Friday, April 26, 2024

பாஸ்கா 5- ஆம் ஞாயிறு மறையுரை -28.04.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பாஸ்கா 5-ஆம் ஞாயிறு

28.04.2024

திபணி. 9: 26 - 31,

1 யோவான் 3:18 - 24,

யோவான் 15: 1- 8.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இணைந்து கனி தருவோம்

🟢"பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் 

பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்" ஆலய திருஇசைப்பாடல் இது.

🟡திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட நாம், நம் வாழ்வில் சான்று பகர அழைக்கப்படுகின்றோம்.

சான்று என்பது

♦️சாட்சிய வாழ்வு

♦️பயனுள்ள வாழ்வு

♦️கனி தரும் வாழ்வு

🔵கிறிஸ்தவ விழுமியங்கள் கனிகளாய் வெளிப்பட வேண்டும் 

🟣நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதாய் அமைதல் வேண்டும்.

🔴அன்புப் பணிகளால், இரக்கச் செயல்களால், நல்வாழ்வு பணிகளால் மானுட நேய செயல்களால் நல்ல கனிக் கொடுப்போம்.

நிகழ்வு

கேரளா மாநிலம், பால காட்டில் உள்ள குடும்பம் சரங்மேனன், அதிதிநாயர். இவர்கள் பணிநிமித்தம் மும்பையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை அதன் பெயர் நிர்வான்.

15 மாத குழந்தை நிர்வான் 2023 ஜனவரியில் நோயற்றது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் குழந்தையை மருத்துவச் சோதனைச் செய்த மருத்துவர்கள், இக்குழந்தை SMA  (Spinal Muscular Atrophy) அதாவது முதுகுத் தண்டுவட தசை செயலிழப்பு என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது மரபணு சார்ந்த மிக அரிய கொடிய நோய். குழந்தைக்கான மருத்துவச்செலவு 17.5 கோடிக்கு மேலாகும் என்ற நிலையில், செய்வதறியாது திகைத்த பெற்றோர் முகநூல் வழி   கிரவுட்பண்டிங் (Crowdfunding) என்ற குழு வழியாக விண்ணப்பித்தனர். 19.02 2023 வரை கிட்டத்தட்ட 72 ஆயிரம் மக்கள் இணைந்து  5.42 கோடி சேர்த்தனர். இச்செய்தியை நிர்வானின் பெற்றோர் தங்கள் முகநூலில் பகிர்ந்தனர். இதனைப் பார்த்த ஒரு நல்ல மனிதர், பெயர், ஊர், தொழில், தான் யார் என்பதை இதுவரை வெளியே  சொல்லாத ஒருவர் 1.4 மில்லியன் அதாவது 11 கோடியை தானமாக ஈந்து குழந்தை நிர்வான் உயிர் பிழைக்க உதவி இருக்கிறார். இன்று வரை அவர் யார் என எவரும் அறியவில்லை. இணைந்த முயற்சியும், நல்ல உள்ளமும் வாழ்வு என்னும் கனியை சுவைக்க வைத்தது. இந்த இணைந்த நல்ல முயற்சிக்கு நிர்வானின் பெற்றோர் தங்கள் கண்ணீரை நன்றிக்கடனாய் உள்ளம் நெகிழ்ந்து தெரிவித்தனர்.

தனி மனிதர்கள் ஓர் இயக்கமாய் இணைந்த போது ஒரு குழந்தையின்  வாழ்வில் விடியலை கொணர முடிந்தது.

🟢இத்தகைய நல்ல ஒன்றிணைதலும், நல்ல பகிரும் உள்ளங்களும் வாழ்வதாலேயே இந்த உலகு இன்று நிலைபெறுகிறது.

ஒன்றிணைதல்

♦️ஆக்க சக்தியாய்

♦️வாழ்வின் சக்தியாய்

♦️பயன் ஈதலின் ஆற்றலாய் புலப்படுகிறது.

இன்றைய நற்செய்தி

🔵நம்பிக்கை கொண்டோர் இறைவனில் ஆழமாக நிலை பெற்றாலன்றி இறையாட்சியைக் கொணர இயலாது.

🔴இறையாட்சிப் பணியின் பேராபத்து என்பது படைத்து, பராமரித்து, பணிக்கு அனுப்பியவரை மறந்து, தனிமனித புகழ் மற்றும் சுயநலத்திற்காக உழைப்பது.

🟣இத்தகைய சமூக எதிரிகளைக் களைந்து, நல்ல உறவு நிலையில் ஒன்றித்து கனிதர நமக்கு அழைப்பு கொடுக்கிறது.

1.இணைந்து கனிதர

2.இணைந்து புதிதாய் பிறக்க

1. இணைந்து கனிதர

இணைதல் எதற்காக? பயன்தர, கனிதர. இயேசு என்னும் கொடியோடு கிளைகள் எனும் நாம் இணைந்தால் மிகுந்த கனிதருவோம். யோவான் 15:14 "கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றி கனி தரஇயலாது”

இணைதல் என்பது

♦️வலிமை

♦️ஆற்றல்

♦️சக்தி

🟡இணைவது பலன் கொடுக்க, கனி கொடுக்க

🟣கனி கொடுக்காத கிளையோ, மரமோ சபிக்கப்படும் அது வெட்டி எறியப்படும், உலர்ந்த பின் எரிக்கப்படும்.

மத் 21: 9 "வழியோரத்தில் ஓர் அத்திமரத்தை அவர் (இயேசு) கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் காணாமல், இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று"

🔴பார்ப்பதற்கு செழுமையாக, வளமையாகத் தெரிபவை எல்லாம் கனி கொடுப்பவை அல்ல. (சீன் போடுறதால ஒரு பயனும் இல்லை)

🔴நீ உன்னை செழுமையாய், வளமையாய் காட்டினால் பலன் கொடுக்க வேண்டும். செயல்களில் புலப்பட வேண்டும்.

🔴கிறிஸ்துவோடு இணைந்து கனி, பலன் கொடுப்போம்.

🔴சீடன் கனி கொடுப்பான்

🔴கனி கொடுக்கும் சீடன் தந்தையை மாட்சிப்படுத்துவான்.

2. இணைதல் -புதிதாய் பிறக்க

🟢தனிமனித விருப்பில் மூழ்கி, தூய்மை நெறியில் ஆர்வம் கொண்டு, யூத மரபில் பற்று கொண்ட, சட்ட நுணுக்கங்களை அறிந்த சவுல், கிறிஸ்துவோடு இணைந்த பிறகு பவுலாகி, கிறிஸ்துவை சுமந்து கொண்டு, பல ஆயிரம் மைல்கள் நடந்து, தொடக்க கால கிறிஸ்தவ சபைகளை உருவாக்கி, வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்து வாழ்கிறார் என்று அறிக்கையிட்டு புறவினத்தாரின் அப்போஸ்தலராய் பயன் ஈந்தார்.

🟡எந்த அளவிற்கு கிறிஸ்துவை எதிர்த்தாரோ, அதைவிட பதின்மடங்கு உறுதியோடு, பற்றோடு, தணியாத்தாகத்தோடு, கிறிஸ்துவைச் சுமந்து சென்றார்.

🟡நற்செய்தி அறிவிக்காவிட்டால் ஐயோ எனக்கு கேடு என்றவர், நற்செய்தியாகவே வாழ்ந்து மிகுந்த கனி தந்தார்.

நான் என்னை இழப்பது ஆதாயம் என்றார். அந்த அளவிற்கு கிறிஸ்துவோடு இணைந்த பிறகு மாறிப்போனார்.

பிலி 1:21 "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே"  என்ற நிலைப்பாட்டில் உறுதி பெற்றார் தூய பவுல்.

🟡புகழ், ஆழ்ந்த அறிவு, மக்கள் வியக்கும் ஆற்றல், சிறந்த நாவன்மை, பன்மொழிப்புலமை, உலகமே தன் அருள்வாற்றல் முன் மண்டியிட வேண்டும் என்று துடித்த பிரான்சிஸ் சவேரியார், ஆண்டவர் இயேசுவை சுவைத்தப் பிறகு, திருச்சபையில் மிகுந்த கனி தந்தார். ஆன்மாக்களை அதிகமாக அறுவடை செய்தார்.

நம் வாழ்வில்

🟣சுயநலமும், செருக்கும், அதிகார திமிரும் நம்மை கடவுளோடு இணைய விடாது, நாம் கனியும் கொடுக்க மாட்டோம்.

தொநூ 11 - ஆம் அதிகாரம் சுயநலம், செருக்கின் அடையாளம். தொநூ 11:4 "வாருங்கள் உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காக கட்டி எழுப்பி நமது பெயரை நிலை நாட்டுவோம்" என்று ஆணவம் கொண்டனர். ஆண்டவர் அவர்களை சிதறடித்தார்.

🟢பேராசை நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்கும், அழிவைக் கொணரும். தீயவன், ஏவாவிடம் வஞ்சனை புகுத்த அவரும் வீழ்ந்தார்.

தொநூ 3:5 "ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமை அறிவீர்கள்" என்றதும் ஏவா பழத்தை பறித்து உண்டு, கடவுள் அன்பிலிருந்து விலகினாள்.

🔵பொறாமை உறவு வாழ்வை சிதைக்கும். தொநூ - 4 ஆம் அதிகாரத்தில் காயின் ஆபேல் மேல் கொண்ட பொறாமை கொலையில் முடிந்தது. எப்போது இறை அன்பிலிருந்து விலகுகிறோமோ அப்போதே அழிவைத் தேடிக் கொள்கிறோம்.

நம்மைக் குறித்து இறைவன் கொண்ட எதிர்பார்ப்பை இறைவாக்கினர் எரேமியா வழி வெளிப்படுத்துகிறார்

எரேமியா 2:21 "முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன். நீ கெட்டுப்போய் தரங்கெட்ட காட்டுத் திராட்சை செடியாய் மாறியது எப்படி?" என்று ஏங்கும் கடவுளின் மனநிலை அறிந்து அவரோடு இணைந்து நல்ல கனி கொடுப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment