தேனருவி மீடியா
பொதுக்காலம் 10-ம் ஞாயிறு
09.06.2024
தொநூ
3:9-15,
2 கொரி 4: 13, 5 : 1,
மாற்கு
3: 20 - 35.
அருட்பணி.
ஜெரால்டு
ஜெஸ்டின்
குழித்துறை மறைமாவட்டம்.
இறை திருவுளம் நிறைவேற்றுவோம்
🔴இயேசு தன் போதனையாலும், பணியாலும் மக்களிடையே மிகவும் அறியப்பட்டவராய் இருந்தார்.
🟣தந்தை கடவுளின் வல்லமையாலும், தூய ஆவியின் ஆற்றலாலும் நிறைந்து பணியாற்றுகிறார் என்பதை மக்களோ, உறவுகளோ புரிந்துகொள்ளவில்லை.
🔵இறைமகன் இயேசுவின் பணியையும், புதுமைகளையும் பரிகசித்து, பழித்துரைத்தனர், தீய ஆவியோடு இணைத்துப் பேசினர்.
🟡இயேசுவின் செயல்பாடு, புதுமைகள் அனைத்தும் விண்ணரசின் வெளிப்பாடாக அமைந்தது. ஏனெனில் யூதர்கள் சாத்தானை வலிமை மிக்கவனாகப் பார்த்தனர். ஆனால் ஆண்டவர் இயேசு தீய ஆவியையும் கடிந்து வெளியேற்றியபோது இயேசுவின் ஆற்றலை குறித்து அச்சப்பட்டனர். நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளவும், அந்த நம்பிக்கையின் ஒளியில் வாழ்வை கட்டமைக்கவும், இறைத்திட்டத்திற்கு ஏற்ப வாழவும் வழிபாடு அழைக்கிறது.
இறை திருவுளம் என்பது ...
தொடக்கத்தில் எல்லாவற்றையும் படைத்து ஒழுங்குபடுத்திய கடவுள் தான் படைத்த, உருவாக்கிய அனைத்தும் சிறப்புற அமைந்ததை எண்ணி மகிழ்ந்தார்.
தொநூ 1:31"கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன"
தம் சாயலாய் படைக்கப்பட்ட மனிதன் - வானத்துப்பறவைகள், கால்நடைகள், மண்ணுலகம் முழுவதையும் ஆண்டு வழிநடத்தப் பணித்தார்.
எல்லாவற்றையும் ஆள, வழிநடத்தப் பணித்தக் கடவுள் தொநூ 3:3 "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது" என்று கண்டிப்புடன் தன் திட்டத்தை, தன் விருப்பை இறைவன் எடுத்துரைத்தார். ஆனால் மனித பலவீனம், அல்லது மனித சுயநலம் அல்லது மனித பேராசை கடவுளின் விருப்புக்கு எதிராக செயல்படுவது. எனவே தான் கடவுளின் திட்டத்திற்கு எதிராக, கடவுளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டனர். எதை உண்ணக்கூடாது என்றாரோ அதையே உண்டனர்.
தொநூ 3:6 "பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டார் அதை தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தார். அவனும் உண்டான்" இவ்வாறு கடவுளின் திருவுளத்திற்கு எதிராக, கடவுளின் விருப்பத்திற்கு எதிராக செயலாற்றினான். யோ 3:4 "பாவம் செய்யும் அனைவரும், சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவது பாவம்"கடவுளின் அருள் நிலையிலிருந்து, மனிதன் விலகலானான் என்பதும், கடவுளின் திருவுளத்தை விட மனித சுயநலமே பெரிதென நினைத்தலும் புலப்படும்.
மனித மனநிலை
இறை விருப்பத்திற்கு எதிராக மனிதன் செயல்பட்ட போது கடவுள் மனம் வருந்தினார். தன் சாயலில் படைக்கப்பட்டவன் தன் கட்டளைகளை மீறியதால் தொநூ 6:6 "மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது"
மனிதன் தன் கட்டளைகளை மீறி தவறிய போது மனம் வருந்திய கடவுள். தன் தவறை ஏற்றுக் கொள்ளாதபோது துயரமடைந்தார். ஏனெனில் ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்து விலகி மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டனர். ஆண்டவர் ஆதாமிடம் நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்க ? நான் ஆடையின்றி இருந்தேன் எனவே நான் ஒளிந்து கொண்டேன் என்றான். நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ? என்று கேட்க அந்த பெண் மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள் என்றான். நீ ஏன் இவ்வாறு செய்தாய் என்று பெண்ணைக் கேட்க பாம்பு என்னை ஏமாற்றியது. என்ற உரையாடல் முன்னுக்குப்பின் முரணாய் அமைவதைப் பார்க்கின்றோம்.
தவறுவது மனித இயல்பாயினும், அவற்றிற்கான மன வருத்தம் கொள்வதும் மனித இயல்பாக வேண்டும். ஆனால், அவற்றை குறித்து சிறிதேனும் மனக்கலக்கமோ குற்றவுணர்வோ இல்லாமல் இருப்பது நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்லும். இத்தகைய மனநிலையிலிருந்து கடந்து நன்மையானவற்றைச் செய்ய இறைவன் விரும்புகிறார்.
இரக்கத்தின் இறைவன்
இறைவன் அருளும், தயவும், நீடிய பொறுமையும், அளவில்லா இரக்கமும் பொருந்தியவர். மனிதனின் அக்கிரமத்தையும், தீமைகளையும், பாவங்களையும் போக்குகிறவர். தூய பவுல் கடவுளின் அருள் இரக்கத்தைக் குறித்துச் சொல்லும் போது,
உரோ 5:20 "பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது" கடவுள் நம்மை, தனது அருள் தந்து மீட்டதால் பாவத்தின் கொடுக்கு ஒடிக்கப்பட்டது. இதோடு ஆதாம் ஏவாள் வழி மற்றொரு நற்செய்தியை வழங்குகிறார் இறைவன் .
தீமையை, ஏமாற்றி விதைத்ததை பாம்புக்கும் பெண்ணுக்கும் (இந்தப் பெண் மரியாவின் முன் குறிப்பு) பகையை உண்டாக்கி இந்தப் பெண்ணின் வித்தாகிய கிறிஸ்து, பாம்பின் வித்தாகிய பாவத் தளையை அறுத்தொழிப்பார். எனவே நாம் மீட் படைவோம் என்ற நற்செய்தி இறைவன் வழங்குகின்றார்.
இன்றைய நற்செய்தியில், பாவத் தளைகளை ஒழிக்க வந்த நற்செய்தியாகிய இறைமகன் இயேசு இறையாட்சிப்பணி புரிந்த போது, யூத சமூகமும், உறவுகளும் அவரை சரியாய் புரிந்து கொள்ளாமல் வசைப்பாடினர்.
உறவினர் மனநிலை
இயேசு சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்ததால், மக்கள் கூட்டம் அவரை அதிகமாகவே நெருக்குகிறது. நோயிலிருந்தும், தீய ஆவியிடமிருந்தும் விடுதலைக்கும், நலமான வாழ்வுக்குமாய் அவரை நெருங்கினர். மக்கள் கூட்டமாய் அவரை நெருங்கியதால் உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை இதனைக் கேள்விப்பட்ட உறவினர்கள் மாற்கு 3:21 "அவர் மதிமயங்கி இருக்கிறார்"என்று சொல்லி அவரை பிடித்து கொண்டு போக வந்தனர்.
இந்த உறவை அடிப்படையாக வைத்து இயேசுவின் மேல் உரிமை கொண்டாடினர். ஆனால் இயேசு தூய ஆவியால் யார் இயக்கப்படுகிறார்களோ அல்லது தந்தை கடவுளின் விருப்பை நிறைவு செய்பவர்கள் எல்லாரும் என் தாயும் சகோதரர்களும் என்றார். மாற்கு 3:35 "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் என்றார்"
இவ்வாறு கூறியதால் தன் தாயைப் புறக்கணித்தார் என்று பொருள் கொள்ளக்கூடாது. லூக்கா 1:39 "நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று தன்னை கடவுளின் முன் தாழ்த்திய மரியாவை தவிர வேறு யார் கடவுளின் விருப்பை நிறைவேற்றியது. இயேசு இங்கு கூற விரும்புவது இரத்த உறவு, நட்பை விட ஆன்மீக உறவும், ஆன்மீகப்பணியும் மேலானது. மரியா இயேசுவின் தாய் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அவள் தந்தை கடவுளுக்கு அடிமை போல் கீழ்படிந்தது போல், நாமும் செயலாற்ற அழைக்கிறார் இயேசு.
இயேசுவின் வல்லமை
இயேசுவின் வருகையால் விண்ணரசு வந்து விட்டது. அதன் செயலாகத்தான் விண்ணரசுக்கு எதிரான எல்லாவற்றின் மீதும் வெற்றிக் கொள்கிறார். சிறப்பாக, நோய்களைக் குணப்படுத்துகிறார், ஊனமுற்றவரை நலமாக்குகிறார், பார்வையற்றவர் பார்க்கின்றனர். இறந்தவர் வாழ்வு பெறுகின்றனர். குறைகள் மாற்றப்படுகிறது. (கானா திருமணம்) பேய்கள் ஓட்டப்படுகிறது. இதனால் மக்கள் இயேசுவை பின் தொடர்ந்த போது, எரிச்சல், கோபம் கொண்ட மறைநூல் அறிஞர்கள் மாற்கு 3:22"இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்று பழித்தனர். இயேசு அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைக்கிறார்.
🟣சாத்தான் இன்னொரு சாத்தானை விரட்ட முடியாது, அப்படி விரட்டினால் சாத்தானின் அரசு பிளவுபடும். நிலைத்து நிற்காது, பாழாய் போகும். அதுவே தீயவனின் அழிவாய் மாறிப்போகும்.
🔵யூதர்கள், பரிசேயர் எண்ணங்களில் சாத்தான் மிக வலிமை வாய்ந்தவன். அதன் மீது வெற்றிக் கொள்வது என்பது நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று, இவ்வேளை இயேசு அதனை அடக்கி ஆளும்போது இயேசு அதன் மீது அதிகாரம் உடையவர் என்பதையும் நிரூபணமாக்கினார். இதன் வழியாக இயேசு நமக்கு உணர்த்தும் பாடம்
🟣தீய ஆவிக்கும், சாத்தானுக்கும் மனித குலத்தின் மீது யாதொரு வலிமையும் இல்லை.
🟣வலிமை வாய்ந்தவன் பேய் என்று நினைத்தவர்களுக்கு வலிமை வாய்ந்தவனை அடக்கிய வலிமையுள்ளவர் உங்களுக்காக, உங்களோடு இருக்கிறேன் என்றும்,
🟣தீய சக்திகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை, ஏனெனில் எல்லாவற்றிற்கும் மேலான சக்தியே இயேசு தான் என்பதை உணரச் செய்தார்.
திபா 4:12 "இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்த பெயரும் கொடுக்கப்படவில்லை"எனவே இதனை உணர்ந்து நம்பிக்கையோடு இறை திருவுளம் நிறைவேற்றும் மக்களாவோம்!
இன்று நம் வாழ்வில் இறைவிருப்பத்திற்கு மாறாக
நாம் எவ்வாறு செயலாற்றுகிறோம் என்பதை சிந்தை செய்வோம்!
🔵நமது சுய விருப்புகளுக்காக பொது நியமங்களை, வழிமுறைகளை நாம் உதாசீனப்படுத்துகிறோமா?
🔴பேராசை பேய்கள் நம் மனதிலே சலங்கை கட்டி ஆட்டம் போட்டு அறநெறிச் சிதைவிற்கு வழி வகுக்குறோமா?
🟣வாழ்வில் பிரச்சனைகள் எழும் போது இயேசுவின் பாதையில் பயணிப்பதை விடுத்து வேற்றுத் தெய்வங்களை நாடிச் செல்கிறோமா?
🔵சுயநலப்பேய்கள், பொறாமை பேய்கள் நாம் வாழும் சூழலில் நம்மை பிரித்தாளும் செயலுக்கு கருவியாய் பயன்படுத்த காரணமாகிப் போகிறோமா?
சிந்திப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment