Friday, July 19, 2024

பொதுக்காலம் 16-ம் - ஞாயிறு மறையுரை -21.07.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

21.07.2024

எரேமியா 23 : 1 - 6,  

எபேசியர் 2 : 13 - 18,

மாற்கு 6: 30- 34.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

கனிவும் கரிசனையும் உள்ள ஆயன் 

இன்று திரு அவை பொதுநிலையினர் ஞாயிறை கொண்டாடுகிறது.

🔵திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் "திரு அவையைப் பொறுத்தவரையில் அப்பொறுப்பின் பெரும் பகுதியை ஆண்டவர் பொதுநிலையினரிடம் ஒப்படைத்துள்ளார்" என்று கூறுகிறார். 

🔵மேலும் "திரு அவையில் பொதுநிலையினர் பெரும்பான்மையினர் என்பதைவிட அவர்களே திரு அவை" என்றும் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் எடுத்துரைக்கின்றார். 

நீதியும், சமத்துவமும் கொண்ட சமூகத்தை உருவாக்க பொதுநிலையினர் ஒன்றாய், நன்றாய் இணைவது காலத்தின் தேவையாகிறது.

🔵ஆடுகள் வாழ்வு பெற, அதுவும் நிறைவாய் பெற வந்த ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரின் கனவாகிய "எல்லாரும் ஒன்றாய் பயணிப்பது" நமது வாழ்வின் இலக்காக வேண்டும். 

வகுப்புவாதம், இனவாதம், சமயவெறி சாதியப் பாகுபாடு, ஊழல், தாராளமயம் பொருள் மைய உலகில் மனித உரிமைகள், மனித மாண்புகள் சிதைக்கப்படுகின்றன.

🔵 2007 - ஆம் ஆண்டு கேரளா மாநிலம் ஆல்வேயில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவை "அநீதியான சமூக அமைப்புகளை உருவாக்க பொதுநிலையினருக்குச் சமூக அரசியல் விழிப்புணர்வு அளித்தல் வேண்டும்" என்று வலியுறுத்தியது.

🟢பொதுநிலையினா் ஞாயிறாகிய இன்று நல்ல ஆயர் இயேசுவின் பாதையில் நல்ல தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், மனித நலனில் அக்கறை உடையவர்களை இனம் காண்பதும், ஆற்றல் படுத்துவதும் நமது தேவையாகிறது.

நிகழ்வு

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வந்த பத்திரிகை செய்தி புதுடில்லி R.K. புரம் பகுதி. அங்கு ஒரு ஐயப்பன் ஆலயம், அங்கு மலையாள புதுவருட நாளாகிய "விசு" அன்று புதுவருட பிரசாதமாக, அந்த ஆலயத்தின் தலைமை பூசாரி, 1 ரூபாய் நாணயம் வழங்குவார். இறுதியில் ஐம்பது மாணவ மாணவிகள் இவர்களில் 17 பேர் பார்வையிழந்தவர்கள். இவர்களுக்கு அவர்களின் படிப்பிற்காக ரூபாய் 2500 /- வழங்குவார். இதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, இந்து மாணவர்கள் உண்டு. பலருடைய எதிர்ப்புகள் உண்டு. அவற்றின் மத்தியிலும் அந்த தலைமை பூசாரி இப்பணியைச் செய்தார்.

வழிபாட்டோடு வாழ்வு முடிவடைய கூடாது ஆகவே வாழ்வில் ஏதாவது ஒரு நல்ல காரியம் அல்லது மக்களை சிறந்த சிந்தனையுடன் வழி நடத்த வேண்டும் என்று நினைத்ததன் பலன் என்றார், தலைமை பூசாரி "புதுமன ஸ்ரீதரன் நம்பூதிரி" மேலும் அவர் கூறும் போது "உடல் ஆரோக்கியமாக இல்லாத போது ஆன்மா சிரமப்படும்" என்றார் எனவே இப்பணியை எதிர்ப்புகளை மீறி முன்னெடுத்தேன் என்றார்.

நல்ல தலைவன் சாதி, சமயங்களை கடந்து மானுட நேயச் செயல்களால் மனிதனை மாண்படைய செய்வான்.

🔴மரணம் மட்டுமே தங்களுக்கு விடுதலை தர முடியும் என்று நினைத்த தன் காலத்ததைய இளைய தலைமுறை மக்களுக்கு வாழ்க்கை மீதான  நம்பிக்கையைக் கொடுத்து, அவர்களை விடுதலையை நோக்கி வழிநடத்திய ஒப்புயர்வற்ற நல்ல தலைவராக இயேசு விளங்கினார்.

அண்மையில் ஒரு நூலைப் படித்தபோது, அதில் நசரேனாகிய  இயேசுவைக் குறித்து இவ்வாறு எழுதியிருந்தது. "பிறந்தது ஒரு கிராமம், யூதகுலம், வளர்ந்தது எல்லாம் வேறு கிராமத்தில், 30 வயது வரை தச்சு வேலை, மூன்று ஆண்டுகள் சுற்றித் திரிந்து போதித்தார். புத்தகம் எதுவும் எழுதவில்லை. பதவிகள் வகித்தவரல்ல. சொந்த வீடு இல்லை. எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. பெரிய நகர்களுக்கு செல்லவில்லை. 200 மயில் சுற்றளவிற்கு மேல் பயணமாகவில்லை. தம்மைத்தவிர வேறு ஆதாரச்சான்று இல்லை. இளைஞனாய் இருந்த போதே மக்கள் சமூகம் அவரை எதிர்த்தது. உடன் இருந்தவர்கள் ஓடினர், மறுதலித்தனர், பகைத்தனர், கைகழுவப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார், நண்பன் ஒருவர் பரிதாபப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்தான். இத்தனை நூற்றாண்டுகளும், இந்த உலகின் மையமும் முன்னேற்றத்தின் தலைவனும், அவனே, இவரது வாழ்வு இந்த உலகை பாதித்தது போல் வேறு எவருடைய வாழ்வும் பாதிக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இயேசுவின் தலைமைத்துவம் நம்மில் நிலைபெற வேண்டும்.

இன்றைய முதல் வாசகம், மக்களை நேரிய வழியில் வழிநடத்தி, நீதியின் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியவர்கள், அவ்வாறு செயல்படாமல் மக்கள் மேல் கரிசனை, அன்பு, பொறுப்புணர்வு அற்றுப்போய் மக்களை நீதிப்பாதையில் நடத்த தவறிய போது ஆண்டவர் எரேமியா வழி எச்சரிக்கின்றார். 

🟣தலைவர்களால் சிதறடிக்கப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட, மக்களை மீண்டும் ஒன்றிணைத்து அச்சமில்லா, பாதுகாப்பான வழியில் நடத்துவேன். அதற்கான மேய்ப்பர்களை, ஆயர்களை, வழிகாட்டிகளை, தலைவர்களை நியமிப்பதாக ஆண்டவர் எச்சரிக்கின்றார்.

எரே 23:4 "அவற்றைப் பேணி காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன், இனி அவை அச்சமுறா, திகிலுறா, காணாமல் போகா" என்கிறார். அதோடு வேதனையற்ற, கலக்கமற்ற, துன்பமற்ற, இடர்களற்ற ஒரு தலைமையை உருவாக்குவதாக வாக்களிக்கின்றார்.

எரே 23:5 "நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள தளிர் தோன்றச் செய்வேன் அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார், அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர், நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலை நாட்டுவார்" என்று இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைவன் விடியலின் நம்பிக்கையை விதைக்கிறார்.

🟡பழைய ஏற்பாட்டில் எகிப்தின் அதிகார சாம்ராஜ்யத்தில் அடிமை விலங்குகளாய், புழுக்களை விட கேவலமாய் வாழ்ந்த மக்களிடம் விடுதலை, சுதந்திரம் என்ற விடியலின் கீற்றை விதைக்க மோசே என்ற மாபெரும் தலைவனை தேர்ந்தெடுத்தார்.

🟡பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்களிடம் இறைவன் தன்னை ஆயராக, அரசராக வெளிப்படுத்தி, மக்களை நீதியின் பாதையில் வழி நடத்தினார். ஆகவேதான் தாவீது

திபா 23:1 "ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை" என்றும் எசே 34:11 "நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக்காப்பேன்" என்றும் எசே 34:14 "நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்ப்பேன்" என்றும்,  இறைவார்த்தைகள் வழி, வலுவூட்டி, திடப்படுத்தி, காயங்களை ஆற்றுகிற தலைவராக ஆயராக இறைவன் விளங்குகிறார்.

இன்றைய நற்செய்தியில், திருத்தூதர்கள் ஒன்றித்த, இறையாட்சிப் பணியில் பல நன்மைகள் நடந்தேறியது. பணியின் நற்செயல்களால் உளமகிழ் வெய்தினார்கள்.

🔵ஆனால் ஆண்டவர் இயேசு அக்கறையுள்ள, கரிசனையுள்ள, பரிவுள்ள ஆயராக சீடர்களின் உடல், உள்ள சோர்வுகளை அறிகின்றார். எனவே அவர்களிடம் "சற்று ஓய்வெடுங்கள்" என்று பரிந்துரைக்கிறார்.

🟢தலைவன் இயேசுவின் மானுட நேயத்தை, பரிவைக் கண்டு சீடர்கள் வியந்தார்கள்.

🔴இயேசு என்ற விடுதலை நாயகன் அவர்களை முழுமையாக ஆட்கொண்டார்.

🟣அதிகாரத்தால் ஆட்கொள்வதை விட உள்ளார்ந்த அன்பாலும், கரிசனையாலும் மக்களின் இதயங்களை ஆண்டவர்களே அதிகம். இயேசு அவ்வாறு தான் மக்கள் மனங்களில் வரலாற்றில் குடிகொண்டார்.

🟡பணி வாழ்வு என்பது நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல, பிறருக்காக, பிறர்நலனுக்காக நம்மை இழப்பது.

🔵நான், எனது , எனக்கு என்பதைக் கடந்து ஏழைகள், நசுக்கப்பட்டோர், நலிந்தோரின் வாழ்வுக்கான தேடலாக நம் வாழ்வு அமைதல் வேண்டும்.

🟢எல்லா மனிதரும் கடவுளின் சாயல் என்பது உணருகின்றவரும், ஆண்டவர் இயேசுவின் பரிவன்பை வாழ்வாக்குகின்றவரும் நல்ல தலைவராக விளங்குவர்.

உண்மையான தலைவன் யார்?

🔴மானுட நேயப் பண்புமிக்கவன்

🟣மக்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டு பொங்கி எழும் மனம் படைத்தவர்.

🟡தீமைகளை எரிக்கின்ற நெருப்பு பொறியாய், வெளிச்சப்புள்ளியாய் திகழ்கிறவரும்.

🔵ஏழைகள் பால், நலிந்தவர் பால், அக்கறை கொள்கிறவர்.

🟢மக்களின் தேவைகளில் தேடிச் சென்று உதவும் உள்ளம் படைத்தவரும், உண்மையான தலைவர்களாக திகழ்வர்.

இன்றைய நிலை

🔴சாதியத்தால் தன்னை வளப்படுத்திக் கொள்பவரும்,

🔴சமய வெறித்தனங்களை ஊட்டி, மனிதர்களை பிரித்து குளிர் காய்கிறவரும்,

🔴மக்களைப் பகடையாய் பயன்படுத்தி தன்னை வளப்படுத்துவதில் கவனமாய் செயல்படும் தலைவர்கள் பெருத்தும் போகிறார்கள்.

எனவேதான் சமூகப் பற்றாளன் இவ்வாறுச் சொன்னான் "பந்தியில் இருப்பவர்கள் மெலிந்து கொண்டிருக்கின்றோம். பரிமாறுகிறவர்கள் பருத்துக் கொண்டேப் போகிறார்கள்"

🔴இது இன்றைய தலைவர்களின் எதார்த்த நிலை

இயேசுவின் தலைமைத்துவம்

மத் 11:29 "கனிவு மனத் தாழ்மையும்" உடைய தலைமைத்துவம்.      யோவான் 10 : 10 "ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு அதுவும் நிறைவாய் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்ற இழக்கும் தலைமைத்துவம். யோவான் 14:18 "உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்" என்ற கரிசனை உள்ள தலைமைத்துவம் இதனை மனதில் நிறுத்தி இயேசுவின் தலைமைப்பண்பை பின்பற்றி, செல்லும் இடமெல்லாம் நன்மைகள் செய்யும் ஆற்றல் பெற ஆண்டவரை வேண்டுவோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment