Friday, August 9, 2024

பொதுக்காலம் 19-ம் - ஞாயிறு மறையுரை -11.08.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

11.08.2024

1அரச 19 : 4 - 8, 

எபேசியர் 4 : 30, 5:2,

யோவான் 6: 41- 51.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


வாழ்வாகும் இறைவன்

🟣யூதர்களுக்கு ஆண்டவராகிய இயேசு மேல் கோபம் உண்டு.

🟡 இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை தயக்கம் இருந்தது.

🔵 ஆண்டவர் இயேசு தூய ஆவியால், உன்னத கடவுளின் வல்லமையால் பிறந்தவர் அல்ல. மாறாக தவறான வழியில் பிறந்தவர் என்ற எண்ணம் யூதர்களிடம் உண்டு. எனவேதான் மரியாவின் மகன் தானே என்று இழிவாகப் பேசினர்.

🟢சிறு வயதிலிருந்தே நாசரேத்தில் வாழ்ந்தவர் சாதாரண தச்சுத்தொழில் செய்த யோசேப்பின் வளர்ப்பு மகன், இவன் மெசியாவா?

🔴இவரை உலகிலே உயர்ந்த இனமாகிய, கடவுளின் உரிமைச் சொத்தான யூதகுலம் எப்படி மெசியாவாக ஏற்றுக் கொள்வது என்று

🟣ஆனால் ஆண்டவர் இயேசு இதை கண்டு கொண்டவர் அல்ல,  ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இறை தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவதே தன் பணியாய் கொண்டார்.

🟡இன்றைய வழிபாடு, இறைவன் வாழ்வு வழங்குபவராக, ஆற்றல் படுத்துபவராக சுட்டுகிறது.

🔵இன்றைய முதல் வாசகம், மிகுந்த ஆர்வத்தோடு இறைப்பணி செய்த இறைவாக்கினர் எலியாவிற்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல், சோர்வு பற்றியும், இவற்றிலிருந்து இறைவன் எப்படி இறைவாக்கினரை மீட்டார் என்றும் எடுத்துக்கூறுகிறது.

🟢நற்செய்தியில் இறைவன் பழைய ஏற்பாட்டு மக்கள் உண்ட மன்னாவின் உட்பொருள் ஆண்டவர் இயேசு என்றும், அவா் நிலைவாழ்வின் உணவாகி வாழ்வளிக்கின்றார் என்பதையும் உணர்த்துகிறது.

நிகழ்வு : 1

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகில் வாசிம் மாவட்டம் கலம்பேஷ்வர் கிராமம், சமூக, பொருளாதாரத்தால் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் வாழ்கின்ற கிராமம். அக்கிராமத்தில் வாழ்ந்த குடும்பங்களில் திருமிகு. பாபுரோ தான்றே, திருமதி. சங்கீதா தம்பதியினர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம் அது 2016 - ஆம் ஆண்டின் பாபுரோவின் மனைவி சங்கீதா பக்கத்துக்கு கிராமத்தில் சென்று ஒரு குடம் நீர் பிடித்தார். என்பதற்காக, உயர் சாதி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் அம்மக்கள் சங்கீதாவை, அவமானப்படுத்தி அடித்து,  வெறும் குடத்தோடு திருப்பி அனுப்பினர். மாலை வேலை முடிந்து வந்த தன் கணவர் பாபுரோவிடம் நடந்தவற்றைக் கூறி அழுதிருக்கிறாள் சங்கீதா. தன்மானமும், மனிதமும் சிதைக்கப்பட்டதாக நினைத்த பாபுரோ தனி ஒரு மனிதனாய் கிணறு வெட்ட தொடங்கினார். அந்த கிராமத்தில் உள்ள ஒரு நபர் கூட உதவ முன் வரவில்லை. மாறாக பரிகசித்து, எள்ளி நகையாடினர். உள்ளம் வேதனையடைந்தாலும் மனம் தளராத பாபுரோ , சங்கீதா தம்பதியினர் தொடர்ந்து கிணறு வெட்டும் பணியை முன்னெடுத்தனர். தான் வேலைக்கு செல்வதற்கு முன் 4 மணி நேரமும், வேலை முடிந்து வந்து 2 மணி நேரமும் உழைத்தார் பாபுரோ. அவர் புவியியல் சார்ந்த அறிவு படைத்தவர் அல்ல, நிலத்தடி நீர் இருக்கிறதா என்பதை ஆயும் சக்தி உடையவரும் அல்ல. அவ்விடத்தில் ஏற்கனவே அரசு மூன்று கிணறுகளையும், ஒரு ஆழ்குழாய் கிணறும் தோண்டி பயனற்றுப் போன இடம். ஆனால் 40 நாள் கடின உழைப்பின் பயனாய் வெள்ளம் பீறிட்டு எழுந்தது.

பாபுரோ கூறும் போது நாங்கள் பட்ட அவமானம், உள்ளத்தின் வலிகள், தொடங்கும் முயற்சி எல்லாவற்றையும் உள்ளத்தில் நிறுத்தி ஆண்டவரிடம் மன்றாடினேன். நல்ல நீர் கிடைத்தது என்றாா் கண்ணீரோடு. அந்த கிராமம் முழுவதும் எல்லா நேரமும் குறைவின்றி தண்ணீர் எடுக்க பாபரோ சங்கீதா குடும்பத்தின் உழைப்பு துணை நின்றது என்றார் ஜெய என்ற பெண்.

🔴வேதனை, அவமானம், சிதைக்கப்பட்ட மனித மாண்புகள் எல்லாம் ஒன்றாய் வைராக்கியமாய் உழைத்த போது வாழ்வுக்கான தண்ணீராய் கிராமத்தை மகிழ்வித்தார் பாபுரோ. 

இன்றைய வழிபாடும் இறைவன் மக்களுக்கு வாழ்வாய் வழியாய் அமைகிறார் என்பதை நமக்கு உணர்த்தி நிற்கிறது.

🟣இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா தன் பணிவாழ்வில் சோர்வுற்ற போது ஆண்டவரைப் பார்த்து முறையிட்டதே  இன்றைய வாசகமாக தரப்பட்டுள்ளது.

1 அரசர் 19: 4 "ஆண்டவரே நான் வாழ்ந்தது போதும் என் உயிரை எடுத்துக் கொள்ளும். நான் என் மூதாதயரை விட நல்லவன் அல்ல" என்று மன்றாடினார்.

🟡எலியா என்பதற்கு "ஆண்டவரே என் கடவுள்" என்று பொருள். இந்த இறைவாக்கினருக்கா? இவ்வளவு சோதனை, இத்தனை வேதனை என்று நாம் நினைக்கலாம். 

🔵நீதியோடும், உண்மையோடும், நேர்மையோடும் உழைத்த எல்லா இறைவாக்கினர்களும் துன்புற்றனர், வேதனைப்பட்டனர், ஆண்டவரிடம் முறையிட்டனர் இறைவாக்கினர் எரேமியா

எரேமியா 20:7 "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" என்றார்.

எரேமியா 20:17 "தாய் வயிற்றில் நான் இருந்த போதே அவர் ஏன் என்னை கொல்லவில்லை. என் தாயே எனக்கு கல்லறையாய் இருந்திருப்பாளே" என்று புலம்பி அழுதார். இறைவாக்குப் பணி செய்யும் அனைவருக்கும் இது பொருந்தும்.

🔴பணியாற்றுகிறவர்களை வார்த்தைகளால், செயல்பாடுகளால் துன்புறுத்தும் மக்கள் அன்றும் உண்டு, இன்றும் உண்டு.

🟢ஆனாலும் இறைவன் வலிமையூட்டி வாழ்வு வழங்குவார்.

எரேமியாவை பார்த்து ஆண்டவர்,

எரே 15:20 "நான் உன்னை அவர்கள் முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன். அவர்கள் உனக்கு எதிராய் போராடுவார்கள். ஆனால் உன் மேல் வெற்றிகொள்ளமாட்டார்கள். ஏனெனில் உன்னை விடுவிக்கவும். காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன்" என்று எரேமியாவை வலுவூட்டி, வாழ்வு வழங்கியதைப் போல் இறைவாக்கினர் எலியாவுக்கும் ஆண்டவர் வலிமையும், வாழ்வுமாய் அமைகிறார். 

🟣திருமறையில், இறைவாக்கினா் எலியா மக்கள் மனங்களில் முக்கிய இடம் பெற்றிருந்தார். காரணம்

1. எலியா கடவுளின் பெருமையை மக்களுக்கு உணர்த்தினார்.

2. சமூக நீதிக்காய் போராடினார்.

3. எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டார், அதனால் நன்மைகள் பல புரிந்தார்.

4. மக்களுக்கு வேண்டியதை வேண்டிய படி அருள்பவர் என்ற புகழ் பெற்றிருந்தார். இத்தகைய இறைவாக்கினர் உளம் சோர்ந்த போது சுட்ட அப்பமும், நீரும் வழங்கி ஆறுதல்படுத்தி வலிமையூட்டி வாழ்வு வழங்கினார். எனவே,

1அரசர் 19:8 "அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும், நாற்பது இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்" என்று பார்க்கின்றோம்.

🔵இன்றைய நற்செய்தியில் நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்ற போது, இயேசுவின் குலம், தந்தை, தாய் இவற்றை நினைவுகூர்ந்து பரிகசித்தனர். ஏற்கத் தயங்கினர். ஆனால் 

யோவான் 1:4 "அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது" என்பதை உணர முடியாதபடி பரிசேயர் சதுசேயரின் கண்கள் அடைக்கப்பட்டது.

🔴இயேசு வாழ்வு தரும் உணவு என்று சொன்னால் கூட விட்டிருப்பார்கள். "வானினின்று, இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு" என்றதும் அவரின் தந்தை, தாய், வளர்ந்த ஊர், உறவுகள் இவற்றைச் சொல்லி ஏற்கத் தயங்கினர்.

🟢நாம் கடவுளில் வாழ வளர, கடவுள் நம்மில் நிலை பெற

1. இறைவனை நம்ப வேண்டும்.

2. நிறைவார்த்தையை கடைபிடிக்க வேண்டும்

3. இறை உணவை உண்ண வேண்டும்.

1. இறைவனை நம்ப வேண்டும்

யோவான் இன்று நற்செய்தியில் நிலைவாழ்வுக்கான அடிப்படை கிறிஸ்து வாழ்வின் ஆதாரம் என்பதை நம்ப வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

யோவான் 11:40 "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்" என்றும் யோவான் 6:47 "என்னை நம்புவோா் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்" என்றார்.

♦️இறைவனில் நாம் கடுகளவு நம்பிக்கை கண்டால் அவர் மலையளவு நம்பிக்கை நன்மைகளை நமக்கு ஈவார்.

2. இறைவார்த்தையை கடைபிடிக்க வேண்டும்

ஆற்றல்மிக்க, உயிரளிக்கின்ற, இருபுறமும் கரக்குப்போல் வெட்டக்கூடிய, ஆன்மாவின் உள் ஆழத்தை ஊடுருவிச் செல்லும் இறைவார்த்தையை நாம் நம்பி வாழ்வாக்க அழைக்கிறார்.

யோவான் 8:21 "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்" என்று அறிவுறுத்துகிறார்.

♦️இறை வார்த்தையை நாம் கடைபிடித்தால் இயேசுவின் உடன்பிறப்புகள் ஆவோம்.

3. இறை உணவை உண்பது

யோவான் 6:48 "வாழ்வு தரும் உணவு நானே”

♦️இந்த உணவு உண்பவரை இறவாமல் இருக்கச் செய்வது.

♦️நம்மோடு வாழ விண்ணகத்திலிருந்து இறங்கியது.

♦️வார்த்தையானவர் மானுட வடிவெடுத்தவர்.

♦️இவருடைய நிறைவினால் நாம் யாவரும் நிறைவான அருளைப் பெற்றுள்ளோம். (யோவான் 1:16)

எனவே இவரை நம்புவதும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதும், அவரின் உடலை உண்பதுமே நிலை வாழ்வுக்கான வழியாகும்.

🟣இந்த வாழ்வாகும் இறைவனை பிறருக்கு வழங்கும் கடமை நமக்குண்டு, எப்படி வழங்குவது.

🟢கிறிஸ்துவின் பரிவும், அன்பும், இரக்கமும் நிலை வாழ்வை ஈந்தது. நாம் பிறர் மீது பரிவு, அன்பு, இரக்கம் காட்ட அழைக்கப்படுகின்றோம்.

🔵ஆனால் இதற்கு மாறாக மனக்கசப்பு, சீற்றம், கோபம், கூச்சல், பழிச்சொல், அவதூறு ஆகியவற்றால் பிறர்வாழ்வை, நல்வாழ்வின் செயல்களை நசுக்குகிறோமா?

🔴இறைவன் இயேசு வாழ்வின் ஊற்றாய் அமைந்தது போல நாமும் வாழ்வின் ஊற்றாய் மாற வழிபாடு அழைக்கிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment