Saturday, July 27, 2024

பொதுக்காலம் 17-ம் - ஞாயிறு மறையுரை -28.07.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

28.07.2024

2 அரசர்கள் 4 : 42 - 44,  

எபேசியர் 4 : 1 - 6,

யோவான் 6: 1- 15.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

பகிர்வோம் - வாழ்வு வழங்குவோம்

நிகழ்வு - 1

29 வயது நிரம்பிய நாராயணன் கிருஷ்ணன் வெளிநாட்டிற்குச் செல்வதற்காக காரில் மதுரை விமான நிலையம் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் மனநலம் குன்றிய மனிதா் ஒருவர் மனிதக் கழிவைத் தின்பதைக் கண்டார். அவருடைய மனம் உடைந்து, நொறுங்கிப் போனார். இந்த நிகழ்வு அவருடைய மனதை அதிகமாகி பாதித்தது. விமான நிலையம் சென்றவர், தன் பயணத்தை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தவர், மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு தினமும் உணவு கொடுத்து அவர்களைப் பராமரிப்பதிலேயேத் தன்னை முழுதாய் அர்ப்பணித்தார்.

அவருடைய தாய் அவரிடம் மகனே! நீ இவர்களை நன்றாகக் கவனித்துக் கொள். நான் என் உயிர் உள்ளவரை உனக்குத் துணையாய் இருக்கிறேன், என்று உற்சாகப்படுத்தினார். பெற்ற தாய் தந்தையரை அநாதையாக விடும் இவ்வுலகில் யாரென்றுத் தெரியாதவர்களுக்கு தன் வாழ்வைப் பகிரும் இச்செயல் இறைச்செயலாய் மாறிப்போனது.

நிகழ்வு - 2

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி இளைஞன் ஒருவன் பெருங்காயப்பட்டு கிடந்தான். வருவோர், போவோர் பார்த்து உணர்வற்ற மிருகங்களாய் கடந்து போயினர். உயிரைக் காக்க உதவுவார் யாருமில்லை. திடீரென்று புயலாய் செயல்பட்டாலள் இலட்சுமி என்னும் இளம்பெண். வாடகை கார் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார். மருத்துவமனையில் சேர்த்தார். வாடகைக் காருக்குக் கொடுக்க அவரிடம் பணம் இல்லை. தான் அணிந்திருந்த தங்கமாலையைக் கழற்றி, வாடகைக் கார் ஓட்டுநரிடம் கொடுத்தார். இலட்சுமியின் துணிச்சல், நேர்மைப்பண்பு, மானுட நேயம், உரிய காலத்தில் பிறருக்கு உதவிய நல்ல உள்ளத்தைப் பார்த்து தானும் வாடகை வாங்காமல் சென்றார். இலட்சுமி தன் நேரம், ஆற்றல், அறிவு இவற்றைப் பகிர்ந்தார், கார் ஓட்டுநர் - தன் கார் - ஐப் பகிர்ந்தார். விளைவு இளைஞன் காப்பாற்றப்பட்டான்.

🔴பகிராத மனம் - நிறைவில்லா மனம்

🔴பகிராத வாழ்வு - நிறை வாழ்வு ஆவதில்லை

இருவேறு நிகழ்வுகள் உணர்த்துவது நல்ல பண்பட்ட மனங்களே தன்னைப் பகிரும். பகிர்தலால் வாழ்வு வழங்கும் மாமனிதர்கள் ஆகலாம் என்ற உயர்வான சிந்தனையை வழங்குகிறது.

இயேசுவின் வாழ்வும் போதனையும் ஏராளமான மக்களை இறை நம்பிக்கையில் உறுதிப்படுத்தின. இறைமகன் இயேசுவில் நல்லது நிறைந்திருக்கிறது, ஏனெனில் எங்கும் நன்மை செய்தார் என்பதை அறிந்து உணர்ந்த மக்கள் பெருங்கூட்டமாய் அவரை பின்தொடர்ந்தனர். தன்னை நம்பி பின் தொடர்ந்த மக்கள் யாரையும் இயேசு வெறுங்கையோடு அனுப்பியதில்லை. அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முனைந்தார். பசி போக்கவும், நோய்களை நீக்கி நலமான வாழ்வு வழங்கவும், இறந்தவர்களுக்கு வாழ்வு வழங்கவும் இயேசு தவறியதில்லை.

இந்தப்பணியை நாமும் செய்ய வழிபாடு நம்மை அழைக்கிறது.

🟣 2 அரசர் 4, 5 -ம் அதிகாரங்கள், இறைவாக்கினர் எலிசா செய்த புதுமைகளை விளக்குகிறது. அவற்றுள் ஒன்று தான் பாகால் சாலிசா என்ற ஊரில் இருந்து வந்த மனிதரிடம் இருந்த, புது தானியத்தில் செய்யப்பட்ட 20 வாற்கோதுமை அப்பங்களை பலுகிப் பெருகச்செய்து அனைவரும் உண்டபின் மீதியையும் காணச் செய்தார்.

🟢இன்றைய நற்செய்தியில் இயேசு, 5 வாற்கோதுமை அப்பத்தையும், இரு மீன்களையும், 

ஆசீர்வதித்துப் பலுகச் செய்தார் அனைவரும் உண்டபின் பன்னிரண்டு கூடைகள் நிறைய மீதி எடுத்தனர்.


🔵எலிசா காட்டிய அன்பும், இயேசு காட்டிய பரிவிரக்கமும் நம்மையும் ஆட்கொள்ள வேண்டும்.

எல்லாரும் எல்லாம் நிறைவாய் பெற வேண்டும் என்பது இறைவிருப்பு. விப. 16:18 "மிகுதியாக சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. குறைவாக சேகரித்தவருக்கு எதுவும் குறைவுபடவில்லை" எல்லாரும் சமமாய் பெற வேண்டும்,  என்பதை வழிபாடு உணர்த்துகிறது.

🟡நீ நிறைய சேமித்தாலும், சேகரித்தாலும் நீ எதையும் ஆண்டு கொள்ள போவதில்லை.

🟡நீ குறைவாக சேமித்தாலும், உனக்கு குறைவு வராதபடி வழி நடத்துகிறவர் இறைவன். எனவே இறைவனில் நம்பிக்கை வைத்து இருப்பதில் பகிர்ந்து பிறருக்கு வாழ்வு வழங்க அழைக்கப்படுகின்றோம்.

 இறைவன் இன்றைய வழிபாடு வழி அறிவுறுத்துவது

லுக் 6:38 "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" என்றார். இது இன்றைய முதல் வாசகத்தில் நிறைவேறுகிறது. எலிசேயுவின் சொல்லைக்கேட்டு பாகால் சாலிசா தன் அப்பங்களைப் பகிர்ந்தான். மக்கள் அனைவரும் உண்டனர் ஆண்டவர் கூறியபடி மீதியும் இருந்தது.

2 அரசர் 4:44 "அவன் அவர்களுக்கு பரிமாற அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது"

🔴நாம் எத்தகைய மனநிலையில் பகிர வேண்டும் என்பதை தூய பவுல் 2 கொரி 9:7 "முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர்" என்றார். இத்தகையோரை கடவுள் எல்லா நலன்களாலும் நிரப்புவார்.

இயேசு அப்பங்களைப் பலுகிய நிகழ்வு இன்றைய நற்செய்தி ஆகும். இந்த நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது 

இயேசு வழங்கும் உணவு

1. உடல் உணவு

2. ஆன்ம உணவு என்று வகைப்படுத்தலாம்.

உடல் உணவு - இயேசு

இயேசுவின் வாழ்வு தரும் வார்த்தைகளையும், வாழ்வு வழங்கும் செயல்களையும் கண்ட, கேட்ட மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் நெருங்கினர். மாற்கு 6:34 "அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு" வாழ்வு தரும் வார்த்தையாலும், ஆற்றல்படுத்தும் உணவாலும் அவர்களை வளப்படுத்தினார். புதுமைகளைக் கண்டு வியப்பதை விட, தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல மனநிலையை வாழ்வாக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். கடவுளின் ஆசி பெற்றவர்களாக நம்மை மாற்றுவது, பசித்தவருக்கு உணவும், தாகத்திற்கு - நீரும், அன்னியரை ஏற்றுக் கொள்வதும், ஆடையின்றி இருப்போர்க்கு ஆடை அணிவிப்பதும், நோயற்றவர்கள், முதியவர்களை கரிசனையோடு கவனிப்பதும் பல்வேறு எண்ணச் சிறையில் அடைபட்டுக்கிடப்போரைத் தேடிச்சென்று பேணி காப்பதுமாகும். எனவே நற்செயல்களால் ஆண்டவரின் ஆசிக்கு உரியவராவது நம் கடமை.

உயிர் - உணவு இயேசு

யோவான் 6:51,58 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்ற இயேசுவின் வார்த்தைகள், இயேசு ஆன்மாவை வளப்படுத்தும் உணவாகத் தன்னைத் தந்தார் என்பதை உணர்த்துகிறது.

அப்பத்தை எடுத்து தந்தைக்கு நன்றி கூறி பகிர்ந்ததும், கிண்ணத்தை வாழ்வு அளிக்கும் திருரத்தமாய் மாற்றி நம்மை வளப்படுத்தியதும், இயேசு உயிராய், உறவை நம்மோடு கலந்தார் என்பதை உணர்த்துகிறது.

🟣இயேசு அப்பங்களைப் பிட்டுக் கொடுத்தது போல் நமது வாழ்வையும் பிறர் நலப்பணிக்காக உடைத்து, பகிர்ந்து வழங்குகிறோமா?

🟢உயிர் அளிக்கும் உன்னத விருந்தாகிய நற்கருணை விருந்து நம்மை, பிறருக்கு வாழ்வு வழங்கி உயிர் கொடுக்கும் அருமருந்தாய்  மாற்றுகிறதா?

🔵பிறருக்கு நம்மை, நம் திறமைகள், நேரம் இவற்றை பகிர்ந்து வாழ்வு வழங்குவதற்கான வாய்ப்பு இருந்தும் நம்மை, நம் திறமைகளைப் பகிராமல் இருந்து சுயநலபாவத்தில் விழுந்து கிடக்கிறேனா? ஏனெனில் பகிர்தலே இறையாட்சியின் அடையாளம் என்பதையும், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்பதையும் சிறுவன் வழியாக இறைமகன் வெளிப்படுத்துகிறார்.

🟡இன்றைய நற்செய்தியில் பன்னிரண்டு கூடைகள் மீது எடுத்தனர் என்பது, பகிர்ந்தால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கிடமில்லை.

🔴12 என்பது இஸ்ரயேலின் 12 குலங்களைக் குறிக்கும், முழுமையைக் குறிக்கும். எனவே பகிர்வினால் உலகை உண்பிக்கலாம், உயிர் கொடுக்கலாம் என்ற சிந்தனையையும் வழிபாடு நமக்கு வழங்குகிறது.

எனவே பகிர்வால் உலகை வாழ்விப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment