Friday, June 21, 2024

பொதுக்காலம் 12-ம் - ஞாயிறு மறையுரை -23.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

23.06.2024

யோபு 38 : 1, 8 - 1,  

2 கொரி 5: 14 - 17,

மாற்கு 4: 35 - 41.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அமைதியின் கருவியாய்

🔴மனித வாழ்வு இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது.

🔴மலர்களும், முட்களும் உடையது.

🔴உயர்வும் தாழ்வும் உடையது.

🟣வாழ்வில் கவலை, பிரச்சனை, பாரங்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது இனி நம் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் என்று நாம் எண்ணும் போது திடீரென பெரும் புயல் அடிக்கும், அலைகள் தாக்கும்.

🟣புயலும்அலைகளும், துன்பங்களும் இன்றி எந்த மானுட வாழ்வும் இல்லை.

🟣புயல், அலை, துன்பம், நெருக்கடிகள் வரும்போது நம்மை அமைதிப்படுத்த, இவற்றிலிருந்து நம்மை காப்பாற்ற ஆண்டவர் இயேசு உண்டு என்ற மகிழ்வின் செய்தியை இன்றைய வழிபாடு நமக்கு வழங்குகிறது.

திருப்பாடல்கள் 65 : 7 "கடல்களின் இரைச்சலையும், அவற்றின் அலைகளின் ஓசையையும், மக்கள் இனங்களின் அமளியையும் அடக்குகின்றீர்" என்பது கடலின் கொடிய அலைகள், புயல் காற்றின் இரைச்சல், சீடர்களின் அமளி ஆகியவற்றிலிருந்து விடுவித்து அமைதியை, ஆண்டவர் இயேசு அருள்வார் என்பதை வழிபாடு உணர்த்துகிறது. அதேவேளை நாமும், சமூகத்தில் அமைதியின் கருவியாய் செயலாற்ற அழைப்பு விடுகிறது.

நிகழ்வு

2019 - ஆம் ஆண்டிற்கான இயற்பியல், வேதியியல், இலக்கியம்மருத்துவம் போன்றவற்றிற்கான நோபல் பரிசினை அந்ப் பிரிவுகளில் சாதனை படைத்தவர்கள் பெற, அமைதிக்கான நோபல் பரிசானது எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அகமது அலி என்பவருக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான எயிக்ரியாவுடன் எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான வழியில், பிரச்சனைகளின்றி தீர்வு எட்டியதால் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வு -  2  (2024 - ஜூன் - ஊடகச் செய்தி)

திருப்பூர் மாவட்டம், படியூர் கிராமத்தில் உள்ள றோஸ் கார்டன் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அங்குள்ள இந்து சமய சகோதரர்கள், இந்து கோயில் கட்டுவதற்கு ஆறு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சில மாதங்களுக்கு முன் தானமாக வழங்கினா். அந்த இடத்தில் இந்து சமய மக்கள் எளிதாய் ஒரு ஆலயம் கட்டி முடித்தனர். கோயிலின் குடமுழுக்கு விழாவில் அந்த ஊரின் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதோடு, அன்னதானத்திற்கு ரூபாய் 30,000 மற்றும் சீர்வரிசையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்கள். சமயத்தால் சண்டையிட்டு அமைதியை குலைக்கும் மானுட சமூகத்தில் றோஸ் கார்டன் பகுதி இஸ்லாமியரும், இந்துக்களும் அமைதின் கருவிகளே!

🔵 மனிதன் இன்று மன நிம்மதிக்காகவும், மன அமைதிக்காகவும் அமைதியான சூழலைத் தேடி, மக்கள் சந்ததி இல்லாத பகுதிகளைத் தேடி அலைகிறான்.

🔵மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள், சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையே போர்கள். எல்கைப்பிரச்சனை, சமய பிரிவினைகள் அமைதிக்கானச் சூழலை அடியோடு அழித்துப் போடுகிறது.

🔵இத்தகைய சூழலில் இறைவன் நம்மை அருள் நலன்களால் நிறைத்து, அமைதியுடனும், நிறைவுடனும் வாழ அழைக்கிறார்.

துயரத்தின் கரை கண்ட யோபு

யோபு, ஆண்டவர் பார்வையில் எத்தகையவராக இருந்தார் எனில், யோபு 1:1 "ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார் அவர் மாசற்றவர் நேர்மையானவருமாக இருந்தார்" என்று கூறுகிறது.

🟢மாசற்றவரும், நேர்மையானவருமான யோபு குறுகிய காலத்திலே கால்நடைகள் இழந்தார், சொத்து சுகங்களை இழந்தார், செல்வத்தை இழந்தார், பிள்ளைகளை இழந்தார், தன் உடல் நலத்தையும் இழந்தார்.

🟢மொத்தத்தில் எல்லாவற்றையும் இழந்தார் ஆனால் அவர் இழக்காதது

(1) மன அமைதியையும்

(11) ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையையும்

திருப்பாடல்கள் 34 : 19 "நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல அவை அனைத்தினின்றும், ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்" என்ற இறைவார்த்தைக்கேற்ப அவரின் வாழ்வு அமைந்தது.

🟢யோபு தன் வாழ்வின் வேதனைகளை நினைத்து ஆண்டவரிடம் முறையிட்டபோது,

யோபு  3:3 "ஒழிக நான் பிறந்த நாளே. ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே" என்று புலம்பிக் கதறினார். ஆயினும் அவரின் நம்பிக்கை முழுவதும் கடவுளிடம் மட்டுமே நிலைபெற்றது.

யோபு 5:8 "நான் கடவுளையே நாடுவேன் அவரிடம் மட்டுமே வழக்கை ஒப்புவிப்பேன்" என்று தன்னை இகழ்ந்த, பரிகசித்த நண்பர்கள், மனைவி, உறவுகள் மத்தியில் நம்பிக்கையிலும், அமைதியை இழந்த நிலையிலும் நிலைத்து நின்றார் யோபு. அதன் விளைவு,

யோபு 42:12 "யோபுவின் முந்தைய நாட்களில் இருந்ததை விட பின்னைய நாட்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார்" இந்த ஆசீர், அமைதியை, பொறுமையை, நம்பிக்கையை இழக்காமல் உறுதியாய் நிலைத்ததால் ஆண்டவரின் பரிசாய் கிடைக்கப்பெற்றது.

இயேசுவின் ஆற்றல் உணர்ந்த சீடர்கள்

இயேசு இறையாட்சிப் பணி செய்த நாட்களில் நோய்களைக் குணப்படுத்தி, பேய்களை விரட்டி, இறந்தவருக்கு வாழ்வு வழங்கி நன்மைகளையேச் செய்தார்

🟡இன்றைய நற்செய்தியில் காற்றையும் கடலையும் அமைதியுறச் செய்து இயற்கை மீது அதிகாரம் தனக்கு உண்டு என்பதை சீடர்கள் உணரச் செய்தார்.

🟡ஏரி கரையில் பேதுருவின் படகில் அமர்ந்து ஆண்டவர் இயேசு போதித்தார்.

🟡படகிலே ஏறி தனிமை தேடி பயணமாகிறார்.

🟡களைப்பால் படகில் கண்ணயர்ந்து உறங்குகிறார்.

🟡மலைகளால் ஆளப்பட்ட கலிலேயக் கடலில் திடீர் புயல் எழுவது இயல்பு. அன்றைய நாளில் கொடும் புயல்.

🟡படகு செலுத்துவதில் அனுபவம் உள்ள சீடர்களே தடுமாறிப் போயினர்.

🟡தங்கள் திறமை, முயற்சி எல்லாம் பயனற்றப் பிறகு மாற்கு 4:38 "போதகரே சாக போகிறோமே உமக்கு கவலை இல்லையா" என்று புலம்பினர்.

🔵சீடர்களின் மனத்தை உயிர் பயம் மறைத்தது.

🟣வலியும் வாழ்வுமானவர், இம்மானுவேலாகிய இறைவன் எக்காலமும் இருக்கிறவர் நம்முடன் உண்டு என்பதை மறந்து போனார்கள்.

🟢இது சீடர்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வு எனவேதான் ஆண்டவர் இயேசு அவர்களிடம்

மாற்கு 4:40 "ஏன் அஞ்சுகிறீர்கள் உங்களுக்கு இன்னும் நம்பிக்கையில்லையா" என்று கடிந்து கொள்கிறார்.

🟣தாவீது ஆண்டவரை புகழும் போது

திருப்பாடல்கள் 89:8 "படைகளின் கடவுளாகிய ஆண்டவரை உம்மைப் போல் ஆற்றல் மிக்கவர் யார்" என்று வியந்து பாடினார்.

🔵இயேசு புயலால், பெருங்காற்றால் ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து மாற்கு 4:39 "இரையாதே அமைதியா இரு" என்று கடிந்து கொள்ள கடல் அமைதியாயிற்று. ஏனெனில் படைப்பனைத்தும் அவருக்கு கீழ்ப்படுகின்றன.

யோவான் கூறுவது போல்

யோவான் 1:3 "அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை" எனவே இயற்கை, படைப்பு அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவராய் இறைவன் விளங்குகிறார் என்பதை உணர்த்துகிறது.

திருப்பாடல்கள் 121 : 3 "அவர் உன் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார் உம்மை காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்" என்ற இறைவார்த்தை இறைவன் கண்ணயராத இறைவன், அவர் நம்மை இப்போதும், எப்போதும், இரவிலும், பகலிலும், நாம் போகும் போதும், வரும்போது நம்மை காப்பார் என்ற உண்மையை சீடர்கள் உணரச் செய்தது.

நம் அன்றாட வாழ்வுக்கு கடப்போம்

🔴குடும்பங்களில் தொடர் நோய்கள் தாக்கும் போது இறைவனை உறுதியாய் பற்றுகிறோமா? விசுவாச தளர்வுறுகிறோமா? (இங்கு யோபு 5:18, 19 ஆகிய இறை வார்த்தைகளை நினைவு கூறுவது நல்லது)

🟣குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், தொழில் நஷ்டங்கள் வரும்போது நாம் எத்தகைய மனநிலை கொள்கிறோம்.

இணைச் சட்டம் 28 : 13 " .....அப்போது ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரேயன்றி கடையனாக்கமாட்டார் நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போக மாட்டாய்" என்ற இறைவார்த்தையை நம்மில் உயிர் பெறச் செய்வோம்.

🟢உறவில் விரிசல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம்மை பிறர் புறக்கணிக்கும் தருணங்களில் உளவருத்தம் கொள்வதை தவிர்த்து அமைதியின் கருவியாக மாறுவோம்.

தூய பிரான்சீஸ் அசிசியாா் ”இறைவா அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்று இறைவேண்டல் செய்து அதற்கேற்ப தன்னை அமைதியின் தூதனாய் மாற்றியது போல் நாமும் அமைதியின் தூதுவராவோம்!

மத்தேயு 5:9 "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் எனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்"

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

 


No comments:

Post a Comment