Friday, June 28, 2024

பொதுக்காலம் 13-ம் - ஞாயிறு மறையுரை -30.06.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

30.06.2024

சா.ஞா 1: 13-15, 2 : 23 - 24,  

2 கொரி 8: 7, 9, 13 - 15,

மாற்கு 5: 21- 43.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நம்பி வாழ்வு பெறுவோம்

🟣வாழ்வோரின் கடவுளாகிய இறைவன், நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காகவே மனிதனை தம் சாயலாகப் படைத்தார்.

🟢நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்ப, துயர்கள் நம்முடன் வாழ்பவர்களுக்குப் புரிவதில்லை, தெரிவதில்லை.

🔴நம் துயரில், அழிவில் இறைவன் மகிழ்வதில்லை, கடவுளின் விருப்பமெல்லாம் மனிதன் நலமாய், நன்றாய், இன்புற்று வாழ வேண்டும் என்று முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.

🟡இறந்து விட்டான் என்று உலகத்தார் கூற, "அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறுவதன் வழியாக, மானுடர்க்கு பணம், புகழ், செல்வாக்கு இவற்றால் வாழ்வைப் பெற்றுவிட முடியாது. மாறாக கிறிஸ்துதான் வாழ்வு தர முடியும். அதற்கு அடிப்படை நம்பிக்கை என்ற உண்மையை உறுதியாக முன்வைக்கிறது நற்செய்தி.

🔵நாம் வாழ்வு பெற நமது நம்பிக்கை நம் செயல்களில், அறப்பணிகளில் வெளிப்பட வேண்டும் என்பதை தூய பவுல் கொரிந்து நகர் மக்களுக்கு அறிவுறுத்துவதை இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. 

யாக் 2:26 "உயிர் இல்லா உடல் போல செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே" என்று யாக்கோபும் உறுதிப்படுத்துகிறார். எனவே ஆண்டவர் இயேசுவில் நாம் கொள்ளும் நம்பிக்கையால் நாம் வாழ்வு பெற்று, அதை நாம் நம் செயல்களால் பிறரோடு பகிர்ந்து வாழ, உலகை வாழ்விக்க வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு (06.04.2022 சமூக ஊடகச்செய்தி)

ரஷ்யா, உக்ரைன் போர் ரஷ்யா ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி மக்களை அழித்தது. உக்ரைனின் தலைநகரான கீவ் வின் புறநகர் பகுதியில் விழுந்தது. ரஷ்யா ஏவிய ஏவுகணை பல மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளை தாக்கியது. அதில் ஒன்று, ஒரு வீட்டின் சமையல் அறையில் விழுந்தது. இது அந்த வீட்டின் மாடியைத் துளைத்துக் கொண்டு விழும் போது அக்குடும்பத்தார் குடும்பத்திலுள்ள எல்லாரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட 9 பேரும் செபித்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக விழும் ஏவுகணை வெடித்துச் சிதறும். ஆனால் அந்த மக்கள் செபித்துக் கொண்டிருந்தபோது விழுந்த ஏவுகணை வெடித்துச் சிதறாமல் அப்படியே கிடந்தது. திபா 34:7"ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார்" என்ற இறைவார்த்தை ஆண்டவரை நம்பி,  அவரில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வு வழங்கியது. 

1. வாழ்வு தருபவர் கடவுள் 

வெறுமையில், உருவமற்று இருளாய் இருந்த உலகை கடவுள் தம் வார்த்தையால் ஒருங்கமைத்தார். இயற்கை, பறவைகள், விலங்குகளை படைத்து நன்று என்று கண்டார். மனிதரை தன் சாயலாய் படைத்தார். அவரின் உயிர்மூச்சை வழங்கி வாழ்வு தந்தார்.  

தொநூ 2:7 "நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிருள்ளவன் ஆனான்"

♦️கடவுளின் சாயலையும், கடவுளின் உயிர் மூச்சையும் பெற்றதால் மனிதன் வாழ்வு பெற்றான். கடவுள் வாழ வைத்தார். ஆனால் மனிதன் கடவுளின் அன்பிலிருந்து, வாழ்வின் நெறிமுறைகளிலிருந்து விலகலானான்

♦️கடவுள் வாழ்வு வழங்க, மனிதனோ தீமையை உறுதியாய் பற்றினான். தனக்குத் தானே அழிவை தேடிக்கொண்டான். ஆனால் ஆண்டவர் 

எசேக்கியேல் 18:32 "எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை என்கிறார்,  தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்" என்றும் எசேக்கியேல் 33:11 "தீயோர் சாகவேண்டும் என்பது, என் விருப்பமன்று, ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துகிறார்.

♦️வாழ்வு தரும் கடவுள் நம்முடன் இருக்கும் போது சாவு எவ்வாறு வந்தது? மனிதரின் பேராசை, சுயநலம், தீய வழிமுறைகளால் நுழைந்தது. இவை உலகைச் சார்ந்தவை.

1யோவான் 2 : 16 "ஏனெனில் உலகச் சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்தப் பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருபவை அல்ல அவை உலகில் இருந்தே வருபவை" எனவே நாம் 

யோவான் 14: 6"வழியும் உண்மையும் வாழ்வுமான" இறைவனை உறுதியாய் பற்றிக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

2. குணமளிப்பவர் இயேசு

திருமுழுக்கு யோவானின் சீடர்கள், இயேசுவிடம் வந்து, வரவிருப்பவர் நீர்தாமோ? என்று கேட்டபோது நீங்கள் கண்டதையும், கேட்டதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். எதைக் கண்டனர்? எதைக் கேட்டனர்? லூக் 7:22 

"பார்வையற்றோர் பார்க்கின்றனர்.

கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், 

தொழுநோயாளர் நலமடைகின்றனர், 

காது கேளாதோர் கேட்கின்றனர், 

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்,

ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது"  - இந்த குணப்படுத்தும் செயல்கள் எல்லாம் இறையாட்சியின் செயல்களே!

🔵இன்றைய நற்செய்தியில் இரு நிகழ்வுகள் நம்பிக்கையால் நலம் பெற்றதை, வாழ்வு பெற்றதை உணர்த்துகிறது.

1. தொழுகைக் கூடத் தலைவர் யாயீரின் மகள்

2. 12 ஆண்டுகள் உதிரப் போக்கினால் வருந்தியவர்.

🔴யாயீரின் மகள் நோயால் துன்புறுகிறார். மிக கடினமானச் சூழல் இந்நிலையில் எத்தனையோ பெரிய "ரபி" க்கள் இருந்தபோது கிறிஸ்துவே வாழ்வு தருகிறவர் என்பதை உணர்ந்து இயேசுவிடம் வந்தார் வந்து 

மாற்கு 5:23 "நீர் வந்து அவள் மீது உன் கைகளை வையும் அப்போது அவர் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வார்" என்று வேண்டினார்.

♦️இயேசுவின் தொடுதல் வாழ்வு வழங்கும் என்று நம்பினார்.

♦️யாயீரின் மகள் இறந்தாள் என்ற செய்தி யாயீரயும் இயேசுவையும் எட்டியவுடன், இயேசு யாயீரிடம் மாற்கு 5:36 "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" யாயீரும் உறுதியாய் நம்பினார். இயேசு யாயீரின் வீட்டை அடைந்ததும் சிறுமியின் கையைப் பிடித்து மாற்கு 5:41 "தலித்தா கூம்" என்றார். அதற்கு, சிறுமி உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு" என்று அழைத்து வாழ்வு கொடுப்பதைப் பார்க்கின்றோம்.

🔴12 ஆண்டுகள் உதிரப்போக்கினால் துயருற்றவளின் நம்பிக்கை சற்று வேறுபாடு ஆனது, அதே நேரம் உறுதியானது.

♦️ஆண்டவர் என்னைத் தொடுவதற்கோ, நான் ஆண்டவரைத் தொடுவதற்கோ நான் தகுதியற்றவள்.

♦️அவர் மட்டுமே என்னை நலமாக்க முடியும் எனவே ஆண்டவரின் ஆடையை நான் தொட்டாலே நலம் பெறுவேன் என்ற ஆழமான உறுதிபாடு, நம்பிக்கை வாழ்வு வழங்குவதைப் பார்க்கின்றோம்.

3. பகிரும் அறப்பணி 

கி.பி. 48 - ஆம் நூற்றாண்டில் யூதேயா, எருசலேம் பகுதியில் கொடிய பஞ்சம் தாக்கியது. மக்கள் பஞ்சத்தால் மிகவே துன்புற்றனர். இவ்வேளை வாணிக நகரமாக இருந்த கொரிந்து மக்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தனர். தூய பவுல் கொரிந்து மக்களிடம் யூதேயா, எருசலேமில் வாழ்ந்த யூதர்களுக்கு உதவ அழைப்பு விடுக்கிறார்.

♦️கிறிஸ்து செல்வராய் இருந்தும் நமக்காக ஏழையானார். அவரின் ஏழ்மையால் நாம் செல்வரானோம்.

♦️பிறருக்கு உதவுவதால் நாம் ஏழ்மை நிலை அடைய வேண்டும் என்பதல்ல, மாறாக எல்லோரும் "சமநிலை" சமத்துவமாய் வாழ வேண்டும்.

♦️கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கிடையே வேறுபாடுகளற்ற நிலை உருவாக வேண்டும் என்று பவுல் விரும்பினார். கலாத்தியர் 3:28 "இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமை குடிமக்கள் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" என்பதிலிருந்து கிறிஸ்தவ மனநிலை என்பது

1. வேறுபாடு களைந்து சமமாய் மதிப்பது.

2.பகிர்ந்து வாழ்வளிப்பது -

என்பதை உணர்த்துகிறது. இதைத்தான் யாக்கோபு 2:17 "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாகும்" என்கிறார்.

♦️நம்பிக்கை செயல்பட்டால் வாழ்வு வழங்கும் என்பது திண்ணம்.

நம் வாழ்வில்

🟣இயேசு வாழ்ந்த நாட்களில் பெண்களை யூதர்கள் பொருட்டாக மதிப்பதில்லை.

🟣இன்றைய நற்செய்தியில் நலம் பெற்றவர்கள் இருவரும் பெண்கள்.

🟣இயேசு நலிந்தவர் மட்டில் சிறப்பு அக்கறை உடையவராய் இருந்தது போல் இயேசுவில் நம்பிக்கையுடைய நாம் செயல்படுகிறோமா?

🔴நம்பிக்கை மலைகளைப் பெயர்ந்து போகச் செய்யும் ஆற்றல் படைத்தது.

🔴நம் நம்பிக்கை நம்மில் குடிகொண்டுள்ள, வேரூன்றிய மூட பழக்கவழக்கங்களை அழித்தொழிக்கிறதா?

🔵நம்பிக்கை கொண்டோர் பகிர்ந்து சமத்துவ உலகு படைத்தனர்.

🔵நாம் பகிர்வால் வாழும் சமூகத்தை பண்படுத்த விளைகிறோமா?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment