Friday, May 17, 2024

தூய ஆவி ஞாயிறு பெருவிழா- ஞாயிறு மறையுரை -19.05.2024.

  👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

தூய ஆவியார் பெருவிழா

19.05.2024

திருத்தூதா்பணிகள் 2: 1 - 11,

கலாத்தியர் 5: 16 - 25,

யோவான் 15: 26- - 27, 16:12 - 15.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


ஒன்றிணைத்து வழிநடத்தும் ஆவியார்

🟣யூதர்கள் மூன்று மாபெரும் விழாக்களை கொண்டாடினர்  

(i) பாஸ்கா திருவிழா

(ii) பெந்தேகோஸ்தே விழா

(iii) கூடாரத் திருவிழா என்பனவாம்

🟢 "பெந்தேகோஸ்தே" என்பதற்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். அதாவது செங்கடலைக் கடந்து பாஸ்கா விழாவை கொண்டாடி முடித்த ஐம்பதாவது நாள்.

🔵 "பெந்தக்கோஸ்தே" திருநாள் அறுவடை விழா என்றும் முற்கனிகள் விழா என்று அழைக்கப்பட்டது.

விப 23:16 "வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும் போது, அறுவடைவிழாவும்" என்று அறிவுறுத்துகிறது.

🟣அறுவடையின் இறுதியில், பெற்ற நல்ல அறுவடைக்கு நன்றி செலுத்தும் நாளாக முதலில் கொண்டாடப்பட்டது.

🔴அன்று யூதர்கள் புதுப்பலனுக்குரிய காணிக்கைகளை இறைவனுக்கு பலியாக்கினார்

லேவியர் 23:16 "ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புதுப் உணவுப் படையலைச் செலுத்துங்கள்"

🟡இவ்வாறு பாஸ்கா விழாவில் தொடங்கிய அறுவடையும் அதை ஒட்டிய நன்றியுணர்வும், பெந்தகோஸ்தே விழாவில் நன்றி பலியோடு நிறைவுற்றது.

🟢இத்தகைய ஒரு மாபெரும் நன்றி விழாவின் போது இறைவன் தன் ஆற்றலையும், கொடைகளையும் ஈந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி, ஒன்றிணைத்து திருச்சபையை நிறுவியது, மிகப்பொருத்தமாக அமைகிறது.

🔵ஆவியின் உடனிருப்பும், உறுதிப்பாடும், பணி வாழ்வுக்கான தேர்ந்து தெளியும் ஞானத்தையும் தூய ஆவியார் வழங்குகிறார்.

நிகழ்வு

அல்பேனியா நாட்டில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்து ஆக்னஸ் கோஞ்சா என்று பெயரிடப்பட்ட குழந்தை வளர்ந்து தன் 17-வது அகவையில் லொரேட்டா என்ற துறவறசபையில் இணைந்து அருள் சகோதரியாக மாறினார்.

1928 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சேரி பகுதிக்கு வந்து அன்புப் பணியும் அறப்பணியும் ஆற்றினார். 1950 - ஆம் ஆண்டு பிறரன்பு பணியாளர் சபை என்ற சபையைத் தோற்றுவித்த அன்னை தெரசா மரணத்தை எதிர்க்கும் பெண் இறைவாக்கினராக வாழ்வின் கலாச்சாரத்தின் அடையாளமாக, வரலாறாக மாற அவர் கொண்ட இறைபற்று அடிப்படையாயிற்று. புதிய சபையைத் தோற்றுவித்த போது உண்மையை உணர்த்தும் ஆவியார், திடம் கொடுத்து, ஆற்றல்படுத்தி மாண்புறச் செய்தார். சேரியில் கால் பதித்து ஏழைகளின் வாழ்வில் அன்புத் தடம் பதித்த அன்னை தெரசா புனித தெரசாவாக உயர்த்தப்பட்டது ஆவியின் அருட்செயலே. 1997 ஆம் ஆண்டு 5 - ம் தேதி இறையடி சேர்ந்த போது பிறரன்பின் பணியாளர் சபை 123 நாடுகளில் அன்புப் பணியாற்றியது. சேரியில் சிறிதாய் தொடங்கிய சபை உலகம் முழுவதும் பரவ ஆவியின் உடனிருப்பும், உறுதிப்பாடும் ஊக்கப்படுத்தியது.

இன்று திருஅவை தூய ஆவியாரின் விழாவை கொண்டாடும் போது இன்றைய முதல் வாசகம் தூய ஆவியின் ஒன்றிணைப்பை நமக்கு உணர்த்துகிறது.

1. ஒன்றிணைக்கும் ஆவியார்

🔴ஆண்டவரின் மரணத்திற்குப் பிறகு சிதறுண்டச்  சீடர்கள் தங்கள் பணி, இலக்கு இவற்றைத் தொலைத்தனர். பெந்தேகோஸ்தே விழாவின் போது எல்லாரும் ஒன்றாயினர். ஒன்றான திருத்தூதர்கள் மேல் தூய ஆவி இறங்கினார்.

திபணி 2:4 "அவர்கள் அனைவரும் தூய ஆவியில் ஆட்கொள்ளப்பட்டார்கள்"

♦️எண்ணத்தால், பணியால் சிதறுண்டவர்கள், ஆவியால் ஒன்றாய் இணைக்கப்பட்டனர்.

♦️தூய ஆவி நிரம்பி பேசிய திருத்தூதர்களின் போதனைகளை பல்வேறு இன மக்கள் அவர்களின் மொழிகளில் கேட்டு பரவசமடைந்தனர்.

திபணி 2:7 "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?" தூய ஆவியார் மொழிகளையும் கடந்து மக்களையும் ஒன்றிணைத்து வழி நடத்துகிறார்.

திபணி 2:8 "அவ்வாறிருக்க நம்முடைய தாய் மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி என வியந்தனார்"

2. திடப்படுத்தும் ஆவியார்

ஆண்டவர் இயேசுவின் மரணத்திற்கும் பின்னைய நிலையை யோவான் விளக்கும்போது

யோவான் 20:19 "வாரத்தின் முதல், அது மாலை வேளை, யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர்" இப்படி அடைபட்டுக் கிடந்தவர்களை தூயஆவி எனும் நெருப்பு பயத்தை எரித்துத் திடப்படுத்தியது. யூதச்சங்கம் திருத்தூதர்களை கிறிஸ்துவை குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிட்டது. ஆனால் ஆவியால் நிரப்பப்பட்ட பேதுருவும், யோவானும்

திபணி 4:20 "என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது" என்று பேசும் அளவிற்கு துணிவு பெற்றனர்.

♦️மீட்பின் செய்தி மரியாவிற்கு அறிவிக்கப்பட்டபோது மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிய போது, தூதர்

லூக்கா 1:30 "மரியா அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர்"

லூக்கா 1:35 "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்." என்று தூதனால் அறிவுறுத்தப்பட்டபோது, ஆவியின் அருள் பெற்ற மரியா திடன் பெற்று நான் ஆண்டவரின் அடிமை என்று தந்தை கடவுளிடம் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

3. சமாதானம், அமைதி அருளும் ஆவியார்

தூய ஆவியாரின் கனிகளாக தூய பவுல் அறிவுறுத்தும் போது

கலாத்தியர் 5:22 "தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" என்று அறிவுறுத்துகிறார்.

தூய ஆவியாரின் கனிகள், ஒரு அமைதியான, சமாதானம் நிறைந்த வாழ்விற்கான வழிமுறைகளாக அமைந்திருக்கிறது.

இயேசு சீடர்களுக்கு அறிவுரை வழங்கும்போது அல்லது அவர்களைப் பண்படுத்தும் போது,

யோவான் 14:27 "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன். நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றதல்ல" என்று உள்ளம் கலங்காமல், மருளாமல், திடமாய் வாழ அறிவுறுத்துகிறார்.

ஆவியின் கனிகளால் நிரப்பப்பட்டவர்கள் இறைவன் அருளும் அமைதியைப் பெறுவார்கள்.

🔴தூய ஆவியார் நமக்கு அருளும் அமைதி, மயான அமைதி அன்று. மாறாக நம்மை அன்பு செயல்களுக்குத் தூண்டும் உறவு நிலையாகும். உள்ளத்தில் உறவுநிலை ஊற்றெடுத்தால், உள்ளத்தில் நிறை மகிழ்வும், நிறைய அமைதியும் குடிகொள்ளும்.

பெந்தக்கோஸ்தே விழா இன்று நமக்கு விடுப்பு அழைப்பு :

ஆவியின் அனுபவம் நம்மை சரியான புரிதலுக்கு இட்டுச் செல்லட்டும்.

♦️குடும்பத்தில் புரியும் படியாய் பேசுவதும், செயலாற்றுவதும் ஆவியின் அருட்செயல் என்பதை உணர்வோம்.

♦️மக்கள் உணர்வுகளை புரியாமல் பேசுவதல்ல மாறாக மக்களின் உணர்வுகளைப் புரிந்து, தேவையை அறிந்து செயலாற்றுவது. 

ஆண்டவர் இயேசு இதைச் செய்தார் எனவே மக்கள் எவ்வாறு ஆண்டவரை பார்த்தனர் என்பதை

லூக்கா 4:20 "அனைவரின் கண்களும் அவரையே உற்று நோக்கியது" ஏனெனில் மக்களின் வாழ்வைப் பற்றிப் பேசினார்.

🔴பிள்ளைகள், பெற்றோர் - உரையாடல் அர்த்தமுள்ளதாய், வாழ்வு கொடுப்பதாய் அமைய வேண்டும்.

🔵உரையாடல் - உறவை வலுப்படுத்தும். நல்ல உரையாடல் கனிவான சொற்களைக் கொண்ட உரையாடல்களாக அமையட்டும்.

🟢பிரித்தாளும் கயமைத்தனங்கள், முன்னுக்குப்பின் முரணான பேச்சு, செயல்பாடுகளை களைந்து உண்மையோடும் நேர்மையோடும் வாழ வரம் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment