Friday, April 19, 2024

பாஸ்கா 4- ஆம் ஞாயிறு மறையுரை -21.04.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பாஸ்கா 4-ஆம் ஞாயிறு

21.04.2024

திருத்தூதா் பணிகள் 4: 8-12,

1 யோவான் 3:1-2,

யோவான் 10: 11-18.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


நல்ல ஆயன் வழியில் (இறையழைத்தல் ஞாயிறு)

🔵நல்ல ஆயன் ஞாயிறு நல்ல தலைமைப் பண்பை நமக்கு எடுத்தியம்புகிறது.

🟣ஆயன் என்று சொல்லாடல் இன்றையச் சூழலில் இல்லாமல் அருகி இருந்தாலும் இயேசுவின் தலைமைத்துவம் மண்ணின் மணம் கமழும், ஆயனுக்கும், மந்தைக்கும் உள்ள உறவைப் புலப்படுத்தும் ஒன்றாக அமைகிறது.

🔴தலைவன் வெறும் பேச்சளவில் அல்ல, மாறாக செயலளவிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

🟢பணிச்சீடத்துவமே, பணி தலைமைத்துவத்திற்கு அடிப்படை என்பதை உறுதி செய்கிறார்.

🟡அதிகாரம் அல்ல மாறாக பணிவான பணி வாழ்வே சிறந்தது, உயர்ந்தது என்பதை எடுத்தியம்புகிறார்.

🔵நாம் பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றோம். நம் கிறிஸ்தவ விசுவாசம் நம்மை பணி செய்ய அழைத்துச் செல்கிறதா? என்று சிந்திப்போம்.

நிகழ்வு

டார்ஜிலிங் - குளுனி அருட்சகோதரிகள் நடத்தும் பள்ளியில் பூட்டான் நாட்டு அரச குலத்தைச் சார்ந்த கின்லி ஷெர்லிங் படித்தான் (பௌத்த சமயம் சார்ந்தவன்) கல்லூரி படிப்பை இயேசு சபை குருக்கள் நடத்தும் கல்லூரியில் படித்தான். ஒருநாள் கல்லூரியில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றான். அமைதியாக ஆலயத்தில் அமர்ந்திருந்தவனை, சிலுவையில் அறையப்பட்டு, ஆடையின்றி, இரத்தம் ஒழுகும் அந்த சிலுவை ஈர்த்தது. அவரைக் குறித்து சிந்தித்தான் ஏன் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்? என்ன குற்றம் செய்தார்? நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்துவின் மேல் ஈர்ப்பு பெற்றவனாய் கிறிஸ்தவனாக மாறினான். ஜோசப் கின்லி ஷெர்ரிங் என்று தனது பெயரை மாற்றினான். 1986 - ஆம் ஆண்டு விமான பயணத்தின் போது அன்னை தெரசாவைச் சந்தித்தான். அவர் அவனிடம் "நீ உன்னை இறைவனுக்கு ஏன் அர்ப்பணிக்க கூடாது"? என்று கேட்டார். அது அவனது உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, அன்னையின் அழைப்பை ஏற்றான். குருமடத்தில் இணைந்தான். 1996 ஆம் ஆண்டு ஜனவரி 4 - ஆம் நாள் டார்ஜிலிங் மறைமாவட்ட பேராயரால் பூடான் நாட்டின் முதல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டான்.

ஜோசப் கின்லி ஷெர்ரிங்

1. கிறிஸ்துவுக்காக அரச குடும்ப பாரம்பரியத்தை இழந்தான்.

2. ஏழைகளுக்கு உழைக்கும் பணித் தெளிவு பெற்றான் அன்னை தெரசாவைப் போல்.

3. சவால்களை சந்திக்கும் ஆற்றல் பெற்றார். ஆண்டவரின் அழைப்பு அர்த்தம் பெறுகிறது.

ஆண்டவர் நேரடியாக இறங்கி வந்து யாரையும் அழைப்பதில்லை. ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கும் சூழலில், அவர்களது பணியில் தான் அழைத்து வலுப்படுத்துகிறார்.

நம்மை அழைத்த கடவுள், ஒரு ஆயன் தன் மந்தையை பேணி பாதுகாப்பது போல் பேணிபாதுகாக்கிறார்.

ஒரு ஆயன்

1. மந்தையை நன்கு அறிந்தவராக

2. மந்தையை வழிநடத்தும் பாதைத் தெரிந்தவராக

3. மந்தையைப் பாதுகாக்கும் பண்புடையவராக விளங்குகிறார்.

1. மந்தையை நன்கு அறிந்தவர்

மக்களை வழிநடத்தும் ஒரு தலைவனின் தலைமைப் பண்பு என்பது, மக்களை, மக்களின் வாழ்வியல் நிலைகளை நன்கு அறிதல் வேண்டும்.

மக்களைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகள் சூழ்நிலைகள் ஆகியவற்றின் பின்புலங்களை நன்கு அறிந்தவராக இருப்பார்.

மக்களைப் பாதிக்கும், சமூக, பொருளாதார அரசியல், பண்பாட்டு, சூழ்நிலைகளை அறிந்து வழி நடத்துவார்.

யோவான்  10:3 "அவர் தம் சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்"

யோவான் 10:5 "அறியாத ஒருவரை அதை பின்தொடரா அவரை விட்டு அவை ஓடிப்போகும்" - நல்ல ஆயனின் குணம், குரல் அறிந்து மந்தை பின் தொடரும். ஏனெனில், திபா 23:1 "ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை" என்ற அளவிற்கு குறைவிராதபடி மக்களின் தேவை அறிந்து வழிநடத்துவார். மந்தையின் மனம் அறிந்து நடத்துவார். நிறை குறை அறிந்து நெறிபடுத்துவார் நல்ல ஆயன்.

2. ஆயன் பாதை தெரிந்தவராக இருப்பார்

🔵 பாலை நிலப்பகுதியில் பாதைகள் தெளிவாய் அமைவதில்லை தெளிவில்லாத பாதையில் அழைத்துச் சென்றால் அவை பெரும் ஆபத்துக்குள்ளாகும்.

🟡மந்தைக்குத் தேவையான மேய்ச்சல், குடிநீர் இல்லாமல் அவதியுறலாம்.

🟢காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு நேரிடலாம் எனவே ஒரு நல்ல ஆயன் மந்தைக்கு முன் வருவார்.

யோவான் 10:4 "தம் சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்த பின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரை பின்தொடரும்" எதற்காக முன் செல்வாரெனில் குறைவராதபடி வழிநடத்த, நல்ல மேய்ச்சலை கண்டடைய, புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்ல.


திபா 23:2 "பசும்பில் வெளி மீது எனை அவர் இளைப்பாற செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்"

தி பா 23:3 "அவர் எனக்கு புத்துயிர் அளிப்பார்" என்று தாவீது தன் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

🔴பாதையும், பார்வையும் தெளிவில்லாத சுயநலமிக்க தலைமை எங்கும் ஆபத்தானது.

🟣தானும் வாழ்வதில்லை, பிறரையும் வாழ்விப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.

3. ஆயன் மந்தையை காப்பார்

🔵மந்தையை தாக்கும், மந்தைக்கு வரும் தீங்குகளை இனம் கண்டு, அவற்றின் விளைவுகளை அறிந்து மந்தையை காக்கும் நல்ல ஆயராக இருப்பார்.


யோவான் 10:11 "நல்ல ஆயர் ஆடுகளுக்காக தன் உயிரைக் கொடுப்பார்" 

தன் உயிரைக் கொடுத்தேனும் மந்தையை பேணிக்காத்து வாழ்வுக்கு வழி நடத்தும் ஆயராக இருக்க பணிக்கிறார் இறைவன். நல்ல ஆயன் இயேசு தன் பணியைக் குறித்துச் சொல்லும் போது

யோவான் 10:10 "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு அதுவும் நிறைவாய் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்றார்.

ஒரே மந்தையும், ஒரே ஆயரும் உருவாகும் நிலை ஏற்பட வேண்டும் என்பதே நல்லாயன் இயேசுவின் விருப்பு. நல்ல ஆயரின் பணியாக எசேக்கியேல் இறைவாக்கினர் கூறும் போது,

எசே 34:16 "காணாமல் போனதை தேடுவேன் அலைந்து திரிவதை திரும்ப கொணர்வேன் காயப்பட்டவற்றிற்கு கட்டுப்போடுவேன், நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்" என்று நல்லாயனின் பணியை எடுத்துரைக்கிறார். இதைவிட மேலான பாதுகாப்பு எந்த ஆயனும் தந்துவிட இயலாது.

நல்லாயன் இயேசுவின் பணி        

🟡காணாமல் போன சக்கேயு, அலைந்து திரிந்த சமாரியப் பெண் இவர்களை நிறைவாழ்வுக்கு அழைத்து, மீட்பை வழங்கியதாய் இருந்தது.

🔵ஆயன் இல்லா ஆடுகளைப் போல் தவித்த மக்கள் மேல் பரிவு கொண்டு உணவளித்தது அவரது கரிசனையை உணர்த்துகிறது.

🟣நல்ல சமாரிய உவமை, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண் நிகழ்வுகள் காயப்பட்ட மக்களின் காயங்களை கட்டி நிறைவாழ்வுக்கு அழைத்ததை புலப்படுத்துகிறது.

🔴முடக்குவாதமுற்றவரை குணப்படுத்தியதும், பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கியது, நலிந்தவர்களை திடப்படுத்தி வழிநடத்தியதற்குச் சான்றாகிறது.

இன்று நம் வாழ்வில்

🟢இன்று நம்மை வழி நடத்தும் தலைவர்கள் நம்மை நம் தேவையை அறிந்திருக்கிறார்களா?

எசேக்கியேல் 34: 4 "நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை, பிணியுற்றவற்றிற்கு குணமளிக்கவில்லை, காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை, வழி தவறியவற்றைத் திரும்பக் கூட்டிவரவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை"

🔴மாறாக தங்களை மேய்த்துக் கொள்ளும் ஆயர்களாக மாறிப் போனார்கள். இந்நிலை மாற வேண்டும்.

🟣சரியான பாதையில் இருந்து சரியான பாதையில் வழி நடக்கிறோமா?

🔵வறுமையில் வாடியவர்களை நாம் இனம் கண்டு உதவியதுண்டா?

🟡அநீதிகளை எதிர்த்ததுண்டா?

🟢மனித மாண்புக்குக்கெதிரான செயல்களைக் கண்டித்ததுண்டா?

நல்ல ஆயன் குறைவின்றி வழி நடத்தியது போல நாமும் வழிநடத்தவும், வழி நடக்கவும் இறையருள் இரஞ்சுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment