Friday, May 24, 2024

மூவொரு கடவுள் பெருவிழா- ஞாயிறு மறையுரை -26.05.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

மூவொரு கடவுள் பெருவிழா

26.05.2024

இணைச் சட்டம் 4:32-24,  39-40,

உரோமையர் 8: 14 - 17,

மத்தேயு 28: 16- - 20.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

ஒன்றாய் செயல்படுவோம்

🟢ஒரே கடவுள் மூன்று ஆள் நிலை என்பதை பகுத்தறிவினாலோ, அறிவியலினாலோ, விஞ்ஞான வளர்ச்சியாலோ புரிந்து கொள்ள இயலாது. மாறாக நம் தனிப்பட்ட இறை உறவினால், இறையனுபவத்தால் புரிவது எளிது.

🔵தந்தை, மகன், தூய ஆவியார். மூன்று வேறுபட்ட மனிதர்கள் என்று புரிவதை விட ஒவ்வொரு காலத்திலும் இறைவன் தன் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்திய "உறவு நிலை" எனலாம்.

🔴திருமறையில் தந்தை கடவுள் படைப்பவராக, உருவாக்குபவராக, உயிராற்றல் வழங்குபவராக பார்க்கின்றோம்.

🟡மகன் இயேசு - நம்மை, மீட்பராக, வாழ்வு தருபவராக, வழிகாட்டுபவராக, பாதுகாப்பவராக பார்க்கின்றோம்.

🟣தூய ஆவியார் - தேற்றுபவராக, திடப்படுத்துபவராக, ஒருங்கிணைப்பவராக, செயலாக்கத்திற்கு அழைத்து செல்பவராக அறியப்படுகின்றோம்.

🟢காலம் மற்றும் செயல்களால் தமதிருத்துவம் தந்தையாய், மகனாய் , தூய ஆவியாராய் அறியப்படுகின்றோம்.

🔵இறைவனை பண்பு நலன்களால், செயலாற்றலால் அறியலாம்.

🔴இறைவனை சக்தி, ஆற்றல், எலக்ட்ரிக் பவர் என்று கொள்வோமாயின் இந்த சக்தியின் செயல் எல்லாம் ஒன்றாய் அமைவதில்லை.

🟡பல்பு - மின் ஆற்றலால் ஒளிர்கிறது. மின்விசிறி - மின் ஆற்றலால் சுழல்கிறது. மிக்ஸி - மின் ஆற்றலால் அரைக்கிறது. ஒரே ஆற்றல் செலுத்தும் மின் பொருள்களுக்கு ஏற்ப பயன் மாறுபடுகிறது. இதுபோல் ஒரே இறைவன் ஆற்றல் மிக்கவர், காலம், செயல்களுக்கு ஏற்றவாறு தந்தையாய், மகனாய் , தூய ஆவியாராய் புலப்படுகிறார்.

🟣இன்றைய விழா தந்தை, மகன், தூய ஆவியாரின் அன்பின் ஆழத்தையும், செயலாற்றலையும், உறவின் வலிமையையும் ஒன்றிப்பின் தேவையையும் உணர்த்துகிறது.

நிகழ்வு

திருமிகு கிரஹாம் ஹில் என்பவர் தன்னுடைய The power of Glory (மகிமையின் ஆற்றல்) என்ற நூலில் நிகழ்வு ஒன்றை விளக்குகிறார். Fr. மோன்டேயஸ் என்பவரின் பணி வாழ்வின் சவால்களும் துன்பங்களும் விளக்கப்படுகிறது.


மெக்சிகன் மாகாணத்தில், கிறிஸ்துவை ஆராதிப்பது, வணங்குவது, வழிபடுவது, வழிபாடு எல்லாம் தடை செய்யப்பட்டது. இவ்வேளையில் அரசுக்கு தெரியாமல் மக்களைச் சந்தித்து, அவர்களைத் திடப்படுத்தி, திருப்பலி நிறைவேற்றி விசுவாசத்தில் மக்களை உறுதிப்படுத்தினார். இச்செய்தி அரசுக்கு தெரிய வர அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அருட்தந்தை ஆன்மீகப் பணியாற்றியது உண்மை என்று தெரிய வர Fr. மோன்டேய்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நாளிலிருந்து புதிய அருட்தந்தை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். ஒரு நாள் கூட ஆன்மீகப்பணி தடைபடவில்லை எப்படி இந்தத் துணிச்சலை பெற்றார். ஆண்டவர் இயேசு சீடர்களைப் பணிக்கு அனுப்பும் போது கூறிய வார்த்தைகள் அவரை தெம்பூட்டின.

மத்தேயு 10:28 "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற வார்த்தைகள் வலுவூட்டின. அருட்தந்தை அவர்கள் பணி வாழ்வில் அடிக்கடி கூறுவது என்னைப் படைத்தவரும், எனக்காய் மடிந்து, உயிர்த்து, என்னைப் பாதுகாப்பவரும், என்னை வலுவூட்டுகிறவருமான திரித்துவ இறைவன் என்னோடு உண்டு என்பதுதான்.

🟢இயேசுவின் பணியிலும், வாழ்விலும் திருத்துவ கடவுளின் செயல்பாடுகள் நிறைந்து செயல்படுவதை நாம் திருவிவிலியத்தில் பார்க்கின்றோம்.

(i) இயேசுவின் திருமுழுக்கின் போது மத்தேயு 3:16, 17 வசனங்கள்

மத் 3:16 "வானம் திறந்ததையும், கடவுளின் ஆவி புறா இறங்குவதைப் போல தன் மீது வருவதையும் அவர் கண்டார்".

மத் 3:17 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்ற பகுதிகள் தமது கிறிஸ்தவ ஒன்றிப்பை உணர்த்துகிறது.

(ii) இயேசுவின் உருமாற்றம்      மாற்கு 9 :7

மாற் 9:7 "மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற நிகழ்விலும் திரித்துவ செயலை நாம் அளிகின்றோம்.

(iii) இயேசு தம் சீடர்களை திடப்படுத்தும் போது

யோவான் 15:26 "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார் ..... அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்று சீடர்களை தமத்திருத்துவ பெயரால் திடப்படுத்துவதை பார்க்கின்றோம்.

1. கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கமே திரித்துவம்

நம்மை கடவுளின் பிள்ளைகளாக்குகின்ற அருளடையாளமான திருமுழுக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று நம்மை இறையுறவில் நிலைப்படுத்தும் அருள் அடையாளங்கள் திரித்துவ கடவுளின் பெயராலே வழங்கப்படுகிறது எனவே தூய பவுல் 

கலா 4:16 "நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தன் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார். அந்த ஆவி அப்பா, தந்தையே என கூப்பிடுகிறது" என்றும்

உரோ 8:15 "மீண்டும் அச்சத்திற்குள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையே பெற்றுக் கொண்டீர்கள்" என்கிறார். கிறிஸ்தவ வாழ்வில் நாம் நிலைக்கும் போது அவரின் உரிமைச் சொத்து, அன்பு பிள்ளைகள் என்ற பேற்றை இறைவன் அருளுகின்றார்.

2. திரித்துவம் கிறிஸ்தவ சமூகத்தை ஒன்றிணைக்கிறது.

இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். ஆயினும் அவரைத் தேடுவோரை தாம் தேர்ந்தெடுத்து தமக்குரியவராக்கி, ஏற்புடையவராகி மாட்சியில் பங்கு பெறச் செய்வார்.

எபே 2:19 "இனி நீங்கள் அன்னியர் அல்ல, வேறு நாட்டினரும் அல்ல இறைமக்கள் சமூகத்தின் உடன்குடி மக்கள்" எபே. 2:20 "கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்" என்று பிளவுகளற்ற, உறவின், அன்பின் பிள்ளைகளாக இணைந்து வாழ அழைக்கப்படுகின்றோம். நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில், கிறிஸ்துவின் சகோதரருமாய் விளங்குகிறோம். எனவே நாம் வாழும் குடும்பம், அன்பியம், திருஅவை உறவின், அன்பின், ஒன்றுப்பின் திருஅவையாக விளங்க திாித்துவம் நம்மை அழைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, சீடர்களை நற்செய்தி பணிக்கு அனுப்பும் போது, அவர்களை எப்படி பண்படுத்தி அனுப்புகிறார் என்பதை எடுத்தியம்புகிறது. நற்செய்தி இயேசுவின் இரு பண்புகளை உறுதிப்படுத்துகிறது.

1. இயேசுவின் அதிகாரம்

உயிர்த்த இயேசுவுக்கு உலகனைத்தும் உரிமையாகிறது. இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடும் ஆற்றலை திருமறை உணர்த்துகிறது.

மத் 28:18 "விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது" என்பதன் வழியாக, இறைவன் உலகின் மீது அதிகாரம் படைத்தவர் என்பதை உணர்த்துகிறது. இந்த அதிகாரத்தால், தம் சீடர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு

மத் 28:19 "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற கடவுளின் அதிகாரம் நாமும் சீடராகி, பிறரையும் சீடராக்குவது அதற்கான அழைப்பை தருகின்றார்.

2.இயேசுவின் வாக்குறுதி

இறையாட்சிப் பணிக்காக, என் சீடர்களாய் கடந்து செல்லும் போது நீங்கள் தனித்து இல்லை. மாறாக மத் 28:20 "உலகு முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற உறுதிப்பாடும்

யோவான் 14:18"நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் உங்களிடம் திரும்பி வருவேன்" என்ற உடனிருப்பை வழங்கி திடப்படுத்துகிறார். பணி வாழ்வில் பயணிக்கிறார், பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய விழா உணர்த்துகிறது.

திரித்துவம் நமக்கு உணர்த்துவது


🔵ஒருங்கிணைந்த, ஒன்றித்த செயல்பாடு வளர்ச்சியின் அடையாளம்.

🔴ஒருங்கிணைந்த வாழ்வு, பணிவாழ்வை ஆழப்படுத்தும்.

🟡அன்பியங்கள் சாட்சிய வாழ்வின் அடையாளங்களாய் மாற வேண்டும்.

🟣குடும்பங்கள் திாித்துவத்தின் பிரதிபலிப்பு, தந்தை, மகன், தூய ஆவியார் போல தந்தை தாய், பிள்ளைகள் ஒன்றிப்பின் உறவின் வெளிப்பாடு.

🟢தமத்திருத்துவத்தின் உறவு நிலை வணங்கப்பட வேண்டியதல்ல, வாழ்வாக்கப்பட வேண்டியது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment