்னித்து விடுவேன் அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்" என்றும் மீக்கா 7:19 "அவர் நம்மீது இரக்கம் காட்டுவார். நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார், நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" என்ற கடவுளின் பரிவையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் விளக்கி நிற்கிறது.
பழைய உடன்படிக்கை கடவுள் எட்ட முடியா உயரத்தில் இருப்பவர். ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்டவரை அறிந்து அவரை அன்பு செய்து, ஆவியாரின் கனிகளை வாழ்வாக்கி உரிமையோடு அப்பா, தந்தையே என அழைத்து உறவு பாராட்டக்கூடியது புதிய உடன்படிக்கை.
உரோ 8:15 "மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை மாறாக கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக் கொண்டீர்கள் அதனால் நாம் "அப்பா தந்தையே" என அழைக்கிறோம். நாம் தீயவற்றை, ஆண்டவரின் அன்புக்கு எதிரானவற்றை இழக்கும் போது, வாழ்வையும் கடவுளை அப்பா என அழைக்கும் உரிமைப்பேற்றையும் பெறுகின்றோம்.
இன்றைய நற்செய்தியில் இழப்புதான் மகிமை, இழப்புதான் வாழ்வு என்பதை பலமுறை அறிவித்தார் ஆண்டவர் இயேசு.
மாற்கு 8:31-34
மாற்கு 9:30 - 32
மாற்கு 10:32 34 - பாடு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை முறையே மூன்று முறை முன்னறிவித்தார்.
மன சஞ்சலப்பட்ட சீடர்களால் இயேசுவை சரியாய் புரிந்து கொள்ள முடியாமல் போனது.
இயேசு தன்னை ஒரு கோதுமை மணியோடு ஒப்பிட்டு, அது அழிந்து, புதிய உயிராய் பிறப்பெடுப்பது போல, தானும் கல்வாரியில் கழுமரத்தில் பாவ உருஏற்று, மடிந்து உயிர்த்து வாழ்வு வழங்குவேன் என்பதனை உறுதிபட கூறினார். இழத்தல் வாழ்வு என்பதனை
மாற்கு 8:35 "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும்" அதை இழந்து விடுவார். என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்" என்று நற்செய்தியாளர் வழி தெளிவுபடுத்துகிறார்.
இயேசு பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போலவே வாழ்ந்தார். ஆனால் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற முனைப்புடன் உழைத்தார். எப்போதெல்லாம் தந்தை கடவுளோடு தன்னை ஐக்கப்படுத்தினாரோ அப்போதெல்லாம் இயேசு மாட்சிப் பெற்றார்.
⭐இயேசு திருமுழுக்குப் பெற்றபோது தந்தை மாட்சிப்படுத்தினார்.
மத் 3:17 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையால் மாட்சிப்படுத்தப்பட்டார்.
⭐இயேசு தோற்றம் மாறிய போதும் மாட்சிப்படுத்தப்பட்டார்.
மத் 17:5 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன். இவருக்கு செவிசாயுங்கள்" என்று தந்தையால் சிறப்பு செய்யப்பட்டார்.
⭐ஆண்டவர் இயேசு பாடுகளை நினைத்து உள்ளம் கலக்கமுற்று தன் பணி வாழ்வின் இலக்கை முன்னிறுத்தி மன்றாடிய போது யோவான் 12:28 "மாட்சிப்படுத்தினேன் மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்ற தந்தையின் குரலால் இயேசு மாட்சிப்படுத்தப்பட்டார்.
இயேசு நமக்காக தன்னை இழந்ததால் அவர் வாழ்வின் ஊற்றாய் மாறி போனார். விண்ணவரும் மண்டியிட்டு ஆராதிக்கும் வகையில் தந்தை அவரை உயர்த்தினார். இயேசு இறையரசை சிலுவை வழியாகத்தான் நிலைநாட்டினார்.
🔴பணபலம், படைபலம் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அரசுர்கள் வரலாறு தெரியாமல் அழிக்கப்பட்டது. இயேசு தன்னை அடிமையாக்கி, ஏழையாக்கி, சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தி உருவாக்கிய இறையரசு என்றும் நிலைத்து நிற்கும். அந்த இயேசுவில் நம்பிக்கைக் கொள்ளவும் அவர் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளவும் வழிபாடு அழைக்கிறது. இயேசுவை உளமாற நம்புவோர் உலகை வெல்வர்.
🟢1யோவான் 5:5 "இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
| யோவான் 5:6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து" அந்த இயேசுவை ஏற்று, அவருக்காக மடிந்து, வாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.
நம் வாழ்வில்
🟣நம்மிடம் உள்ள சுயநலம், தற்பெருமை, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள் இவற்றை நாம் அடையச் செய்தால் வாழ்வில் வசந்தம் வீசும், பிறர் நலம் துளர்க்கும்.
எடுத்துக்காட்டு யூதித்து - ஒலோபெர்னின் தலையை வெட்டிய போது இஸ்ரயேலருக்கு வாழ்வு கிடைத்தது. யூதித்து தன்னை தாழ்த்தி கடவுளை முன்னிலைப்படுத்தினார்.
🟡ஒருவன் ஊருக்காக, சமூகத்திற்காக, நீதிக்காக, உண்மைக்காக தன்னை இழந்தால் இந்த சமூகம் வாழ்வு பெறும் வரலாற்றில் வாழ்வர்.
எடுத்துக்காட்டு: லத்தீன் அமெரிக்க நாடுகளில் - சேகுவரா, நெஸ்டர்பாஸ்
தென்னாப்பிரிக்காவில் - மண்டேலா
🔵தியாகங்கள் - புதுவாழ்வில் அடிநாதமாய், அஸ்திவாரமாய், மூலைக்கல்லாய் அமையும்.
🔴மடிதல் அல்லது இழத்தல் மாட்சியைப் பெற்றுக் கொடுக்கும்.
🟣நம்மை - நாம் கிறிஸ்துவில் இழக்கும் போது அல்லது கிறிஸ்துவுக்காய் மடியும் போது நாம் மிகுந்த பலனையும், மதிப்பையும், மாட்சியையும் பெற்றுக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment