Friday, July 12, 2024

பொதுக்காலம் 15-ம் - ஞாயிறு மறையுரை -14.07.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

14.07.2024

ஆமோஸ் 7 : 12 - 15,  

எபேசியர் 1 : 3 - 14,

மாற்கு 6: 7- 13.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அழைக்கப்பட்டவரின் பணிவாழ்வு

🔴 நாம் தூயோராகயும், இரக்கமுள்ளவராயும், நிறைவுள்ளவராயும் வாழ கடவுள் சிலரைத் தேர்ந்தெடுத்தார். 

🔴யாரைத் தேர்ந்தெடுத்தார் ?

🔴சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டவர்கள், பாவிகள், படிப்பறிவில்லாதவர்கள் எல்லாரையும் கடவுள் அழைத்தார்.

🟡 விப. 3 - ஆம் அதிகாரத்தில் மோசேயை அழைத்தது, இஸ்ரயேல் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுதலைக்கு வழிநடத்தி இஸ்ரயேல் பேரினத்தின் தலைவனாக விளங்க.

🟡1 சாமுவேல் 3 - ஆம் அதிகாரத்தில், ஏலி என்ற குரு, தன் பிள்ளைகளின் தவறுகளை தண்டிக்க மறுத்தபோது அதனால் வரும் கடவுளின் தண்டனைகளை குறித்துப் பேச சாமுவேலை அழைத்தார். 

🟣ஆடு மேய்த்தத் தாவீதை அழைத்து, இஸ்ரயேல் பேரினத்தின் தலைவராகவும், தன் இதயத்திற்கு உகந்தவராகவும் உயர்த்தினார்.

🟣எரேமியாவை , இஸ்ரயேல் மக்கள் தீமைகளை விடுத்து, அவர்களை  நலமான ஒரு சமூகமாக கட்டியமைக்க ஆண்டவர் அழைத்தார்.

🔵எசக்கியேலை, எழுச்சிமிகு எண்ணங்களைக் காட்சி வழியாக, அடையாளங்கள் வழியாக எடுத்துரைத்து மக்களை நெறிப்படுத்த அழைத்தார்.

🔵ஆமோஸ், அநீதமான செயல், தீய வாழ்வு இவற்றைக் கண்டித்து, நீதி தழைக்கச் செய்யவும், ஏழை எளிய, சாமானிய மக்களுக்கு வாழ்வு வழங்க, ஆடு, மாடு மேய்த்த ஆமோஸ் ஆழைக்கப்பட்டார்.

🔵சவுலை புறஇனத்து மக்களின் அப்போஸ்தலனாக பணியாற்ற அழைத்தார்.

இறைவாக்குப் பணியும் சவாலும்

♦️கி.மு. 3 - ஆம் நூற்றாண்டில், யூதா நாட்டில் பெத்தலகேம் அருகில் வாழ்ந்தவர் இறைவாக்கினர் ஆமோஸ் .

♦️பாலஸ்தீன நாட்டின் வடபகுதிக்கு இறைவனால் அனுப்பப்பட்டார்.

♦️வழிபாட்டு மையமாய் விளங்கிய பெத்தலில்  இறைவாக்குரைத்தார்.

♦️ஆமோஸ் காட்சி காண்கிறார், அதில் நாட்டின் வடபகுதியில் வெட்டுக்கிளிகளை அனுப்பி, வறட்சி ஏற்படுத்தி இறைவன் மக்களை அழிப்பதாகக் கண்டார். இதைக் கேட்ட மக்கள் ஆமோஸ் மேல் சினம் கொள்கின்றனர். அர்ச்சகன் அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து ஆமோசுக்கு எதிராக அரசனிடம் கோள்மூட்டினான்.

ஆமோஸ் 7:14 "நான் இறைவாக்கினேன் இல்லை, இறைவாக்கினர் குழுவில் உறுப்பினரும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்" அப்படிப்பட்ட என்னை அழைத்து தமது உரிமை சொத்தாகிய இஸ்ரயேலருக்கு  இறைவாக்குரைக்க இறைவன் அனுப்பினார் என்றார்.

🟡இறைவாக்குப்பணி எளிதான ஒன்றல்ல. எரேமியா துன்பத்தின் உச்சநிலை அடைந்தவர்.

🟡இறைவிருப்பை எசாயா போதித்ததால் மக்கள் அவரை மரணத்திற்கு உள்ளாக்கினர்.

🟡திருமுழுக்கு யோவான் உண்மையைச் சொன்னதால் தலை வெட்டப்பட்டார்.

🟡திருத்தூதர்களின் பணி வாழ்வு அவர்களை மறைசாட்சிகளாக மாற்றியது.

லூக் 21:2 "அவர்கள் உங்களைப் பிடித்து துன்புறுத்துவார்கள், தொழுகைக்கூடகங்களுக்கு கொண்டு செல்வார்கள் சிறையில் அடைப்பார்கள், என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்" இத்துன்பங்கள் இயேசுவுக்கு சான்று பகரத் துணையாகும்.

அர்ப்பண மனநிலை - பணிவாழ்வின் அடையாளம்

🟣இயேசுவின் பணியின் மையமே மாற்கு நற்செய்தியாளர் கூறுவது போல் மனம் மாறி நற்செய்தியை நம்புவது.

மாற்கு 1:15 "காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்"

🔵நற்செய்தியாய் வந்த இறைமகன் தலைசாய்க்கக் கூட இடமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர். இதனையே தம் சீடர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். புனித பிரான்சிஸ் அசிசி திருத்தூதுப்பணியை அல்லது அப்போஸ்தலிக்கப்பணியை செல்வம் மாசுபடுத்துவதாக உணர்ந்தார். எனவே வறுமையை வாழ்வாக்கி, வாழ்வு வழங்கும் கிறிஸ்துவின் அமைதியின் கருவியானார்.

🔵இன்றைய நற்செய்தியில் திருத்தூதர்களை, சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார். இதற்குக் காரணம், ஒரு நற்செய்தி சொல்ல இருவர் சாட்சியாக இருந்தால் தான் அது உண்மை என்று ஏற்கப்படும். இது யூதர் சட்டம்.

இச 19:15 "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்" என்ற யூதமரபிற்கு ஏற்ப இருவர் இருவராக அனுப்பினார்.

நாங்கள் அறிவிக்கின்ற இறையாட்சி, அல்லது நற்செய்தியை நாங்கள் அனுபவித்து சுவைத்தவர்கள். நாங்கள் பெற்ற இறையனுபவத்தையே உங்களுக்கு அறிவிக்கின்றோம் என்பது சான்றாகக் கருதப்படும்.

🟢பயணத்திற்கு அங்கியும், கைத்தடியும், காலுக்கு மிதியடியும் போதுமானது மாறாக உணவு, பை, செப்புக்காசு போன்ற எதுவும் பணிவாழ்வில் சுமந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

ஏன் கைத்தடியும், மிதியடியும் போதும் என்றால் ஏனெனில் மற்றவைகள், பணிவாழ்வின் இலக்கைச் சிதைத்து விடும். செல்வத்தால் பணிவாழ்வு மாசுபடும் என்பதை ஆண்டவர் இயேசு அறிவுறுத்துகிறார். ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை நம் பணியால், வாழ்வால் எண்பிக்க அழைக்கின்றார்.

🟣மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பணிதான் அழைக்கப்பட்டவர்களின் இலக்கு.

🟣துன்பம், தடைகள் வந்தாலும் சோர்வுறாது முன்னேறும் மனநிலை பணிவாழ்வுக்கு அடிப்படை என்பதை இறைமகன் இயேசு அறிவுறுத்துகிறார்.

பணிதளங்கள்

🔴ஆண்டவர் இயேசு அனுப்பப்பட்டவர்களிடம் உங்களை நீங்கள் செல்லும் ஊரில் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் நீங்கள் அங்கிருந்து வெளியேறும் போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசி தட்டிச்செல்லுங்கள். இது அவர்களுக்கு எதிர் சான்றாகும் என்று அறிவுறுத்துவது சற்றுக் கடினமானதாக தோன்றும், ஏன் ஆண்டவர் இயேசு இவ்வாறு  சொன்னார்.

🔴யூதர்கள் மனம்மாற பல வாய்ப்புகள் வழங்கப்பட்டது.  இதை நாம் பழைய ஏற்பாடு வழி அறிகின்றோம்,  மோசே, யோசுவா, நீதித்தலைவர்கள், இறைவாக்கினார்கள் என்று இவர்களின் நெறிப்படுத்தல்களை அலட்சியப்படுத்தினர். இயேசுவின் இந்த இறையாட்சிப்பணி, தந்தை கடவுள் வழங்கும் அரிய இறுதி வாய்ப்பு. எனவே மக்கள் இதனை பயன்படுத்தி வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனில், தங்களுக்கு தாங்களே அழிவை ஏற்படுத்துவதை யாராலும் தடுக்க இயலாது என்பதை எடுத்துக் கூறவே இவ்வாறு சொன்னார்.

ஏனெனில் பணித்தளத்தில் மக்களின் மனநிலைப்பற்றி கூறும் போது எசேக்கியேல் 2: 4 "வன் கண்ணும், கடின இதயமும் கொண்ட மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்" என்றார்

மத் 10:16 "இதோ ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவது போல் நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல் முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போல் கபடற்றவர்களாகவும் இருங்கள்" என்று அனுப்பப்பட்டவர்களின் மனநிலை, செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

🟢நாசரேத்தூர் எளிய தச்சன் வழி நின்று பணியாற்ற அழைக்கப்படுகின்றோம். அப்பணி ஞானத்தோடும், விவேகத்தோடும் அமைதல் முக்கியம் ஏனெனில்

🟢பனித்தளத்தில் ஏற்றுக்கொள்வர், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பர், நகைப்பர், மிரட்டுவர், இல்லாதது பொல்லாதது சொல்வர், பொய், புரணி பேசுவர். இவ்வேளையில் பணியாளர்களின் மனநிலை எவ்வாறு அமைய வேண்டும் எனில்

மத் 10:28 "ஆன்மாவை கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்கவல்லவருக்கே அஞ்சுங்கள்" என்று வலுவூட்டுகிறார். அதே நேரம் பொய், புரட்டு,புரணி பேசுபவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல் விடுக்கின்றார்.

எசா 5:20 "தீமையை நன்மை என்றும், நன்மையை தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பை கசப்பாக்குபவர்களுக்கு ஐயோ கேடு" என்று அறிவுறுத்துகிறார்.

♦️பணிக்காக அழைக்கப்பட்டவர்கள் உண்மையும், வழியும், வாழ்வுமான கிறிஸ்துவின் பாதையில் பயணிக்க அழைக்கப்படுகின்றோம்.

நடைமுறை வாழ்வில் 

♦️நாம் வாழும் சூழலை, நாம் எப்படி வசப்படுத்துகிறோம், வளமாக்குகிறோம்.

♦️இயேசுவின் வாழ்வும், பணியும் நற்செய்தியாய் எளியவர்களுக்கும் வறியவருக்கும் அமைந்தது போல் நம் வாழ்வு அமைகிறதா?

♦️பாழானது, பயனற்றவர் என்று எவரும் இல்லை. மக்கள் வெறுத்தாலும், ஏற்றுக் கொண்டாலும், புறம் கூறினாலும், புரணி பேசினாலும் ஒன்றுக்கும் உதவாதவர் என்று இகழ்ந்தாலும், நாம் ஆண்டவர் பார்வையில் மதிப்புக்குரியவர் என்பதை உணர்வோம். இச்சூழலில் அழைக்கப்பட்டவரின் உளப்பாங்கு எவ்வாறு அமைய வேண்டுமெனில்

யோசுவா 24:15 "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்ற மனநிலையில் பணிசெய்வோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment