Friday, May 10, 2024

ஆண்டவாின் விண்ணேற்பு பெருவிழா- ஞாயிறு மறையுரை -12.05.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

12.05.2024 (ஞாயிறு)

திபணி. 1: 1 - 11,

எபேசியர் 4: 1 - 13,

யோவான் 16: 15 - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


விண்ணேற்பு உணர்த்தும் சான்று வாழ்வு

🟣ஆண்டவர் இயேசு உயிர்த்தபின் நாற்பது நாட்கள் தன் சீடர்களோடு தங்கி, அவர்களை உறுதிப்படுத்தி, காட்சிகள் வழி திடப்படுத்தி, சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறார்.

🔵பறவை இனங்கள் தான் உணவூட்டி வளர்த்த குஞ்சுகளைத் தாமாய் உணவு தேடப் பழக்கி தனியே அனுப்புவது போல தம் சீடர்களை இயேசு பணி வாழ்வுக்கு பக்குவப்படுத்தி அனுப்புகிறார்.

🔴உயிர்த்த ஆண்டவர் நாற்பது நாட்கள் சீடர்களோடு தங்கினார் என்பது சிறப்பிடம் பெறுகிறது.

🟢இஸ்ரேல் மக்கள் வாழ்வின் நாட்டுக்குச் செல்ல, பாலை நிலப்பயணம் நாற்பது ஆண்டுகள்.

🟡நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு வந்தது நாற்பது நாட்கள் (தொநூ 7:17)

🟣மோசே சீனாய் மலையில் தங்கியது நாற்பது நாள்  (விப 24:18 )

🔵யாக்கோபின் உடலை மருத்துவ முறையில் பதனிடத் தேவைப்பட்ட நாட்கள் நாற்பது (தொநூ 50:2,3)

🔴கானா நாட்டை உளவு பார்க்க எடுத்துக்கொண்ட நாட்கள் நாற்பது   (எண் 13:25) (மோசே அனுப்பிய ஒற்றர்கள்)

🟢கோலியாத் இஸ்ரயேலர்களுக்கு எதிராக சவால் விட்ட நாட்கள் நாற்பது (1 சாமு 17:16)

🟣எலியா இறைவாக்கினர் ஒரேபு மலையை அடைய எடுத்துக் கொண்ட நாட்கள் நாற்பது (1 அரசர் 19:8)

🟡யூதா வீட்டாரின் குற்றத்தை சுமக்க ஆன நாட்கள் நாற்பது     (எசே 4:6)

🔵நினிவே மனம் திரும்ப எச்சரிக்கை வழங்கப்பட்ட நாட்கள் நாற்பது (யோனா 3:4)

🔴இயேசு பாலைவனத்தில் நோன்பிருந்த நாட்கள் நாற்பது (மத் 4:2, மாற்கு 1:13. லூக் 4:2)

🟢இயேசு உயிர்த்தெழுந்த பின் சீடர்களுக்கு தோன்றிய நாட்கள் நாற்பது (திபணி 1:3)

இப்படி பல விவிலிய பின்புலத்தில் தான் இயேசு உயிர்த்த 40 நாட்களுக்குப் பின் விண்ணேறினார். இயேசுவின் பணிவாழ்வு அவரை தந்தையோடு அமர அழைத்துச் சென்றது.

🟣இயேசுவின் பணி, பாடு, மரணம், ஆகியவை முன்னேற்றத்தின் அடிநாதமாகிறது.

நிகழ்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியான சம்புலொஸ்கா என்ற தீவில் புனித கிளாரட் சபை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு புனித கிளாரட் என்ற பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. கல்விப்பணியோடு, சமூக, சமயப்பணிகளையும் செய்து வந்தனர். 2000 ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தீவிரவாதிகள், புனித கிளாரட் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ரோயல் மற்றும் 43 நபர்களைக் கடத்திச் சென்றனர். கடத்திச் செல்லப்பட்ட அனைவர் முன்னிலையிலும் அருட்தந்தை ரோயல் அவர்களை நிறுத்தி கிறிஸ்தவ விசுவாசத்தை விடச் சொன்னார்கள். அவர் சம்மதிக்கவில்லை அடித்து துவைத்தனர். நீ கிறிஸ்துவை மறுதலித்து, உன் அங்கியை கழற்றி வைத்து விட்டுச் செல்.  உன்னை விட்டு விடுகின்றோம் என்றனர். அவர்கள் கொடுத்த வாய்ப்பையும், அழைப்பையும் அருட்தந்தை ஏற்கவில்லை. எனவே கோபமடைந்த தீவிரவாதிகள் அவர் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு சென்று விட்டனர்.

அருட்தந்தை அவர்களின் பணிவாழ்வும், விசுவாச உறுதிப்பாடும், விசுவாசத்தின் விருட்சத்தின் விதையாய் மடிய துணிவைக் கொடுத்தது. எனவே அவர் இன்று சம்புலொஸ்கா தீவில் மக்கள் மனங்களில் ஏற்றம் பெற்று உயர்ந்து நிற்கிறார். அதற்கு அவரை உறுதிப்படுத்தியது.

உரோமையர் 4:17 "இறந்தவர்களை வாழ்விப்பவரும், இல்லாததை தன் வார்த்தையில் இருக்கச் செய்கிறவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை" வைத்தது தான்.

♦️தந்தையிடமிருந்து வந்த இயேசு, தந்தையிடமே திரும்பிச் செல்லும் நிகழ்ச்சி தான் விண்ணேற்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.

♦️இயேசு என்னும் மீட்பர், கடவுள், தந்தையோடு இணைகிறார். ஏனெனில் யூத மரபில் ஒரு ஐதீகம் உண்டு.

1. கடவுள்

ஆகாயங்களுக்கு மேல் வாழ்கிறவர். விண்ணுலகில் இருப்பவர். எனவே, இயேசு விண்ணேறுகிறார். ஏனெனில் அவர் கடவுள் திபா 53:2"கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகிறார்" 

"விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே" என்ற இயேசு கற்றுத்தந்த செபம் ஆகியவை இவற்றை விளக்கி நிற்கிறது.

2. மனிதன்

கடவுள் தம் உருவில் மனிதரை ஆண், பெண் எனப் படைத்தார். தொநூ 1:28 "கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி பலுகிப்பெருகி மண்ணுலகை நிரப்புங்கள், அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்" என்று மனிதரை மண்ணுலகை ஆளப் படைத்தார். எனவே மனிதன் மண்ணுலகில் வாழ்கிறவராகிறார்.

3. இறந்தோர்

இருளும், பயமும் நிறைந்த ஆழமான பள்ளத்தாக்கில் வாழ்பவர் என்பது யூத மரபு

திபா 23:4 "சாவின் இருள் சூழ்பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" என்ற தாவீதின் வரிகள் இதனை உணர்த்துகிறது.

ஆனால் ஆண்டவர் இயேசு விண்ணேறிச் சென்றார் என்பது, தந்தையின் மாட்சியில் நுழைவது. இயேசுவின் எண்ணம், பணி வாழ்வு ஏற்றம் மிக்கதாய், சான்று வாழ்வுக்குரியதாய் அமைந்தது போல நம் எண்ணம், நம் செயல்பாடுகள், நம்மை உயர்வான, மகிழ்வான வாழ்விற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இயேசுவின் விண்ணேற்றம்

(i) இயேசுவின் மாட்சியை உணர்த்துகிறது.

(ii) சான்று பகர அழைக்கிறது.

1. இயேசுவின் மாட்சியை

இயேசுவின் விண்ணேற்பு நிகழ்வு மிகச் சுருக்கமாக விவரிக்கப்பட்டிருந்தாலும், அதில் சில உண்மைகள் நிறைந்துள்ளது.

"மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்றதாக" முதல் வாசகம் இயம்புகிறது.

🟡விவிலியத்தில் மேகம் என்பது இறை சாட்சியை உணர்த்தும் அடையாளம். சீனாய் மலையில் கடவுள் மோசேயோடு உடன்படிக்கை செய்த போது மேகம் வந்து தங்கியது.

விப 19:16 "மலை மேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது எக்காள பேரொலி எழுந்தது இதனால் பாளையத்திலிருந்து அனைவரும் நடுநடுங்க்கினர்"

🔴இஸ்ரேல் மக்களின் 40 ஆண்டுகால பாலைநிலப் பயணத்தில் பகலில் மேகமாய் , இரவில் நெருப்புத் தூணாய் வழிநடத்தியதை திருமறை உணர்த்துகிறது.

விப 13:21 "ஆண்டவர் பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார்"

🔵இயேசுவின் உருமாற்ற நிகழ்விலும் மேகம் அவரை மூடிக்கொண்டது

மத் 17:5 "அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது" இவை இயேசுவின் மாட்சியை சுட்டுகிறது. இயேசு விண்ணேற்றமடைந்து தந்தையின் வலப்புறம் முழு மாட்சியோடு வீற்றிருக்கிறார் என்று இயேசுவின் மாட்சியை, சிறப்பை திருமறை வழி அறிகின்றோம்.

1 பேதுரு 3:22 "அவர் வானதூதர்களையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் நமக்குப் பணியவைத்து, விண்ணுலகம் சென்று கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்" என்றும்

எபி 8:1 "தலைமைக்குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து, இவர் விண்ணுலகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" என்பதன் வழியாக இயேசுவின் விண்ணேற்பு - அவருக்கு மாட்சியை பெற்றுக் கொடுத்தது என்று அறிகின்றோம்.

2. சான்று பகர அழைக்கிறது

இயேசு தம் சீடர்களுக்கு அளித்த கட்டளைகளில் முக்கியமானது          மாற்கு 16 :15 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்" என்பதாகும்.

🟢இயேசுவின் அறிவுரைக்கு ஆட்பட்ட சீடர்கள், ஆவியாரால் அருட்பொழிவு பெற்று, துணிச்சலோடு நற்செய்தி பறைசாற்றப் புறப்பட்டனர்.

🟣துன்ப துயரங்களை தூசி என எண்ணினர்.

🟡கிறிஸ்துவுக்காய் தங்கள் உயிரை துச்சமெனக் கருதி நற்செய்தியை பறைசாற்றினர்.

🔴அன்று ஆவியின் அருட்துணையோடு, வலிமை பெற்று தாங்கள் கண்டதை, கேட்டதை, அனுபவித்தவற்றை அறிவித்ததன் விளைவே இன்று நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைக்கிறோம்.

சீடர்கள் பணியை

மாற்கு 16:20 "அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தி பறைசாற்றினர்"

இவ்வாறு சீடர்கள், திருத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட பணி இன்று நமக்கும் வழங்கப்படுகிறது. இயேசுவின் பணி திருவை வழியாக செயலாற்ற வேண்டும் உலகின் கடை எல்லை வரை சான்று பகர விண்ணேற்பு அழைக்கிறது.

இன்று நம் வாழ்வில் வழிபாடு விடுக்கும் அழைப்பு

🔴நாம் நற்செயல்களால் உலகில் சாட்சியாய் இருக்கவும்

🔵நற்செய்தி பறைசாற்றவும் ஆகும்.

நம்வாழ்வு சான்றாகும்போது

♦️பிளவுகள் இல்லை

♦️ஏற்றத்தாழ்வுகள் இல்லை

♦️வேறுபாடுகள் இல்லை

உண்மையான உறவு சமூகம் உருவாகும். நம் வாழ்வு புறஇனத்தார்க்கு இருள் அகற்றும் ஒளியாக அமையும்.

🟣நம் வாழ்வு கிறிஸ்துவின் மனநிலையை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். நம் எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்பாடுகள் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையோடு ஒத்துப் போக வேண்டும்.

🔵எனவே சான்று என்பது நம் வாழ்வின் அனுபவம். நாம் சுவைத்த, அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு வழங்குதலே சான்று வாழ்வு.

🟢எனவே விண்ணேறிச் சென்ற ஆண்டவரிடம் சான்று வாழ்வு வாழ வரம் வேண்டுவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment