Saturday, August 17, 2024

பொதுக்காலம் 20-ம் - ஞாயிறு மறையுரை -18.08.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

18.08.2024

நீமொழி 9: 1 - 6, 

எபேசியர் 5 : 15 - 20,

யோவான் 6: 51- 58.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


இறை ஞானமே வாழ்வு தரும்

🟣ஞான வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவரும் முதன் முதலில் தன்னை அறிதல் வேண்டும்.

🔴 தன்னை அறியும் போது, நம் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அறிய முடியும்.

🔵 இயேசு தான் யார்? என்பதை முழுவதுமாய் அறிந்திருந்தார்.

🟣 எனவே தனது போதனையில் தன்னை அவர் திண்ணமாய் வெளிப்படுத்தினார்.

🟢நல்ல ஆயன், 

நானே வழியும், உண்மையும், வாழ்வும்,

நானே உலகின் ஒளி,

வாழ்வு தரும் உணவு நானே,

நானே வாயில்,

உண்மையான திராட்சைச் செடி நானே என்று தான் யார் என்பதை மக்களுக்குத் தன் போதனை வழி வெளிப்படுத்தினார்.

🔴இறையச்சம் கொண்டோர், ஞானத்தின் ஊற்றும் உறைவிடமுமாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டனர்.

🟣அகங்கார பரிசேயர் ஏற்றுக் கொள்ளாது பரிகசித்தனர்.

🟡இன்றைய வழிபாடு "வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை ஏற்றுக் கொள்வதே, இறைஞானம்" என்பதை அறிய, வாழ பிறருக்கு வாழ்வு வழங்க அழைப்பு கொடுக்கிறது.

நிகழ்வு : 1

ஆப்பிரிக்கா கண்டம், சோமாலியா என்ற நாடு 1994 முதல் 1996 வரை உள்ள இரு ஆண்டுகள் கொடிய பஞ்சம் பல லட்சம் மக்கள் மாண்டு போயினர். 1வேளை உணவுக்காய் மக்கள் தெரு தெருவாய் அலைந்தனர். 1995 - ஆம் ஆண்டு ஒரு தாய்  தன் கை குழந்தையுடன் 60 மயில் நடந்து சென்று ரொட்டி வாங்கி திரும்பி வரும் போது பாலைவனத்தில் பசியால் வீழ்ந்து மடிந்து போனாள். மறுநாள் அவ்வழி சென்றவர்கள் கண்ட காட்சி சற்று அதிர்ச்சியாய் அமைந்தது. அந்தப் பிஞ்சு அழுதபடி ரொட்டியைத் தின்கிறது. ஓநாய் ஒன்று தாயின் உடலைத் தின்கிறது. குழந்தையின் உயிர் காக்க, பல மையில் தூரம் நடந்து, தன்னை பலியாக்கிய தாயின் பாச நிகழ்வு இது.

நிகழ்வு : 2

பல ஏழைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களின் பெரிய கவலை அந்த நோயைவிட, அந்நோய்க்கான மருத்துவ செலவு எப்படி என்றுதான்.

அசாம் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் ரவி கண்ணன், சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றினார். பல புற்றுநோயாளிகள் சிகிட்சைக்காக அசாமில் இருந்து சென்னைக்கு வந்தனர். அந்த ஏழை மக்களின் பரிதாப நிலையை உணர்ந்த டாக்டர் ரவி கண்ணன். சென்னையில் தான் வகித்த பதவியை இராஜினமா செய்துவிட்டு, அசாமின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் ஏழை நோயாளிகளுக்கு சிகிட்சை, உணவு, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி இதுவரை 70,000 பேரை குணப்படுத்தியிருக்கிறார். இவரது முயற்சியால் சிறிய சிகிச்சை மையமாக இருந்த The Cacher Cancer Hospital Society - ஐ இன்று அதி நவீன கேன்சர் மருத்துவமனையாக மாற்றி இருக்கிறார்.

பணமா? மக்கள் உயிர் காப்பதா? என்ற வினா உள்ளத்தில் எழுந்த போது ஞானத்தோடு, மக்கள் வாழ்வே சிறந்தது என்று தன் பணியை, உதறி, ஏழைகளுக்கு உதவி செய்தவர் டாக்டர் ரவிகண்ணன் ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் மருத்துவராய், தெய்வமாய் விளங்குகிறார்.

இன்றைய வழிபாடு, இறைமகன் இயேசு தன்னை வாழ்வில் உணவாய் படைக்கிறார் என்ற செய்தியை உணர்த்தியிருக்கிறது. 

யோவான் 6:51 "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்று ஆண்டவர் இயேசு மொழிந்த போது அதை பரிசேயராலும், மறைநூல் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்றைய முதல் வாசகத்திலும் இறைவன் விருந்து படைக்கின்றார். இது சற்று வித்தியாசமான விருந்தாக அமைகிறது.

ஞான விருந்து

ஞானம் இளையோரை எல்லாம் விருந்திற்கு அழைக்கிறது. இந்த விருந்து வாழ்வுக்கான ஒரு அழைப்பை விடுக்கிறது. இந்த உலகில் நன்மை - தீமை, ஒளி - இருள், ஞானம் - மடமை என்ற எதிர்மறை கூறுகளில் தீமையை விலக்கி, நன்மையை வாழ்வாக்க அறநெறி வாழ்வு வாழ அழைக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

🔵விவேகமாக வாழத்தக்க வழிகளை கற்றுக் கொடுக்க விருந்தாக இவ்விருந்து அமைகிறது.

நீமொழி 9:6 "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள் நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள். வேதனையை விட்டு விடுங்கள் அப்பொழுது வாழ்வீர்கள், உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்" என்று இறைவன் அழைப்பு விடுக்கிறார். இவ்வழைப்பில் மூன்று உண்மைகளை புலப்படுத்துகிறார்.

1. பேதமையை விட்டு விலகுங்கள்

2. நலமுடன் வாழுங்கள்

3. உணர்வைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்ற அழைப்பை முன் நிறுத்துகிறார்.

ஞானம் என்பது என்ன?

நன்மை - தீமைகளை, உண்மை - பொய்யை, நிலையானவை - நிலையற்றவைகளை, நீதி - அநீதியை  பகுத்துணர்ந்து, நன்மையை, உண்மையை, நிலையானவைகளை, நீதியை வாழ்வாக்கி மற்றவைகளை கைவிடுவதாகும்.

ஏசாயா இறைவாக்கினர் ஆண்டவர் தரும் விருந்தைக் குறித்து விளக்கும் போது, அது மக்களின் வேதனை, துன்பம், கண்ணீர் துடைக்கும் விருந்தாக அமையும் என்கிறார். படைகளின் ஆண்டவர், சீயோன் மலையில் மக்களினங்களுக்கு சிறந்த விருந்த ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்து எசாயா 25:7 "மக்கள் இனங்கள் அனைவரின் முகத்தை மூடி உள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றி விடுகிறார். பிற இனத்தார் அனைவரின் துன்பத்தை தூக்கி எறிவார்" என்றும்

1. சாவை ஒழித்து விடுவார்.

2. எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைத்து விடுவார். 

3. மக்களின் நிந்தையை மாற்றுவார் இவ்வாறு கடவுளின் பேரிரக்கத்தை, அன்பை, அவருடைய விருந்தின் வழியாக சுவைத்த மக்கள் ஆண்டவரில் அகமகிழ்வார்கள். 

எசாயா 25:9 "இவரே நம் கடவுள், இவருக்கென்று நாம் காத்திருந்தோம். இவா் நம்மை விடுவிப்பார். இவரே ஆண்டவர், இவருக்காகவே நாம் காத்திருக்கிறோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்" என்ற ஆண்டவரின் விருந்தின் மாட்சியை, மகத்துவத்தை இன்றைய வழிபாடு உணர்த்துகிறது. 

இன்றைய நற்செய்தியில் இயேசு தம்மை நிலைவாழ்வின் ஞான உணவாகப் படைக்கின்றார். இன்றைய நற்செய்தியின் முதல் வசனமும் (51) இறுதி வசனமும் (58) விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வின் உணவு என்பதை விளக்குகிறது.

விண்ணகத்திலிருந்து வந்த உணவு

இயேசு தான் நமது வாழ்வின் ஊற்று, என்பதனை பல நிலைகளில் எடுத்துச் சொன்னார்.

உடல் வளர்க்க உணவு தேவை, உணவைப் பலுகினார். உயிருள்ள அனைத்திற்கும் உணவே அடிப்படை. கடவுளின் வார்த்தையும் வாழ்வின் உணவாக அறியப்படுகிறது. ஏனெனில் தொடக்கத்தில் வார்த்தையாய் இருந்த கடவுள் மனுவுரு எடுத்தார்.

யோவான் 1:14 "வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிக்கொண்டார்" நம்மோடு குடிகொண்ட இயேசுவே நம்புவோர் அனைவருக்கும் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்.

🟢மனிதரை வாழ்விப்பதற்காக மனுவுரு எடுத்தார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தார் என்பதை பல்வேறு சூழல்களில் உணர்த்தினார்.

1. யோவான் நற்செய்தி 6 - ஆம் அதிகாரத்தில் முதல் பகுதியில் 5 அப்பங்களையும், 2 மீன்களை பலுகி பெருகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கி, தான் உணவு வழங்க வல்லவர் என்றும், பசித்தவர்களை நலன்களால் நிரப்ப வல்லவர் என்பதையும் உணரச் செய்தார்.

2. இயேசு மெசியா என்பதை நம்பினாலே வாழ்வு நிச்சயம் என்பதனையும் மக்கள் புரிய செய்தார்.

யோவான் 11:25 "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பினும் வாழ்வார்" என்பதை மார்த்தா மரியாவின் ஆழமான நம்பிக்கையால் லாசருக்கு உயிரளித்து விளங்கச் செய்தார்.

3. கடவுளின் வார்த்தை வாழ்வு வழங்கும் ஆற்றல் படைத்தது என்பதையும் எடுத்துரைத்தார். யோவான் 6:63 "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்பதனை பல்வேறு புதுமைகள் வழி எண்பித்தார்.

4. மானுட குழந்தைகள் நிலைவாழ்வு பெற தாமே உணவானார் என்பதை உறுதிப்பட எடுத்துக் கூறினார்.

யோவான் 6:51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று தன்னை வாழ்வில் உணவாக்கினார்.

இவ்வாறு உடலும், உள்ளமும், உணர்வும் சிறப்புற கடவுளே உணவாகின்றார். அந்தக் கடவுளை ஞானத்தோடு அறிந்து, வாழ்வைப் பெற்றுக் கொள்ள அழைக்கிறது வழிபாடு.

நமக்கு நலம் நல்கும் ஞான உணவாக கிறிஸ்துவை மேற்கூறிய நான்கு நிலைகளிலும் நாடித்தேடிச் செல்கிறோமா?

நம் செயல்பாடுகள் எவ்வாறு அமைகிறது,

🟡விண்ணக விருந்தாகிய திரு விருந்தில் பங்குபெறும் நாம் பிரிவு வளர்த்த மனநிலையோடும், எல்லாரும் சமம் என்ற உணர்வோடும் பங்கெடுக்குறோமா?


🔴அனைவரும் இறைச்சாயல், கடவுளின் ஆலயம் என்பதை மனதில் நிறுத்தி பிறருடைய உணர்வுகளை காயப்படுத்தாமல் வாழும் மனநிலை உண்டா?

🔵துன்புறும் மனிதரில் நாம் துன்புறும் ஊழியராகிய நல்லாயன் கிறிஸ்துவைக் கண்டு, நம் அன்பில் அவர்களைத் தாங்கும் போது இறைவிருந்து அர்த்தம் பெறுகிறது.

🟣நற்கருணை அர்த்தம் பெற நாம் வாழும் நற்கருணையாவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment