Friday, June 14, 2024

பொதுக்காலம் 11-ம் - ஞாயிறு மறையுரை -16.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

16.06.2024

எசேக்கியேல் 17 : 22-24,  

2 கொரி 5: 6 - 10,

மாற்கு 4: 26 - 34.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இறையாட்சி என்பது...

🔵எங்கெல்லாம் கடவுளை நாம் அன்பு பெற்றோராகவும் (தாய்,தந்தை) பிறரைச் சகோதர சகோதரிகளாகவும் ஏற்று நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற உயர்வான, சமத்துவ உணர்வோடு செயல்படுகிறமோ அங்கு இறையாட்சி குடிகொள்ளும்.

🟣நாம் அனைவரும் இறைசாயல் என்று மதிக்கப்படும் இடத்தில் இறையாட்சி மலரும்.

🔴மானுட நேய பண்புகளோடு, மனித உரிமைகள் மதித்து பாதுகாக்கப்பட்டால் அங்கு இறையாட்சி மணம் வீசும்.

🟡மொத்தத்தில் கிறிஸ்துவின் மனநிலையும், கிறிஸ்துவின் செயல்பாடுகளும் நிலைபெறுவதே இறையாட்சி.

இராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் கூற்றை நாம் நினைவு கூறுவோம், "ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு அறுவடை செய்தீர்கள் என்பதைவிட எவ்வளவு விதைகளை விதைத்தீர்கள் என்பதை வைத்தே அந்த நாளை மதிப்பீடு செய்யுங்கள்

இறைவார்த்தை நம்பிக்கையை வளர்க்கும் விதை

இறை வார்த்தை நீதியை நிலைநாட்டும் விதை

இறைவார்த்தை சகோதர அன்பை வழங்கும் விதை.

இவற்றை நாம் நம் வாழ்வில் விதைத்தால் இறையாட்சி நம்மிடையே நிலைபெறும்.

🔵இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும், சிறிய விதையாகிய இறையாட்சியும் எவ்வாறு மக்களுக்கு பயன் நல்குகிறது என்பதை விளக்குகிறது.

🔵கேதுரு மரத்தின் நுனியும், கடுகும் மிகச்சிறியது அது போல, இயேசுவின் இறையாட்சி பணியும் மிகச்சிறியது. ஆனால் அவை எப்படி பயன் நல்குகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.

🔵இறையரசுக்கு எல்கை, பரப்பு, அமைச்சு, அமைச்சகம், ஆளுநர் போன்றவை இல்லை.

🔴மேலோட்டமான அமைப்புகளுக்குள் அடங்கி விடுவதல்ல.

🔴இது விண்ணில் அல்லது மேலே அமைந்துள்ளதும் இல்லை மாறாக

இறையாட்சி

நம்மில்

நம் செயலில்

நம் வாழ்வில்   - வெளிப்பட வேண்டும்

ஆண்டவர் இயேசு மாற்கு நற்செய்தியின் தொடக்கத்திலும் மாற்கு நற்செய்தியின் இறுதியிலும் இறையாட்சியின் நற்செய்தியை நம்பவும், சான்று பகரமும் அழைக்கின்றார்.

மாற்கு 1:15 "இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்றும், மாற்கு 16:15 "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்" என்றும் பணி வாழ்விற்கு தம் சீடா்களை அனுப்புவதை பார்க்கின்றோம்.

🟣இயேசுவின் எளிய இறையாட்சி பணியில் ஏழைகளுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்  விடுதலையின் காற்றை சுவாசித்தனர்.

🟣எளியவரை இனம் காணும் கனிந்த இதயம் கிடைக்கும் என்று அறிவித்த போது, ஆள்பவர்களால் மெசியாவின் அரசை அடைய முடியாதபடி அவர்களின் உள்ளங்கள் ஈரமற்று உலர்ந்து, மலட்டுத்தன்மை எய்தியது. அவர்களால் இறையரசை கிறிஸ்துவில் காண முடியவில்லை. இறையாட்சியில், எளிய உள்ளம் கொண்டோர், துன்புறும்  மக்கள், கனிவான உள்ளம் உடையோர், நீதிக்கான தாகம் உடையோர், இதயத்தில் ஈரம் உள்ளோர், தூய உள்ளம், அமைதி ஏற்படுத்தும் ஏக்கம் கொண்ட மதிப்பீடுகள் நிலை பெற்றிருக்கும்.

நிகழ்வு

கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் சிறுபான்மை வெள்ளையர்கள் பெரும்பான்மை கருப்பின மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தென்னாப்பிரிக்க கறுப்பின மக்கள் உரிமைகளை இழந்த அடிமைகளாய், சொந்த மண்ணிலே அனாதைகளைப் போல் வாழ்ந்தனர். இவ்வேளை கருப்பின இளைஞன் நெல்சன் மண்டேலா விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போராட்டம் நேர்மையான, நீதியான, உண்மையான, அகிம்சை வழியில் அமைந்தது. ஆயினும் இனவெறி வெள்ளையர் அவரை பிடித்து சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர். 27 ஆண்டுகால வாழ்வை சிறையில் செலவிட்டார். 10.05.1994 அன்று தென்னாப்பிரிக்கா விடுதலையைப் பெற்றது.

"மண்டேலாவின் விடுதலைப் பயணம் அவ்வளவு எளிதல்ல கடினமான, துயர் மிகுந்த, துன்பங்கள் நிறைந்த வாழ்வில் தன்னம்பிக்கை எண்ணெயில் மக்களின் விடுதலைத் தீயை எரிய வைத்தார். பெற்ற விடுதலை -பாகுபாடற்ற, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த ஜனநாயக நாடாக மாற வழி வகுத்தது"

இத்தகைய பண்புகள் எல்லாம் இறையாட்சியின் பண்புகளே. எசேக்கியேல் 17: 24 "ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்வேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்வேன்" என்பது பழைய ஏற்பாட்டு காலத்தில்

🔵எகிப்து தேசம், பார்வோன் மன்னன் போன்றவை ஓங்கி வளர்ந்த மரமாயும், பசுமையான மரமாயும் இருந்தது. ஆனால் ஆண்டவர் அதனைத் தாழ்த்தி உயர்த்தினார்.

🔴இஸ்ரயேல் தாழ்ந்த, உலர்ந்த மரமாய் இருந்தது ஆனால் ஆண்டவர் மோசே, ஆரோன், யோசுவா வழியாக ஓங்கச் செய்து, தழைக்கச் செய்தார்.

இன்றைய நற்செய்தியில் இறையாட்சியை இரு உவமைகளால் விளக்குகிறார்.

1. தானாக முளைக்கும் செடி

விவசாயி பருவ காலத்தில் தன் நிலத்தில் விதையைத் தூவுகிறான். அது முளைத்து, வேரூன்றி, கிளைப் பரப்பி செடியாக வளர்கிறது. அவன் நீர்பாய்ச்சுகிறான். இதில் விவசாயின் பங்கு மிகச் சிறியது ஏனெனில் பருவ மழையைச் பெய்யச் செய்கிறவர் இறைவன்.

 


இணைச்சட்டம் 11: 17 "ஆண்டவரின் சினம் உங்கள் மீது வரும் மழையே இல்லாதபடி வானங்களை அவர் மூடி விடுவார். உங்கள் நிலம் தன் பலனைத் தராது அவர் உங்களுக்குக் கொடுக்கும் அந்த வளம்மிகு நாட்டினின்று விரைவில் அழிந்து போவீர்கள்" என்ற இறைவார்த்தையால் மழைபெய்யச் செய்கிறவரும், நிலத்தின் விளைச்சலை வழங்குபவரும் இறைவன். இதனைதான் தூய பவுல்  1 கொரி 3:7 "நடுகிறவருக்குப் பெருமையில்லை, நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை. விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" என்றார்.

🟢பயிர் எப்படி வளர்கிறது என்பது, விதைக்கிறவருக்குத் தெரியாது. அவன் இரவில் தூங்கி பகலில் விழிக்கிறான். விதைக்கு உயிர் சக்தியை வழங்கியவர் இறைவன்.

🟢இறைவன் உட்புகுத்திய உயிர் சக்தியில் விதை வளர்கிறது. விளைச்சலை இறைவன் வழங்குகிறார்.

🟢இறைவன் தானே இறையரசை நம் உள்ளத்தில் விதைக்கிறார் நாம் செய்வது யாதெனில்

♦️இறைவார்த்தை விதையை நம் உள்ளத்தில் ஏற்று, பண்பட்ட நிலமாக நம்மை மாற்ற வேண்டும்.

♦️விதைக்கப்பட்ட இறையரசு விதை நம் செயல்பாடுகளால் வளர தடையாக மாறி விடக் கூடாது.

♦️சுவர்களில், கட்டடங்களில் தானாக வளரும் செடி சுவர்களில் கட்டிடங்களை பிளக்கும். அதுபோல் இறையரசின் ஆற்றலை யாராலும் தடுக்க இயலாது.

♦️கதிர் முற்றியதும் அறுவடைக்காலம் வரும் இறையாட்சியின் மக்களாகிய நாம் நடுத்தீர்வை என்னும் அறுவடைக்கு தயாராக வாழ்வை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

♦️அந்நாளில் பதரினின்று நல்ல மணிகள் பிரிக்கப்படுவது போல் தீயவரினின்று நல்லோர் இறையாட்சிக்குரியவராய் பிரிக்கப்படுவர். எனவே நாம் முன்மதியோடு நற்செயல்களால் இறையாட்சிக்கு உரியவராவோம்.

2. சிறுவிதையின் வளர்ச்சி

கடுகு சிறிதாக இருந்தாலும், அது முளைத்து கிளை விட்டு வளர்வது போல இறையாட்சி வளர வேண்டும்.

🔵இறையாட்சியின் மக்கள் தொடக்கத்தில் சிறு சிறு குழுக்களாக உருவாகி, பின்னர் உலகம் முழுமையும் பரந்து வளர்வதை கடுகு விதை விளக்குகிறது.

🔴நமது விசுவாசம் கடுகைப் போல் நிலைப்புத் தன்மையாயும், உறுதியானதாயும் அமைய அழைக்கிறார் இறைவன்..

🟢வளர்ந்து, படர்ந்து கிளைவிடும் மரம் பல பறவையினகளுக்கு, அடைக்கலம் வழங்குவது போல இறையாட்சி எல்லா மக்களுக்கும், உயிரினங்களுக்கும் அடைக்கலமாய் அமையும். இதனை இறைவாக்கினர் எசேக்கியேல் வழி அறியலாம்.

எசேக்கியேல் 31:6 "வானத்து பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடு கட்டின. காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன. அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன"

🟣திருஅவையின் தொடக்கமும், வளர்ச்சியும் மிக எளியது. பலர் அழிக்க முயன்றனர். பல வல்லரசுகள் வளர்ச்சியை தடுத்தன. ஆனால் ஆண்டவர் உடனிருந்தார், வழி நடத்தினார் தூய பவுலின் கூற்றுப்படி

1 கொரி 3:6 "நான் நட்டேன், அப்பெல்லோ நீர் பாய்ச்சினார் கடவுளே விளையச் செய்தார்"

🔵இன்று திருஅவை பல நாடு, பலமொழி, பல இன மக்கள் அடைக்கலம் தேடும் தாய் வீடாக அமைந்துள்ளது.

🟡பரந்து விரிந்த பாதுகாப்பான இல்லம்.

🔴திருச்சபை தூய பரிசுத்த நகரம், தூய ஆலயம் புதிய எருசலேமாகத் திகழும். எனவே இறையாட்சி சிறிய கடுகு விதை பெரிய பலனை ஈவதைப் போல் நம்மில் நற்பண்புகள் நிறையும்போது நாம் இறையாட்சியின் விருட்சமாவோம்.

🟢கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நம்மில் திருமுழுக்கு வழியாக இறையருள் விதை விதைக்கப்பட்டது.

🟣இறைவார்த்தை ஒளிப்பெற்று, தூய ஆவி நீர் பருகி, நற்கருணை உரம் உண்டு, தமத்துருத்துவத்தைப் போன்று ஒன்றிப்பின் கனியாக நாம் திகழும் போது இறையரசு அர்த்தம் பெறுகிறது எனவே நாம் நம்மில்

🔵விசுவாசம் என்ற விதையை ஊன்றுவோம்

நம்பிக்கைக் கொண்ட திருவிவிலிய சமூக அமைப்பை கட்டமைப்போம்

இருப்பதைப் பகிர்ந்து, தேவையை இனம் கண்டு, சமூக குறைவராதப்படி பார்த்துக் கொள்வோம்.

🟡நம் செயல், சொல், நடை, உடை அனைத்தும் நாம் கிறிஸ்துவையையும், இறையாட்சியின் மதிப்பீடுகளையும் உணர்த்துவதாய் அமையட்டும்.

🔵இயேசுவின் இறையாட்சி என்பது, பணபலமோ, படைபலமோ இன்றி அவமானமான மரணத்தை (சிலுவை சாவு) தழுவிய இயேசுவின் பணி வாழ்வை முன்னிலைப்படுத்தியது. அந்த இயேசு வழியில் இறையாட்சியின் பிள்ளைகளாவோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

 


No comments:

Post a Comment